Headlines News :
முகப்பு » , , , , , » இழந்த "தேசிய" கொடியைத் தேடிய கதை! - என்.சரவணன்

இழந்த "தேசிய" கொடியைத் தேடிய கதை! - என்.சரவணன்


பென்னட் “இலங்கையும் அதன் செயல்திறனும்” (J.W.Bennett - Ceylon And Its Capabilities - An account of its natural resources, indigenous productions and commercial facilities) என்கிற நூல் வெளிவராமல் இருந்திருந்தால் இன்றைய இலங்கையின் தேசியக் கொடியின் கதையே வேறு மாதிரி ஆகியிருக்கும் என்று உறுதியாக கூற முடியும்.



1815 கண்டி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கண்டி ராஜ்ஜியம் பறிபோனது அப்படியே ஒட்டுமொத்த இலங்கையும் அந்நியரிடம் பறிபோனது. ஆங்கிலேயர்கள் கண்டியின் கொடியை இறக்கி அதனை கிழக்கிந்திய கம்பனிக்கு ஊடாக இங்கிலாந்துக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆண்ட 133 வருடங்களுக்குள் அந்த கொடியை இலங்கை மக்கள் மறந்தே போயினர். கண்டியில் ஆங்கிலேயர் தமது யூனியன் ஜேக் கொடியை  ஏற்று முன்னர் அங்கிருந்து இறக்கியதாக கூறப்படும் கொடி எது என்பது பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. இந்த நேரத்தில் தான் பென்னட் எழுதிய நூலொன்றின் இந்தக் கொடி பற்றிய விபரங்களை அறிந்துகொண்டார்.

இலங்கையின் தேசிய வீர்களில் ஒருவராக போற்றப்படும் ஈ.டபிள்யு.பெரேரா லண்டனில் கற்றுக்கொண்டிருந்தபோது ஆங்கிலேயர்கள் பறித்துச் சென்ற இலங்கையின் கொடி எப்படி இருக்கும் என்பதை தீவிரமாக அறிந்துகொள்ள விளைந்தார். இந்தத் தேடல் இலங்கையின் கொடிகள் அனைத்தைப் பற்றியுமான ஒரு ஆய்வு நூலைத் தொகுத்து பதிப்பிடும் அளவுக்கு கொண்டு சென்றது.

அன்றைய தொல்பொருள் ஆணையாளராக இருந்த சி.பெல் என்பவரின் வழிகாட்டலின்படி கண்டி மன்னனின் இறுதிக்கொடியைத் தேடி இங்கிலாந்து புறப்பட்டார். 1815காலப்பகுதியில் இலங்கையிலிருந்து ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கடத்திச்செல்லப்பட்ட மதிப்புமிக்க பல்வேறு பொருட்கள் உள்ள இடங்களில் அக்கொடியை தேடியலைந்தார். இந்த முயற்சிக்கு ஆரம்பத்திலிருந்து அதிக அக்கறை செலுத்தி பெருமளவு செலவை ஏற்றுக்கொண்டவர் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரபல செல்வந்தருமான டீ.ஆர்.விஜயவர்தன. (இவர் இன்றைய பிரதமர் ரணிலின் தாய்வழிப் பாட்டனார். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மாமனார்.) ஈ.டபிள்யு பெரேராவும், டீ.ஆர்.விஜயவர்தன இருவரும் லண்டனில் 1908 அளவில் ஒன்றாக கற்றுக்கொண்டிருந்தவர்கள்.

பென்னட்டின் நூலில் 12.10.1815 அன்று லண்டனிலுள்ள whitehall chapel இல் பாதுகாப்பாக சேகரித்துவைப்பதற்காக அனுப்பப்பட்டதாக ஒரு குறிப்பு உள்ளது. இந்த நூல் வெளிவந்த ஆண்டு 1843. இன்றும் கண்டி ராஜ்ஜியத்தில் இருந்து கடத்திக்கொண்டுசெல்லப்பட்ட அரசனின் சின்னங்கள் வைக்கப்பட்டிருக்கிற வைட்ஹோலில் இந்த சின்னங்கள் 1803இல் கொண்டு வரப்பட்டதென்கிற குறிப்புகளுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வைட்ஹோல் என்பது ஐரோப்பாவிலேயே மிகப்பெரும் அரண்மனையாக ஒரு காலத்தில் இருந்தது. 1500 க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டது அது. இன்றும் அதை மக்கள் போய் பார்வையிட்டு வருகிறார்கள். பழங்காலத்தைப் பிரதிபலிக்கும் நூதனசாலையாக இயங்கிவருகிறது. அங்கு தான் இன்றும் இலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு செல்லப்பட்ட முக்கிய அரச காலத்து பொருட்களின் ஒரு தொகுதி Great Hall  என்கிற பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

ஈ.டபிள்யு.பெரேரா தனது தேடல்களைத் தொகுத்து 1916இல் “sinhalese Banner and Standards" எனும் நூலை வெளியிட்டார். அந்த நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.

 “பெனட் எனும் ஆங்கில ஆய்வாளரின் ஆலோசனைப்படி அந்தக் கொடியைத் தேடிக்கொண்டு United service museum சென்று தேடியதில் ஒருபலனும் கிடைக்கவில்லை. பல இடங்களில் தேடிக் கொண்டு சென்ற போது லண்டனிலுள்ள செல்சீ அரச வைத்தியசாலை (Royal Hospital Chelsea) சேமிப்பகத்தில் தற்செயலாக கிடைத்தது நமது சிங்கக் கொடி.” என்கிறார்.

அங்கு நெப்போலியனின் கழுகு இலட்சினையும் இருந்ததாக பெரேரா தெரிவித்திருந்தார். அவருக்கு கிடைத்த மூன்று கொடிகளில் இரண்டு வர்ணம் மங்கிப்போன நிலையில் கிட்டியது. ஒன்று மாத்திரம் கவனமாக துப்பரவு செய்து எடுத்தபோது சற்று உருக்குலைந்த நிலையில் ஒரு கொடியைக் கண்டெடுத்தார். அதுவே இலங்கை இறுதியாக ஆண்ட கண்டி அரசனின் கொடி என்று அவர் நம்பினார். அதன் வடிவத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் டீ.ஆர்.விஜயவர்தன எப்.ஆர்.சேனநாயக, டீ.பீ.ஜயதிலக்க போன்ற தலைவர்களுடன் கலந்துரையாடி அந்த கொடியை சவுத்வூட் அண்ட் கொம்பனி என்கிற நிறுவனத்தின் உதவியுடன் பிரதிசெய்து நிறமூட்டி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மகிழ்ச்சியை நாட்டு மக்களுக்கு செய்தியாக தெரிவிக்க லேக்ஹவுஸ் உரிமையாளர் டீ.ஆர்.விஜயவர்தன தினமின பத்திரிகைக்கு ஊடாக அதனை வெளியிட்டார். சரியாக கண்டி அரசனின் கொடி இறக்கப்பட்ட 100வது ஆண்டில் அதே 02,03.1915 அன்று அந்த அறிவிப்பு வர்ண நிறத்தில் பிரேத்தியேகமாக வெளியிடப்பட்டது. இலங்கை அந்நியரிடம் பறிபோன காலத்தில் கடைசி அரசின் கொடி எப்படி இருந்தது என்பது பற்றி அப்போது தான் இலங்கை மக்கள் அறிந்துகொண்டனர்..

பிற்காலத்தில் கொழும்பு நூதனசாலையின் இயக்குனராக இருந்த P.H.D.H. டீ சில்வா வெளிநாடுகளில் உள்ள இலங்கையின்  தொல்பொருள் மற்றும் இதர கலாச்சார பொருள்களின் பட்டியல்” (A Catalogue of Antiquities And Other Cultural Objects From Sri Lanka (Ceylon) Abroad - 1975) என்கிற தலைப்பில் ஒரு நூலைத் தொகுத்தார். அதில் செல்சீ அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இலங்கையின் கடைசி அரசனின் கொடிகள் பற்றி சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அதன்படி

1803 ஆம் ஆண்டு கண்டியில் இருந்து கைப்பற்றப்பட்ட மூன்றுவிதமான கொடிகளை கிழக்கிந்திய கம்பனிக்கு ஊடாக 4ஆம் வில்லியம் மன்னரின் அனுமதியுடன் பாதுகாப்பாக வைப்பதற்காக இந்த வைத்தியசாலைக்கு அனுப்பட்டது. பல வருடங்களாக அந்த வைத்தியசாலையில் தொங்கவிடப்பட்டிருந்த அந்த கொடிகள் அப்படியே உருக்குலைந்து போனதில் “அரசரின் போர்க்கொடி” ("The King's war standard") என்று அறியப்பட்ட ஒரு கொடி 1934ஆம் ஆண்டு அழித்துவிட்டார்கள். அந்தக் கொடி பிரிட்டிஷ் படையின் 51வது படைப்பிரிவின் கப்டனாக இருந்த வில்லியன் பொல்லக் (Capt. William Pollock) 1803 செப்டம்பர் 13 அன்று கைப்பற்றியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தக் கொடியில் சிங்கம் எதுவும் இருக்கவில்லை மாறாக பல்வேறு ஆயுதங்கள் குறியீடுகளாக காணப்பட்டிருக்கிறது. எஞ்சியிருந்த ஏனைய இரு கொடிகளும் பழுதடைந்திருந்த நிலையில் ஒட்டுவைத்து தைக்கப்பட்டிருந்திருக்கிறது. 1870 ஆம் ஆண்டு இந்த மூன்று கொடிகளுடன் வேறு கொடிகளும் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்ததை படமாக எடுத்து அதுபற்றிய குறிப்பு வைக்கப்பட்டிருந்தது.

P.H.D.H. டீ சில்வா தனது நூலில் இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு கப்டன் போர்ட் (J. Ford) 1841 எழுதிய “செல்சீ வைத்தியசாலையில் உள்ள போர்க்கொடிகள்” (The War Flags at the Chelsea Hospital) என்கிற நூலை ஆதாரம் காட்டுகிறார்.

இவற்றில் ஒரு கொடி சிகப்பு நிற பின்னணயில் வாள் ஒன்றை ஏந்தியபடி மங்கிய நீல நிறத்தில் சிங்கத்தின் உருவத்துடன் The Secretary At - Hand Flag என்றும் The King's Civil Standard (அரசரின் குடியியல் கொடி) என்கிற குறிப்புகளுடன் கொடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தக் கொடியைத் தான் 1945 செப்டம்பர் மாதம் தேசியக்கொடியாக ஆக்க வேண்டும் என்கிற யோசனையை ஜே.ஆர் அரசாங்க சபையில்  முன்மொழிந்தார். இலங்கை சுந்தந்திரமடைவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் 16.01.1948 அன்று அரசாங்க சபையில் டீ.எஸ்.சேனநாயக்க உரையாற்றும் போது,
“இது கண்டி அரசனின் கொடி என்பதை நாமெல்லோரும் அறிவோம். அதுபோல கண்டி அரசன் தமிழ் அரசன் என்பதையும் நாம் அறிவோம். இப்போது இங்கிலாந்து இறைமையைக் இந்தத் தீவின் மக்களுக்கே கைமாற்றுகிறது. நாங்கள் இழந்த இறைமையை எமக்குத் திருப்பித் தரும்போது எமது கொடியையும் பதிலீடு செய்ய வேண்டும்....”
இப்படித் தான் “கண்டியக் கொடி” இலங்கையின் தேசியக் கொடியானது.  பல்வேறு சர்ச்சைகளுடன் அது மாற்றங்களுக்கு உள்ளானபோதும். இன்றும் இந்தக் சிங்கக் கொடியைத் தான் சிங்களத்தின் கொடியாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் சிங்களவர்கள்.  இது உண்மையிலேயே கண்டியரசின் இறுதி கொடி தானா? சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சிங்கம் பற்றிய புனைவுகளின் நீட்சி சிங்கக் கொடி தமது கொடி என்று நம்புமளவுக்கு கொண்டுவந்து விட்டதன் பின்புலம் தான் என்ன என்பதை பற்றி அடுத்த இதழில் காண்போம்.

நன்றி - அரங்கம்

Share this post :

+ comments + 2 comments

வரலாற்று உண்மைகள் மிகவும் சிறப்பாகவுள்ளது.நன்றி .

வரலாற்று உண்மைகள் மிகவும் சிறப்பாகவுள்ளது.நன்றி .

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates