Headlines News :
முகப்பு » , , » புலம்பெயர் இலக்கியத்தின் முன்னோடியாக மலையக வாய்மொழிப் பாடல்கள் - கலாநிதி. வ. மகேஸ்வரன்

புலம்பெயர் இலக்கியத்தின் முன்னோடியாக மலையக வாய்மொழிப் பாடல்கள் - கலாநிதி. வ. மகேஸ்வரன்

"ஊரான ஊரிழந்தேன். ஒத்த பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே பெத்ததாயும் நாமறந்தேன்
இது பிரபலமான மலையக வாய்மொழிப்பாடலொன்று. தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரினதும் சோகக் குரலாக இதனை அடையாளப்படுத்தலாம். ஒருவர் அல்லது ஒரு சமூகம் ஏதோவொரு காரணத்தால் தன் இருப்பை விட்டுப் புலம்பெயர்ந்தபோதும் புலம்பெயர் தேயங்களில் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை முகங்கொள்ளும் போதும் இவ்வாறு தமது பண்டைய இருப்புபற்றிய நினைவும், சோகமும், தாம் புலம்பெயர்ந்த தேயத்தில் அனுபவிக்கும் இன்னலும் ஒருசேர இணைந்து துயரம் தோய்ந்த வாய்மொழியாகவோ, ஆக்க இலக்கியங்களாகவோ வெளிவருவதுண்டு.

புலம்பெயர் அனுபவங்கள் தமிழுக்குப் புதியனவல்ல. இன்று மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்ததோர் எழுதுகிற இலக்கியங்களைப் "புலம்பெயர் இலக்கியம்" என்று வரையறை செய்கின்றோம். ஆயின் இந்தப் புலம்பெயதல் அவலம் தமிழ்ச் சூழலில் பண்டைக் காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது என்பது தான் உண்மை . வீரயுகம் என்று பேசப்படுகின்ற சங்ககாலத்தில் போரினால் அரசர்களும், அவர்தம் குழுமங்களும், பொது மக்களும் புலம்பெயர்ந்தனர். அவை உள்நாட்டுப் புலப்பெயர்வு எனினும் - புலம்பெயர்தல் - என்பது “இருப்பை விட்டு வெளியேறுவதையே" குறித்து நிற்கிறது. பறம்புமலைப் பாரிமகளிர் பாடியதாகக் கருதப்படும்
"அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில் எந்தையும் உடையேம்,
எம் குன்றும் பிறர்கொளார், இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்,
வென்று எரி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்,
யாம் எந்தையும் இலமே..''
என்ற பாடலும், பாரியை நினைத்துக் கபிலர் பாடியதாகக் கருதப்படும் (புறம் - 116) 

தீநீர்ப் பெருங்குண்டு தனைப் பூத்த குவளை...... பாடலில்

"மயிலினம் சோலையிலே ஆட, குரங்கினம் மலை முகடுகளிலே தாவி விளையாட, அக்குரங்கினம் அனைத்தும் கூடித் தின்றும் தீராத கனிவகைகள் கணக்கற்று எங்கும் விளங்கியன. அவ்வளமலையிலே உயர்ந்த அதன் உச்சியேறி நின்று தம் தந்தையினை வெல்ல வகை அறியாதவராய்ப் போரேற்று வந்த மன்னர்களின் குதிரைகளை, முன்னர் வேடிக்கையாக எண்ணும் இவர்கள்......இன்றோ வேலி சூழ்ந்த சிற்றில் முன்றத்திலே - உள்ள - - சிறிய மனையிடத்தே பீர்க்கு முளைத்த, சுரைக்கொடி படர்ந்த இடத்திலே, ஈச்ச இலைகள் சிதறிய குப்பைமேல் ஏறிநின்று அவ்வழியே உமணர்களின் உப்பு மூட்டைகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளை எண்ணுகின்றனர்... அந்த நிலையை எண்ணி எண்ணி வருந்துகிறேன் என ஆயுள் இப்பொழுதே கெடுவதாக... என்ற கருத்தை வலயுறுத்தும் புறநானூற்றுப் பாடலும் பண்டைய புலப்பெயர்வின் அவலத்தின் வெளிப்பாடுகளாகும். போரினால் ஏற்பட்ட புலப்பெயர்வு அது. அதனைப் பாரிமகளிர் கபிலர் ஆகியோர் சரியாகப் பதிவு செய்தனர் என்றே குறிப்பிடலாம். 
இடைக்காலத்துப் புலவரான சத்திமுற்றப் புலவரது
“நாராய் நாராய் செங்கோல் நாராய்...”
என்று பொருள வயின் புலம்பெயர்ந்த இன்னோர் புலமையாளனின் புலம் பெயர் அனுபவமாகவே அமைந்துள்ளது. அவரது பாடலை வெறுமனே அவரது மைவிக்கான தூதுப்பாடளாக மட்டும் கவனத்தில் கொள்ள முடியாது
"எங்கோன் மாறன் வழுதி கடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழுவி
பேழையுள் இருக்கும் ஏழையாளனான பாம்பென உயிர்க்கும்”
புலவன் - பொருள்தேடி மதுரைக்குப் புலமலயாந்தவா அவா தமது இயலாதி அல்லது / புலம் பெயர் தேயத்தில் தான் பெற்ற அவலமான அயைவங்க விரிப்பதாகவே அப்பாடல் அமைகின்றது.

இவ்வாறான பின்புலத்தின் வழியாகத்தான் தமிழகத்திலிருந்து ஈழத்து மலையகம் நோக்கிப் “பஞ்சம் பிழைக்கப்" புலம்பெயர்ந்தவர்களின் வாய்மொழிப் பாடல்களையும் நோக்கமுடியும். இன்று மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் நமது உள்நாட்டுப் போரின் அநர்த்தத்தால் தாமாகப் புலம்பெயர்ந்தனர். மலையகத் தமிழரோ பஞ்சம் போக்க என்று ஆங்கில ஏகாதிபத்தியத்தால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக அழைத்து வரப்பட்டவர்கள். அல்லது தமது இருப்புகளில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் ஏமாற்றப்பட்டுக் கிழ்ப்பி வரப்பட்டவர்கள். வந்த இடம்புதிது, தட்ப வெட்ப நிலை புதிது, தொழில்புதிது, தொழில் முறைமைகள் உறவுகள் புதிது. இந்தப் பின்னணியிலே அவர்கள் பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றை அவர்களால் வெளிப்படையாகச் சொல்லவோ எழுதவோ முடியாதளவிற்கு அடக்குமுறை நிலவியிருக்க வேண்டும். எழுதுவதற்கும் அவர்களது எழுத்தறிவு இடங்கொடுக்கவில்லை. எனவே தமது உள்ளக்கிடக்கைகளை தமது எதிர்ப்புக் குரல்களை, மனத்துயர்களைத் தமக்கே உரித்தான வாய்மொழி இலக்கியங்களில் பதிவு செய்தனர். (இந்த வாய்மொழிப் பாடல் மரபு நீண்ட காலமாகவே வாய்மொழியாகவே, புலம் பெயர்ந்த மக்களிடையே நிலவியது என்பதையும் மனங்கொள்ளல் அவசியம். மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத ஒரு அவலமான அடக்குமுறைச் சூழலிலேதான் அவர்கள் வாழ்ந்தனர் என்பதுதான் இது புலப்படுத்தும் உண்மையாகும்.

தமிழ்நாட்டின் குறிப்பாக தென் தமிழ்நாட்டின் நிலவியல் பற்றி அறிந்தவர்களுக்கு அதன் சமதரைத்தன்மை புரியும். பரந்த வெளிகளையும், குட்டைக் காடுகளையும், குளங்களையும் ஆங்காங்கே கிளை பிரிந்து ஓடும் காட்டாறுகளை கண்மாய்களையும் வைகை, தாமிரபரணி நதிகளையும் அவர் அறிவா. ஆ இலங்கையின் குறிப்பாக மலையகத்து நில அமைப்பியல் அதற்கு எத" குன்றுகள், மலைத்தொடர்காளல் ஆனது இந்த நிலத் தோற்றம். இப்போது - மாற்றத்தை அவர்கள் அவதானிக்கிறார்கள். அது அவாக அனுபவமாகவும் அவலமாகவும் அமைந்தபோது பாடல் பிறந்தது. 
கூடை எடுத்ததில்லை – நாங்க
கொள்ளிமலை பார்த்ததில்லை
கூடை எடுக்கலாச்சு – நாங்க
கொழுந்து மல பார்க்கலாச்சு

கோணக்கோண மலையேறி
கோப்பிப்பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சின்னு
ஓதச்சானய்யா சின்னத்துரை

கூனி அடிச்சமலை
கோப்பிக் கண்ணு போட்டமலை
அண்ணனைத் தோத்தமலை
அங்க தெரியுதெடி

ஏத்தமடி பெத்துராசி
எறக்கமடி ராசாத்தோட்டம்
தூரமடி தொப்பித் தோட்டம்
தொடர்ந்தது வாடி நட்பு போவோம்
 என அனுபவத்தையும், இயலாமையையுமே பதிவு செய்தனர். 

புதிய தட்பவெட்பநிலைகளும் அவர்களைப் பாதித்திருக்கின்றது. அடைமழை, குளிர், இன்னும் அதனால் ஏற்படுகின்ற நோய்கள் யாவற்றுக்கும் அவர்கள் பெரும்பாலும் முகங்கொடுக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும் வெயில் வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்கள் அவர்கள். ஓரிடத்தில் இதளிைல் அவர்கள் மழையைக் குதூகலமாக வரவேற்று இருக்கிறார்கள்.
சொலு சொலுன்னு மழைபெய்ய
துப்பட்டித் தண்ணி அலைமோத 
என்றும் 
கலகலன்னு மழை பெய்ய
கம்பளித் தண்ணி அலைமோத 
என்றும்
பாடியுள்ளனர். ஆயின் சில இடங்களில் மழையே சோகமாகவும் பாடப்படுகின்றது.
அருவா எடுத்ததில்லை
அடை மழையும் பார்த்தில்லை
அரும்பு குரைஞ்சுதுன்னு
அரை பேரு போட்டார்கள்
எனப்பாடுகின்றனர். 
பனிபொழியும் காலங்களில் மேற்குநாடுகளில் புலம்பெயர்ந்த நம்மவர்கள் (அயனவலயத்தார்) எதிர்கொள்ளும் தட்பநிலையை எதிர்கொள்ளலுக்குச் சமமானது இந்த அனுபவம்.

இனி அவர்களைப் பெரிதும் பாதித்த விடயம் அவர்களது உற்பத்தி முறைமையும் உற்பத்தி உறவுகளும் தான்.

வயற்காடு, படப்பைக்காடு, பருத்திக்காடு என நன்செய், புன்செய், (அவர்களது பாஷையில் நஞ்சை புஞ்சை நிலங்களில்) உழைத்த இம்மக்களுக்கு, றபர், கோப்பி தேயிலைச் செய்கையும். கவ்வாத்தும், முள்ளுக்குத்துதலும், நெரைபுடித்தலம் கோப்பிப் பழம் பறித்தலும், கொந்தராத்தும், புதியவையாகவும் பதிய அனுபவங்களையும் தந்தன. இந்த தொழில்களுடன் அவர்களால் திடுமென ஒன்றிக் போக இயலவில்லை. பல இடர்ப்பாடுகளுக்கு அவர்கள் முகங்கொடுத்தனர் அப்போதும் வாய்மொழி மூலமாக அவற்றைப் பதிவுசெய்தனர். 
"கூடை எடுத்ததில்லை – நாங்க
கொள்ளி மலை பாத்ததில்லை
கூடை எடுக்கலாச்சு – நாங்க
கொழுந்து மலை பாக்கலாச்சு ''

"அறுவா எடுத்ததில்லை – நாங்க
அடைமழையும் பாத்ததில்லை
அரும்பு கொரைஞ்சுதுன்னு
அரை பேருபோட்டார்கள் ''
“பாலும் அடுப்பினிலே பாலகனும் தொட்டிலிலே
பாலனை பெத்தெடுத்த பாண்டியரும் முள்ளுக்குத்த "

"ஆத்தோரம் கொந்தராப்பு
அது நெடுக வல்லாரை
வல்லாரை வெட்டியல்லோ - என்
வல்லாண்மை குறைஞ்சுதையா ''

“கோணக்கோண மலையேறி
கோப்பிப்பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சின்னு
ஒதச்சானய்யா சின்னத்துரை"

"கொங்காணி போட்டும் பழக்கமில்ல
கொழுந்தெடுத்துப் பழக்கமில்ல
சில்லறைக் கங்காணி
சேவுமோ எங்களை
சீமைக்கு அனுப்புங்க சாமி சாமி" 
என்பதாக அப்பாடல்கள் அமைந்துள்ளன. இனி இந்த உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கும் கண்டக்கர், கங்காணி, துரைமார் ஆகிய நிர்வாகக் கட்டமைப்பினர் இவர்களை அடிமைக் கூலிகளாக நடத்தினர். அவர்களது உபரி உழைபபை உறிஞ்சினர். தோட்டத்துரைமாரின் விசுவாசிகளான கங்காணிமார் இவர்கள் மீது மேலாண்மை செய்தனர். இவ்வாறான அனுபவங்களையும் அவர்கள் பதி செய்தனர்.
"எண்ணிக் குழி வெட்டி
இடுப்பொடிஞ்சு நிக்கையிலே
வெட்டுவெட்டு எங்கிறானே
வேலையத்தக் கங்காணி.

வேலை முடிஞ்சிடுச்சி
வீடுபோக நேரமாச்சு
வேலையத்த கண்டாக்கையா
வெரட்டுறாரு எங்களைத்தான்

கோணக்கோண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சின்னு
ஓதச்சானய்யா சின்னத்துரை 
தெற்குமேலாக - ஆங்கிலேய அதிகாரிகளாலும் அவர்கள் இம்சைப்படுத்தப்பட்டனர்.
றப்பர் மரமானேன்
நூலுபக்கம் வாதானேன்
எரிக்க விறகுமானேன்
இங்கிலீசுக் காரனுக்கு
ஏறிப்போகக் காரானேன் 
புலம்பெயர்ந்த மலையக மக்களின் சோக அனுபவங்களைப் பதிவு செய்ததில் இப்பாடலுக்கு முக்கிய பங்குண்டு. புதுமைப்பித்தனின் - துன்பக்கேணி சிருஷ்டிக்கும் மருதி /வெள்ளையம்மாள் பாத்திரங்கள் பட்ட அவலத்தை இவ்விடத்தில் நினைவு கூரமுடியும்.

மேற்குறித்த விடயங்களைவிட புலம்பெயர்ந்த மக்கள் குறிப்பாக எவ்வாறான பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். மற்றும் இலங்கையில் வாழ்ந்த சுதேசிகளான மக்கள் அவர்களை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பவை தொடர்பாகப் புனைகதைகள் பதிவு செய்தளவிற்கு வாய்மொழிப்பாடல்களில் அறியமுடியவில்லை. ஆயின் இவ்வாறான வாய்மொழிப்பாடல்கள் அம்மக்களிடையே மிகவும இரகசியமான முறையிலேயாவது நிலவியிருக்க வேண்டும். ஆயின் அவை பதிவு செய்யப்படவில்லை. அதுபற்றிய நுணுக்கமாக ஆய்வு அனுகுமுறை நம்மிடையே இல்லாமைதான் இதற்கான காரணம் எனலாம். இதுபோலவே லயங்கள் அல்லது லயக்காம்பராக்கள் என்ற அவர்களது குடியிருப்புகள் தொடர்பான அவர்களது மனப்பதிவு என்ன? (இப்போது நகரமயமாகிவிட்டவர்களின் மனப்பதிவு வேறானது) அந்த அமைப்பு அவர்களுக்கு உவப்பாக இருந்ததா அல்லது வெறுப்பைத் தந்ததா என்பது பற்றிய பதிவுகளையும் நம்மால் அறிந்துகொள்ள இயலவில்லை. 
சிறு குடில் வாழ்வும், குழும வாழ்வும் நிலவிய தமிழகத்துக் கிராமக் குடியிருப்பு, சிறுகுடில் வாழ்வில் இருந்து இந்த லயன்கள் அவர்களை எவ்வாறு கவர்ந்திருக்கக் கூடும். அந்த லயன்கள் பற்றிய அவர்களது மதிப்பீடு என்ன என்பது பற்றிய அவர்களது பதிவுகளும் அரிதாகவே காணப்படுகின்றன. பங்கேற்றல் களஆய்வுகளினூடாக இவ்வாறான செய்திகளாக வெளிக்கொண்டுவர இயலும்.

நிறைவாக மலையக வாய்மொழிப் பாடல்களை வெறுமனே மலையக மக்களது அனுபவங்கள் என்பதைவிட, புலம்பெயர்த்த ஒரு கூட்டத்தார் எதிர் கொண்ட சினைகளாகவே அவற்றைக் கட்டமைக்க முடியும். எனவே தான் மலையக வாய்மொழிப் பாடல்கள் தமிழில் புலம்பெயர் இலக்கியத்தின் முன்னோடி முயற்சிகள் என்கிறோம்.
அடி அளந்து வீடு கட்டும் நம்ம
ஆண்டமனை அங்கிருக்க
பஞ்சம் பொழைப்பதற்கு
பாற்கடலை தாண்டி வந்தோம்
பஞ்சம் பொழைச்சு நம்ம
பட்டனம் போய் சேரலியே
கப்பல் கடந்து
கடல் தாண்டி இங்க வந்தோம்
காலம் செழிச்சு நம்ம
காணி போய் சேரலியே 
உசாவியவை
புறநானூறு - கழக வெளியீடு
தனிப்பாடற்திரட்டு - கழக வெளியீடு
சாரல்நாடன் - மலையக வாய்மொழி இலக்கியம்
நன்றி - மத்திய மாகான சாகித்திய விழா சிறப்பு மலர் 2018

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates