Headlines News :
முகப்பு » , , , , , » சிங்கள மகா சபையின் தோற்றமும் மத-மொழித்-தேசியவாதத்தின் எழுச்சியும் (1956: 8) என்.சரவணன்

சிங்கள மகா சபையின் தோற்றமும் மத-மொழித்-தேசியவாதத்தின் எழுச்சியும் (1956: 8) என்.சரவணன்

சிங்கள மகாசபை 19.05.1934 ஆம் ஆண்டு கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ‘பௌத்த மந்திரய’வில் வைத்து அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

மகா கவி ஆனந்த ராஜகருணா, குமாரதுங்க முனிதாச, டீ.எம்.ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தகப்பனார்) பியதாச சிறிசேன போன்றோர் சிங்கள மகா சபையின் ஸ்தாபகர்களாக காணப்பட்டனர்.

ஆரம்பத்தில் சிங்கள மகா சபை என்கிற பெயர் பண்டாரநாயக்கவால் வைக்கப்பட்டதல்ல. வேறு இனத்தவர்களையும் இத்துடன் இணைத்துக்கொள்ளும் நோக்குடன் அவர் “சுவதேஷிய மகா சபா” (Swadesiya Maha Sabha - சுதேசிய மகா சபை) என்கிற பெயரையே வைக்க விரும்பினார். ஆனால் பிரபல சிங்கள இலக்கியப் பிரமுகரான  குமாரதுங்க முனிதாச குமாரதுங்க அந்த பரிந்துரையைத் தோற்கடித்தார். 

பிளவுபட்டிருக்கிற சிங்கள இனத்தை ஒன்று சேர்த்து தேசாபிமானத்தைக் கட்டியெழுப்பி தேசத்தின் சுதந்திரத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதே இதனை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது. நாட்டுக்கு சிங்கள மகாசபையின் அவசியம் என்ன என்பது குறித்து பண்டாரநாயக்கவின் விளக்கம் 10.05.1934 அன்று “லக்மின” பத்திரிகையில் வெளியாகியிருந்தது.  

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் வருகையினால் இந்த நாட்டின் மத மறுமலர்ச்சி இல்லாமல் போனது. அதன் விளைவாக அநகாரிக தர்மபால போன்ற தேசிய வீரர்கள் முன்னெடுத்த இன, மத மறுமலர்ச்சியை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்றும் சிங்கள இனமானது மதம், சாதி என்றெல்லாம் பிரிந்திராமல் இன, மத மீளுயிர்ப்புக்கு வழிசெய்யவேண்டும் என்றும் அவர் அதில் விளக்கியிருந்தார்.

மேலும் நாட்டின் கல்வி வளர்ச்சியை இலக்காகக் கொண்ட சமய வகுப்புகளை நடத்தி, சாதிபேதங்களை இல்லாமல் செய்து, கண்டிய – கரையோர மக்களுக்கிடையில் நம்பிக்கையை உருவாக்கி, சிங்கள பண்பாட்டு கலை  இலக்கியங்களை வளர்த்தெடுக்கக் கூடியவகையில் அடிப்படை உபாயங்களை மேற்கொள்வதற்காகவே சிங்கள மகா சபை உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நாட்டின் பொது இலட்சியத்தை இலக்காக வைத்து பிரதான மூன்று கொள்கைகளை பண்டாரநாயக்க முன்வைத்தார்.
  1. நாட்டுக்கு தேவையானது தேசியப் பெருமிதம். ஆனால் சிங்களம் – தமிழ் என்கிற பெருமிதமே தொன்றியிருகிறது எனவே சிங்கள மகா சபையின் பிரதான இலக்கு தேசிய பெருமிதத்தை கட்டியெழுப்புவது.
  2. மதம் தர்மம் போன்றவை தொடர்பிலான கொள்கைகளை கடைபிடிக்கக் கூடிய கன இயல்பை வளர்த்தெடுத்தல்.
  3. நமக்கான உணவு, உடை போன்ற பாரம்பரிய பண்பாட்டு வளங்களை வளர்த்தெடுத்தல்.
இவற்றை அடைவதற்காக முதலில் பிளவுபட்டுள்ள சிங்கள இனத்தை பேதங்கள் இன்றி ஒன்றிணைத்து பின்னர் ஏனைய இனங்களையும் சேர்த்துக் கொண்டு ஐக்கியமாக சுதந்திரத்தையும், அபிவிருத்தியையும் வென்றெடுத்தல்.

இந்த அடிப்படையில் வேகமாக வளர்த்துக்கொண்டு வந்த சிங்கள மகா சபை முதல் வருடத்தில் சேனபுர, மாத்தறை, ஹொரனை, தங்கல்லை போன்ற பிரதேசங்களில் கிளைகளை உருவாக்கியது. மிகவும் குறுகிய காலத்தில் நாடளாவிய ரீதியில் இந்த எண்ணிக்கை 350 ஐத் தாண்டியது. பல்வேறு சிறு அமைப்புகளும், பிக்குமாரும், புத்திஜீவிகளும், அரசியல், சமூக ஆர்வலர்களும் இணைந்து கொண்டார்கள். 1936 நவம்பர் மாத கொழும்பு பௌத்த சங்கத்தில் நிகழ்த்தப்பட்ட கலாசார மாநாட்டைத் தொடர்ந்து ஒரு புத்தெழுச்சி ஏற்பட்டது. இதன் விளைவாக 1936 ஆம் ஆண்டு இரண்டாவது அரசாங்க சபைக்காக 16 பேர் சிங்கள மகா சபையைச் சேர்ந்தவர்கள் தெரிவானார்கள்.

1938 ஆம் ஆண்டு கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தில் சிங்கள மொழி, இலக்கியம், பௌத்த மதம் என்பவற்றை வளர்த்தெடுப்பது குறித்த கூட்டத்தைத் தொடர்ந்து மேலும் பலர் நாடளாவிய ரீதியில் பெருகினார்கள்.

சிங்கள மகா சபையினர் மலையகத் தோட்டத் தொழிளார்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தது. குறிப்பாக உள்நாட்டில் அவர்களுக்கு உரிமைகள் வழங்குவதை எதிர்த்ததுடன், அவர்கள் திருப்பி அனுப்பப்படவேண்டியவர்கள் என்கிற நிலைப்பாட்டில் இருந்தது. இந்தக் காலப்பகுதியில் தான் ஜவஹர்லால் நேருவும் இலங்கை விஜயம் செய்திருந்தார்.

இந்திய வம்சாவளியினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக “இலங்கை இந்தியர் காங்கிரஸ்” என்கிற அமைப்பை தோற்றுவிக்க அவர் உந்துதலாக இருந்தார். அத்துடன் 25.07.1939 அன்று அவ்வமைப்பை பதிவு செய்வதற்கான பதிவுப் பத்திரத்தில் சாட்சியாக கையெழுத்திட்டார் நேரு.

சிங்கள மகா சபை சுதந்திரக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பற்காகவும் தமது பிரச்சார வேலைகளை முன்னேடுப்பதர்காகவும் அதன் ஆதரவாளர்களால் பல பத்திரிகைகள் வெளிக்கொண்டு வரப்பட்டன.
  • சுவதேஷ மித்ரயா (ස්වදේශ මිත්‍රයා சுதேச நண்பன் )
  • சிங்கள மகா சபாவ சஹா சுவதேஷ மித்ரயா (සිංහල මහා සභාව සහ ස්වදේශ මිත්‍රයා சிங்கள மகா சபையும் சுதேச நண்பனும்) 
  • சிங்கள பலய (සිංහල බලය - சிங்கள சக்தி)
  • த நேஷன் (ද නේෂන් - தேசம்)
  • சிங்களே (සිංහලේ - சிங்களம்) 1951இல்
ஆகியவையே அவை.

இந்தப் பணிகளின் காரணமாக சிங்கள மகா சபை பெரிய சக்தியாக உருவெடுத்தது. இந்தக் காலப்பகுதியில் இலங்கை தேசிய காங்கிரஸ் இந்தளவு சாதாரண மக்கள் மத்தியில் போகவில்லை அதன் செயற்பாடுகள் மேல் மட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் சிங்கள மகா சபை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தில் இலங்கையின் முதலாவது இடது சாரி இயக்கமாக “லங்கா சமசமாஜக் கட்சி” ஆரம்பிக்கப்பட்டது. எனவே சிங்கள மகா சபை என்கிற சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புக்கும், தொழிலாளர்கள் மத்தியில் வேகமாக வளரத் தொடங்கிய லங்கா சமசமாஜக் கட்சிக்கும் இடையில் தான் போட்டியும் செல்வாக்கும் காணப்பட்டது. ஒரு வகையில் காலனித்துவ ஏகாதிபத்திய எதிர்ப்பில் இரண்டு அமைப்புகளும் ஒரே கொள்கையை வைத்திருந்தாலும் சிங்கள மகா சபை மத-மொழித் தேசியவாதத்தை முன்னிறுத்திய அதேவேளை இடதுசாரி இயக்கங்கள் பல்லின பன்மத பன்முகத்தனமையையும், சர்வதேசியவாதத்தையும் வலியுறுத்தின.

ஆனால் அரசியலில் பேரம் பேசும் ஆற்றலை ஆங்கிலம் பேசும், படித்த, வசதிபடைத்த, நிலப்பிரபுத்துவ, சாதி மேலாதிக்க மேட்டுக்குடிகளின் அமைப்பான இலங்கை தேசிய காங்கிரஸ் தன்னகத்தே கொண்டிருந்தது உண்மை.

சிங்கள மகா சபை எந்தளவு பலமாக இருந்தது என்றால் சோல்பரி ஆணைக்குழு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அரசாங்க சபையில் அங்கம் வகித்தவர்களில் பெரும்பாலானோர் சிங்கள மகா சபையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். 

1936, 1938 ஆகிய வருடங்களில் நடத்தப்பட்ட சம்மேளன மாநாட்டில் இலங்கையின் முக்கிய சிங்கள புத்திஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் அரசியல் தலைவர்கள் முக்கிய இடம்பிடித்திருந்தார்கள். இதன்படி நாடளாவிய ரீதியில் பல கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சிங்கள மகா சபைக்கு எப்படி இந்த மேட்டுக்குடி அமைப்பான இலங்கை தேசிய காங்கிரசின் தயவு தேவைப்பட்டதோ அதுபோல இலங்கை தேசிய காங்கிரசுக்கும் அடிமட்ட மக்கள் செல்வாக்குள்ள சிங்கள மகா சபையின் தயவும் தேவையாக இருந்தது. இவை இரண்டும் ஒன்று சேர்வதற்கான முயற்சிகள் 1940 ஏப்ரல் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டபோதும் அது அவ்வளவு எளிதாக சாத்தியப்படவில்லை. இறுதியில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் இவை இரண்டும் ஒன்று சேர்ந்து தமிழ், முஸ்லிம் அமைப்புகளையும் இணைத்து 06.09.1946 அன்று ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கினர். ஐக்கிய தேசியக் கட்சியின் உருவாக்கப்பட்டபோது அந்தக் கூட்டணியில் பலமான சக்தியாக சிங்கள மகா சபை தான் இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை ஆரம்பித்தபோது டீ.எஸ்.சேனநாயக்கவை அதன் தலைவராக முன்மொழிந்தவரும் பண்டாரநாயக்க தான். பண்டாரநாயக்க ஐ.தே.க.வின் உப தலைவராக தெரிவானார். அதன் விளைவாக ஒரு பலமான கட்சியாக பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று டீ.எஸ்.சேனநாயக்க பிரதமரானார். பண்டாரநாயக்க உள்ளூராட்சி மற்றும் சுகாதார அமைச்சராக ஆனார். அது போல சபைத்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

அந்தத் தேர்தலில் சிங்கள மகா சபையைச் சேர்ந்த 18 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களில் 4 பேர் கெபினட் அமைச்சர்களாக ஆனார்கள். 5 பேர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

இப்படி பெரிய அளவில் வளர்க்கப்பட்ட சிங்ககள மகா சபை பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது பிரதான பலமான அமைப்பாகத் தான் அதனுடன் இணைந்தது. சிங்கள மகா சபையை இணைத்துக்கொண்டது குறித்து தேசிய காங்கிரசுக்குள் அதிருப்திகளும் அப்போது வெளியிடப்பட்டன. அதற்கு பண்டாரநாயக்க பதிலளிக்கையில் “தேசிய விடுதலைக்காகவும், பிரித்தானியர் அறிமுகப்படுத்திய பாராளுமன்ற அமைப்புமுறையின் படியும் ஐக்கியப்பட்ட கட்சியொன்றை உருவாக்கிக் காட்டுவதற்கு இப்படி தனியான அமைப்பாக இணைய நேரிட்டது” என்றார். 

ஐ.தே.கவுடன் இரண்டறக் கலந்துவிட்டபோதும் பண்டாரநாயக்க சிங்கள மகா சபையைக் களைத்துவிடவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே புறம்பான ஒரு தனித்துவமான குழுவாக சிங்கள மகா சபையைப் பேணினார். அதைப் பலப்படுத்திக்கொண்டே வந்தார். புதிய அங்கத்தவர்களையும் தொடர்ந்து இணைத்துக்கொண்டிருந்தார். ஐ.தே.க.வில் அவருக்கு இருந்த இடம் அவருக்கு திருப்தியளிக்கவில்லை. டீ.எஸ்.சேனநாயக்க கட்சிக்குள் தனது குடும்பத்தினருக்கு அதிக வாய்ப்புகளைக் கொடுத்துவந்த சூழ்நிலையில் தனது எதிர்காலம் குறித்த சந்தேகம் அவருக்குள் எழுந்தது. அது குறித்து விமர்சனங்களையும் வைக்கத் தவறவில்லை.

இதேவேளை கட்சியின் தலைமையைக் கைப்பற்றுவதற்காக மறுபுறம் ஜோன் கொத்தலாவலவும் முயற்சி செய்துகொண்டிருந்தார். அவருக்கு சவாலாக பண்டாரநாயக்க இருந்தார். கட்சியின் பிரச்சார இயந்திரம் அவரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன. குறிப்பாக கட்சியின் சிங்கள மொழிப் பத்திரிகையான “சியரட்ட”வும், ஆங்கில மொழிப் பத்திரிகையான “UNP Journal” என்கிற பத்திரிகையும் பண்டாரநாயக்கவின் செயற்பாடுகளை விமர்சித்தன.

பண்டாரநாயக்க எதிர்பார்த்தபடி உறுதியான அரசாங்கத்தை அதன் மூலம் அமைக்க முடிந்தது. ஆனால் சிங்கள மகா சபையின் அபிலாஷைகளை அதன் மூலம் அடையமுடியவில்லை என்கிற ஏமாற்றத்தில் இந்தக் கூட்டு ஐந்தே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. மூன்றே மூன்று ஆண்டுகள் தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆட்சியில் பங்கெடுத்தது.

அரசாங்கத்தில் இருந்த காலப்பகுதிக்குள் பல்வேறு யோசனைகளை பண்டாரநாயக்க கொண்டுவந்தார். இவை ஒன்றும் கணக்கில் எடுக்கப்படாத நிலையில் 1951 ஆம் ஆண்டு யூலை 09 அன்று சிங்கள மகா சபையின் 13வது வருடாந்த மாநாடு மாதம்பேயில் நடத்தப்பட்டது.

அந்த மாநாடு இலங்கை அரசியல் சரித்திரத்தில் ஏற்படுத்திய முக்கிய விளைவுகளை அடுத்த இதழில் பார்ப்போம். 
பண்டாரநாயக்க தொகுத்த
CNCயின் அதி முக்கிய ஆவணங்கள்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இலங்கை தேசிய காங்கிரசின் (CNC – Ceylon National Congress) வகிபாகம் முக்கியமானது.  காலனித்துவத்திலிருந்து “நவகாலனித்துவ சுதந்திர இலங்கை”யாக மாறுகின்ற மூன்று தசாப்த கால நிலைமாறுகாலகட்டத்தில் அதன் அரசியல் செயற்பாடுகள் முக்கியமானது. பல இனங்களையும் சேர்ந்த சக்திகளின் திரட்சியான வகிபாகம் அதற்குண்டு.

காங்கிரசைப் பரி ஆராய்பவர்களுக்கு முக்கிய ஆவணங்களாக இருப்பது
1. The Handbook of the Ceylon National Congress: 1919-1928 – S.W.R.D Bandaranaike
2. Documents of the Ceylon National Congress and Nationalist Politics in Ceylon – Michael Roberts

காங்கிரசில் பண்டாரநாயக்க 1925 ஆம் ஆண்டு லண்டனிலிருந்து வந்த அடுத்த வருடம் 1926இல் இணைந்தார். அதில் செயலாளர், பொருளாளர் பதவி மட்டுமன்றி 1931 இல் அதன் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

1927 ஆம் ஆண்டு மார்ச் 26அன்று காங்கிரசில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதாவது காங்கிரசின் ஆவணங்கள் அனைத்தையும் தொகுப்பதாக முடிவு செய்யப்பட்டது. அப்பொறுப்பை அன்றைய இணைச் செயலாளராக இருந்த பண்டாரநாயக்கவிடம் ஒப்படைத்தார்கள்.

பண்டாரநாயக்க தனது அரசியல் பணிகளின் மத்தியில் கச்சிதமாக அந்த நூலைத் தொகுத்தார். அதில் காங்கிரசின் கூட்ட அறிக்கைகள், தீர்மானங்கள், முன்மொழிவுகள், ஒப்பந்தங்கள், உரைகள், விவாதங்கள், அரசியலமைப்பு திருத்த யோசனைகள் என பல ஆவணங்களை தொகுத்தெடுத்தார். 1919-1928 வரையான 9 ஆண்டுகாலஆவணங்களை உள்ளடக்கிய அந்த நூல் அதே 1928 ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரசால் வெளியிடப்பட்டது. மொத்தம் 1100 பக்கங்களைக் கொண்ட அந்த நூலை பண்டாரநாயக்க தொகுத்தெடுக்க நான்கு மாதங்கள் தான் எடுத்துக்கொண்டார் என்கிற அவரின் முன்னுரை வியப்பளிக்கிறது. அந்த முன்னுரையில் அதைத் தொகுத்தெடுப்பதில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் விளக்குகிறார்.

இந்த நூலை பிற்காலத்தில் 1991 ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய நூதன சாலை மறுபடியும் பதிப்பித்தது. இன்னும் கொஞ்ச பிரதிகளே விற்பனைக்கு இருக்கின்றன. அதன் விலை கூட அன்றைய அதே 430 ரூபா விலையில் நூதன சாலையின் புத்தககே கடையில் விற்கப்படுகிறது.

இந்த அருணாச்சலத்தின் முக்கிய உரையான “எமது அரசியல் தேவை” என்கிற உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை உட்பட, சபாபாதி, மகாதேவா போன்ற தமிழ் தலைவர்களின் முக்கிய உரைகள், பரிந்துரைகள், வாதங்கள் என்பனவும் உள்ளடங்கியிருக்கிறது.

பிற காலத்தில் தேசிய காங்கிரசின் அனைத்து ஆவணங்களையும் தொகுப்பதன் அவசியத்தை பலர் உணர்ந்திருந்தாலும் அது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை.

அந்தப் பெருங்காரியத்தை செய்து முடித்தவர் பிரபல ஆய்வாளர் மைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts).

மைக்கல் ரொபர்ட்ஸ் இலங்கைத தேசியத்தின் மூலம் என்ன? இலங்கையில் தமிழ், சிங்கள தேசியயங்களின் மூலங்கள் என்ன என்பதை ஆராய முற்பட்டபோது தான் இந்த ஆவணங்களின் அவசியத்தை உணர்ந்துகொண்டார். பண்டாரநாயக்கவின் ஆவணம் ஒரு ஆதாரமாக இருந்தாலும் அது 1928 ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது.

இந்த நூல்கள் தான் குமாரி ஜெயவர்த்தன, ஜெயதேவ உயன்கொட இன்னும் பல ஆய்வாளர்களும் வெளிக்கொண்டனர்ந்த பல ஆய்வுகளுக்கு ஆணி வேறாக அமைந்தன என்று கூறலாம்.

பிற காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கட்டுப்பாட்டில் தான் தேசிய காங்கிரசின் ஆவணங்கள் அனைத்தும் சிக்கியிருந்தன. ஒரு முறை தற்செயலாக மைக்கல் ரொபர்ட்ஸ் ஜே.ஆரை சந்திக்க நேர்ந்தபோது காங்கிரசின் ஆவணங்களி சிலவற்றை தான் இரவல் வாங்கிக்கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார். 1960களின் இறுதியில் அதற்கு முதலில் ஜே.ஆர் முகம்சுளித்தாலும் பின்னர்

“கோத்தகொடவும் நானும் பண்டாரநாயக்கவின் அந்தப் பணியைத் தொடரத் திட்டமிட்டிருந்தோம். நீங்கள் இப்போது அந்தப் பணியை முன்னெடுக்க முடியுமா?” என்று ஜி.ஆர் கேட்டிருக்கிறார். அதன் ஆழம் எவ்வளவு என்று தெரியாமலேயே வந்த வேகத்தில் ரொபர்ட்ஸ் ஆம் செய்கிறேன் என்று பதிலளித்துவிட்டார்.
மைக்கல் ரொபர்ட்ஸ் அத்தனை ஆவணங்களையும் ஆராய்வதற்கு வாய்ப்பு கிட்டியது. அதன் விளைவு அத்தனை முக்கிய ஆவணங்களையும் அடக்கிய நான்கு தொகுப்புகள் Documents of the Ceylon National Congress and Nationalist Politics in Ceylon – 1928-1977 என்கிற தலைப்பில் 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. டட்லியின் ஆட்சி காலத்தில் நீதித்துறை அமைச்சராக இருந்த ஜே.ஆரிடம் இருந்தது. அந்த அமைச்சின் மீள் தான் இலங்கையின் தேசிய சுவடிகூடத் திணைக்களமும் இருந்தது. எனவே தேசிய சுவடிகூடத் திணைக்களத்தின் அனுசரணையுடன் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டன. மொத்தம் 3208 பக்கங்கள். மொத்த விலை அன்று 250 ரூபாய்களுக்கு அன்று விலை நிர்ணயிக்கப்பட்டன. நான்கு தசாப்தங்கள் தாண்டியும் அந்த நூல் இன்றும் 250 ரூபாய்களுக்கு அந்த மூலப் பிரதிகள் தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் பெறக்கூடியதாக இருக்கிறது. அதுவும் இறுதி கொஞ்ச பிரதிகளே இருப்பதை நான் அறிவேன்.

இந்த நூல்களை மொழிபெயர்ப்புக்கும் முடிவை அரசு எடுத்தது. ஆனால் அரச மொழிகள் திணைக்களத்தால்  சிங்களத்தில் மட்டும் முதல் இரண்டு தொகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டு 1991 இல் வெளியிடப்பட்டன. தமிழில் எதுவுமே மொழிபெயர்க்கப்படவில்லை.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை ஆராய்பவர்களுக்கும், இலங்கையின் சுதந்திர கால கட்டத்து அரசியல் நாடகங்களை ஆராயபவர்களுக்கும் அதி முக்கிய ஆவணங்கள் இவை. பண்டரநாயக்க தொடங்கிய அந்த ஆவணப்படுத்தல் இன்றளவிலும் முக்கிய கைநூலாக இருக்கிறது.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates