26 வருடங்கள் 13 கூட்டு ஒப்பந்தங்கள், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்பாக நடைபெறும் ஒரு சில போராட்டங்கள் அதன் பிறகு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு வெற்றிகரமான சம்பள உயர்வு ஒப்பந்தம் என கையெழுத்திடுகின்ற தொழிற்சங்கங்களின் வெற்றி கொண்டாட்டம்… இதுவே இதுவரைகாலமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தத்தில் இடம்பெற்று வந்த வழமையான நிகழ்வுகள்.
ஆனால் இம்முறை அப்படி இடம்பெறவில்லை. கைச்சாத்திட்ட பின்பும் இடம்பெறும் தொடர் போராட்டங்கள், வர்த்தமானி இடைநிறுத்தல் என இன்னும் முற்றுப்பெறாமல் இருக்கின்றது தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம்.
இந்த கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தொழிலாளர்கள் முழுமையாக அறிந்திருக்கின்றார்களா?அதற்கான நடவடிக்கையை கையெழுத்திடுகின்ற தொழிற்சங்கங்களோ கையெழுத்திடாத தொழிற்சங்கங்களோ முன்னெடுத்திருக்கின்றதா? உண்மையாகவே கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு விடயம் மாத்திரம்தான் உள்ளடக்கப்பட்டிருக்கின்றதா? அல்லது வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றதா? இப்படி பல்வேறு கேள்விகள் எம்மத்தியில் எழுகின்றன.
பேசப்படாத விடயங்கள்
இந்த ஒப்பந்தத்தில் இன்னும் பேசப்படாத பல விடயங்கள் இருக்கின்றன.உதாரணமாக ஒரு தொழிலாளி இறந்து விட்டால் அவருக்கான கொடுப்பனவாக இன்னும் 2 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. இந்த தொகை இன்றைய காலகட்டத்திற்கு போதுமானதா?அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படுகின்ற வருடாந்த போனஸ் தொகை 750.00 ரூபாய் இதுவும் போதுமானதா?அல்லது இது எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையின் பொழுது கவனம் செலுத்தப்படுகின்றதா?
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏன் அரசாங்கம் சமுர்த்தி கொடுப்பனவு மானிய விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில்லை ? அதற்கான அழுத்தத்தை எம்முடைய அரசியல் தலைவர்கள் கொடுத்திருக்கின்றார்களா? இப்படி எல்லாமே கேள்விக்குறியாக உள்ளதோடு தொழிலாளர்களின் எதிர்காலமும் அப்படியே இருக்கின்றது.
உண்மையிலேயே பெருந்தோட்ட கம்பனிகள் நட்டத்தில் தான் இயங்குகின்றனவா? அப்படியானால் நட்டத்தில் ஏன் அவர்கள் தொடர்ந்து இதனை செய்ய வேண்டும். அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டியது தானே? ஏன் அவர்கள் அதனை செய்ய முன்வருவதில்லை. அப்படியானால் இதில் நட்டம் ஏற்படவில்லை என்றே நாம் கருதவேண்டியுள்ளது. அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல இந்த கருத்தை வலியுறுத்தி கூறியுள்ளார்.
1992 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் முதன்முதலாக கைச்சாத்திட்ட பொழுது இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் இன்றைய எண்ணிக்கையும் பாரிய அளவில் குறைந்திருப்பதை காணமுடிகின்றது. அன்று அவர்கள் தனியே தேயிலையின் மூலமாக பெற்றுக் கொள்கின்ற வருமானத்தை மாத்திரமே கருத்திற் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அந்த நிலைமை முற்றாக மாற்றமடைந்திருக்கின்றது.
இன்றைய நிலையில் பெருந்தோட்ட கம்பனிகள் தங்களுடைய வருமானத்தை பல வழிகளிலும் அதிகரித்திருப்பதை காண முடிகின்றது.அந்த வகையில் பெருந்தோட்டப்பகுதியானது உல்லாசத்துறையில் தடம் பதித்திருக்கின்றது. அதற்கு உதாரணங்களாக பெருந்தோட்ட கம்பனிகள் பெருந்தோட்ட பகுதிகளில் செயற்படுத்துகின்ற நட்சத்திர விருந்தகங்கள், எல்லா இடங்களிலும் உயர்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தேநீர் விற்பனை நிலையங்கள், அதன் மூலமாக தேயிலை விற்பனை அது தவிர பல தொழிற்சாலைகளை உல்லாசப் பிரயாணிகள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் என பல்வேறு துறைகளின் மூலமாகவும் வருமானங்களை அதிகரித்துக் கொண்டுள்ள பெருந்தோட்ட கம்பனிகள் இந்த வரவு, செலவு தொடர்பான விபரங்களை தங்களுடைய வருடாந்த கணக்கறிக்கையில் சமர்ப்பிக்கின்றார்களா? அல்லது இதனை தொழிங்சங்கங்கள் தேடிப்பார்த்து இது தொடர்பான தகவல்களை சேகரித்து வைத்திருக்கின்றார்களா ?
இது ஒருபுறம் இருக்க, எத்தனையோ தேவையற்ற செலவினங்கள் பெருந்தோட்ட கம்பனிகளால் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை தேடிப்பார்க்க வேண்டிய பொறுப்பு தொழிற்சங்கங்களிடம் இருக்கின்றது. உதாரணமாக கடந்த சில காலங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகைதந்த பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் நுவரெலியா லபுக்கலை தொழிற்சாலைக்கு வருகை தந்த பொழுது அந்த தோட்ட நிர்வாகம் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தது தொடர்பாக விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. இரண்டு உலங்கு வானூர்திகளை தரையிறக்குவதற்கு இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இது தவிர இன்னும் பல செலவுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த அனைத்து செலவுகளும் எங்கிருந்து செய்யப்பட்டது? அத்துடன் பெருந்தோட்ட கம்பனிகளில் தொழில் புரிகின்ற முகாமையாளர்களின் மாதாந்த சம்பளம் தவிர அவர்களுக்கான ஏனைய வசதிகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
பராமரிப்பு
பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டங்களை முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை தொழிலாளர்கள் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றார்கள். பெருந்தோட்டங்களுக்கு முறையான பசளையிடுதல், கிருமிநாசினிகள் தெளித்தல் போன்றவற்றில் அக்கறை செலுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக இன்று அநேகமான தோட்டங்கள் காடுகளாக மாறிவருகின்றன.
அதனை உடனடியாக தனியாருக்கு விவசாயம் செய்ய குத்தகைக்கு வழங்கி விடுகின்றார்கள்.தொழிலாளர்கள் நலன் சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் பெருந்தோட்ட கம்பனிகள் கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கான அனைத்து விடயங்களையும் அரசாங்கமே முன்னெடுத்து வருகின்றது.உதாரணமாக பாதை அபிவிருத்தி, வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் இவை அனைத்தையும் அரசாங்கமே செய்துவருகின்றது.
சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் எவ்வாறு இலாபம் ஈட்டுவதற்கு அவர்களுக்கு அரசாங்கம் அதிகளவில் மானியங்களை வழங்கி வருவதும் ஒரு காரணமாகும். அப்படியானால் பரீட்சார்த்தமாக ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட அளவு காணியை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்து (குறிப்பிட்ட காலத்திற்கு) அவர்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற மானியங்களை வழங்கி அதனை நடைமுறைபடுத்த ஏன் கம்பனிகள் தயங்குகின்றன? அது வெற்றிகரமாக அமையுமாக இருந்தால் படிப்படியாக அதனை நடைமுறைபடுத்த முடியும். இப்படி பல கோணங்களிலும் இந்தத் துறை தொடர்பாக ஆராயவேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.
தொழிலாளர்கள் தங்களை அர்ப்பணித்து வேலை செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள்.ஆனால் அவர்களுக்கு நியாயமான கொடுப்பனவுகளை வழங்க எவருமே தயாராக இல்லை.
பெருந்தோட்ட கம்பனிகள் ஏன் ஒவ்வொரு பகுதியிலும் ஊடு பயிர்களை நடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாதா? இதன் மூலமாக பாரிய ஆதாயத்தை பெற்றுக் கொள்ளலாம்..வெற்றுக் காணிகளை அடையாளம் கண்டு அவற்றில் கால்நடை வளர்ப்பு மற்றும் ஏனைய தேவைகளுக்காக அவற்றை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும். மூடப்பட்டுள்ள பல தேயிலை தொழிற்சாலைகளையும் உரியவர்களுக்கு குத்தகைக்கு வழங்கி அதன் மூலம் பெருந்தோட்டங்களில் இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். அப்படி செய்தால் தொழிலாளர்களின் பிள்ளைகள் கொழும்பிற்கு தொழிலுக்காக செல்ல வேண்டிய தேவை இருக்காது.
தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு போராடுகின்ற அல்லது பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்ற தொழிற்சங்கமாக இருந்தாலும் சரி அல்லது தொழிலாளர்களின் சந்தா பணத்தை பெற்றுக் கொள்கின்ற தொழிற்சங்கமாக இருந்தாலும் சரி கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் நலன் சார்ந்த ஏனைய விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும். வெறுமனே சம்பள உயர்வை மாத்திரம் மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற பேச்சுவார்த்தையின் மூலமாக தொழிலாளர்களுக்கு பெரிய நன்மை கிடைக்காது.இதையும் தொழிற்சங்கங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியுள்ளது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...