(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 30)
தேயிலை மட்டுமல்ல ரப்பர் பயிர்ச் செய்கையும் கூட ரப்பர் கைத்தொழிலிலும் கூட சிறுதோட்ட உடமையாளர்கள் வசமே நின்று நிலைக்கின்றது. அண்மையில் கொழும்பு ரப்பர் வர்த்தக சங்கத்தினரின் 98 வது வருடாந்த மாநாடு நடைபெற்றபோது இதன் தலைவர் சுனில் போலியந்த ரப்பர் சிறுதோட்ட உடமையாளர்களை தொடர்ந்தும் அந்த தொழிலில் தங்கியிருக்கச் செய்வதற்கான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் ரப்பர் வர்த்தக சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ரப்பர் உற்பத்தி வழங்கலைச் செய்வதற்கு சிறுதோட்ட உடமையாளர்களே முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் 70 சதவீதமான ரப்பரை உற்பத்தி செய்து வழங்குவது சிறுதோட்ட உடமையாளர்களே. ஒரு கிலோவுக்கான ரப்பரின் விலை 600ரூபா என எதிர்பார்க்கப்படும் நிலையில் அது 200 ரூபா வரை வீழ்ச்சியடைந்தபோது பிளைவுட் எனும் பலகைத் தேவைக்காக சிறுதோட்ட உடமையாளர்கள் இரப்பர் மரத்தை வெட்டுவதாகவும் இதனை தடுப்பதற்கும் சிறுதோட்ட உடமையாளர்களை பாதுகாக்கவும் அவசியம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டிலேயே இதுவரையான காலத்தில் ரப்பர் உற்பத்தி மிகவும் குறைந்த அளவிலான உற்பத்தியை பதிவு செய்துள்ளது. இதனை மேம்படுத்த சிறுதோட்ட உடமையாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் பெருந்தோட்ட கம்பனிகள் மேலதிக இடங்களை ரப்பர் செய்கைக்காக பயன்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகின்றது.
குறிப்பாக தேயிலை றப்பர் பயிர்கள் பெரும்பாலும் நிறுவனமயப்படுத்தப்பட்ட நிர்வாக முறைமை கட்டமைப்பில் இருந்து கவனமாக கழற்றப்பட்டு சிறுதோட்ட உடமைகளாக மாற்றப்பட்டு வருகின்றமையை அவதானிக்கலாம். தென்னை இதற்கு முன்னமே இந்த நிலைமையை அடைந்துவிட்டது. இலங்கையின் பணப்பயிர்கள் அல்லது வர்த்தகப் பயிர்கள் அல்லது பெருந்தோட்டப் பயிர்கள் எவை என சமூகக்கல்வியினூடாகவோ பொருளியல் பாடங்களினூடாகவோ மாணவர்கள் கற்றுவந்த காலமே இன்று மாறி வருகின்றது.
கடந்த அத்தியாயங்கலில் தேயிலைக் கைத்தொழிலுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்பில் பார்த்தோம். ஆனால், அத்தகைய நிறுவன ஒழுங்கமைப்புகள் ஏதுமின்றி முள்ளுத்தேங்காய் எண்ணை உற்பத்தி இலங்கைப் பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குள் புகுத்தப்பட்டு வருகின்றது. தேயிலை, ரப்பர் தோட்டங்களை அழித்து முள்ளுத்தேங்காய் உபற்த்தி பரவலாக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. 2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முள்ளுத்தேங்காய் உற்பத்தி இதுவரை ஒன்பதினாயிரம் ஹெக்டேயரில் பயிரிடப்படுகின்றது. 2016 ஆண்டு திட்டமிடலின்படி அதனை 20000 ஹெக்டேயர் பரப்பளவாக உயர்த்துவதற்கும் தீர்மானிக்கபட்டுள்ளது.
அண்மையில் கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட டெனிஸ்வத்தை தோட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு மிக அண்மையில் முள்ளுத்தேங்காய் பயிரிடுவதற்கு எதிராக போராட்டம் செய்துள்ளனர். இதனை கவனத்தில் எடுத்து களுத்துறை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இந்தப் பயிரிடைலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் கோரிக்கை கம்பனி தரப்புக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இப்போது நிலவக்கூடிய காலநிலையில் குறித்த பயிரை நாட்டாமல் விட்டால் தாம் உரிய காலத்தில் அறுவடையை பெறமுடியாது என்றும் கம்பனி தரப்பில் நியாயம் சொல்லப்பட்டுள்ளது. இந்த முள்ளுத்தேங்காய் உற்பத்தி நிலக்கீழ் நீரை உறிஞ்சக்கூடியது என்றும் அதனை குடியிருப்புக்கு மிக அண்மையில் அமைக்கின்றபோது மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தக்கூடிய கிணறுகளில் நீர் வற்றிப்போகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்றும் அஞ்சப்படுகின்றது. இவ்வாறு சுற்றாடலுக்கு பல்வேறு வழிகளில் அதிகளவான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் சொல்லப்பட்டபோதும் கூட இலங்கையில் முள்ளுத்தேங்காய் எண்ணை உற்பத்தி பரவலாக்கம் அடைந்து வருகின்றது.
தென்னைப் பயிர்ச்செய்கையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணைக்கு மாற்றான எண்ணையாகவே முள்ளுத்தேங்காய் எண்ணை உற்பத்தி பரவலாக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. இலங்கை இயல்பாகவே தென்னை உற்பத்திக்கு ஏற்ற பிரதேசங்களைக் கொண்டிருந்த போதும் கூட அந்த தென்னை உற்பத்தியை விருத்தி செய்வதற்கு காட்டப்படாத ஆர்வம் முள்ளுத்தேங்காய் எண்ணை உற்பத்தியில் காட்டப்பட்டு வருகின்றது.
ஆண்டுதோறும் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் மெட்ரிக் டொன் முள்ளுத்தேங்காய் எண்ணை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவற்றுள் ஒரு லட்சம் மெட்ரிக் டொன் உற்பத்தியை இலங்கையில் மேற்கொண்டு இறக்குமதியைக் குறைக்க திட்டமிடப்படுவதாகவும் அறிய முடிகின்றது. ஆக, முள்ளுத்தேங்காய் தோட்டங்கள் இன்னும் இன்னும் அதிகரித்து வரக்கூடிய வாய்ப்புக்களே அதிகம் உள்ளன. நடைமுறையில் காணக்கூடிய பிரச்சினை என்னவெனில் இந்த முள்ளுத்தேங்காய் எண்ணை உற்பத்தி தொடர்பில் முறையான ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளனவா என்பதுதான். இதுவரை முறையான ஆராய்ச்சி ஆய்வ நிறுவனங்கள் ஏதுமின்றி தனியார் கம்பனிகளின் வியாபார இலக்குகளின் கீழான திட்டமிடலாகவே முள்ளுத்தேங்காய் உற்பத்தி பரவலாக்கப்பட்டுவருவது ஆபத்தானது.
நூற்றியைம்பது ஆண்டுகளுக்கு முன்பதாகவே பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுசெய்தே வர்த்தக பயிராக அறிமுகம் செய்யப்பட்ட தேயிலை, நூற்றியைம்பது ஆண்டை நிறைவுசெய்யும் தருணத்தில் அந்தத் தொழில் வீழ்ச்சிப்போக்கைக் காட்டி நிற்கையில் அதே பெருந்தோட்டக் கைத்தொழில் துறையை ஆக்கிரமித்து வரும் தொழிலாக முள்ளுத்தேங்காய் தற்காலத்தில் மாறிவருகிறது. இதற்காக பாரிய ஆய்வுகள் ஏதும் செய்யப்படுவதாக தெரியவில்லை. ஆனால், தேயிலை ரப்பர் கைத்தொழிலில் தொழிலாளர்களாக இருந்த மக்கள் முள்ளுத்தேங்காய்த் தொழிலிலும் வெறுமனே நாட்கூலி தொழிலாளர்களாகவே உள்வாங்கப்படுகின்றனர்.
அந்நிய முதலீட்டையும் அந்நிய உழைப்பையும் இந்த பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து வெளியேற்ற எடுத்த நிகழச்சிநிரல்களின் அடுத்த இலக்கு நிலங்களை கையகப்படுத்துவதே. 1972 ஆம் ஆண்டு இடம்பெற்ற காணி உச்சவரம்பு சட்டம் இத்தகைய இத்தகைய இலக்குகளின் பாற்பட்டதே. இன்றும் கூட கண்டி ராச்சியத்தின் நிலங்களை அபகரித்த தேயிலையின் நூற்றியைம்பது ஆண்டுகால வரலாற்றை எவ்வாறு இலங்கை கொண்டாட முடியும் எனும் தொணியில் பெரும்பான்மைவாதிகளால் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம். ஆனால், இந்த நூற்றியைம்பதுகால தேயிலை வரலாற்றோடு வாழும் மலையகத் தமிழ் மக்கள் இப்போதுதான் தமக்கான நிலம் குறித்தான கவனத்தைக் குவிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த கட்டத்தில் இன்னுமோர் பெருந்தோட்டக் கைத்தொழிலின் தொழிலாளர்களாகவே மலையகத் தமிழ் மக்கள் குறிப்பாக தென் மாவட்டங்களில் வாழும் மக்கள் உள்வாங்கப்படுவது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.
எனவே மலையகத் தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலே இலங்கையின் பெருந்தோட்டக் கைத்தொழிலுடன் பின்னிப்பிணைந்த ஒரு வாழ்க்கைப்பாதையை தெரிவுசெய்து கொண்டவர்கள் என்ற வகையில் அந்த தொழில் துறையின் போக்கை அவதானித்து அதற்கேற்ப தமது எதிர்காலத்தை திட்டமிட வேண்டியவர்களாக உள்ளனர். அந்த தொழில் துறையுடன் சார்ந்து அமைந்து உருவாகிய தொழிற்சங்க அரசியல் கலாசாரமே இன்றும் மலையகத தமிழ் மக்களின் அரசியலின் ஆணிவேராகவுள்ளது. எனவே பெருந்தோட்டக் கைத்தொழில் முறைமை மாற்றம் அடைகின்றுபோது அது மலையக மக்களின் அரசியல் செல்நெறியிலும் மாற்றத்தை உருவாக்கக் கூடியது என்பதை புரிந்துகொள்ள வேண்டியள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் துறை மாற்றம் அடைந்து வருகையில் தாம் நிலம் சார்ந்த தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எழுத்தாளர் மு.சிவலிங்கம் எழுதி அண்மையில் வெளிவந்த வரலாற்று நாவலான பஞ்சம் பிழைக்கவந்த சீமை எனும் நாவல் இந்த வரலாற்றுப்பாதையில் மலையகத் தமிழ் மக்களின் விடுதலை என்பது தமக்கென்று நிலத்தினை வென்றெடுக்கும் போதே நிகழும் என நிறைவுறுகின்றது. எறநூறு வருசமா ஒழைச்சி நாட்டை உண்டாக்கிட்டு வெறுங்கையோட இந்தியாவுக்குப்போன போன மாதிரி நாங்களும் போகக் கூடாது. ''தோட்டத்து நெலத்தோடத்தான் எங்க வாழ்க்கைய அமைச்சுக்கணும்...'' என ஒரு தொழிலாளி சொல்வதாக அமையும் நாவலின் இறுதி வாக்கியம் ஒட்டுமொத்த மலையகத்தொழிலாளர் சமூகத்துக்குமானதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(முற்றும்)
(கடந்த 29 வாரங்களாக வெளிவந்த இந்தத் தொடர் இலங்கைத் தேயிலையின் நூற்றியைம்பது ஆண்டுகால வரலாற்றோடு இலங்கையின் பெருந்தோட்டக்கைத்தொழில் துறையில் ஏற்பட்டுவரும் காட்சி மாற்றங்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்தது. இந்தத் தொடர் முற்றுப்பெரும் புள்ளி ஒன்று இல்லை. இனிவரும் காலங்களிலும் தொழில் தொடர்பில் நாம் அவதானமாக இருக்க வேண்டிய புள்ளி தொடரபிலான அவதானத்தை முன்வைத்து தற்காலிகமாக முற்றுப்பெறுகின்றது. நன்றி)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...