Headlines News :
முகப்பு » , , , » நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 1983: ஆண்டு மலர் பதிவுகள் | என்.சரவணன்

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 1983: ஆண்டு மலர் பதிவுகள் | என்.சரவணன்

நோர்வே தமிழ்ச்சங்கம் 1983 இல் வெளியிட்ட ஆண்டு மலரை நூலகம் இணையத்தளத்தில் இன்று 16.6.2020 வெளியிட்டிருகிறார்கள். இந்த இதழை நூலகத்தில் இருந்து தரவிறக்குவதற்கான இணைப்பு கட்டுரையின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.
பல சுவாரசியமான விடயங்களைக் காண முடிந்தது. 83’ இனப்படுகொலைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்னர் இது வெளியாகியிருக்கவேண்டும். 81 இல் எரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு நிதி திரட்டிக் கொடுப்பதற்காக கொடி தினத்தையும் நடத்தியிருக்கிறார்கள். என்பது உள்ளே உள்ள செய்திகளில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

இலங்கையில் அன்றைய தமிழ் அரசியல் தலைவர்களிடமிருந்து வாழ்த்துச் செய்திகள் பல காணப்படுகின்றன. எதிர்க்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், யாழ் மாநகர முதல்வர் விசுவநாதன், தமிழர் விடுதலைக் கூட்டனித் தலைவர் மு.சிவசிதம்பரம், இந்துசமய, இந்து கலாசார, தமிழ் அலுவல்கள் அமைச்சர் சே.இராசதுரை போன்றோர் எழுதியிருக்கின்றனர்.

இந்த மலரின் ஆசிரியராக ம.அமரசிங்கம் அவர்கள் இதை நுட்பமாகவும், நேர்த்தியாகவும் தொகுத்திருக்கிறார். மலர்க்குழுவில் இ.நாகரத்தினம், எ.பிரதிவிராஜ், சு.அனந்தகிருஷ்ணன், திருமதி.நாகபூஷணம் நாகராசா ஆகியோர் இயங்கியுள்ளனர்.

மலரில் அன்றே நல்ல கட்டுரைகளையும் தொகுத்திருக்கிறார்கள். தமிழ், ஆங்கில, நோர்வேஜிய மொழிகளில் அக்கட்டுரைகள் உள்ளன.

இந்த மலரில் அமரசிங்கம் அவர்களின் ஒரு “என் தமிழ்” என்கிற தமிழுணர்வு மேலிடும் கவிதையும், “திருமுக தரிசனம்” என்கிற தலைப்பில் ஒரு சிறு கதையும் அடங்கியிருக்கிறது. அவரின் துணைவி திருமதி புஷ்பா அமரசிங்கம் அவர்களின் ஏன் தானோ இந்த விதி என்கிற தலைப்பில் ஏழைகளின் வாழ்க்கை ஆற்றிய ஒரு கவிதையும் இடம்பெற்றுள்ளது. இன்னொரு இடத்தில் “வண்ணப் பறவைகளே” என்கிற தலைப்பில் உள்ள கவிதையும் திருமதி.அமரசிங்கம் என்கிற பெயரில் காணப்படுகிறது. அதுவும் திருமதி புஷ்பா அமரசிங்கம் அவர்களைத் தான் குறிப்பிடுகிறது என்று நினைக்கிறேன். மலரை நிறைக்க படாதுபாடு பட்டிருக்கிறார் அமரசிங்கம் அவர்கள் என்று உணர முடிகிறது. “Well Irrigation for food production in Vanatha Villu area in Sri Lanka” என்கிற கட்டுரை இம்மலரில் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கும் போது அது உறுதிபடத் தெரிகிறது.

திருமதி நிர்மலா சித்தி வினாயகநாதன் அவர்களின் “அதுவரைக்கும் தூங்குமடி என்கிற தலைப்பில் தன் பெண் குழந்தைக்கு எழுதிய கவிதை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. “என் போல் அல்ல...!” என்கிற தலைப்பில் ஜீவா எழுதிய ஒரு கவிதையும், சு.இராசநாயகம்  எழுதிய “என்னவள்” என்கிற கவிதையும் உள்ளது.

அரியாலை மாலி எழுதிய “விதவைவீடு” என்கிற தலைப்பிலான சிறுகதையும், மா.விமலாதேவி எழுதிய “தெளிந்த உள்ளம்” என்கிற தலைப்பில் ஒரு சிறு கதையும், “வசைப்புலவன் காளமேகம்” என்கிற தளிப்பில் தயா என்பவரின் கட்டுரையும், ஜெயானந்தன் அவர்களின் “திறவுகோல்” என்கிற ஒரு சிறுகதை பாணியிலான ஒரு சுய குறிப்பும் உள்ளது.

எம்.சச்சி அவர்களின் “யாழ் குடாநாடும் நீர்வளப் பிரச்சினையும்” என்கிற கட்டுரை விபரங்கள் நிறைந்த நல்ல கட்டுரை. “இலங்கைத் தமிழர்கள்” என்கிற தலைப்பில் ஒரு சுருக்கமான வரலாறை இ.நாகரத்தினம் எழுதியிருக்கிறார். சி.லிங்கசாமி சர்மா (ஒஸ்லோ பல்கலைக்கழகம்) “பாரதி கவிதைகளில் அத்வைதப் புதையல்கள்” என்கிற தலைப்பில் ஒரு அருமையான இலக்கிய திரனைவையும் செய்திருக்கிறார்.

அதுபோல “வரிய நாடுகளும் வெளிநாட்டு உதவியும் – ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்” என்கிற தலைப்பில் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இ.கோல்டன் எழுதிய கட்டுரை ஒரு மொழி பெயர்ப்புக் கட்டுரை என்று தெரிகிறது. யாரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்கிற விபரம் இருக்கவில்லை.

தமிழ் மக்கள் மத்தியில் அன்று மிகவும் நெருக்கமாக பணியாற்றிய நோர்வேஜியர் Odd Haakon Larsen அவர்கள் எழுதிய “Et Tilbakeblikk” என்கிற கட்டுரை நோர்வே வாழ் தமிழ் மக்கள், தமிழ்ச் சங்கம் மற்றும் அவர்களுடனான தனது அனுபவங்கள் என்பவற்றை அவர் பதிவு செய்திருக்கிறார்.

இந்த சஞ்சிகை இப்போது எத்தனைபேரிடம் எஞ்சியிருக்கிறது என்று தெரியவில்லை. இந்த மலரைக் கூட யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து திரட்டி களஞ்சியப்படுத்தியுள்ளனர் நூலகம் குழுவினர்.

இந்த மலர் நோர்வே வாழ் தமிழர்களின் வரலாற்று ஆவணங்களில் ஒன்றாக பேணப்படவேண்டிய ஒன்று. நோர்வே தமிழ்ச்சங்கத்துக்கு இப்போது சொந்த காரியாலயம் உண்டு. ஆனால் துரதிஷ்டவசமாக குறைந்தபட்சம் நோர்வே தமிழ்ச்சங்கம் வெளியிட்ட சொந்த ஆவணங்கள் கூட முறையாக ஓரிடத்தில் இருக்காது என்றே நம்புகிறேன். யார் யாரிடம் அவை உள்ளன என்று அறிந்து சேகரித்து ஓரிடத்தில் பேணப்பட்டால் அது நோர்வே தமிழ்ச்சங்கத்தின் முறைசார் ஒழுங்காக இருக்கும்.

ஒவ்வொரு நிர்வாகமும் தமது நிர்வாகத்தின் கீழ் நிகழ்ந்த அனைத்து பணிகளையும், வளங்களையும் முறையாக அடுத்த நிர்வாகத்துக்கு பொறுப்புடன் கையளிக்கும் வழிமுறை பெரும்பாலான அமைப்புகளில் இருப்பதில்லை. பெரும்பாலான நிர்வாக மாற்றங்கள் சண்டையிலும், குரோதத்திலுமே நிறைவடைவதால் முன்னைய வளங்கள் அடுத்த நிர்வாகத்துக்கு பாரப்படுத்தப்படுவதில்லை. இடையில் நிகழும் சச்சரவுகளால் தனிப்பட்ட பலர் அவ்வளங்களை சேர்க்காமலேயே கொண்டோடி விடுவார்கள். இதன் விளைவாக வளங்கள் மட்டுமன்றி, வரலாற்று பதிவுகளையும் ஆவணப்படுத்தும் வாய்ப்பை பல அமைப்புகள் இழந்து விடுகின்றன. நோர்வே தமிழ் சங்கமும் இதில் விதிவிலக்கில்லை.


கடந்த ஆண்டு நோர்வே தமிழ்ச் சங்கம் 40 ஆண்டுகளை நிறைவு செய்தது. முன்னரை விட நிர்வாக ஒழுங்கு நேர்த்தியாகியுள்ளதாகத் தெரிகிறது. அதன் அடுத்த வளர்ச்சிக் கட்டமாக மேலும் நேர்த்தியாக்க வேண்டிய கடமையுண்டு.

இந்த I983ஆம் ஆண்டு மலரில் ஒரு இடம் என்னை ஊன்றிக் கவனிக்க வைத்தது. இம்மலர் வெளியிடப்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் அதாவது 1981 இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்காக நோர்வேயின் பிரதான நகரங்களில் கொடித்தினம் நடத்தப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டிருக்கிறது. இதை தலைவரின் செய்தியிலும், செயலாளர் எழுதியுள்ள “எங்கள் வரலாறு” என்கிற கட்டுரையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இப்படி ஒரு நிகழ்வு குறித்து 40 வது ஆண்டு மலரில் கூட இடம்பெற்றிருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

இந்த நிதியால் என்ன வகையான உதவி யாழ் நூலகத்துக்கு கிடைத்தது என்று அறிய ஆவலாக இருக்கிறேன். நோர்வே தமிழ்ச்சங்கம் 1983க்குப் பின் வந்த மலர்களில் இதைப் பற்றிய விபரங்களை பதிவு செய்திருக்கிறதா என்பதைக் கூட அறிய விரும்புகிறேன். அந்த உதவிப்பணி முக்கியமான நிகழ்வாகவும் பங்களிப்பாகவும் இருந்திருக்க வேண்டும். அதற்கு என்ன ஆனது?

இவையெல்லாம் தமிழ்ச் சங்கம் தனது சொந்தப் பதிவுகளாக வைத்திருந்திருந்திருக்க வேண்டும். இனியாவது அது நிகழும் என்று எதிர்பார்ப்போம்.
எங்கள் வரலாறு 
பார்புகழ் வேந்தர் பாவிலும் நாவிலும் ஓங்கி வளர்ந்து, உலவி நின்ற தேன் தமிழுக்கு அமைதிக்கும், அழகிற்கும் பெயர்பெற்று விளங் கும் ஒஸ்லோ நகரிலும் ஒரு தமிழ்ச் சங்கம் தேவை என்னும் பெருநோக்கு இங்குள்ள தமிழ் நெஞ்சங்களிலும் உதித்தது. இதற்கமைய ஒஸ்லோ நகரிலுள்ள தமிழர்கள் சேர்ந்து 1979-ம் ஆண்டு தைத் திங்கள் பதினான்காம் நாள் திரு. அனந்தகிருஷ்ணன் தலைமையில் கூடினார்கள். பத்தொன்பது பேர் கூடிய இக் கூட்டத்தில் நிகழ்ந்த தேர்தலில் பின்வருவோர் ஏகமனதாகத் தெரிவாகினர்.
  • இணைப்பாளர் : திரு. அண்ணாமலை
  • செயலாளர் : திரு. வின்ஸ்ரன் செபஸ்தியான் 
  • பொருளாளர் : திரு. சித்திவிநாயகநாதன்
  • நிர்வாகக்குழு அங்கத்தவர்கள் :
  • திரு. அன்ரன் கபிரியல், திருமதி. உமா நாராயணன்
பலமான அடித்தளத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கமானது இன்று அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டு விளங்கு கின்றது. இச்சங்கத்தில் இலங்கை, இந்தியா, மலேசியாவைச் சேர்ந்த தமிழர்களும், நோர்வே ஜியரும் அங்கம் வகிக்கின்றார்கள். இச்சங்கத்தின் கொள்கைகளாக ;
  • நோர்வே வாழ் தமிழர்கட்கு இடையிலே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துதல்,
  • தமிழர்தம் கலை, கலாச்சாரம் என்பவற் றைப் பரப்புதல், !
  • நோர்வேஜிய மக்களுக்கும், தமிழர்கட்கு மிடையே நட்புறவை வளர்த்தல்,
  • அங்கத்தவர்களின் சமூக, கலாச்சார தேவை களைப் பூர்த்தி செய்தல் 
என்பன இருந்து வருகின்றன.
ஒவ்வொரு மாத இறுதிச் சனிக்கிழமைகளி லும் கூட்டம் கூடி எல்லாவித முடிவுகளும் மேற் கொள்ளப்படுகின்றன. கலை நிகழ்ச்சிகள், தமிழ்த் திரைப்படம் காண்பித்தல், விவாதம், பலதரப்பட்ட போட்டிகள் நடாத்தப்படுகின்றன.

எம் சங்கத்தால் தமிழர்திருநாள், புதுவருட விழா, நத்தார், தீபாவளி ஆகிய பண்டிகைகள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். இவற் றிற்கான செலவீனங்களுக்கு நோர்வே அரசு தாராளமாகப் பண உதவி செய்வது இங்கு நன்றியுடன் உற்று நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இவ்விழாக்களில் எம் சங்க அங்கத்தவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். அத்தோடு வேறு நாட்டுக் கலைஞர்களை வரவழைத்தும் விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன.

எம் அங்கத்தவர்களின் தமிழ் அறிவைச் கூட் டும் நோக்கத்துடனும், பொழுதுபோக்கிற்காக வும் தமிழகத்திலிருந்து பலதரப்பட்ட சஞ்சிகை களும், பத்திரிகைகளும் வரவழைத்து வழங்கப் படுகின்றன.

கடந்தவருடம் விசேட நிகழ்ச்சிகளாக பொங்கல் திருநாள், புதுவருடவிழா, தீபாவளி, பாரதிவிழா, நத்தார் ஆகியன கொண்டாடப்பட்டன. புது வருடவிழாவில் தென்னிந்தியக் கலைஞர்களான ராஜா ராதா ரெட்டி குழுவினரின் குச்சுப்பிடி நடனமும், உஷா - அரசு தம்பதிகளால் பயிற் றப்பட்ட கிராமிய நடனமும் இடம்பெற்றன. தீபாவளி விழாவில் திருமதி ஆனந்தராணி பாலேந் திராவின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், சபா குழு வினரின் இன்னிசைக் கச்சேரியும், எமது இளைஞர் களின் நாடகமும் இடம்பெற்றன. தமிழன்னைக்குப் பாமாலை சூட்டிய பாரதிக்கு இந்திய அரசின் அனுசரணையோடு இந்தியத் தூது வரின் தலைமையில் பெருவிழா எடுக்கப்பட்டது. யாழ். நூலக நிதிக்காக ஒஸ்லோவிலும், ஏனைய பெரிய நகரங்களிலும் கொடித்தினம் நடாத்திய தில் குறிப்பிடக்கூடிய வெற்றியும் கிட்டியது.

இன்று எம் ஆக்கங்களைக் கொண்டு ஆண்டு மலர் ஒன்று வெளியிடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இவற்றையெல்லாம் நாம் செய்துமுடிக்க ஒத் துழைப்பும், உதவியும் நல்கிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் எமது நன்றி ! -

- செயலாளர்


என்தமிழ்
கள்ளூறும் மாமலரின் வடிவழகோ தமிழழகு - இல்லை
கருப்புசேர் கற்கண்டோ கவிஞர் கூறும்
கவித்தேனோ பூச்சரமோ முல்லை மொட்டோ என்
கருத்தை அள்ளும் தமிழணங்கின் வடிவழகு !

சோலையிலே கவிகூறும் குயிலினிமை
தோற்றிடுமே என் தமிழின் இனிமை சொன்னால்
ஆலையிலே நெக்குருகும் கரும்பினங்கள்
அஞ்சிடுமே என் தமிழின் சுவையைச் சொல்ல!

ஏதுதான் சொன்னாலும் முடிவு காணா
ஈசற்கும் ஈசனாய் என்னுள் நிற்கும்
பாவலரும் காவலரும் பரிந்து காத்த
பண்தமிழை நினையாத நெஞ்சும் நெஞ்சோ !

கூரான ஆயுதத்தால் உடலை வெட்டி - இரு
கூறாக நடுத்தெருவில் போட்ட போதும்
ஆறாகி வரும் இரத்தம் உறைய முன்பு
பாலாறாம் என் தழிழை வாழ்த்தவேண்டும்!

என் தமிழே உந்தனுக்கு அழிவு தந்து
எதிர்ப்பவர்கள் எத்தனைபேர் இருந்த போதும்
யார் தயவும் பாராது தனித்து நின்று
பாமாலை சூட்டி வைப்பேன் பயப்படாதே!
-ம. அமரசிங்கம்
தரவிறக்க
நோர்வே தமிழ்ச் சங்க ஆண்டு மலர் - 1983
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates