Headlines News :
முகப்பு » » தமிழ் மொழி அமுலாக்கம் யாருக்கு - ஜீவா சதாசிவம்

தமிழ் மொழி அமுலாக்கம் யாருக்கு - ஜீவா சதாசிவம்


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்கள –- தமிழ் மொழி மூல  வகுப்புக்கள் எமது அமைச்சினால் ஆரம்பிக்கப்படும் எனவும் கட்சித் தலைவர் கூட்டத்தில் தான் தெரிவித்த யோசனை ஏற்றுக்கொள்ளப் பட்டதனால் அடுத்தவாரம் முதல் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மனோகணேசன் தனது முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவொன்று மனதுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. 

மெல்லத் தமிழ் இனி சாகும்... என்ற பாரதியின் கூற்று சாத்தியமாகும் படி தமிழ் மொழி 'தமில்' என்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் இம்முயற்சி வரவேற்கத்தக்கது. 

1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் மூலம் உத்தியோகபூர்வமாக இலங்கையின் மொழிக்கொள்கை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி அரசியல் யாப்பின் மூலம் சிங்களமொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு யாப்பில் அத்தியாயம் 4, உறுப்புரை 18 இல் இலங்கையின் அரச கரும மொழி சிங்களமாக வேண்டும் என்பதுடன், உறுப்புரை 19 இல் இலங்கையின் தேசிய மொழியாக சிங்களமும் தமிழும் காணப்படுகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 21(1) உறுப்புரையில் அரச கரும மொழியே இலங்கையின் நிருவாக மொழியாதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இவ்வாறு குறிப்பிடப்பட்டு இன்று கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களை எட்டியுள்ள போதும்   நடைமுறையில் தமிழ்மொழி எவ்வாறான சிக்கலை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றது என்பது பற்றியே இந்த வார 'அலசல்' ஆராய்கிறது. 

இலங்கையில், தமிழ் மொழியும் அரச கருமமொழி   என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் பேசும் மக்கள் தமது கருமங்களை செய்துகொள்ள வேண்டுமாயின் கட்டாயமாக சிங்களமொழி தெரிந்திருக்க வேண்டிய நிலைக்கே தள்ளப்படுகின்றனர். இன்று அரச அலுவலகங்களாக இருக்கட்டும் தனியார் அலுவலகங்களாக இருக்கட்டும் இங்கு தமிழ் மக்கள் ஒரு விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இங்கு மொழியே தலையாய பிரச்சினையாக இருக்கின்றது.  குறைந்தளவு தமக்கு என்ன தேவை என்று தமது மொழியில் கேட்டு கொள்வதற்கான நிலைமை கூட இல்லாதிருக்கின்றது. 

அண்மையில் அமைச்சு ஒன்றுக்கு ஒரு விண்ணப்பமொன்று தொடர்பில் அறிந்துகொள்வதற்காக சென்றிருந் தேன்.  அந்தப்பிரிவில் தமிழ்மொழி தொடர்பிலான விடயங்களை கையாள்வதற்கு ஒருவர் மாத்திரமே இருந்தார். அப்பிரிவில் சுமார் 50 பேரில் ஒருவர் மாத்திரமே தமிழ் அதிகாரி அவரும் பின்னர் இடமாற்றம் பெற்று சென்று விட்டாராம். தமிழ் அதிகாரி யாரும் இல்லாதமையினால் எங்களுக்கு தமிழர்களின் விண்ணப்பங்கள் பெருமளவு கிடப்பில் இருப்பதாக அங்கிருந்த உயர் அதிகாரி என்னிடம் கூறினார். எனக்கு ஆச்சர்யம். தமிழ் மொழி  கற்ற பலர் இருந்தும் ஏன் இவ்வாறான பொறுப்புள்ள  அமைச்சுக்களுக்கு தமிழ் மக்களின் விடயங்களைக் கையாள்வதற்கு போதுமான தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படாதிருக்கின்றனர் என்று மனதுக்குள் ஓர் ஆதங்கம்.

மொழிக்கு உரிய அந்தஸ்து இல்லாதமையினாலேயே இந்நாடு கடந்த பல வருடங்களில் பெரும் சீரழிவுக்கு உள்ளாகியிருந்தது.  மொழி அமுலாக்கல் தொடர்பில் உருவாக்கப்பட்ட அமைச்சு இன்று நேற்று உருவானது மாத்திரம் அல்ல. இதற்கு முன்னரும் இந்த அமைச்சுக்களை பல அமைச்சர்கள் கையாண்டிருக்கின்றனர்.  காலம் காலமாக இது. யாரோ ஒருவரது கையில் இருந்தாலும் அதனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.   அதுமாத்திரமன்றி நாட்டில் பல இடங்களிலும் காணப்படும் தமிழ் மொழியிலான பெயர்ப்பலகைகளில் பெரும்பாலானவை தூசனத்தில் எழுதப்பட்டதாக இருக்கின்றது. அது எப்படி தமிழ் மட்டும் பிழையாக அதுவும் தவறுதலாக எழுத்து மாறி எழுதப்படும் என்று பல நேரங்களில் கேள்வி எழாமல் இல்லை. 

பல அலுவலகங்களிலும் இவ்வாறு காணப்படுவது மறுப்பதற்கில்லை. பல நேரங்களில்  அதனை பார்த்து மலைத்துப்போவதும் உண்டு. இவ்வாறான பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டு அது தொடர்பில் அன்றாடம் ஊடகங்களில் செய்திகளும் வராமல் இல்லை. அத்துடன் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் நாளாந்தம் புகைப்படங்களுடன்  செய்திகள் வெளியாகி வருகின்றது. இரண்டு மொழி மாத்திரமே அரச கரும  மொழியாக இருந்தும் அது ஏன் தமிழுக்கு மாத்திரம் தொடர்ந்து இந்த ஒரு பாராமுகம். 

உதாரணமாக தென்னாப்பிரிக்காவை எடுத்துக்கொண்டால், அங்கு 11 மொழிகள் புளக்கத்தில் உள்ளன. இந்த 11 மொழிகளில் 9 மொழிகள்  அரச கருமமொழிகளாக  அரசியலமைப்பில் அதிகாரபூர்வமானதாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. கலப்பினத்தவர்கள் வாழும்  சமூகத்தினர் வாழும் நாடு என்கின்ற வகையில்  அந்தந்த மக்கள் தமது மொழிகளிலேயே தங்களது கருமத்தை ஆற்றிக்கொள்ளும் வகையிலேயே அவர்களுக்கு மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எமது நாட்டில் இருக்கும் மொழியில் தமிழ் மொழி படும் பாடோ அளப்பரியது. 

 இங்கு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். "இலங்கையை பொறுத்தவரையில் இன்று பெரும்பாலான தமிழர்கள் சிங்கள மொழி தெரிந்தவர்களாகவே இருக்கின்றனர். தமிழர்கள் கட்டாயமாக  சிங்களம் தெரிந்திருக்க வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். ஏனெனில் இது சிங்களமயமான நாடு.  ஆனால், சிங்களவர்களுக்கு அப்படி ஒரு தேவை எழுந்ததில்லை.  ஏனெனில் கட்டமைப்பு அவர்களது வசதிக்கேற்றாற்போலவே இருக்கின்றது.  இந்நாட்டில் இன்று இனப்பிரச்சினைக்கு கூட முழுமையான தீர்வு இல்லாது இருப்பதற்கு மொழிப்பிரச்சினையே பிரதானமாக இருக்கின்றது. உண்மையாக அரசியல் வாதிகளிடம் இருந்தே மொழிப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும்.  அப்போதுதான் அனைத்து விடயங்களுக்கும் தீர்வு கிடைக்கும். 

சட்டவாக்கத்துறையில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இவ்வாறானதொரு திட்டத்தை அமைச்சர் மனோகணேசன் ஆரம்பிப்பதற்கு அடித்தளமாக இருப்பதால் நாட்டில் இரு மக்களுக்கிடையே தற்போது மொழியினால் நிலவும் அடிபிடிக்கும் ஓர் தீர்வு கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டாலும்  உண்மையில் யாருக்கு தமிழ் மொழிப்பிரச்சினை இருக்கின்றது என்றதொரு கேள்வியும் இவ்விடத்தில் எழுகிறது. 

இலங்கையில் தமிழ் மொழி முழுமையாக அமுல்படுத்தப்படுத்தாமையே தமிழ்பேசும் மக்களுக்கான தலையாய பிரச்சினை. அது பற்றிய விடயங்களையே விரிவாக மேலே குறிப்பிட்டிருந்தோம். இப்பிரச்சினைக்கு தீர்வாக அமைச்சு முன்னெடுக்க வேண்டிய தீர்வில்  எம்.பிக்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதா? அல்லது மொழியின் அமுலாக்கம் முறையாக இல்லாத மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதா? பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கென மொழிபெயர்ப்பு எனும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களும் தமக்கு ஏற்ற மொழியில் அங்கு இடம்பெறும் உரையாடல்களை கேட்டுக்கொள்ளத்தக்கதான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.  

மொழியின் மீது ஆர்வம் உள்ளவர்கள், தேவையுடையவர்கள் கண்டிப்பாக அதனை கற்றுக் கொள்வதில் அக்கறை செலுத்துவார்கள். ஏன் இப்போதிருக்கின்ற தமிழ்,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மும் மொழிகளிலும் உரையாற்றுகின்றனர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.  ஆனால், மும்மொழிகளிலும் சரளமாக உரையாற்றக்கூடிய ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரையும் கண்டு கொள்வது சிரமம்.  சிங்கள எம்.பி.க்கள் தமிழையும் தமிழ் எம்.பி.க்கள் சிங்களத்தையும் படிப்பதால் அரசியல் சிந்தனையில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுகிறது.  

ஆக தீர்மானம் எடுக்கும் சபையில் எழும் பிரச்சினை பிரதானமானது அல்ல ஏனெனில் அவர்களுக்கு மொழிப்பெயர்ப்பு கருவி உதவியை அவ்வப்போது வழங்கிவிடுகின்றது..  இங்கு தமிழ்பேசும் மக்களுக்கு அரச நிர்வாக சேவையை எட்ட  முடியாமல் இருப்பதுதான் சாதாரண பொதுமகனுக்கு இருக்கக் கூடிய பிரச்சினையாக இருக்கின்றது. இந்நிலையில் தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பில் இருக்கும் பிரச்சினை என்னவெனில், அது நிர்வாக ரீதியாக மக்களுக்கு சென்று சேரவில்லை என்பதுதான். தமிழ்மொழி உரிய வகையில் கிடைக்காமையினாலேயே அவர்களுக்கு உரிய வகையில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவே அவர்களது அன்றாட பிரச்சினையாக இருக்கின்றது. 

ஆக, சிங்களவர்களுக்கு தமிழ் மொழியை கற்பிப்பது வரவேற்கத்தக்க விடயமாயினும்  தமிழ்ப்பேசும் மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கும் அமைச்சு உடனடியாக  உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கும் போதே தமிழ்மொழி அமுலாக்கம் வெற்றி கரமானதாக அமையும்...

நன்றி - வீரகேசரி

Share this post :

+ comments + 1 comments

වෙනස් සහ ප්රගතිය
Change and progress
----------------------------------------------------
මාටංරමං මුණංණෙඃටංරමං
माटंरमं मुणंणैटंरमं
மாட்ரம் முன்னேட்ரம்
miitrim munnaatrim
----------------------------------------------------

I அ अ අ - II ஆ आ ආ - E இ इ ඉ - EE ஈ ई ඊ -
AYANNA – AAYANNA - IYANNA – IIYANNA -
U உ उ උ - UU ஊ ऊ ඌ -
UYANNA – UUYANNA -
A எ ए එ - AA ஏ ऐ ඒ - O ஒ ओ ඔ - OO ஓ औ ඕ
EYANNA – EEYANNA - OYANNA – OOYANNA -
KI க क ක - GI ங ङ ඟ - SI ச च ෂ - JI ஞ ञ ඦ -
KAYANNA - GAYANNA - SAYANNA - JAYANNA -
TI ட ट ට - NI ன ण ණ -
TTAYANNA - NAYANNA -
DI த त ත - HI ந न ඳ - PI ப प ප - MI ம म ම -
TAYANNA - DAYANNA - PAYANNA - MAYANNA -
YI ய य ය - RI ர र ර - LI ல ल ල - VI வ व ව
YAYANNA - RAYANNA - LAYANNA - VAYANNA -

----------------------------------------------------
----------------------------------------------------

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates