இலங்கையின் கலாசாரத்தில் இரண்டறக் கலந்திருக்கும் பைலா இசை, பாடல் இலங்கைக்கு வந்தது மட்டக்களப்புக்கு ஊடாகத் தான். ஆனால் மட்டக்களப்பின் பெருவாரியான தமிழ் மக்கள் மக்கள் மத்தியில் அது நிலைபெறவில்லை. சிங்கள சமூகத்தில் இன்றும் அது இசைக் கலாசாரத்தின் அங்கமாக ஆகியிருக்கிறது.
போர்த்துக்கேயர் ஆப்பிரிக்க மக்களை அடிமையாக்கி அவர்களை வர்த்தக, வியாபார நடவடிக்கைகள் மேற்கொண்ட நாடுகளில் அடிமைப் பணிகளில் ஈடுபடுத்தினார்கள். போர்த்துகேய + ஆப்பிரிக்க + சிங்கள சமூகங்கள் இணைந்து உருவான புதிய சமூகத்தில் பைலா அவர்களின் இசைவடிவங்களும் ஒன்றுகலந்து புதிய வடிவம் பெற்றது என்கிற முடிவுக்கு வரலாம். முதலாவதாக கிறிஸ்தவ சமயத்தை இலங்கைக்குள் கொண்டுவந்ததைப் போல “கப்ரிஞ்ஞா” :பைலா” என்பவற்றையும் போர்த்துகேயருக்கூடாகவே வந்து சேர்ந்தன. இந்த 'கப்பிரிஞ்ஞா' மற்றும் 'பைலா"வில் இருந்து உருவெடுத்த இன்னொரு வடிவம் தான் 'இலங்கை பைலா'. இதை விளக்க தனிக் கட்டுரை தேவை.
இலங்கையில் போர்த்துகேயருக்கூடாக வந்து நிலைபெற்றவர்களை பறங்கியர் என்று அழைப்பது போலவே அதன் பின் வந்த ஒல்லாந்தரின் வழிவந்தர்களையும் பறங்கியர் என்று அழைப்பது வழக்கம். போர்த்துக்கேய பறங்கியர், டச்சு பறங்கியர் என்று இரு அடையாளங்கள் ஒரு அடையாளத்துக்குள் இருப்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
இலங்கையில் மேற்கு பகுதியில் மன்னாரில் நிலைபெற்றிருந்த போர்த்துகேயரின் அடிமைக் குடிகள் புத்தளம் கடற்கரைகளில் (குறிப்பாக சிரம்பியடி பகுதியை சூழ) அதிகமாக வாழ்ந்திருக்கிறார்கள். அதுபோல கிழக்கில் நிலைபெற்றிருந்த போர்த்துக்கேயருக்கு சேவகம் செய்யும் அடிமைகளாக மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் வாழ்ந்தார்கள். இன்று தமிழ், சிங்களவர்களை திருமணமுடித்து ஒன்று கலந்துவிட்டவர்கள் பலர்.
Click this link
இலங்கையில் முதலாவதாக 1505இல் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்த போர்த்துகேயர் இந்த காப்பிலி இனத்தவர்களை தமது இராணுவ சேவையிலும் பின்னர் தமது அலுவலக உதவிகளுக்கும், வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தினர். 1628இல் அவர்கள் மட்டக்களப்பில் கோட்டையைக் கட்டி நிலைகொண்டனர். ஆக போர்த்துகேயர் இலங்கைக்குள் நுழைந்து ஏறத்தாள நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் மட்டக்களப்பில் நிலைகொண்டர். அப்போது தான் காப்பிலி இனமும் அவர்களின் பண்பாட்டம்சங்களும் அங்கு அறிமுகமாயின.
1638இல் போர்த்துக்கேயர் ஒல்லாந்தரிடம் கோட்டையை கைவிட்டுவிட்டு போனபோதும் போர்த்துகேயர் பலர் தொடர்ந்தும் அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வழிவந்தவர்கள் தான் அங்கு இன்றும் வாழும் பறங்கி இனத்தவர்கள். மட்டக்களப்பில் இயங்கிவரும் மட்டக்களப்பு பறங்கியர் சங்கம் (Burgher Union in Batticaloa) ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட தரவுகளின் படி தற்போது 18,000 பேர் அளவில் அவர்கள் இருப்பதாக தெரிவித்திருந்தது. மட்டக்களப்பில் மாத்திரம் 2000 பேர் வரை இருக்கக் கூடும் என்று அறியப்படுகிறது. திருகோணமலையிலிருந்து அக்கரைப்பற்று வரை பரவலாக அவர்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அவர்களின் கத்தோலிக்க ஆராதனை, பிரார்த்தனை நிகழ்வுகள் சிங்கள, ஆங்கில மொழிகளில் நிகழ்கின்ற போதும் ஆரம்பத்தில் தமிழிலேயே இருந்திருக்கிறது என்று அறியக் கிடைக்கிறது. ஆரம்பத்தில் போர்த்துகீச மொழியை தமது பேச்சு வழக்காகக் கொண்டிருந்தாலும் வாழுமிடத்து தமிழையே அவர்கள் கடைப்பிடித்து வந்தனர். பிற்காலங்களில் அது வழக்கொழிந்து போனது.
வயலின், தம்போறு, கிற்றார், ரபான், பெஞ்சோ போன்ற வாத்தியக் கருவிகளை பிரதான வாத்தியக் கருவிகளாக தமது இசைக்கு அவர்கள் பயன்படுத்துவது வழக்கம். “லான்சர்” (Lancer), “கப்ரிஞ்ஞா” (Kafringha) போன்ற தமது பண்பாட்டு நடன வடிவத்தை நத்தார் போன்ற முக்கிய நிகழ்வுகளில் அவர்கள் இன்றும் மரபாக கையாண்டு வருகிறார்கள். மட்டக்களப்பு பறங்கியர் சங்கத்தின் முன்னாள் செயலாளராக இருந்த மினோன் பெர்தொலோ அது பற்றி குறிப்பிடும் போது; இந்த நடனத்திலும், இசையிலும் நிறையவே மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. மூத்த தலைமுறையினர் ஆடும் போது எந்தளவு வித்தியாசத்தைக் கொண்டிருக்கிறது என்பதை எங்களால் உணர முடிகிறது. ஏனைய புதிய இசை, நடன வடிவங்களால் அவை நிறைய திரிபடைந்து விட்டது என்கிறார்.
இன்று அவர்கள் நாடு முழுவதும் பல்லின சமூகங்களோடு கலந்து தமது அடையாளங்களை இழந்துவிட்டிருந்தாலும், அந்த அடையாளங்களை முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் பலரும் இருக்கவே செய்கிறார்கள்.
போர்த்துகேய மொழியும், ஆப்பிரிக்க மொழிகளும் கலந்து உருவான காப்பிலி கிரியோல் மொழி (Creole) இந்த பிரதேசங்களில் வாழ்ந்த அந்த மக்களால் நெடுங்காலமாக உபயோகிக்க்கப்பட்டு வந்தது. போர்த்துகேயர் இலங்கையை விட்டுச் சென்று மூன்றரை நூற்றாண்டுகள் கடந்துவிட்டபோதும் சில இடங்களில் இவர்கள் இன்றும் போர்த்துகேய “பத்வா” (Patois) மொழியைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் சில கட்டுரைகள் மேற்கோள் காட்டுகின்றன. பைலா இசையும், “கப்ரிஞ்ஞா” ஆட்டமும் இவர்களின் வாழ்வில் கலந்த கலை வடிவங்கள். இதுவே காலப்போக்கில் இலங்கை முழுவதும் சிங்கள சமூகத்தின் பண்பாட்டிலும் ஒட்டிக்கொண்ட ஒன்றாக ஆகிவிட்டது.
போர்த்துக்கேய, ஒல்லாந்து, ஸ்பெயின் நாட்டு இசை வடிவங்கள் தாளக் கட்டுக்கள் சேர்ந்த கலவையாக பைலா மீண்டும் புதுப் பொலிவு பெற்றது 50களில் தான். இலங்கையில் 'பைலா'வின் தந்தையாக அழைக்கப்படும் மேர்வின் ஒலிவர் பஸ்ரியன் (வொலி பஸ்ரியன் என்றும் அழைப்பார்கள்) இலங்கைப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் இசைக்குழுவில் கடமையாற்றி பெரும் வரவேற்பையும், பிரபலத்தையும் பெற்றார்.
பறங்கி இன சமூகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் லெஸ்லி புரோஹியர் (Dr. Richard Leslie De Boer Brohier 1892-1980) இலங்கையில் வாழ்ந்த முக்கிய ஆய்வாளர்களில் ஒருவர். ஐந்து பரம்பரைகளாக அவர்களின் குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவர் எழுதிய "கொழும்பின் முக மாற்றம்" (“Changing Face of Colombo”) என்கிற நூலில் இந்த இசை, நடன வடிவங்கள் பற்றி பல இடங்களில் குறிப்பிடுகிறார். இந்த நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு கூட (කොළොම්පුර පුරා වෘත්තය) இன்று கிடைகிறது. தமிழில் இது போன்ற ஆய்வுகள் மொழி பெயர்ப்பு செய்வது அரிதாக இருக்கிறது.
பைலா, கப்ரிஞ்ஞா, மஞ்சா போன்றவை மட்டக்களப்பில் அல்லது தமிழ் கலாசாரத்துடன் ஒன்றாமல் சிங்கள பண்பாட்டோடு பின்னர் ஒட்டிக்கொண்டதற்குப் பின்னால் இருந்த சமூக, பண்பாட்டுக் காரணிகளை தனித்து ஆராய வேண்டும். சிங்களத்தில் பல நூல்கள் உள்ளன. தமிழில் போதிய தகவல்கள் குறைவு.
பைலாவின் ஞானத் தந்தை என்று அழைக்கப்படும் வொலி பஸ்டியனின் பாடல்
பைலாவுடன் கப்ரிஞ்ஞா ஆடல்
இலங்கை வாழ் காப்பிலி இனத்தவர்களின் கிரியோல் மொழி (Creole) பாடலும் ஆடலும்
காப்பிலி இனத்தவர்களைப் பற்றிய ஒரு ஆவணத் தொகுப்பு
நன்றி - அரங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...