1981 மாவட்டசபை தேர்தல் காலத்தில் குறிப்பாக யூன் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் காடையார் கூட்டம் கட்டவிழ்த்த இன வன்முறைகள் மோசமான இழப்புகளையும், பாதிப்புகளையும் வடக்கு கிழக்கு பகுதிகளில் மட்டுமில்லாமல் வடக்கு கிழக்குக்கு வெளியில் தமிழர் செறிந்து வாழ்ந்து வந்த மலையகம், கொழும்பு போன்ற பிரதேசங்களிலும் ஏற்படுத்தியிருந்தது. இதன் போது தன யாழ் நூலகமும் எரிக்கப்பட்டது.
யூன் மாதக் கலவரங்கள் சற்று தணிந்தது போல் தெரிந்தாலும் பின்னர் மீண்டும் யூலை இறுதியில் இருந்து ஓகஸ்ட் மாதம் வரை வன்முறைகள் நீண்டன.
குறிப்பாக மலையகத்திலும், கிழக்கின் எல்லைப்புற பிரதேசங்ககளிலும் வன்முறைகள் வெடித்தன. தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வீடுகள் கொளுத்தப்பட்டு, பல தமிழர்கள் தாக்கப்பட்டு காயத்துக்கு உள்ளானார்கள்.
பதுளையில் ஆரம்பித்த இந்தக் கலவரம் பின்னர் பண்டாரவளைக்குள் புந்து சப்பிரகமுவா மாகாணத்துக்கு விரிவடைந்தது. 12 ஓகஸ்ட் அன்று ரத்தினபுரி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். காட்டுமிராண்டித்தனமாக தொழிலாளக் குடும்பங்கள் கொல்லப்பட்டனர். இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 40 தோட்டங்கள் பாதிக்கப்பட்டதாக “இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம்” வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம் (MIRJE) இந்த காலப்பகுதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நேரில் போய் விசாரணை செய்து விரிவான அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. “அவசரகாலம் 1979” (Emergency” (1979)), “யாழ்ப்பாணத்தில் நடந்ததென்ன பயங்கரவாத நாட்கள் (1981)” (What Happened in Jaffna: Days of Terror -1981) “வவுனியாவில் வதையும் பதட்டமும் - 1982” (Torture and Tension in Vavuniya” 1982) போன்ற அறிக்கைகள் மிகவும் முக்கியமானவை.
மலையகத்தின் தோட்ட லயன்களுக்குள் புகுந்து வீடுகளில் ஒதுங்கியிருந்த இந்திய வம்சாவழி மக்களை வெளியே இழுத்துப் போட்டு தாக்கினர். முப்பதாயிரத்திலிருந்து நாற்பதினாயிரம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக மேர்ஜின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக கஹாவத்தை புனித அன்னம்மாள் தேவாலயத்தில் தங்கியிருந்த போது அவர்கள் மீது ஒரு பொலிஸ்காரர் தலைமையில் ஒரு கும்பல் போய் தாக்குதல் நடத்தியது. அவர்களின் குறைந்தபட்ச இருப்பிடமான லயன்களை உடைத்து துவம்சம் செய்தனர். அன்றைய சண் “Sun” பத்திரிகை “இந்த அழிப்பை நிறுத்துங்கள்” (Stop this Havoc) என்கிற தலைப்பில் தனது ஆசிரியர் தலையங்கத்தை எழுதியது.
இந்த சம்பவத்தால் பொறுமையிழந்த தொண்டமான் இ.தொ.க.வின் செயலாளர் செல்லச்சாமியையும் அழைத்துக் கொண்டு ஜே.ஆரை அவரது இல்லத்தில் ஓகஸ்ட் 17 அன்று சந்தித்து உரையாடினர். இந்த சம்பவங்களுக்குப் பின்னணியில் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களே இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியதுடன், இந்த நிலைமை நீடித்தால் தோட்டத் தொழிலாளர்களும் திருப்பி தாக்க நேரிடும் என்கிற எச்சரிக்கையையும் தொண்டமான் செய்தார். ஜே.ஆர்.நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உறுதி கொடுத்தார். இந்த காலப்பகுதியில் தொண்டமான் ஜே.ஆரின் அமைச்சரவையில் பலம் மிக்க ஒரு அமைச்சர் என்பதும் கவனிக்கத்தக்கது.
கண்துடைப்புக்காக ரத்னபுரி எம்.பி. ஜீ.வி.புஞ்சிநிலமே என்பவரை ஜே.ஆர் அமைச்சு பதவியில் இருந்து நீக்கினார்.
இ.தொ.க இது தொடர்பாக ஆராய்ந்து அரசாங்கத்திடம் பல பரிந்துரைகளை தெரிவித்தது அதைஒரு அறிக்கையாகவும் வெளியிட்டது. அந்த அறிக்கை தான் இது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
தேசிய சபை / நிர்வாக சபை இணைப்புக்கூட்டம்
29-8-1981
1981 ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1981 ஆகஸ்ட் 29-ம் தேதி தலைவர் கௌரவ சௌ தொண்டமான் அவர்கள் தலைமையில் கூடிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசியசபை/ நிர்வாகசபை இணைப்புக்கூட்டம், அண்மையில் நாட்டில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து வெளியிட்டுள்ள அறிக்கை
இலங்கைவாழ் இந்தியவம்சாவழியினரைப் பயங்கர மாகப் பாதித்துள்ள வன்செயல்கள் பற்றி ஆராய்வதற் காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய சபை இந்த நான்கு வருடங்களுக்குள் இரண்டாவது தடவை யாக இன்று கூடுகிறது.
தோட்டத் தொழிலாளர்களையும், வர்த்தகர்களையும் கொண்ட இந்த இலங்கைவாழ் இந்திய சமுதாய மக்க ளுக்கு 1977-ம் ஆண்டு நடந்த வன் செயல்களால் ஏற் பட்ட புண்கள் இன்னும் ஆறாமல் இருக்கும் இவ்வேளையில், இப்போதைய கலவரம் வெந்த புண்ணில் வேல் கொண்டு பாய்ச்சுவது போலாகிவிட்டது. இம்முறை நடைபெற்ற இந்த வன்செயல்கள் மிகவும் கொடூரமானதும், பயங்கர மானதும், வேதனை மிக்கதுமாகும்!
இம்முறை நடந்துள்ள வன் செயல்களால் ஏற்பட்டுள்ள சேதம் பாரதூரமானது. தம்முடைய கடும் உழைப்பா லும், பெரு முயற்சியாலும் இந்தியவம்சாவழி வர்த்தகர் கள் கட்டியெழுப்பிய வர்த்தக ஸ்தாபனங்கள் எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சூறையாடப்பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. எவ்வித பாதுகாப்பும் இல்லாத தோட்டத் தொழிலாளர்கள் காடையர்களால் தமது இருப்பிடங்களிலிருந்து துரத்தப்பட்டு, கொள்ளைக் கும், கொலைக்கும், கொள்ளிவைப்புக்கும், கற்பழிப்புக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். தமது அயராத உழைப்பாலும், தியாகத்தாலும் இந்நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்த குற்றத்தைத் தவிர, வேறு எந்தக்குற்றத்தையும் செய்யாதவர்கள் இந்த மக்கள் என்று தலைவர் தொண்டமான் அவர்களால் வர்ணிக்கப்பட்ட இவர்கள். இத்தகைய கொடூரத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிராகும். நான்காண்டுகளில் இரண்டாவது முறையாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இந்தக் காடையர் ஆட்சி யால், உழைப்பையே உறு துணையாகக் கொண்ட இந்தச் சுய கௌரவமிக்க தொழிலாளர்கள் மற்றவர்களிடம் கை யேந்திப் பிச்சையெடுக்க வேண்டிய அகதிகளாக்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல், ஒரு சிலரின் மிருக உணர்வுக் கும் பலியாகிச் சீரழிந்து கிடக்கும் இந்நிலை திட்டமிட்ட செயலின் பிரதிபலிப்பே என்பதை அறியும் பொழுது இரத்தக் கண்ணீர் விடுவதை தவிர வேறு செய்வது என்ன வென்பதே விழங்கவில்லை. காடையர்களும், குண்டர்களும் நம்மினத்தின் மீது நடத்திய இந்த இழிசெயல்களை எடுத் துக்காட்டிய பொழுது மக்களின் பாதுகாப்புக்கும், பந்தோ பஸ்துக்கும் பொறுப்பானவர்கள் கண்டும் காணாத மாதிரி நடந்து கொண்டது பெரும் விந்தை மிக்க வேதனையா கும். பலத்த பொலிஸ் நிலையங்கள் இருக்கும் நகர்களில் கூட வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையா க்கப்பட்டிருப்பது இதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.
நமது சமுதாயத்திற்கு ஏற்பட்ட இன்னல்களையும், சட்டச் சீர்குலைவையும், ஒழுங்கின்மையையும் நேரில் கண்டு அனுபவித்த நமது மக்கள், அடுத்து என்ன நிகழுமோ என்ற பீதியிலேயே அஞ்சி வாழவேண்டிய நிலை இன்று உருவாகி யுள்ளது. ஒரு பாவமுமறியாத தோட்டத் தொழிலாளர் கள் இத்தகைய வன்முறைச் சம்பவங்களுக்கு ஆளாக்கப் பட்டிருப்பதும், அச்செயல்களைச் செய்தவர்கள் வீரர்களாக வெளியே உலாவித் திரிவதும், இந்தக் காடையர்கள் ஒரு சில பெரும் புள்ளிகளின் நேரடி ஆதரவைப் பெற்றிருக் கின்றனரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது. அத்து டன் இச்சம்பவங்கள் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டிருக் கின்றன என்ற எண்ணத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்தக் காடையர்கள் தோட்டங்களிலே புகுந்து தொழிலாளர்களையும் லயன்களையும் தாக்கிய பொழுது, அதனைத் தடுக்க தோட்ட நிர்வாகங்கள் எந்த நடவடிக்கை யும் எடுக்கத் தவறியது கண்டனத்துக்குரிய செயலாகும்.! ஒரு சில தோட்டங்களில் நிர்வாகங்களே காடையர்களைத் தூண்டிவிட்டு ஆதரவு அளித்துள்ளனர் என்பதும் வேதனைக் குரியதாகும். தொன்று தொட்டுத் தோட்டத் தொழி லாளர்களை நிர்வாகத்தின் அடிமைகளாக ஆக்கப்பட்டுச் செயல்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும். இதைத் தான் இ. தொ. கா. பல ஆண்டுகளாக எதிர்த்து வந் திருக்கின்றது. இந்த அமைப்பில் கூட முன்னைய நிர்வா கங்கள் தோட்டத் தொழிலாளரின் நன்மையில் அக்கறை செலுத்தி வந்திருக்கின்றன. ஆனால் தற்பொழுது நிர்வா கிகளாக நியமிக்கப்பட்டுள்ள சிலர் தம்முடைய நிர்வா கப் பொறுப்பைச் சிறிதும் உணராதவர்களாக இருக்கின் றனர். எனவே, இத்தகைய சூழ்நிலையில் தம்மை எதிர் நோக்கும் சவால்களைச் சமாளிப்பதற்கு சுதந்திரமாகச் செயல்படக் கூடிய விதத்தில் தொழிலாளர் இந்த அடி மைப்பிணைப்பிலிருந்து விடுவிக்கப்படுவது மிகவும் அவசிய மாகும்.
சட்டத்தின் கரங்கள் இயங்க மறுத்ததன் விளைவாக வன்செயல் பொங்கி வழிந்து பல உயிர்களும் பலியாக் கப்பட்டிருக்கின்றன. தம்மைக் காக்கவேண்டியவர்களே கைகளைக் கட்டிக்கொண்டிருக்கும் பொழுது, தமக்கு பாது காப்பு இல்லை என்ற முடிவுக்கு தோட்டத் தொழிலா ளர்கள் வந்து, அவர் கள் லயன்களை விட்டு வெளியேறி யது வியப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இப்பொழுது வன்செயல்களுக்கான காரணங்கள் ஆராயப்படுகின்றது. பலவித கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. காரணம் எதுவாகவிருந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயம். அதாவது, வன்செயல் மேலும் உக்கிரமாகி ஒரு பாவமும் அறியாத இந்திய வம்சாவழியினரைப் பலிவாங்கியிருக்கிறது என்ப தாகும்.
1977-ம் ஆண்டு வன்செயல் பற்றிய சன் சோனி ஆணைக் குழு சகல சாட்சியங்களையும், சொல்லிமாளா சோகக் கதைகளையும், கணக்கற்ற கண் ணீர் காவியங்களையும் பூர ணமாக ஆராய்ந்து வன்முறைகளை இனிமேல் தவிர்க்கக் கூடிய வழிகளை வெளியிட்டது. ஆனால், அந்தச் சிபார்சு கள் கூட மற்றொரு வன்செயலைத் தவிர்க்கப் பயன்பட வில்லை. இப்படி அடிக்கடி தலைதூக்கும் வன்முறை யினால் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியவம் சாவழியினர் தம் மீது அடுத்த வன்செயல் எப்போது கட் டவிழ்த்து விடப்படும் என்று சதா பீதியிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்பற்ற தோட்டப்பகுதிகள் இந்தத் தாக்குதல் களுக்கு ஏதுவாக அமைந்திருப்பது இப்பீதியை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது.
தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சக்தி களினால் பெரும் பாதிப்புக்கு உள்ளான இலங்கைவாழ் இந்தியவம்சாவழி மக்கள் இச்சந்தர்ப்பத்தில் வேறு வழி யின்றி தங்களின் வருங்கால வாழ்வுபற்றி மறு பரிசீலனை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக் கிறார்கள். எனவே, தலைவர் திரு. எஸ். தொண்டமான் அவர்கள் தலைமையில் கூடியுள்ள இந்த தேசியசபை- நிர் வாகசபை இணைப்புக் கூட்டம் இந்த வன்செயல்களை, குறிப் பாக இந்தியவம்சாவழி தோட்டத் தொழிலாளர்களையும் வர்த்தகர்களையும் எந்தளவுக்கு பாதித்துள்ளது என்பதை தீவிரமாக ஆராய்ந்து விவாதித்தது.
இந்தியவம்சாவழி மக்கள் மீது இத்தகைய தாக்கு தல்கள் அடிக்கடி நடத்தப்பட்டு அவற்றின் கடுமை அதி கரிக்கப்பட்டுக் கொண்டே போவதையும், மக்களின் பாதுகாப்புக்கும், பந்தோபஸ்துக்கும் பொறுப்பாக உள் ளவர்கள் இத்தகைய தாக்குதல்களை உடன் கட்டுப்படுத்த ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் இந்திய வம்சாவழி மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதே சமயம் இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட காடை யர்கள் சுதந்திரமாகத் திரிவது, அவர்கள் தண்டனைக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதையும், இவர்கள் வாழும் பகுதிகள் நிரந்தரமாகவே பாதுகாப்பற்றது என்பதை யுமே எடுத்துக்காட்டுகின்றது.
இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினர்- இந்நாட்டுப் பிரஜைகளானாலும் சரி - இந்தியப் பிரஜைகளானாலும் சரி நாடற்றவர்களானாலும் சரி இந்நாட்டின் சில பகுதிகளிலே பயமின்றி நிம்மதியாக இனி வாழமுடியாத சூழ் நிலை உரு வாகிவிட்டது என்பதையும் இச்சபை உணர்கிறது.
இந்திய வம்சாவழியினரில் அநேகமானோர் நாடற்ற வர்களாகவும், அதனால் வாக்குரிமை அற்றவர்களாகவும் இருப்பதன் விளைவாகவே அவர்கள் இத்தகைய அல்லல் களுக்கும் அவமதிப்புக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்று இச்சபை திட்டவட்டமாகக் கருதுகின்றது. 1964ம் ஆண்டிலே இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பொழுது, நாடற்றவர்கள் பிரச்சனை 15 ஆண்டுகளில் தீர்ந்துவிடும் என்று இரு அரசாங்கங்களும் கூறின. இன்று 17 ஆண்டுகள் கடந்தும் பிரச்சனைகளில் பாதிகூட தீர்க்கப்படவில்லை. எனவே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசியசபை - நிர்வாகசபை இணைப்புக் கூட்டம் கீழ்க் கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.
- நாடற்றவர் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என இலங்கை அரசைக் கோருகிறது. இலங்கைப் பிரஜா உரிமைக்கு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அந்த உரிமை உடனடியாக வழங்கப் படவேண்டும்.
- இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளுமான இலங்கை - இந்திய அரசுகள் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இந்த உடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட மக்கள், அவர்கள் விரும்பிய இடங்களில் சென்று குடியேற சந்தர்ப்பமும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
- அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீழ்க் கண்ட உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தோட்டங்களுக்கு வெளியே வாழ்பவர்களுக்கு:
(அ) குடியிருக்க வசதி செய்யு முகமாக உடனடி நிவாரணம்.
(ஆ) சேதத்துக்குள்ளான வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும் புனர் நிர்மாணம் செய்ய உடனடியான உதவி.
(இ) இதுவரை அவர்கள் வாழ்ந்த - தொழில் செய்த இடங்களுக்கு அவர்கள் மீண்டும் செல்ல முடியாதென்று கருதினால் , அவர்கள் நடத்திய தொழிலை நடத்துவதற்கு புதிய இடங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தல்.
(ஈ) அவர்கள் தொழில்களை ஆரம்பிக்க மூலதனம்.
தோட்டத் தொழிலாளருக்கு:
- (அ) உடனடியாக நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும். 1977ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500 ரூபா வீதம் வழங்கப்பட்டது. தற்போதைய நிவாரணம் இன் றைய விலைவாசி உயர்வை கருத்திற் கொண்டு கணிக்கப்பட வேண்டும்.
- (ஆ) நஷ்ட ஈட்டுத் தொகை அவர்கள் அடைந்த நஷ்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.
- (இ) சேதமாக்கப்பட்ட லயன் காம்பிராக்களுக்குப் பதிலாக ஒழுங்கான குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
- (ஈ) இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும், இந்தியப் பிரஜா உரிமைக்கு மனுப்போட்டவர் களும் காலதாமதமின்றி தாயகம் திரும்புவதற் கான எல்லா வசதிகளும் உடனடியாகச் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
- (உ) சப்ரகமுவப் பகுதிகளிலும், வேறு சில பகுதிகளிலும் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் அப்பகுதி இனி அவர்களுக்குப் பாதுகாப்பானது அல்ல என உணர்வதால் அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு குடிபெயர எல்லா உதவிகளும் செய்து கொடுக்கப் படவேண்டும்.
- (ஊ) தகுந்த பாதுகாப்பு முறைகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.
- (எ) இந்த மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுத்துக்கொள்வது அவசி யம் என்பதை அரசு ஏற்றுக்கொண்டு, அவ்வழியில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவவேண்டும்.
- (ஏ) சேதப்படுத்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் புதுப்பிக்கப்பட்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு புத்தகங்கள் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
- (ஐ) வன்செயல் காரணமாக வேலைக்கு வரமுடியாத தொழிலாளருக்கு அந்த நாட்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
மேலும்,
இச்சம்பவங்களுக்குப் பின்னணி என்ன? அவற்றுக்கு யார் காரணம்? என்பதை அறிந்து கொள்வதற்கான ஒரு நடுநிலை விசாரணைக் குழுவை அரசு உடனடியாக நியமிக்க வேண்டுமெனவும், இந்தச் செயல்களுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண் டுமென்றும், அதன் மூலம் இப்படிப்பட்ட சிந்தனை உள்ள வர்களுக்கு அது ஒரு பாடமாக அமைய வேண்டுமென்றும்
இந்த தேசியசபை நிர்வாக சபை இணைப்புக் கூட்டம் வலியுறுத்துகின்றது. வன்செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பலர் இப்பொழுது விடுதலை செய்யப்படு வது, அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதோடு, இந்நிலை தொடர்ந்தால் சம்பவங்கள் நடந்த பிராந்தியங்கள் பாதுகாப்பற்ற பிராந்தியங்களாக மாறிவிடும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இ. தொ. கா. செய்தித்துறை வெளியீடு 72, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தை ,
கொழும்பு-7.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...