Headlines News :
முகப்பு » , , , , , , , » கோத்திர சபைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய தீர்ப்பு! (2) - என்.சரவணன்

கோத்திர சபைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய தீர்ப்பு! (2) - என்.சரவணன்


ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய கோல்புரூக் - கமரூன் மறுசீரமைப்பு ஆணைக்குழுவானது இலங்கையில் ஆண்டாண்டு காலம் அமுலில் இருந்த கிராமிய சபை முறையை ஒழித்துக்கட்டுமாறு பிரேரித்தது. அது பெயரளவிலான யோசனையாக இருந்தது. அவர்களால் உடனடியாக கிராமிய சபை, ரட்ட சபா, வறிக சபா முறைமையை இல்லாதொழிக்க முடியவில்லை.

கோத்திர சபைகள் இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் நடைமுறையில் இருந்தாலும் கூட கண்டி ராஜ்ஜியத்தில் பல்வேறு ஆதிக்க சாதியினர் மத்தியில் நீண்டகாலம் நடைமுறையில் இருந்ததையும் பல்வேறு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இலங்கையின் வேடுவர்கள் பற்றிய ஆய்வுகளை செய்தவர்களில் முக்கியமானவர் செலிக்மன் (Seligmann). வேடுவர்கள் மத்தியில்  வெளிக்கோத்திரங்களைச் சேர்ந்தவர்களை திருமணம் முடிக்கும் வழக்கம் இருக்கவில்லை என்று தனது நூலில் குறிப்பிடுகிறார். (1)

இலங்கையில் பழங்குடிகள் மத்தியில் குலக் கோத்திர சம்பிரதாயங்கள் இன்னமும் இறுக்கமாக பேணப்படுகின்றன. கோத்திர சபை முறையும் கூட இன்னமும் இலங்கையில் வேடுவர் மத்தியில் அமுலில் இருக்கிறது. அவர்கள் வேடுவர் தவிர்ந்தவர்களை மணமுடிப்பதைக் கூட கோத்திர சம்பிரதாய மீறலாக கருதுகிறார்கள். மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் ஆங்காங்கு வேடுவ சமூகத்தினர் தமிழர்களுடன் ஓரளவு திருமண பந்தத்துக்கூடாக ஒன்று கலப்பது கணிசமாக நிகழ்ந்தாலும் கூட பல இடங்களில் தமது வேடுவர் சமூகத்துக்குள்ளேயே அவர்கள் “சாதி வேறுபாடுகளை” (கோத்திர வேறுபாடுகளை) பார்ப்பதைக் இன்றும் காண முடிகிறது. “அவர்கள் வேறு சாதி” என்று பகிரங்கமாகவே கூறுகிறார்கள். புறமணத் தடையும், அகமணமுறையின் இறுக்கமும் அவர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே நிலவுகிறது. மட்டக்களப்பு வாகரையில் வாழும் ஆதிவாசிகள் இன்றும் “வறிகசபை” யைக் கூட்டி தமது முடிவுகளை எடுத்து வருகிறார்கள் என்கிற செய்திகளை காண முடிகிறது.

வருடாந்தம் ஓகஸ்ட் 9ஆம் திகதி ஆதிவாசிகள் தினத்தன்று மஹியங்கனையில் ஏராளமானோர் கலந்து கொள்ளும் “வறிக சபை” கூட்டம் நடப்பது பற்றிய செய்திகளையும் சிங்களத்தில் காணமுடிகிறது.

வேடுவர் பற்றி ஜேம்ஸ் ப்ரோ ஆய்வு செய்து வெளியிட்ட நூலில் “வறிக (கோத்திர) சித்தாந்தத்தின்படி” புறமணத்தடை (endogamy) அவர்களின் அடிப்படை பண்புகளில் ஒன்று என்கிறார். (2)

அதிசயிக்கத்தக்க தீர்ப்பு

1970ஆம் ஆண்டு அனுராதபுர மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான வழக்கு வந்து சேர்ந்தது. அந்த வழக்கை நடத்திய நீதிபதி வோல்டர் லத்துவஹெட்டி. இலங்கையின் முதலாவது குறைகேள் அதிகாரியும் (ஒம்பூட்ஸ்மன்) அவர் தான். ஏறத்தாழ 60 வருடங்கள் சிவில் சேவையில் இருந்தவர். “கோத்திர சபை” பற்றி அவர் வழங்கிய ஒரு தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் லங்காதீப பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் அந்த சம்பவத்தைப் பற்றிய கேள்விக்கு இப்படி விளக்குகிறார். (3)
கேள்வி : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோத்திரசபை வழக்கை இந்தக் காலத்தில் தானே விசாரித்தீர்கள்?
பதில்: ஆம். அது ஒரு வரலாற்றுப் பதிவுபெற்ற ஒரு வழக்கு. அந்த தீர்ப்பின் மூலம் கிராமத்தில் நடைமுறையிலிருந்த பாரம்பரிய வறிக சபைக்கு சட்ட அந்தஸ்து கொடுத்தேன்.
கேள்வி :பலரும் அறியாத அந்த கதை தான் என்ன?
பதில்: கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞன் ஒருவர் விவசாய வேலைகளுக்காக வந்தான். அவன் தங்கியிருந்த வீட்டில் இருந்த பெண்ணுடன் காதல்வயப்பட்டான். சில நாட்களில் அவர்கள் இரகசியமாக திருமணம் செய்துகொண்டார்கள். அந்தப் பெண்ணின் குடும்பம் அந்த காலத்தில் அங்கிருந்த வறிக சபையின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்துவந்தவர்கள்.
கேள்வி : இது வழக்காக ஆனது எப்படி?
பதில்: முஸ்லிம் இளைஞன் சிங்கள பெண்ணை விவாகம் செய்தததால் அந்த கோத்திரத்தினரின் கௌரவம் போய்விட்டது என்று தான் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் அநுராதபுரவில் இருந்த பிரபல வழக்கறிஞரான மகாதிவுல்வெவ என்பவர் தான் அந்த இளம் தம்பதிகளுக்காக ஆஜாராகியிருந்தார். எனக்கோ இந்த கோத்திர சபை பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. வழமை போலத்தான் நானும் வழக்கைத் தொடங்கினேன். சாட்சிகளை அழைக்க தாயாரான போது முகத்தில் அங்கு தாடி மீசை நிறைந்த விசித்திரமான ஐந்து ஆண்கள் வந்திருந்ததைக் கவனித்தேன். அவர்கள் யாரென்று நான் வினவினேன். அவர்கள் தான் கொத்திரசபயின் தலைவர்கள் என்று பதில் வந்தது.
கேள்வி : அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்?
பதில்: சிங்கள ராஜ்ஜியக் காலம் தொட்டு பின்பற்றப்படும் வறிக சபையின் படி கோத்திர விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக தண்டனை வழங்க எனக்ளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி தண்டனைக்கு உள்ளானவர்களுக்கு எங்கள் வீடுகளில் இருந்து தீப்பந்தத்தை வழங்குவது கூட தடை. கூடவே அவர்களின் அதிகாரங்கள் பற்றி இன்னும் பல விடயங்களை கூறினார்கள். அங்கு வந்திருந்தவர்கள் தாம் தான் அந்த கோத்திரக் குழுவின் தலைவர்கள் என்றார்கள். வறிக சபை ஒரு பலம்மிக்க ஒரு அமைப்பாக சமூகத்தில் இருப்பது எனக்கு விளங்கியது. ஆனால் அதற்கு சட்ட அந்தஸ்து வழங்குவது என்பது எளிமையான காரியமில்லை. நானும் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. எனவே தீர்ப்புக்கு முன்னர் இதைப் பற்றி ஆராய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தேன்.
கேள்வி : நீங்கள் எப்படி தகவல் திரட்டினீர்கள்?
பதில்: மாலை 4 மணிக்கு நீதிமன்ற அலுவல்களை முடித்துக்கொண்டு அனுராதபுர நூல்நிலைய சபைக்குச் சென்றேன். அங்கு சென்று ரஜரட்ட சாதிமுறை, வறிக சபை என்பவை பற்றிய தகவல்கள் அடங்கிய நான்கைந்து நூல்களை ஒருவாறாக தேடிக்கண்டுபிடித்துவிட்டேன். அன்றிரவு 12 மணிவரை அவற்றை படித்தேன். அங்கிருந்த சமூக அமைப்பில் வறிக சபை அமைப்புமுறை எந்தளவு முக்கியத்துவம் மிகுந்தது என்பதை புரிந்துகொண்டேன். பொலிஸ் இல்லாத காலத்தில் அந்தந்த கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் தமது அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டு எப்படி தம்மை நிர்வகித்து வந்திருக்கிறார்கள் என்பது பற்றி அந்த நூல்களில் இருந்தன. ஆனாலும் எனது தீர்ப்பை வழங்க இந்த நூல்கள் போதுமானதல்ல. மேலும் அறிய ஆவலாக இருந்தது.
கேள்வி : யார் அதற்கு உதவினார்கள்?
பதில்: அந்த சமயத்தில் அனுராதபுர அட்டமஸ்தன தலைமை பதவியில் இருந்தவர் உந்துரவஹல்மில்லேவே ஸ்ரீ சுமனரேவத்த தேரர். அவருடன் தொலைபேசியில் முதலில் கதைத்தேன். அவரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தேன். வாருங்கள் ஆனால் இரவு 9.30க்குப் பின் வாருங்கள் ஏனென்றால் நீதிபதியொருவர் எனது பன்சலைக்கு வந்து சென்றது சனங்களுக்கு தெரியாமல் இருக்கட்டும் என்றார். சொன்னபடி இரவு சென்று வறிக சபை பற்றிய விபரங்களைக் கேட்டேன்.

பதில்: அவர் பல தகவல்களை எனக்குச் சொன்னார். மாடொன்றை களவாடிய குற்றத்துக்கு வறிக சபை கொடுத்த தண்டனையொன்றைப் பற்றியும் அவர் விளக்கினார். பௌத்த பிக்கு சொன்ன தகவல்களையும் நூல்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களையும் சேகரித்துக்கொண்டு தீர்ப்பெழுத நீதிமன்றத்துக்கு சென்றேன்.
கேள்வி : எத்தகைய தீர்ப்பை வழங்கினீர்கள்?
பதில்: நீண்ட காலமாக பின்பற்றப்பட்டுவரும் வறிக சபையின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினேன். இதை இன்னொரு விதமாகச் சொன்னாள் “வறிக சபை”க்கு சட்ட அந்தஸ்து வழங்கினேன். வறிக சபையின் சம்பிரதாயங்களை ரோம / ஒல்லாந்து சட்டங்கள் குழப்பக்கூடாது என்பதே எனது கருத்தாக இருந்தது. நமது வரலாற்றில் வறிக சபையை சட்ட ரீதியில் அங்கீகரித்த தீர்ப்பு அதுதான். அப்படித்தான் அது வரலாற்றுப் பதிவு பெற்றது.

இந்தத் தீர்ப்பு குறித்து இன்றளவிலும் ஏராளமான விமர்சனங்கள் நிலவவே செய்கின்றன. ஆனால் இப்போது அரச நீதிமன்றங்களில் வறிக சபையை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கும் நடைமுறை இல்லை. ஆனால் பழங்குடிகளின் மத்தியில் தமக்குள் வறிக சபை கூட்டங்களையும், தீர்ப்புகளையும், தீர்மானங்களையும் நிகழ்த்தியே வருகின்றனர்.

நன்றி - அரங்கம்
உசாத்துணை :
  1. The Veddas C. G. Seligman, Brenda Z. Salaman Seligman, Charles S. Myers Cambridge University Press, 1911
  2. Brow, James. 1978. Veddha Villages of Anuradhapura: The Historical Anthropology of Community in Sri Lanka. Seattle: University of Washington Press. பக்கம் 20-21
  3. லங்காதீப பத்திரிகையில் வெளிவந்த நேர்காணல் (12.05.2013)

சிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates