Headlines News :
முகப்பு » , , , , , , » சிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்

சிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்


பரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு  வாக்கம் தான். 

குடும்பப் பெயர் + நடுப்பெயர் + வழங்கப்பட்ட பெயர் என்கிற பெயர்களை சேர்த்து கோர்த்து அழைப்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் இலங்கையில் சிங்கள சமூகத்தில் “பெயரிடுதல்” என்பது தனிச் சிறப்பைக் கொண்டிருக்கிறது. தனியான முறைமையையும் கொண்டிருக்கிறது. மேலும் வர்க்கம், சாதி, குலப்பெருமை, பதவி, பட்டம், ஊர்ப்பெருமை போன்றவற்றை உள்ளடக்கியதாக இப்பெயர்கள் அமைந்திருப்பதும் அதை தலைமுறை தலைமுறைக்கும் கடத்துவதும் ஒரு பண்பாட்டு வழக்கமாக இருந்து வருகிறது.

காலனித்துவ செல்வாக்கை எடுத்துக்கொண்டால் போர்த்துக்கேயர் இலங்கையின் விட்டுச்சென்ற பண்பாட்டு பழக்கவழக்கங்களில் ஒன்று நம் நாட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள். ஐந்து நூற்றாண்டுகள் கடந்தும் சிங்களப் பெயர்களில் இரண்டறக் கலந்துவிட்டுள்ளன.

சில்வா, பெரேரா, சிஞ்ஞோ, பொன்சேகா, பெர்னாந்து, அல்விஸ், டயஸ், கொஸ்தா, அல்போன்சு, அல்மேதா, தி மெல், வாஸ், மென்டிஸ், ரொட்ரிகோ என இந்தப் பட்டியல் நீளுகின்றன.

இந்தப் பெயர்களை போர்த்துகீச பெயர்களாக மட்டுமே நாம் விளங்கி வைத்திருக்கிறபோது இப்பெயர்கள் ஊவோன்ருக்கும் பின்னால் அந் நாட்டில் அர்த்தங்கள் உண்டு. போர்த்துகேய – ஆங்கில அகராதிகள் மூலம் இவற்றை மேலும் உறுதியாக விளங்கிக் கொள்ள முடியும்.

இலங்கையை அதிக காலம் ஆண்டவர்கள் போர்த்துகேயர். போர்த்துகேயர் 156 வருடங்களும், ஒல்லாந்தர் 140 ஆண்டுகளும், ஆங்கிலேயர் 133ஆண்டுகளும் இலங்கையை ஆண்டார்கள். போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட அந்த 156 வருடங்களில் பெரும் பண்பாட்டு ஆக்கிரமிப்பை நிகழ்த்திவிட்டுத் தான் சென்றார்கள். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், சூழலில் உள்ளவை, நபர்களின் பெயர்கள் என அனைத்திலும் போர்த்துகேய சொல்லாடலை ஸ்தூலமாக நிறுவிவிட்டுத் தான் சென்றார்கள்.

ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் ஆணையின் பிரகாரம் இளவரசர் தர்மபால திருமுழுக்கு கொடுத்து மதம் மாற்றி தமது ஆரசியல் உள்நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டனர். 1543 இல் கோட்டை ராஜதானியின் அரசர் புவனேகபாகுவுடன் ஒப்பந்தத்தை செய்துகொண்டார்கள். தர்மபாலவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக முக்கிய அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்தது. கத்தோலிக்க மதத்துக்கு மாறுவது என்பது அப்படியே போர்த்துகேய கலாசாரத்துக்கே மாறுவதாக மாறியது.

இந்தக் காலப்பகுதியில் பெயர்களை சூட்டுவது, மாற்றுவது என்பதன் பிபுலத்தில் காலனித்துவ உள்நோக்கம் இருக்கவே செய்தது.

குசுமாசன தேவி – “தோன கத்தரீனா” வாக ஆனார். கரலியத்தே பண்டார – “தொன் பிலிப்” ஆக ஆனார். அந்த காலப்பகுதியில் “சுபாஷித்தய” போன்ற பிரபல இலக்கியங்களைப் படைத்த அழகியவன்ன முக்கவெட்டி – “தொன் ஜெரனிமோ” வாக மாறி அந்தக் காலப்பகுதியில் “கொன்ஸ்தாந்தி ஹட்டன” என்கிற தலைப்பில் அன்றைய போர்த்துகேய தளபதியைப் பற்றிய பிரபல காவியத்தை எழுதினார்.

உதாரணத்துக்கு நாம் அறிந்த சில பிரபல பெயர்கள் அந்தக் காலப்பகுதியில் எப்படி மாற்றங்களுக்கு உள்ளாகின என்பதைப் பார்க்கலாம்
 • செண்பகப் பெருமாள் (சப்புமல் குமாரயா)
 • இசபெல்லா கொர்னேலியா பெருமாள் (கஜமான் நோனா)
 • பிரான்சிஸ்கோ பெர்னாண்டோ (புரான் அப்பு)
 • டேவிட் ஹேவாவிதரணா (அனகரிக தர்மபால)
 • ஜோர்ஜ் வில்பிரட் அல்விஸ் சமரகூன் (ஆனந்த சமரக்கூன்)
 • டெய்ஸி ராசம்மா டேனியல்ஸ் (ருக்மணி தேவி)
 • ரீட்டா ஜெனீவ் பெர்னாண்டோ (லதா வல்பொல)
 • ஆல்பர்ட் பெரேரா (அமரதேவ)
 • தொன் ஜான் அபேவிக்ரம (ஜோ அபேவிக்ரம)
 • பெர்சி மகேந்திரா (மஹிந்த ராஜபக்ஷ)
 • போனிஃபேஸ் பெரேரா (ரவீந்திர ரந்தெனிய)
 • அன்டன் விஜய குமரதுங்க (விஜய குமரதுங்க)
 • வர்ஜீனியா பீரிஸ் (வீணா ஜெயகோடி)
 • பாத்திமா பதிராஜா (கோதமி பதிராஜா)
 • லாரன்ஸ் ரோமியோ துமிந்த சில்வா (துமிந்த சில்வா)
 • ஜார்ஜ் பீரிஸ் மலலசேகர (குணபால பியசேனா மலலசேகர)

போர்த்துகேயர் வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற தமிழர்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகளில் கத்தோலிக்க மத மாற்றங்களை அதிகம் செய்திருந்தபோதும் தெற்கில் சிங்களவர்கள் அளவுக்கு தமிழர்கள் போர்த்துக்கேயர்களாக மாறிவிடவில்லை. பெயர்களைக் கூட சிங்களவர்கள் அளவுக்கு தமிழர்கள் சுவீகரித்துக்கொள்ளவில்லை.

தெற்கைப் பொறுத்தளவில் களுத்துறை, காலி, மாத்தறை போன்ற பிரதேசங்களில் காணப்பட்ட சாதிய பாகுபாடுகள் காரணமாக ஒல்லாந்தர் காலப்பகுதியில் அதிகமானோர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி தமது பெயர்களையும் மாற்றிக்கொண்டனர். இவ்வாறு பெயர்களை மாற்றிக்கொன்டதன் பின்னால் சாதியக் காரணிகள் செல்வாக்கு பெற்றிருந்தன.

போர்த்துக்கேயர் (1505 - 1657), ஒல்லாந்தர் (1658–1796) ஆகியோர் மொத்தம் 290 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்தபோதும் கண்டி இராஜ்யத்தைக் கைப்பற்றமுடியவில்லை. கண்டி இராச்சியம் விசாலமானதாக இருந்தது. அதேவேளை கண்டி இராச்சியத்தைச் சுற்றி இலங்கை முழுவதுமான கரையோரப் பகுதிகளை போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆண்டனர். இவர்களின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் தான் அவர்களின் மத, கலாசார, பண்பாட்டு செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது. இந்த கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த மீன்பிடி சமூகமான கரையார் சமூகங்களே அவர்களின் செல்வாக்குக்கு நேரடியாக ஆட்பட்டிருந்தார்கள். எனவே மதமாற்றத்துக்கு உள்ளானவர்களும் அவர்கள் தான். இன்றும் சிங்கள “கராவ” (கரையார்), தமிழ் கரையார் சமூகங்களில் அதிகளவானோர் கிறிஸ்தவர்களாக காணப்படுவதும்இந்தப் பின்னணியில் தான். அதிகளவு கிறிஸ்தவ தேவாலயங்களையும் கூட நாட்டுக்குள்ளே காண்பதை விட கரையோரப் பிரதேசங்களிலேயே அதிகம் நாம் காண முடியும்.

எனவே இந்த பெயர் மாற்றங்களுக்கு அதிகமாக ஆளானவர்கள் திருமுழுக்கு பெற்று பெயர்கள் மாற்றப்பட்ட கரையோரச் சமூகமான “கரையார்” சமூகமே. அதேவேளை பிற காலத்தில் கொவிகம சாதியினரில் சில்வா, பெரேரா போன்ற பெயர்களை சுவீகரித்துக்கொண்டவர்களும் இருக்கவே செய்கின்றனர். 

டச்சுக்காரர் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் போத்துக்கேயர் அளவுக்கு மத மாற்ற நடவடிக்கைகளிலோ, பெயர் மாற்ற நடவடிக்கைகளிலோ தீவிரமாக ஈடுபடவில்லை. ஆனால் போர்த்துகேயர் காலத்துக்கு பெயர்கள் அப்படியே நீடித்தன. 

போர்த்துக்கேயர் காலத்தில் தொழிலை வைத்து அவர்கள் போர்த்துகேய மொழியில் அடையாளம் கண்டவர்களுக்கு சிங்கள அர்த்தத்தில் பெயர்கள் வைத்துக் கொண்டதும் நிகழ்ந்தது. உதாரணத்திற்கு “பட்டபெந்திகே” என்கிற பெயரை அறிந்திருப்பீர்கள். அதாவது “பட்டியைக் கட்டுபவர்” என்று பொருள். போர்த்துகேயர்களின் படையில் “Lascorine guards” என்கிற குதிரைகளைக் கட்டிப் பராமரிக்கும் ஒரு பிரிவினர் இருந்திருந்தார்கள். சிங்களத்தில் அவர்கள் அழைக்கப்பட்ட அதே பெயர் பின்னர் சிங்களப் பெயராகத் தொடர்ந்தது.

ஆங்கிலேயர் இலங்கையைக் கைபற்றியபோது கண்டி உட்பட முழு இலங்கையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள். எனவே 19ஆம் நூற்றாண்டில் மலையகப் பகுதிகளில் கத்தோலிக்கம் உள்நுளைந்தபோது கத்தோலிக்க மதத்துக்கு மாறியவர்கள் ஆங்கிலேய கத்தோலிக்கப் பெயர்களை சூட்டிக்கொண்டார்கள். அப்பெயர்கள் ஏற்கெனவே இருந்த போர்த்துகேய, டச்சு கால கிறிஸ்தவப் பெயர்களை விட அலங்கரமாமாகவும், ஆடம்பரமகாவும், பெருமையாகவும் பார்க்கப்பட்டது. பெரேரா, சில்வா, அல்விஸ், சொய்சா போன்ற பெயர்கள் அல்லாமல் தோமஸ், அந்தனி, ஷெல்டன், ஸ்டான்லி, நெவில், அலைஸ், கார்மன், மேரி இரேன், கிளிப்போர்ட், ரல்ப்,லெஸ்லி போன்ற பெயர்கள் பெருமிதமாக நோக்கப்பட்டது.

இதே வேளை இத்தகைய மேற்கத்தேய பெயர்களை இலங்கையர்கள் அழைக்கும்போது தமக்கான உச்சரிப்பில் மாற்றிக்கொண்ட வேடிக்கையும் நிகழ்ந்தன. கப்ரியல் – கபிரியர் ஆனார். ஹேர்மன் – ஹெரமானிஸ் ஆனார். எந்தனி – அந்தோணியாகவும், என்டனியாகவும் ஆனார், க்ரகறி – கிரிகோரிஸ் ஆனார், ஜெர்மைன் – ஜொரமானு ஆனார். இப்படி புழக்கத்திலுள்ள ஒரு தொகை பெயர்களை உதாரணம் காட்டிக்கொண்டு செல்ல முடியும். 

தமிழ்ச் சூழலில் கிறிஸ்தவப் பெயர்கள் கூட “யேசு-தாசன்”, “அந்தோணி – முத்து”, “சவேரி – முத்து” என பெயர்களின் தமிழ்ப்படுத்தலைக் காணமுடியும்.

சிங்கள சமூகத்தைப் பொறுத்தளவில் இப்படியான காலனித்துவகால ஆங்கிலப் பெயர்களை கிறிஸ்தவர்கள் அல்லாத பௌத்தர்களும் கூட வைத்திருந்தார்கள். சிலர் காலப்போக்கில் கிறிஸ்தவ மதத்திலிருந்து மீண்டும் பௌத்தத்துக்கே திருப்பி வந்தார்கள் ஆனால் அவர்களின் பரம்பரைப் பெயர்களாக அதே கிறிஸ்தவப் பெயர்களாகத் தொடர்ந்தன.

19ஆம் நூற்ற்றாண்டின் இறுதிப் பகுதியில்; பௌத்த மறுமலர்ச்சி காலப்பகுதியில் சிங்கள பௌத்த தனத்தைக் கொண்டாடுதல், போற்றுதல், வளர்த்தெடுத்தல் என்கிற பிரச்சாரம் மும்முரமாக இருந்தது. சுதேசியத்தைக் கொண்டாடுதல் என்கிற இந்த பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக மேற்கத்தேய கிறிஸ்தவ பெயர்களைக் கைவிடுவதும் ஒரு அங்கமாக இருந்தது.

அநகாரிக்க தர்மபாலவின் வகிபாகம்
பௌத்த மறுமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தின் தந்தையாக அறியப்படும் அநகாரிக தர்மபாலவின் உண்மையான பெயர் தொன் டேவிட் ஹேவாவித்தாரண. அவரது தந்தையின் பெயர் எச்.தொன் கரோலிஸ் ஹேவாவித்தாரண. 12.01.1886 அன்று டேவிட் தனது தந்தைக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் தனது பெயரை மாற்றப்போவது குறித்த அனுமதியைக் கேட்டிருந்தார். தந்தை கரோலிஸ் இதே காலப்பகுதியில் பிரம்மஞான சங்கத்தின் ஆதரவாளராக ஆகியிருந்தார். எனவே அவரும் தனது விருப்பத்தை அளித்திருந்திருந்தார். அதன் பிரகாரம் தர்மபால ஹேவாவித்தாரண என்று ஆரியப் பெயரை சூட்டிக்கொண்டார். பிற்காலத்தில் அவரின் பிரம்மச்சரியத்தின் காரணமாக அவருக்கு “அநகாரிக” என்கிற பெயரும் சூட்டப்பட்டது.

ஆறுமுகநாவலர் சைவ சமயிகள் பின்பற்றவேண்டிய ஒழுக்க விதிகள் குறித்து எழுதிய "சைவ வினாவிடை" போலவே அநகாரிக்க தர்மபாலவும் 1898இல் “கிஹி தின சரியாவ” எனும் பெயரில் ஒரு ஒழுக்கக் கோவை கைநூலை வெளியிட்டார். அதில் அவர் நாளாந்தம் உண்பது, மலங்களிப்பது தொடங்கி தேசியக் கடமைகள் வரை வரையறுக்கிறார். அதில் இனத்துவ, சாதிய ஒழுக்கங்களும் உள்ளடங்கும். அதில் “சிங்கள ஆடைகள்” எனும் தலைப்பின் கீழ் “ஹம்பயாக்கள்”அணிவதைப் போன்ற சாரங்களை (லுங்கி) அணியக்கூடாது, பறங்கியர்களைப் போல காற்சட்டை அணியக்கூடாது என்று 3, 4 விதிகளில் குறிப்பிடுகிறார்.

“சிங்களப் பெயர்கள்” என்கிற தலைப்பின் கீழ் இப்படித் தொடங்குகிறார்,
“சிங்களவர்கள் வங்க தேசத்தில் சிங்கபுரத்திலிருந்து இந்த தேசத்துக்கு வந்த ஆரிய இனம். நமது கோத்திரப் பெயர்கள் அந்த பண்பாட்டின் படியும், மொழியின் படியும் சூட்டப்படவேண்டியவை. வியாச, அனுராத, சிங்கபாகு, சுரநிமல, கோத்தபாய, அபய, சோனுத்தர, மகாநாம, நந்தமித்திர, திகாபய, சுமண, ரந்தேவ, திஸ்ஸ, பியதாச, தேவனம்பியதிஸ்ஸ, விஜயவர்தன, ஸ்ரீ சங்கபோதி, பராக்கிரம, விக்கிரம, நரேந்திரசிங்க, மகிந்த போன்ற ஆண்களின் பெயர்களும், விஜாயி, சிங்கவள்ளி, லீலாவதி, அனுலா, சங்கமித்த, லீலா, ரூபாவதி, பிரபாவதி, ரத்னாவளி, சினேகலதா போன்ற பெண்களின் பெயர்களும் நமது மூதாதையர் போல வைக்கப்பட வேண்டும். தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் கரோலிஸ், அந்திரயாஸ், ஜகொலிஸ், ஜுவானிஸ், ஹரமானிஸ், பஸ்தியான், வில்லியம், அல்லஸ், லிவேரா, டயஸ், பெரேரா, பீரிஸ், சரம், பெர்னாண்டோ, கத்தரீனா, ஜூஸ்தினா, பவுஸ்தினா, கிளாரா, மங்கோ, அங்கோ போன்ற பறங்கிப் பெயர்களைக் கைவிட வேண்டும்”
ஆங்கிலப் பெயர்களைக் கொண்ட சிங்களவர்களைக் காண நேருகிற போதெல்லாம் அவர் அவர்களின் பெயர்களைக் கிண்டல் செய்வதை ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தார்.

கல்கத்தாவில் 6 ஆண்டுகால சிறைவாழ்க்கையை அனுபவித்துவிட்டு இலங்கை திரும்பியதன் பின்னர் அவர் மகாபோதி நிலையத்தில் நடத்திய ஒரு கூட்டத்தில் இப்படி உரையாற்றினார்.

“பற சுத்தா தடைசெய்திருந்த சிங்கள பௌத்தயாவை ஆரம்பிக்கப் போகிறேன். தேசத்துக்காகவும், இனத்துக்காகவும், மதத்துக்காகவும் பணியாற்ற முன்வர இஷ்டமானவர்கள் என் முன்னால் வாருங்கள்” என்றதும். ஒரு இளைஞர் முன்னால் சென்றார். 

“உனது பெயர்?’ – “ஹரமானிஸ்”

“காட்டு யானையே! (வல் அலிய) தடிமாடே! அந்நியப் பெயரை வைக்காதே! உனது பெயர் இன்றிலிருந்து சோமசேன, உனது கடமை பத்திரிகையை அச்சு செய்து விநியோகிப்பது.” 

இன்னொரு இளைஞரும் முன்வந்தார்.

“நீ யார்?” – “ஜாகோலிஸ்”

“காட்டு யானையே! அந்த பெயரை பாவிப்பதற்கு வெட்கமில்லையா? இன்றிலிருந்து உனது பெயர் சுகததாச உபயவிக்கிரம. பத்திரிகையை தொகுக்கும் பணி உன்னுடையது.” 

இன்னொரு இளைஞரும் முன்வந்தார்.

“நீ யார்?” – “ஜாகோலிஸ்”

“காட்டு யானையே! அந்த பெயரை பாவிப்பதற்கு வெட்கமில்லையா? இன்றிலிருந்து உனது பெயர் சுகததாச உபயவிக்கிரம. பத்திரிகையை தொகுக்கும் பணி உன்னுடையது.” 

இன்னொரு நிகழ்ச்சியையும் இங்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

இலங்கையில் அப்போது பிரபல ஓவியராக இருந்தவர் ஜீ.எல்.கௌதமதாச அவர் ஒரு முறை அநகாரிக தர்மபாலாவை சந்தித்து அவரைப் பார்த்து ஒரு ஓவியம் வரையச் சென்றிருந்தார்.

“தர்மபால அவர்களே உங்களைப் பார்த்து ஒரு ஓவியத்தை வரைய அனுமதி கேட்டு வந்திருக்கிறேன்.” என்று வினயமாக கேட்டார்.

தர்மபால அவரைப் பார்த்து

“நீர் நேரடியாக வந்து என்னிடம் இப்படி கேட்டதையிட்டு  நான் மகிழ்ச்சியடைகிறேன். உன்னுடைய வயது என்ன?”

“இருபது வயதாகிறது”

“எந்த ஊர்”

“அம்பலங்கொட - ஆந்தாதொல”

“நீர் முயற்சியுள்ள ஒரு இளைஞன். எனவே என்னை வரைய உனக்கு அனுமதி தருகிறேன்.”

“நன்றி”

அந்த இளைஞன் கீழே அமர்ந்து கொண்டு அடிக்கடி தலையை உயர்த்தி தர்மபாலாவை பார்த்தபடி வரைந்து முடித்து மகிழ்ச்சியுடன் அதை தர்மபாலவிடம் காட்டினார்.”

“அருமை... உனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. உனது பெயர் என்ன?

“ஜீ.எல்.பெர்ணாந்து”

“உடனடியாக உனது பெயரை நீ மாற்றிக்கொள்ள வேண்டும். விளங்கியதா?”

“அப்படியே ஆகட்டும்”

“ஜீ.எல்.பெர்ணாந்து எனும்போது முழுப பெயர் என்ன?”

“கங்வரே லவ்நேரிஸ் பெர்னாந்து”

“இன்றிலிருந்து உன் பெயர் கௌதமதாச”

“அப்படியே செய்கிறேன்”

கௌதமதாச 1928 ஆம் ஆண்டு தர்மபால உயிருடன் இருக்கும் போதே அவரை ஒரு சிலையாக வடித்து ஒரு கண்காட்சியில் வைத்தார். அச்சிலை முதலிடம் பெற்று பரிசு பெற்றார். கௌதமதாசவுக்கும் தர்மபாலவுக்கும் இடையிலான உறவு தனிக்கதையாக பின்னர் நீள்கிறது.
பெயருக்குள் ஒளிந்திருக்கும் சாதி
இலங்கையின் வடக்கில் கூட தமிழ் பெயர்களை கிறிஸ்தவப் பெயர்களாக மாற்றிக்கொண்ட பலரைப் பற்றி நாம் அறிவோம். ஆனால் மீண்டும் தமிழ்ப் பெயர்களை மாற்றிக்கொள்வதற்கான செயல் அங்கு இடம்பெறவில்லை. அது ஒரு பிரக்ஞை மட்டத்தில் கூட இருக்கவில்லை. அது ஒரு இயக்கமாக நடக்கவில்லை. ஆனால் சிங்கள சமூகத்தில் அது ஒரு இயக்கமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. தெற்கில் பௌத்த மறுமலர்ச்சி இயக்கமும், வடக்கில் சைவ மறுமலர்ச்சி இயக்கமும் ஏறத்தாள ஏக காலத்தில் தான் நிகழ்ந்தது என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்.

பரம்பரை (குடி) + ஊர் + தகப்பனின் பெயர் + வைக்கப்பட்ட பெயர் 

என அனைத்தையும் உள்ளடக்கியிருக்கும் பெயர்களை சிங்களத்தில் “வாசகம” என்பார்கள்.

இதே வேளை இலங்கையில் பெரியார் இயக்கம், திராவிடர் கழகம் என்பன தீவிரமாக இயங்கிய காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பெயர்கள் தூய தமிழ் பெயர்களாக மாற்றப்பட்டிருக்கிறது. அது இயக்கமாகவும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கு நினைவுபடுத்தியாக வேண்டும்.

தமிழில் இன்று பெயர்களிடுவது நவீனப்பட்டிருக்கிற போதும் முன்னர் இப்படி பெயரிடுதலின் பின்னால் ஒரு சாதிய அரசியல் இருக்கவே செய்தது. இன்றும் எஞ்சியிருக்கிற அப்பேர்பட்ட பெயர்களைக் கொண்டு ஓரளவு அவர்களின் ஆதிக்க அடுக்கை அடையாளம் காண முயலும் போக்கு எஞ்சவே செய்கிறது.

உதாரணத்துக்கு கந்தன் – கந்தராஜா – கந்தராசா என்பது அடியிலிருந்து மேலே செல்லும் சாதிய அடுக்காகக் கொள்ளப்படுகிறது. அதிகமாக “ன்” என்று முடியும் ஆண் பெயர்களை ஓடுக்கப்பட்ட சாதியினரின் பெயர்களாகவும், “சா”, “ம்” போன்ற எழுத்துக்களில் முடிகிற பெயர்களை உயர்சாதிப்பெயர்களாகவும் கருதுகிற ஒரு நம்பிக்கை கடந்த காலங்களில் நிலவவே செய்தது. நவீன பெயரிடல் மரபில் தமிழ்ப் பெயர்களே சுத்தமாக அற்றுப்போகிற இன்றைய நீட்சியில் இந்த சாதிய அடையாளத்துக்கெல்லாம் வழியில்லாமல் போனது எனலாம்.

சிங்கள சமூகத்தில் சொய்சா போன்ற பெயர்கள் கொவிகம சாதியல்லாதவர்களைக் குறிப்பதாகவும், நாணயக்கார, பண்டா போன்ற பெயர்கள் கொவிகம சாதியைக் குறிப்பதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. 

தென்னிலங்கை சிங்களச் சூழலில் 1930 களின் பினனர் தேசிய உடை, தேசிய உணவு, தேசிய சின்னங்கள், தேசியமொழி, என்பனவற்றை மறுவுருவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது பெர்னாண்டோ, பெரேரா, சில்வா போன்ற பெயர்கள் மெதுமெதுவாக தவிர்க்கப்பட்டு அவை பரம்பரைப் பெயர்களுடன் மாத்திரம் நின்றுகொண்டன. அதற்குப் பதிலாக விஜேரத்ன, குணரத்ன, அமரசிங்க போன்ற பெயர்கள் “கே” என்கிற சொல்லையும் சேர்த்து நீடிக்கப்பட்டது. ஆனால் புதிதாக போர்த்துகேய பெயர்களை சூட்டுவதை தவிர்த்துக்கொண்டனர்.

“கே” பெயர் + தகப்பனின் குடும்பப் பெயர் + தாயின் குடும்பப் பெயர் + வழங்கப்பட்ட பெயர் + பரம்பரைப் பெயர்

ஹேவாகே, பட்டபெந்திகே, கங்கானம்கே, லியனகே, தந்திரிகே, ஆராச்சிகே, மறக்கலகே,   என்றெல்லாம் “கே” என்று முடிவதைப் பார்க்கலாம். இன்ன பரம்பரையைச் சேர்ந்த, இந்த வம்சாவளியைச் சேர்ந்த, இந்த ஊரைச் சேர்ந்த, இந்த அந்தஸ்துக்குரிய, இந்த பதவிக்குரிய என்கிற அர்த்தத்தையே அது தருகிறது.

ஆனால் இப்படி “கே” அல்லது “லாகே என்று முடிகிற பெயர்களின் பின்னால் சூட்சுமமான சாதியம் கலந்திருக்கிறது. “கே” என்று முடிவதை “கொவிகம” அல்லாதோரையும் “லாகே” என்பது “கொவிகம”  சாதியைக் குறிப்பதாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது.

உதாரணத்திற்கு “முதியான்சேலாகே” என்கிற பெயர் “சிங்கள  - பௌத்த – மலைநாட்டு (கண்டிய) – கொவிகம – ஆண்” இன் பெயர். இலங்கையின் உயர் குலப் பெயராக இதைக் கொள்கின்றனர். மேலும் “முதியான்சே”, “ஆராச்சி” போன்ற பெயர்கள் பரம்பரைப் பெயராகக் கொண்டாடக் கூடியதுமல்ல. அது கண்டி ராஜ்ஜியக் காலத்தில் அரசரால் வழங்கப்பட்ட பதவிப் பெயர். அப்பதவிக்கு உரியவர் இறந்ததும் இயல்பாகவே அவரோடு அந்தப் பெயரும் நின்று விடும். ஆனால் அப்பெயரை “முதியான்சலாகே”/”ஆராச்சிலாகே” என “லாகே” (பரம்பரையிலிருந்து வந்த....)  என்று பெயர்களுடன் தொடர்கிற போக்கை காணலாம்.

மேலும் “கே” என்பதை ஒருமை என்றும், “லாகே” என்பதை பன்மையிலும் அர்த்தம் கொள்ளப்படுவதையும் காண முடிகிறது.

கண்டி பௌத்த உயர் பீடமான சீயம் நிக்காயவின் அஸ்கிரி பிரிவு ஒரு காலத்தில் மலைநாட்டு சிங்கள பௌத்த கொவிகம சமொகத்தைச் சேர்ந்தவர்களின் நிக்காயவாகத் தான் இருந்தது. பிற காலத்தில் அவர்கள் “மலைநாட்டு” என்பதை அகற்றிக்கொண்டார்கள். ஏனென்றால் கரையோர சிங்கள பொத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவர்களை இணைக்கத் தொடங்கிவிட்டார்கள். இவர்களுக்கு “கே”, “லாகே” என்பதை வைத்து இணைக்கப்படும் பிக்குமாரை அடையாளம் கண்டார்கள்.

சிங்கள சமூகத்தில் பல கணவர் முறை இருந்ததை அறிவீர்கள். இந்த “பல கணவர்” முறை கண்டிய சமூக அமைப்பிலேயே நடைமுறையில் இருந்தது. “சிறிசேனகே” என்று பெயர் இருந்தால் அவர் கண்டிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவராக இருக்க முடியாது என்பது நம்பிக்கை ஏனென்றால் பலகணவர் முறைப்படி “லாகே” என்று இருந்தால் தான் “சிறிசேனமார்களின்” பிள்ளை என்பது அறியவரும். உதாரணத்திற்கு “சிறிசேனலாகே உதய மதுஷங்க” என்பது பெயர். ஆக... இதுவும் “லாகே” என்கிற பெயரைக் கொண்டு கண்டியைச் சேர்ந்த சிங்கள பௌத்த உயர் கொவிகம ஆணுக்குப் பிறந்தவர் என்பதை உறுதிசெய்யும் ஒரு போக்கும் இருந்திருக்கிறது என்கிற ஒரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் “லாகே” என்கிற பன்முக அடையாளத்துக்கு இது மட்டுமே காரணம் அல்ல என்பதையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும்.

பௌத்த பீடங்கள்
சமீபத்தில் ஒரு பத்திரிகை விளம்பரம் ஒன்றைக் கண்டேன். “பௌத்த துறவியாவதற்கு ஓர் சந்தர்ப்பம்” என்கிற அத்தலைப்பில் வெளியான அந்த விளம்பரம் இப்படி கூறுகிறது.

“சீயம் நிக்காய விகாரையொன்றில்  துறவியாகி பௌத்த தீட்சை பெற்று விகாரைக்கு பொறுப்பு வகிக்கக் கூடிய விருப்பமுள்ள 20-65 வயதுக்குட்பட்ட பெயரில் “கே” இல்லாமல் “லாகே” என்று இருப்பவர் மாத்திரம் கீழ்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்க.
சாமனேற சங்க பிக்குமாரும் பரீசிலிக்கப்படுவர்.
இல -______________________
இந்த விளம்பரம் பல செய்தித்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக கண்டத்துக்கு உள்ளாக்கப்பட்டது. சாதாரண சமூக அமைப்பில் மாத்திரமன்றி சாதியத்தை மறுக்கும் பௌத்த மதத்தின் பேரால் இலங்கை பௌத்த சங்க பீடங்கள் இப்படி இயங்குவது அதிர்ச்சியளிக்கக் கூடியது தான். ஆனால் இலங்கையின் பௌத்த பீடங்கள் அனைத்தும் சாதிய ரீதியில் தான் பிரிந்து இயங்கி வருகின்றன என்பது கசப்பான உண்மை.


“பத் கவப்பு நம”
சிங்கள சமூக அமைப்பில் “பத் கவப்பு நம” (bat-kawapu nama) என்கிற ஒரு சடங்கு வழக்கில் நெடுங்காலமாக இருக்கிறது. ஒரு குழந்தையை தாய்ப்பாலைக் கைவிடச்செய்து பின்னர் முதற் தடவையாக சோறு ஊட்டும் சடங்கு அது. இந்த சடங்கில் தான் “பட்ட பெந்தி நம”  (Patabandi-nama) அக்குழந்தைக்கு வழங்கப்படும். “பட்டபெந்தி நம” என்பது வம்சாவளிப் பெயரை அக்குழந்தையின் பெயரோடு சேர்த்தலைக் குறிக்கும் கலைச்சொல். “பட்டங்கட்டி” என்று தமிழில் சுட்டலாம்.

பண்டைய காலத்தில் இப்படி பெயரிடுவதை உயர் குழாமினர் பெரிய நிகழ்வுக்குரிய சடங்காகக் செய்வர். அக்குழந்தையின் பெயரோடு குழந்தையின் முன்னோருக்கு இருந்த பட்டத்தை சேர்த்து “கே” அல்லது “லாகே” என்று வழங்கப்படும். இதை ஒரு சுருட்டப்பட்ட செப்போலையில், அல்லது வெள்ளியோலையில், அல்லது பனையோலையில் பொறிக்கப்பட்ட பட்டயமாக வாசித்து காட்டப்படும். அவ்வாறு வழங்கப்பட்ட பெயர்களையும் அதற்கான அர்த்தங்களையும் E. Reimers 90 வருடங்களுக்கு முன்னர் எழுதிய “Some Sinhalese names and surnames” என்கிற ஆய்வுக்கட்டுரையில் விரிவாக விளக்குகிறார். 
 • ஜயசிங்ஹ (வெற்றிகரமான சிங்கம்),
 • விஜேரத்ன (வெற்றிகரமான மாணிக்கம்),
 • ஜெயவர்தன (வெற்றி அதிகரிப்பவர்),
 • ஜெயசூர்ய (வெற்றியின் சூரியன்),
 • அபயகூன் (அச்சமற்ற தலைவர்),
 • விஜேசிங்க (சிங்கத்தை வெல்வது),
 • பண்டாரநாயக்க (ஒரு பிரபு அல்லது ராஜ்யத்தின் திறைசேரி அதிகாரி),
 • ஏகநாயக்க (ஒரே அல்லது நிகரற்ற தலைவர்),
 • மனம்பேரி (பெரிய மனம் படைத்த மனிதன்),
 • அமரகூன் (அழியாத தலைவர் அல்லது மக்களின் ராஜா),
 • இளங்ககூன் (தீவின் அரசன்),
 • திசாநாயக்க (உலகின் நான்கில் ஒரு பகுதியின் அதிபதி),
 • அமரசேகர (அழியாதவர்களில் மிக உயர்ந்தவர்),
 • ஜெயலத் (ஒரு வெற்றியாளர்),
 • ஜெயதிலக (வெற்றிகரமான தலை ஆபரணம்),
 • நாணயக்கார (நாணயமானவர்)
 • செனவிரத்ன (தளபதிகளின் ரத்தினம்),
 • ராஜபக்ஷ (ராஜாவுக்கு விசுவாசமானவர்),
 • விஜேவிக்ரம (துணிச்சலின் மூலம் வெற்றியைக் கொண்டுவருபவர்),
 • ஜெயசேகர (வெற்றியாளர்களில் மிக உயர்ந்தவர்),
 • அபயசேகர (துணிச்சலான வீரன்),
 • நவரத்ன (நவ ரத்தினங்கள்),
 • அபய ரத்ன (அச்சமற்றவர்களின் ரத்தினம்),
 • தென்னகூன் (தெற்கின் தலைவர்),
 • விஜேகூன், (வெற்றிகரமான தலைவர்),
 • விஜேவர்தன (வெற்றிகளை அதிகரிப்பவர்).
தமது போர்த்துக்கேய பரம்பரை நாமத்தை பெயருடன் சேர்த்து தொடர்வதை விரும்புபவர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். “கே” என்பதை இன்னமும் தென்னிலங்கையில் உள்ள சிங்களவர்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கரையோரச் சமூகம் பயன்படுத்துகிறது. இன்னமும் நேரடியாக கூறுவதானால் “கே” என்று பயன்படுத்துபவர்களை “கரையார்” சமூகம் என்று அடையாளம் கண்டு விடுகிறார்கள்.

சிங்கள சமூகத்தில் கரையார் சமூகம் ஒரு தலித் சமூகமாக மோசமான ஒடுக்குமுறைக்குள் இருக்கிற சமூகமாக இல்லாவிட்டாலும் தமிழ் சமூகத்தைப் போலவே “கரையார்” சமூகம் “கொவிகம” என்கிற வேளாளர் சாதிக்கு அடுத்த நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. பெருவாரி கொவிகம சாதியினரின் பாரபட்சத்துக்கு உள்ளாவதாக எப்போதும் உணர்ந்து வந்திருபவர்கள். 1971 கிளர்ச்சியைக் கூட தென்னிலங்கை “கரையார்” சாதியினரை அதிகப்படியாகக் கொண்ட இளைஞர்களின் எழுச்சியாகப் பார்க்கும் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். அப்படி பேசிவருகிற இன்றைய முக்கிய ஆய்வாளர்களாக விக்டர் ஐவன், ஜெயதேவ உயன்கொட போன்றோரைச் சொல்ல முடியும். இவர்கள் 1971 கிளர்ச்சியின் தலைவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1971 கிளர்ச்சியை முன்னெடுத்த ஜே.வி.பியின் தலைவர் ரோகண விஜேவீரவும் கூட கரையார் சமூகம் தான்.

“கே” என்பது டச்சுக் காலத்தில் புழக்கத்தில் வந்திருப்பதாகத் தெரிகிறது. பெரும்பாலான டச்சுப் பெயர்களில் அவர்களின் பரம்பரையைக் குறிக்க “Vanden” என்பதை ஒரு வழிமுறைக் கூட்டின் தொடர்ச்சியாக பயன்படுத்துவார்கள். “Van” என்பது “இன்” (of) அல்லது “இலிருந்து” (from) என்பதைக் குறிக்கும். உதாரணத்திற்கு இலங்கையின் ஐந்தாவது சட்ட மா அதிபராக இருந்த JamesVan Langenburg என்பவரின் பெயரில் என்பது ஜேர்மனில் உள்ள ஒரு ஊரின் பெயரைக் குறிக்கும். அதாவது Langenburg என்கிற “இடத்தைச் சேர்ந்த”/ “இலிருந்து வந்த” போன்ற அர்த்தத்தை அப்பெயருக்கு முன் உள்ள Van என்பது குறிக்கும். Van என்று இலங்கையில் புழக்கத்திலுள்ள சில பெயர்கள் இவை. 

Van Arkadie, Van Cuylenburg (Culenberg), Van Dersil, Van der Straaten, Van Dort, Van Hoff, Van Langenberg, Van Rooyen, Vander 

இலங்கையில் டச்சுப் பின்னணியைச் சேர்ந்த பல பிரபலமானவர்களின் பெயர்களை இப்படிப் பட்டியலிட முடியும்.

இலங்கையைச் சேர்ந்த பிரபல பொலிவூட் நடிகை Jacqualine Fernandez, பிரபல கிரிக்கெட் வீரர் David Heyn. பிரபல கிரிக்கெட் வீரர்  Michael Van Dort. தொல்பொருள் ஆய்வாளர் R L Brohier. இடதுசாரி இயக்கத் தலைவர்களில் ஒருவரான பீட்டர் கெனமன் (Pieter Keunemen), கலைஞர் Lionel Wendt, கேளிச்சித்திரக் கலைஞர் Aubrey Collette, எழுத்தாளர் Carl Muller,  நீதிபதி சன்சோனி  Sansoni இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

பண்டா என்கிற பெயரை அதிகமாக கண்டியைச் சேர்ந்தவர்களே பயன்படுத்தி வருகிறார்கள்.

டச்சுக் காலப்பகுதியில் டயஸ், பீரிஸ், சொய்சா போன்ற பெயர்களின் தன்மை சற்று வேறுவிதமாக இருந்தது. “S” என்பதற்குப் பதிலாக பல இடங்களில் “Z” பிரதியீடு செய்யப்பட்டது. Diasz (days), Peiriz, De Zoysa போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம்.

இவ்வாறு அந்நியர்களின் பெயர்களை சூடிக்கொள்ளத் தொடங்கிய பின்னர் சிங்களவர்களின் பெயர்கள் மேலும் அதிகமாக நீண்டு சென்றன. “ஜமிக மனோஹர சுபசிங்க” என்கிற சிங்கள மாணவர் ஒருவர் மேற்கல்விக்காக இத்தாலியிலுள்ள றோம் நகர பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்த போது அங்கு ஏற்பட்ட ஒரு உரையாடலின் விளைவாக போர்த்தேக்கேய, டச்சு செல்வாக்குள்ள பெயர்களை ஆராய்ச்சி செய்தார். அதன் சுருக்க வடிவத்தை “லங்காதீப” (25.10.2017) பத்திரிகைக்கும் எழுதினார். இலங்கையின் சிங்களப் பெயர்கள் குறித்த மேலதிகமாக ஆராய்பவர்களுக்கு சிறந்த உசாத்துணையாக அமைந்தது அந்த ஆய்வு.

பெரேரா – இதன் அர்த்தம்  பேரிக்காய் மரம் என்பதாகும். இது ஒரு ஸ்பானிஷ் பெயராக இருந்தபோதும் அயல் நாடான போர்த்துக்கேயர்கள் அதிகம் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதன் அயல் நாடுகளில் Perer, Perero, Pereros, Pereyra, Pereyras, Das Pereiras, Paraira என்றெல்லாம் இப்பெயரை வெவ்வேறு வடிவங்களில் அழைப்பதுண்டு.

சில்வா – போர்த்துகேய பெயர்களில் மிகவும் பிபல்யமானது. அதன் நேரடி போர்த்துகீச அர்த்தம் காடு அல்லது வனப்பகுதி. போர்த்துகேயர் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற நாடுகளிலும் இப்பெயர் பிரபல்யம். இன்றைய நிலையில் போர்த்துக்கேய பின்னனியையுடையவர்கள் மாத்திரம் இந்தப் பெயரைக் கொண்டிருக்கவில்லை. 

த சில்வா – de என்பது ஆங்கில மொழியில் of எனக் குறிக்கும் – (வனம் காடு) 

மெல் –  அல்லது “த மெல்” (De Mello) என்றும் அழைப்பார்கள். நேரடி அர்த்தம் “தேன்” என்று கொள்ளலாம்.

க்ரூஸ் – “சிலுவை” என்பது அர்த்தம். 100 வீத மத சிந்தனையுள்ள போர்த்துக்கேயர்களிடம் இப்படி ஒரு பெயர் இருந்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

பீரிஸ் - (கோப்பை வைக்கும் தட்டு)

டயஸ் – Dias என்பதன் தமிழ் அர்த்தம் “தினம்” என்பதாகும். போர்த்துகேய மொழியில் Dia என்பது தினத்தைக் குறிக்கும். தினம் என்பதன் பன்மை “தியஸ்”

மென்டிஸ் –  Mandaz, Menendez என்றல்லாம் அழைப்பார்கள். மெனந்தோ என்பது ஐரோப்பாவில் செல்வாக்கு பெற்ற ஒரு கத்தோலிக்க புனிதரின் பெயர். அவர் ஒரு ராஜகுமாரனும் கூட. கி.பி 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த ஸ்பானிய ராஜகுமாரன் கத்தோலிக்க விசுவாசத்தால் உயிர்த்தியாகம் செய்துகொண்டவர். இந்த பெயரின் நீட்சியானது “மேனந்தோவின் மகன்” என்கிற அர்த்தத்தைக் கொண்டதாகும்.

பெர்னாண்டோ – ஆங்கிலேயர்களும் இந்தப் பெயரைக் கொண்டிருக்கிற போதும் போர்த்துக்கேய பெயராக பெfர்னாந்தோ என்றே அழைப்பார்கள். ஜேர்மன் நாட்டின் அரச வம்சத்து பெயராக பேர்டினன்ட் (Ferdinand) என்பதைத் தான் போர்த்துக்கேயர் Fernando பெர்னாண்டோ என்று வைத்துக்கொண்டனர். பேர்டினன்ட் என்கிற பெயர் ஜேர்மன், செக், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரான்ஸ், போலாந்து போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சில நாடுகளில் Hernando என்றும் பயன்படுத்தபடுகிறது. துணிச்சல், துணிச்சல் மிக்க பயணம் போன்ற அர்த்தங்களைக் கொண்டது. இலங்கையில் சில்வா, பெரேரா போன்ற பிரபல பெயர்களைப் போலவே இதுவும் பிரபல்யம். தமிழில் பர்ணாந்து என்றும் பயன்படுத்தப்படுகிறது.

நோனிஸ் – 14ஆம் நூற்றாண்டில் கஸ்தீலியன் ஆக்கிரமிப்பிலிருந்து போர்த்துக்கலை மீட்ட போர்த்துகேய வீரன் நூனெஸ். அவரின் மகன் என்கிற அர்த்தத்தையே இந்தப் பெயர் குறிக்கிறது.

கோமஸ் / கோமிஸ் – ஸ்பெயின் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் கோமா (Guma) என்கிற ஜேர்மன் மொழிச் சொல்லில் இருந்து வந்திருப்பதாக கொள்ளப்படுகிறது. ஜேர்மன் மொழியில் “மனிதன்” என்று அர்த்தம்

பொன்சேகா – போர்த்துகேய பெயராக இருந்தபோதும் தன மூலம் லத்தின் மொழியாகும். லத்தீனில் ‘Fonseca’ என்பதன் அர்த்தம் “பாழடைந்த கிணறு”.

கொஸ்தா - ஆற்றங்கரை, சாய்வு, கடல் கடற்கரை என்பது இதன் அர்த்தம். அதிகமாக ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் பாவனையில் உள்ள பெயர் இது.

வாஸ் – ஹங்கேரிய மூலத்தைக் கொண்டது இப்பெயர். ஹங்கேரி மொழியில் Vaas என்பது இரும்பைக் குறிக்கும். இரும்புத் தொழில் மேற்கொள்ளும் கொல்லர் சமூகத்தில் இருந்து வந்தவராக கொள்ளபடுகிறது.

அல்விஸ் –  ஜேர்மன் மூலத்தில் Alfher என்றும் போர்த்துகேய புழக்கத்தில்  Alves என்றும் காணப்படுகிறது. பின்னர் Alves / Alwis என்று புழக்கத்துக்கு வந்தது.

ரொட்ரிகோ -  ஸ்பானிய பின்னணியைக் கொண்ட பெயர் இது. 11ஆம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த ரொட்ரிகோ தியாஸ் த வீவார் என்கிற பெயரைக் கொண்ட ஒரு தளபதி. அவனை கௌரவிக்கும் வகையில் இந்தப் பெயரை சூட்டிக்கொள்கிறார்கள். ஜெர்மனின் புராதனப் பெயராக Hroderic என்கிற பெயரில் அறிமுகமான இந்தப் பெயர் ஸ்பானியா, இத்தாலி, போர்த்துகேய மொழிகளில் Roderico என்றும், கத்தலோனா மொழியில் Roderic என்றும், பிரான்ஸ் மொழியில், Rodrigue என்றும், ஆங்கிலத்தில் Rodrigo என்றும் ஸ்டைலாக அழைக்கப்பட்டு வருகிறது.

சொய்சா – (சூசா நதி பள்ளத்தாக்கு / சால்டிஷ் குடியிருப்பாளர்கள்)

அல்மேதா – இது ஒரு முஸ்லிம் பூர்வீகப் பெயராக அறியப்படுகிறது. Beira Alta என்கிற பகுதியில் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டிருந்தது. அரேபியர்கள் இதை 'அல் மைதா' என்று அழைத்தனர். முஸ்லிம்களால் தாக்கப்பட்ட ஒரு ஸ்பானிஷ் நகரம். இலங்கைக்கு முதன் முதலில் ஆராய்வதற்காக வந்தவரின் பெயர் கூட லோரன்ஸ் த அல்மேதா. போர்த்துகேயர் நன்றாக செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் தமிழ், சிங்கள சமூகங்களில் இந்தப் பெயர் புழக்கத்துக்கு வந்தது.

கப்ரால் – ஆடுகள் வசிக்கும் இடம். லத்தின் மொழியில் capra’ என்றால் ஆடு. ‘capralis’ என்றால் “ஆட்டின் இடம்” என்று பொருள்.

கொறயா – போர்த்துக்கேய மொழியில் ‘correia’ என்பது தோலால் செய்யப்பட்ட பட்டி (leather straps அல்லது belts) என்று அர்த்தம்

பாஸ்குவல் – (உயிர்த்தஞாயிறு விருந்துபசாரம்)

காலனித்துவப் பெயர்களுக்கு மாற்றீடாக அன்று அநகாரிக்க தர்மபால வட இந்திய ஆரிய வாடையைக் கொண்ட சிங்களப் பெயர்களை முன் மொழிந்தார். அவ்வாறே பலர் பெயர்களை மாற்றிக்கொண்டனர். ஆனால் அதன் பின்னர் மீண்டும் வட இந்திய ஹிந்தி திரைப்படங்களின் செல்வாக்கு சிங்களச் சமூகத்தில் கோலோச்சத் தொடங்கியதன் பின்னர் இப்போதெல்லாம் சிங்களவர்களின் பெயர்களில் ஹிந்தி நடிக, நடிகையரின் பெயர்களை வைப்பது ஒரு பேஷன் ஆக ஆகியிருக்கிறது.

சிங்கள சமூகத்தில் பெயரிடலின் பின்னால் உள்ள ஆதிக்க அரசியல் கூறுகள் குறித்து ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இந்த ஆய்வுகள் சமூக மாற்றத்தையும், சமூக பண்பாட்டு வரலாற்றுப் பின்புலத்தை ஆராய்வதற்குமான அளவுகோள்களில் ஒரு அங்கமாக பயன்படுத்த முடியும். தமிழில் இதனை மேலும் விரிவாக்கி ஆராயப்படவேண்டும். இக்கட்டுரை அப்படிப்பட்ட ஆய்வுகளுக்கு முன் தள்ளும் அறிமுகம் மட்டுமே.

உசாத்துணை:
 • Tissa Devendra - Conversions, sycophancy and custom in 'Ceylon' names - The Island - 27.12.2016
 • W. T. A. Leslie Fernando - What's in a name? Plenty - sundayobserver - 12.11.2006
 • என்.சரவணன் – 1915 : கண்டி கலவரம் – 2017 – புக்வின் பதிப்பகம் – கொழும்பு
 • Sri Lanka: 1) Information on the Sinhalese caste system, and how would changing one's name affect its operation; 2) Activities of the Anti-Terrorist Division of the Colombo Police Force; 3) Chief of this unit in April 1989 - Canada: Immigration and Refugee Board of Canada - 1 January 1990
 • E. Reimers - “Som Sinhalese names and surnames” - Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society 1930 - Volume XXXI
 • Tuan M. Zameer Careem - Disappearing Burgher and Malay Surnames in Island Lanka - Ceylon Today
 • Marco Ramerini. English text revision by Dietrich Köster. - The Dutch Burghers of Sri Lanka. Dutch Ceylon -https://www.colonialvoyage.com/

நன்றி - காக்கைச் சிறகினிலே - மார்ச் 2020

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates