மலையகம் மறக்கமுடியாத மறைந்த ஆசிரியர் பெருந்தகையும் சிந்தனையாளரும் சமூக செயற்பாட்டாளருமான பன்முக ஆளுமை மிக்க அமரர் சிவலிங்கத்துக்கு இவ்வருடத்திற்கான நினைவஞ்சலி நிகழ்வும் 20ஆவது நினைவுப்பேருரையும் எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை மஸ்கெலியா நகரில் இடம்பெறவுள்ளது.
திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பொன்.இராமதாஸ், “மலையக சமூகவளர்ச்சியில் ஆசிரியர்களின் வகிபாகம் என்ற தலைப்பில் நினைவுப்பேருரை நிகழ்த்தவுள்ளார்.
இலங்கையில் பொதுவாக தேசிய மட்டத்திலும் குறிப்பாக, மலையக மட்டத்திலும் ஆளுமைகள் தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் நினைவுப்படுத்தப்படுவது பெருமளவில் இல்லையென்ற சூழ்நிலையில் அமரர் சிவலிங்கம் நினைவுப்பேருரை முக்கியத்துவமிக்கவொன்றாக திகழ்கின்றது.
1960 களின் மலையகத்தில் உருவான சமூக எழுச்சியின் உந்துவிசையாக இருந்தவர் அமரர் சிவலிங்கம். 1956இல் தேசியமட்டத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தொடர்ந்து சுதேச கலாசாரம், மொழி மதம் உட்பட பெரும் முனைப்போடு முன்னெடுக்கப்பட்டது. இதனது முக்கியத்துவத்தை உணர்ந்த சிவலிங்கம் அதனை இந்திய வம்சாவளி மக்களுக்கு பொருத்தி “மலையகம்” என்ற சொல்லுக்கு ஆழமான அர்த்தத்தை கொடுத்து இன்று ‘மலையகம்’ என்ற நிலைப்பாடு இலக்கியம், சமூகம் என்ற அடிப்படைகளில் ஏற்கப்பட்டு அரசியல் ரீதியாக வளர்ந்து செல்கின்ற ஒரு செல்நெறிக்கு வழியமைத்தார்.
வெறும் எண்ணக்கருவாக மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அதனை ஓர் இயக்க ரீதியாக செயற்படவும் வைத்தார்.
அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் அமரர் இர. சிவலிங்கம் ஆசிரியராகவும் (1957—1965) அதிபராகவும் (1970—1971) பணியாற்றிமை குறிப்பிடத்தக்கது. பின்னர் நுவரெலியா கல்வி பணிமனையிலும் கல்வி அமைச்சிலும் (1971—1977) பணியாற்றினார்.
இந்த 20 ஆண்டு கால நினைவுப்பேருரைகளின் தாக்கங்களை மீட்டு பார்ப்பது பொருத்தமான ஒன்றாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு பத்தொன்பது பேருரைகளை “மலையகம் பல்பக்க பார்வை” என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நினைவுப்பேருரைகள் மலையக சமூக அம்சங்கள் குறித்த ஆய்வு தளத்தை அகலப்படுத்தியதோடு ஆழப்படுத்தியும் உள்ளது என்பது ஒரு மிகைக்கூற்றல்ல. இந்நினைவுப்பேருரைகளின் இழையோடும் அடிநாதமாக விளங்குவது மலையக சமூக பிரச்சினைகளாகும். இந்நினைவுப்பேருரைகளை மலையகத்தை சார்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆய்வாளர்கள் நிகழ்த்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
20 பேருரைகளில் 50 வீதமானவை கல்வியும் சமூகமும் சார்ந்தவையாகவும் 35 வீதமானவை அரசியல் மனித உரிமை சம்பந்தமானதும் 15 வீதமானவை கலை, இலக்கியம் சம்பந்தமானவையாகும். இந்நினைவுப் பேருரையாளர்கள் முதிர்ந்த ஆய்வாளர்களாகவும் இளம் ஆய்வாளர்களாகவும் காணப்பட்டனர். இதன் மூலம் குறிப்பாக பல்கலை கழக இளம் விரிவுரையாளர்கள் தங்களது ஆய்வுகளை சமூகத்திற்கு கொண்டு செல்கின்ற ஒரு ஊடகமாக இந்நினைவுப் பேருரைகள் விளங்கின.
சமூகமும் கல்வியும் குறித்த நினைவுப்பேருரைகளை பேராசிரியர்கள் எம்.சின்னத்தம்பி, வீ.சூரியநாரயணன்(தமிழகம்) மா.கருணாநி, எஸ்.மௌனகுரு, போன்றோரும் திருமதி.லலிதா நடராஜா, திருவாளர்கள் வீ.செல்வராஜா, லெனின் மதிவானம், கலாநிதி கணேசமூர்த்தி மற்றும் திருமதி எஸ்.வசந்தகுமாரி ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர். சமீபத்தில் மறைந்த இலங்கைப் பல்கலைகழகத்தின் கலைப்பீடத்தில் முதலாவது பேராசிரியர் என்ற பெருமைக்குரிய அமரர் மு.சின்னத்தம்பியின் “பெருந்தோட்டத்துறை தமிழ் இளைஞர்கள் இன்றும் நாளையும்” என்ற விரிவுரை 2000 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட முதலாவது விரிவுரையாகும். இதை தொடர்ந்து 2001ஆம் ஆண்டு பேராசிரியர் சூரிய நாராயணனின் “இளைஞர் மலையகமும் புதியவாய்ப்புகளும் சவால்களும்” என்ற பேருரையும் 2002 ஆம் ஆண்டில் பேராசிரியர் மா.கருணாநிதியின் மலையகக் கல்வி குறித்த உரையும் நிகழ்த்தப்பட்டன. 2003 ஆம் ஆண்டில் திருமதி.லலிதா நடராஜா “பெருந்தோட்டத்துறை பெண்கள் நேற்று இன்று நாளை என்ற தலைப்பிலும் 2004 ஆம் ஆண்டு வி.டி. செல்வராஜாவின் “மலையக மக்களும் புத்தி ஜீவிகளும்” என்ற தலைப்பிலான உரையாகவும் அமைந்துள்ளன. பேராசிரியர். மௌன குரு, லெனின் மதிவானம் ஆகியோரின் நினைவுப்பேருரைகளான “தமிழர் வரலாறும்” மற்றும் “மலேஷிய தமிழரின் வாழ்வியல் பரிமாணங்கள்” என்ற இரண்டு பேருரைகள் மாத்திரமே நேரடியாக மலையகத்தை மையம் கொண்டிராதவையாகும். 2010 ஆம் ஆண்டில் கலாநிதி கணேசமூர்த்தியின் “மலையக மக்களின் சமூக பொருளாதாரம் ஒரு வரலாற்று பார்வை” என்ற நினைவுப்பேருரையும் 2017 ஆம் ஆண்டில் “மலையகத்தின் அண்மைக்கால நிலச்சரிவுகளும் மலையகம் எதிர் நோக்கும் சவால்களும்”என்ற தலைப்பிலான உரை விரிவுரையாளரான திருமதி.வசந்தகுமாரியாலும் நிகழ்த்தப்பட்டன.
அரசியலும் மனித உரிமைகளும் விடயம் குறித்து ஐந்து பேருரைகளும் இடம்பெற்றுள்ளன. “பெருந்தோட்டத்துறை சிறுவர் உரிமை மீறல்கள் தலைப்பிலான பேருரை விரிவுரையாளரான சோபனாதேவி ராஜேந்திரனால் 2007 ஆம் ஆண்டிலும் “சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம்” என்ற தலைப்பிலான பேருரை நீதவான் டிரொஸ்கியினாலும் 2009 ஆம் ஆண்டில் ஆற்றப்பட்டது.
“உள்ளூராட்சி அதிகார சபைகளும் மக்களும்”குறித்த உரையானது விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஸினாலும் “மலையக அரசியல் செல்நெறியும் மலையக மக்களும்”என்ற தலைப்பிலான உரையை ஆய்வாளர் விஜயகுமாரினாலும் 2014 ஆம் ஆண்டில் “மலையக மக்களின் வாழ்வியல் மனித உரிமைகள் நோக்கு” என்ற தலைப்பிலான விரிவுரையை திருமதி. யசோதரா கதிர்காமதம்பியும் 2016 ஆம் ஆண்டில் “புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் மலையக சமூகத்தின் அடையாள முனைப்புகள்” என்ற விடயம் ஆய்வாளர் கௌதமனாலும் நிகழ்த்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் “மலையக அரசியல் பெண்கள்”பற்றிய உரை விரிவுரையாளரான செல்வி.புளோரிடாவால் நிகழ்த்தப்பட்டது. “கலையும் இலக்கியமும்” என்ற விடயம் குறித்து மூன்று நினைவுப்பேருரைகள் இடம்பெற்றுள்ளன. 2006 ஆம் ஆண்டில் “மலையக இலக்கியங்கள் தரும் வாழ்வியல் அம்சங்கள்”குறித்த உரையானது சமீபத்தில் மறைந்த ஆய்வாளரும் ஆசிரியருமான பெ.வேலுசாமியாலும் 2006 ஆம் ஆண்டில் “மலையகம் எனும் அடையாளம் மலையக இலக்கியத்தின் வகிபங்கு” என்ற உரையானது சாகித்யரத்னா தெளிவத்தை ஜோசப்பினாலும் 2011 ஆம் ஆண்டில் “மலையக தமிழர்களின் புலம் பெயர்வும் இலக்கிய ஆக்கமும்”என்ற தலைப்பிலான உரையை விரிவுரையாளரான எம்.எம். ஜெயசீலனும் நிகழ்த்தினர்.
அமரர் சிவலிங்கம் மறைந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டாலும் அவரது கனவுகள், விருப்பங்கள் இன்று பல்வேறு மட்டங்களில் படிப்படியாக நிறைவேறிவருவதுகுறிப்பிடத்தக்கதாக ஒன்றாகும்.மலையக அரசியல் தளத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்தில் ஐந்திலிருந்து பன்னிரண்டாகவும் உயர்ந்தமை, நிர்வாகதளத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள் பத்தாக அதிகரித்தமை,மலையக பிரதேசத்திற்கான புதிய கிராமங்களின் அபிவிருத்திக்கான அதிகார சபை நிறுவப்பட்டமை,உரிமைசார் விடயங்களைப் பொறுத்தவரை தனிவீடுகளுக்கு சட்டரீதியான உரிமங்கள் வழங்கப்படுகின்றமை இச்சமூகத்தை ஏனைய சமூகங்களோடு சமநிலையில் நிலைநிறுத்த ஏற்பட்ட பாரிய முன்னேற்றங்களாகும்.கல்வித்துறையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆசிரியர் சேவையில் ஈர்க்கப்பட்டுள்ளமை பல்கலைக்கழகங்களுக்கான நுழைவு 500 இற்கும் மேற்பட்டதாய் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் சமூக அபிவிருத்தி குறிகாட்டிகளில் காணப்படும் இடைவெளிகளை இல்லாதாக்கி சமத்துவமுள்ள ஒரு சமூகமாக வளர்த்தெடுப்பதும் இந்த இரு தசாப்த உரையாடல் தொடர்ந்தும் இடம் பெற வேண்டுமென்பதே அவருக்கு செலுத்துகின்ற அர்த்தமுள்ள அஞ்சலியும் ஞாபகார்த்த குழுவின் அவாவுமாகும்.
இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...