பண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்ததா என்று கூட பார்ப்பவர்களுக்கு தீண்டாமையும் இருந்தது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்து தான். அதுவும் ஒரு சட்ட ஒழுங்குக்குக்குள் அந்த தீண்டாமை இயங்கியது என்பது தமிழ் சமூகத்தில் கூட நாம் கண்டிராத ஒன்றே. இக்கட்டுரை நான்கு பாகங்களாக வெளிவருகிறது. இது முதல் பாகம்.
இலங்கையின் சமூக பண்பாட்டு அரசியல் அபிலாசைகளுக்கு எற்றாற் போல ஒரு ஆட்சி நிர்வாக முறை அமைக்கப்பட வேண்டும் என்கிற யோசனைகளும் அதற்கான முஸ்தீபுகளும் காலாகாலம் மேற்கொள்ளப்பட்டு வருவது தான். ஆனால் இன்று வரை இலங்கையில் வாழும் பல்லின – பன்மத மக்கள் பிரிவினரை சமத்துவமாக நடத்தக்கூடிய ஆட்சி அலகு எது என்பது பற்றி அந்நிய காலனித்துவத்தையும் தாண்டி, 30 ஆண்டுகால சுதேச யுத்தத்தையும் தாண்டியும் கூட கண்டுபிடிக்கப்படாமல் இழுபறியிலேயே இருக்கிறது. அந்த இழுபறியே இலங்கையின் மையப் பிரச்சினையாக தலைமுறை தலைமுறையாக நீடித்தும் வருகிறது. இந்தக் கட்டுரை ஆங்கிலேய காலனித்துவம் தமது நிர்வாக அலகை பிரயோகிப்பதற்கு முன்னர் நிலவிய கோத்திர சபை பற்றியது.
கோத்திர சபை என்பதை சிங்களத்தில் “வறிக சபா” (වරිගසභා / Variga Saba) என்று அழைத்தார்கள். வறிக சம்முதிய (Variga sammutiya = Variga convention) என்றும் சில இடங்களில் அழைக்கிறார்கள். (1) ஒரு வகையில் அதை “குல சபை” என்றும் நாம் விளங்கிக் கொள்ளலாம். “சாதிய சபை” என்று மொழிபெயர்ப்பதை விட “கோத்திர சபை” என்பதும் மேலும் பொருத்தமாக இருக்கிறது. அன்று நிலவிய பல்வேறு சமூகக் குலங்களுக்கான பஞ்சாயத்து முறையாகத் தான் அது இயங்கி வந்தது. சாதிகளுக்குள் இருக்கும் உபசாதி உட்பிரிவுகளையும் “வறிக” என்று தான் அழைத்தார்கள்.
1892 இல் வெஸ்லியன் மிஷனரியால் வெளியிடப்பட்ட இலங்கையின் மிகப் பழைய ஆங்கில - சிங்கள அகராதியில் “வறிக” (වරිග - Wariga) என்பதை caste, race, tribe; generation, descent; sort, species, [Colloq. ජාතිය jatiya] என்று விளக்குகின்றது. சிங்களத்தில் வர்க (Warga) என்பது பிரிவு என்றும் அர்த்தம் தரும். பிரிவுகளை வகைப்படுத்தும் “வர்க” என்கிற சொல்லிலிருந்தே வறிக என்கிற சொல் வந்திருக்கலாம் என்கிறது அந்த அகராதி. (2) அந்தக் காலத்திலேயே 824 பக்கங்களில் வெளியான முக்கிய அகராதி அது.
இலங்கையின் உள்ளூராட்சி பற்றிய கற்கைகளில் ஏனோ “வறிக சபா” பற்றி விளக்கமளிக்க தவறியிருக்கிறார்கள் என்றே படுகிறது.
இலங்கை மக்கள் மத்தியில் இன்று வரை சாதியத்தின் தாக்கம் தொடர்கிறது என்றால் இந்த கோத்திர முறை நீண்டகாலம் பேணப்பட்டு வந்திருப்பதை ஒரு காரணியாகக் கூற முடியும். அதுபோல இலங்கை மக்கள் மத்தியில் பரஸ்பரம் வேறுபடுத்தி பார்க்கும் வழக்கமும் - இறுதியில் இனத்துவ சிந்தனை தளைத்தோங்குவதற்கும் கூட இந்த கோத்திர சம்பிரதாயங்கள் வாழையடி வாழையாக பரம்பரைகளுக்கு கடத்தப்பட்டு வந்திருப்பதும் கூட ஒரு காரணமாக இருக்க முடியும். இனம், மதம், வர்க்கம், சாதி, உபசாதி, குலம், கோத்திரம், பிரதேசவாதம் அனைத்துமே மக்களை ஒருவரிடமிருந்து இருந்து ஒருவரை தூர விலத்தி வைத்திருக்கிறது என்பது கண்கூடு. இந்த கோத்திர சபை முறைகளின் நீட்சி சக மனிதரை “பிற” என்கிற மனநிலையில் பேணச்செய்திருக்கிறது.
இவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவு தீண்டாமை இல்லாத போதும், இறுக்கமான அகமணமுறையும், புறமணத்தடையும் அந்த குழுமங்களின் இருப்பை அப்படியே காலாகாலமாக பேணச்செய்திருக்கிறது.
இலங்கையில் நிலவிய உள்ளூராட்சியின் வரலாறு நெடியது. இது கி.மு. 4 ஆம் நூற்றாண்டு வரை நீடிப்பதாகும். பண்டுகாபய மன்னரின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் உள்ளூராட்சி முறை ஆரம்பமானதாக மகாவம்சம் உள்ளிட்ட வரலாற்று ஏடுகளில் இருந்து தெரிய வருகிறது. அந்நாட்களில் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம ராஜ்ஜியம் எனப்படும் கிராமிய சபைகள் இருந்தன. மன்னரின் ஆட்சி நிர்வாகம் கிராம ராஜ்ஜியங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்டு இருந்ததுடன், கிராமிய நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சிறிய அளவிலான நீதிமன்ற அதிகாரங்கள் கிராமிய சபைகளிடம் ஒப்படைக் கப்பட்டிருந்ததை வரலாற்று ஆவணங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
கிராம சபையைப் பொறுத்தவரை அது கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அமைப்புமுறை என்றும் அதன் பின்னர் நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் அது நடைமுறையில் இருந்திருக்கிறது என்று இந்திக ஜயரத்ன விளக்குகிறார். (3)
1957 பண்டா- செல்வா ஒப்பந்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட “ரட்ட சபா” யோசனையைத் தான் நாம் அறிந்திருப்போம். அந்த பதத்தை அதிகாரப் பகிர்வு யோசனையுடன் இணைத்து பார்க்கிறபோதும் பண்டைய இலங்கையிலும் “ரட்ட சபா” என்கிற அதே பேரில் ஒரு அதிகார அலகு கண்டி ராஜ்ஜிய காலத்தில் இயங்கியிருக்கிறது. எனவே ரட்ட சபா எனும் போது பலருக்கும் எந்த “ரட்ட சபா” பற்றி குறிப்பிடுகிறோம் என்கிற குழப்பம் ஏற்படலாம். பண்டைய ரட்ட சபா முறைமையானது “கோத்திர சபை”யை போலவே இன்னும் பல வேறு அம்சங்களுடன் இயங்கியிருக்கிறது.
பலம்பொருந்திய ஒரு நிர்வாக அதிகார பீடமாக அது இருந்திருக்கிறது. இதுவும் சாதி அமைப்புமுறையை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது. பண்டைய “ரட்ட சபா” பற்றி எழுதுபவர்கள் கே.ஏ.குப்புருஹாமி எழுதிய ஆய்வுக் கட்டுரையை தவிர்ப்பதில்லை. ராஜரீக ஆசிய கழகம் - இலங்கைக் கிளையால் (Royal Asiatic society - CEYLON BRANCH) வெளியிடப்பட்ட சஞ்சிகையில் 1948ஆம் ஆண்டு அவர் “ரட்ட சபா” என்கிற தலைப்பில் எழுதிய ஆய்வுக் கட்டுரை முக்கிய ஒரு ஆவணம்.
அதில் அவர் ரட்ட சபா கொண்டிருந்த அதிகாரங்கள் பற்றி குறிப்பிடும்போது தண்டனைக்குரிய குற்றங்கள் பற்றிய ஒரு பட்டியலைத் தருகிறார். (4)
- ஒரு பெண் தாழ்த்தப்பட்ட ஆணுடன் அல்லது கரையோர சிங்களவருடன் ஓடிப்போனால்
- ஒரு ஆணோ பெண்ணோ வேறொரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆணுடனோ பெண்ணுடனோ வசித்தல்....
- ஒரு பெண் முறைகேடாக கருவுற்றாள்
- வேறொரு “வறிக”வைச் (கோத்திரத்தைச்) சேர்ந்த ஒருவரை மணமுடித்தால்
- ஒரு பெண் முறைகேடாக தாழ்த்தப்பட்ட சாதி ஆணுடன் தொடர்பை வைத்திருந்தாலோ
- தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் தாழ்த்தப்பட்டவரால் தயாரிக்கப்பட்ட உணவை உண்டாலோ, பாத்திரங்களைப் பயன்படுத்தினாலோ
- தாழ்த்தப்பட்டவர் பயன்படுத்திய சொம்பில் தண்ணீர் குடித்தாலோ
- தாழ்த்தப்பட்ட ஒருவரால் தாக்கப்பட்டாலோ
- தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு சேவகம் செய்தாலோ...
அவை தண்டனைக்கு உரிய குற்றம் என்று அந்த பட்டியல் விரிகிறது. பெரும்பாலான விதிகள் அனைத்தும் அந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்களின் “குலத்தூய்மையை” பேணிப் பாதுகாப்பதற்காக பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.
சிங்கள சமூகத்தில் நிலவிய சாதி அமைப்பில் தீண்டாமை என்பது சமூக சட்ட விதியாகவே நடைமுறையில் இருந்திருக்கிறது என்பது ஒரு அதிர்ச்சிதரும் செய்தி.
சாதிய கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக இறுக்கமான “பஞ்சாயத்து” வடிவமாக ரட்ட சபா, வறிக சபா என்பவை பல்லாண்டுகளாக இயங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல வறிக சபா இன்றும் இலங்கையில் ஆதிவாசிகள் மத்தியில் நடைமுறையில் இருக்கிறது என்பது ஆச்சரியம் தரும் செய்து.
சாதி இறுக்கம் தொடரும்....
உசாத்துணை
- Caste in modern Ceylon -THE Sinhalese sustem in transition - Bryce Ryan - Rutgers University Press - 1953
- SINHALESE-ENGLISH DICTIONARY, BY THE REV. B. CLOUGH, WESLEYAN MISSIONARY. Colombo - Wesleyan mission press, Kollupitiya. 1892.
- இந்திக ஜயரத்ன – “இலங்கை தேசத்தை கட்டி எழுப்புதல்” தினமின – 26.07.2013
- K.A. Kapuruhami "Rata Sabhawa" Journal of Royal Asiatic society (Ceylon) Vol XXXVIII 1948
நன்றி - அரங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...