Headlines News :
முகப்பு » » கட்சிகளின் ஆதிக்கத்தில் மலையக தேசியம் - அருள் கார்க்கி

கட்சிகளின் ஆதிக்கத்தில் மலையக தேசியம் - அருள் கார்க்கி



தேர்தல் முறை மாற்றத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் மேலாதிக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றன. அந்த வகையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வி ஆட்சியை நிர்ணயிப்பதாகவும், உறுப்பினர்களிடையே கட்சிகளின் உறுப்புரிமை தொடர்பாகவும், தேசிய ரீதியாக கட்சிகளின் பலப்பரீட்சையாகவும் அமைந்தன. இவ்வாறான நிலைமையை விமர்சனரீதியாக ஆய்வு செய்தால் இதிலுள்ள நன்மை தீமைகள் தெளிவாகப்புலப்படும்.

கடசித் தலைமைகளும், செயற்குழுவும் தீர்மானிக்கும் நபர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதும், அல்லாதவர்கள் சுயேச்சையாக தேர்தலில் பங்குபற்றுவதும் இனிவரும் காலங்களில் சரளமாக இடம்பெற வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. எனவே கட்சிகளின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாக கட்டமைப்புக்கு அதிகமான அதிகாரம் ஏற்பட இடமுண்டு.

வழமையாகவே தேர்தல் மேடைகள் நபர்களுக்கான விளம்பரமாகத்தான் பெரும்பாலும் இருக்கும். தனிப்பட்ட செல்வாக்கை வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் பிரசித்தமில்லாத கட்சிகளினூடு கூட மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். எனினும் இனிவரும் காலங்களில் இந்நிலைமை முழுதாக மாற்றமடையலாம். கட்சிகளின் விளம்பரங்கள் சமூகத்தை ஆக்கிரமிக்கலாம். நபர்களுக்கான முன்னுரிமை அவர் சார்ந்த கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கைப் பொறுத்து வேறுபடலாம்.

கட்சி அரசியலில் தேசிய ரீதியில் ஏற்படும் மாற்றங்கள் சிறுபான்மை இனத்தையும் குழப்ப நிலைமைகளுக்குள் தள்ளிவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பெரும்பான்மைச் சமூகம் இனவாத ஆட்சியாளர்களை முற்று முழுதாக புறக்கணிக்காத நிலைமையும், அநேகமான சிங்களச் சமூகங்கள் அவ்வாறானவர்களை அங்கீகரிப்பதும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அதேபோல் மலையகத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சிகளின் ஆதிக்கம் கணிசமான அளவு இன்றும் இருக்கின்றது. மலையக மக்களின் வாக்கு தொடர்ச்சியாக ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக அமைந்திருக்கின்றது.

ஒப்பீட்டளவில் நோக்கும்போது தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகளிடையே உள்ளூர் மட்டத்தில் அதிக போட்டிகள் காணப்படுவதுண்டு. மறுபுறம் தேசிய கட்சிகளுடன் இணைந்து கொண்டு தேர்தல் சூழல்களை மலையக பிராந்தியக் கட்சிகள் எதிர்கொள்வதும் வழமையாக இடம்பெறும் ஒரு விடயமாகும்.

அண்மைய தேர்தல்களில் கூட வெற்றி பெற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு ஆட்சியமைப்பதில் மலையகக் கட்சிகள் ஆர்வம் காட்டின.

கட்சிகளில் தீர்மானத்துக்கு ஏற்ப சமூக மட்டத்தில் அபிவிருத்திகள், மற்றும் ஏனைய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடத்தில் கட்சிகள் சீர்தூக்கிப் பார்ப்பது தமது வாக்குகளின் சதவீதத்தை தான். குறைவான வாக்குகள் பெற்றுக் கொண்ட தொகுதிகளை கட்சிகள் புறக்கணிக்கின்றன. ஒருவேளை எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுவதை தடுக்க முடியாது. பிராந்தியக் கட்சிகளின் வகிபாகமும், இடதுசாரி கட்சிகள் செல்வாக்கு செலுத்தும் தொகுதிகளும் இப்பிரச்சினையில் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.

தேசியக் கட்சிகளின் மேலாதிக்கம் மற்றும் சமூகத்தில் காணப்படும் விருப்புத்தன்மை என்பனவற்றை கருத்திற் கொண்டு மலையக அரசியல்வாதிகள் தேசியக் கட்சிகளுக்கு ஆதரவு வழங்குகின்றனர். எனினும் சனத்தொகை சதவீதத்திற்கு ஏற்ப பெரும்பான்மை இனத்தவரின் அபிலாசைகள் நிறைவேறும் அளவிற்கு தமிழர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே! காரணம் சிறுபான்மை இனம் சிதறுண்டு இருந்தாலே அவர்கள் எம்மை இலகுவாகக் கையாளலாம் என்ற நிலைமை காணப்படுகின்றது.

இன்றளவில் நோக்கும்போது கட்சிகள் மக்களை கூறுபோடும் நிறுவனங்களாகத்தான் அடையாளப்படுத்தப்படுகின்றன. அது மட்டுமின்றி புதிதாக எவரும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அரசியல் செய்ய முடியாத நடைமுறை சிக்கலையும் இன்று காண முடிகிறது. அதாவது அரசியல் எனப்படுவது ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே உரித்துடைய தொழில் போலவும், வெளியார் நுழைய முடியாத தன்மை போலவும் காணப்படுகின்றது. அப்படியே நுழைந்தாலும் அது கட்சிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் வண்ணமும் அவர்களின் அனுமதி தேவைப்படும் விடயமாகவும் பரிணமித்திருக்கின்றது.

மலையகக் கட்சிகளைப் பொறுத்தவரையில் இன்று எண்ணற்ற கட்சிகள் களத்தில் உள்ளன. அது மட்டுமில்லாமல் சுயேச்சைக் குழுக்களாகவும், இடதுசாரி கட்சிகளுடனும் இணைந்து கொண்டு அரசியல் செய்கின்றனர். நேரடியாக தேசிய கட்சிகளுடன் இணைந்து கொண்டு அரசியல் செய்வோரும் தனித்தே செயற்படும் நிலைமை காணப்படுகின்றது. இவையனைத்தும் மக்களை முன்னிலைப்படுத்துவதற்கோ அல்லது ஒருங்கிணைத்துக் கொண்டு உரிமைப் போராட்டம் செய்வதற்கோ முயற்சி செய்வதில்லை. மாறாக மக்களை கூறுபோட்டு சுயலாப அரசியலும், தொழிற்சங்க நடவடிக்கையையுமே முன்னெடுக்கின்றன.

பெரும்பான்மை இனத்தைப் பொறுத்த வரை எத்தனை கட்சிகள் இருப்பினும் ஒருமித்த நோக்கம் கருதி ஒன்றிணைந்து செயற்படும் தன்மை காணப்படுகின்றது. எனினும் மலையகத்தைப் பொறுத்தவரை இனவிகிதாசாரம் குறைவாகக் காணப்படும் நிலையில் பிளவுபட்டு நின்று தேசியம் குறித்து பேசுவதை நடைமுறைச் சாத்தியமாக்க முடியாது. உரிமை, சுய நிர்ணயம் குறித்த கருத்துக்கள் வட கிழக்கில் வலுப்பெற்றுள்ள நிலைமை ஆட்சியாளருக்கு பாதகமானது.

எனவே மலையக மக்களும் சலுகை அரசியலுக்கு அப்பால் செல்ல ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை. இச் சிந்தனையை களத்தில் நடைமுறைப்படுத்தும் முகவர்களாக மலையக அரசியல் தலைமை முக்கியத்துவம் பெறுகின்றனர். காலங்காலமாக அரசியல் தொழிற்சங்க பலம் பொருந்திய கட்சிகளின் வகிபாகம், சமூக முன்னேற்றத்தில் மிகக் குறைவாகவே இருக்கின்றது. காரணம் இன்றும் அற்ப சலுகைகளுக்கு விலை போகும் சமூகத்தை மாற்றியமைக்க முடியவில்லை. தம்மை காட்டிக் கொடுக்கும் முகவர்களை கொண்டாடும் அளவுக்கு மக்கள் அறியாமையிலும் சிந்தனையற்றும் உள்ளனர். பொதுவாகவே சம்பளப் பிரச்சினை, கூட்டு ஒப்பந்தம் போன்ற கருத்தியல்கள் பேசப்படும் காலத்தில் தலைமைகளை விமர்சிப்பதும் பின்னர் அவர்களிடமே விலைபோவதும் இம்மக்ளின் அன்றாட நடத்தையாகவிருக்கின்றது. அடிமட்ட சமூகத்தின் பொருளாதாரமும் வாழ்க்கைச் சூழலும் சலுகைகள் குறித்து மட்டுமே சிந்திக்கும் வகையில் அமைந்திருப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக மக்களை காட்டிக் கொடுப்பதையும், ஏமாற்றுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மலையக தேசியம் குறித்து சிந்தனை வலுப்பெற ஸ்திரமான பொருளாதாரமும் சமூகக்கட்டமைப்பும் உருவாக வேண்டும். உறுதியான பொருளாதாரமோ தொழில் ஸ்திரத்தன்மையோ இல்லாத சமூகம் அற்ப சலுகைகளுக்கு விலை போவதை யாராலும் தடுக்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் பேசப்படும் “சுயம்”, “சுய நிர்ணயம்”, “உரிமை” போன்ற கருத்துக்கள் மக்களிடம் எடுபடாது. எனினும் திட்டமிட்டு மலையக மக்களை பொருளாதார சமூக ரீதியாக கீழ்மட்டத்தில் வைத்திருப்பது அரசியல் நோக்கத்திற்காக மட்டுமேயன்றி வேறென்ன?

உரிமைகள் குறித்து சிந்தனை செய்யாத ஒரு சமூகத்தை வாக்காளர் கூட்டமாக மட்டுமே நடத்தும் அரசியல் அவசியமே இல்லை என்ற நிலைவரும். அச்சந்தர்ப்பத்தில் எம் இனம் தனித்துவிடப்படும். ஏனையோருக்கு ஏவல் செய்யும் சமூகமாகவும் அன்றாட கூலிகளாகவும் மட்டுமே இருக்க முடியும். அரசியல் பலம் என்று இருந்தால் அது தற்றுணிவு உள்ளதாகவும் ஏனைய சமூகங்களுக்கு சவால் விடக் கூடியதாகவும் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கான அடித்தளம் கல்வியால் இடப்படவேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates