சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே, மாகாண சபைகளின் தேர்தல்களை தனித்தனியாக நடத்தாமல் ஒரே தடவையில் நடத்த வேண்டுமென்ற நடைமுறை இருந்தபோதும் கடந்த காலங்களில் அது பின்பற்றப்படவில்லை.
கடந்த அரசின் காலத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படாமல், தமக்கு ஏற்றவிதத்தில் தனித்தனியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதனால் பெருந்தொகையான நிதி, காலம், மனிதவளம் மற்றும் பொதுச் சொத்துகள் வீண்விரயம் செய்யப்பட்டன.
இதனால், அரச சேவைகள் தாமதத்துக்குள்ளானதுடன் பொதுமக்களும் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளானார்கள். இவைபற்றி பல்வேறு தரப்பினரும் அவ்வப்போது சுட்டிக்காட்டியதுடன், சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டுமென்று தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே தற்போது சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே தினத்தில் நடத்தும் வகையில் அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் பதவிக்காலங்கள் அடுத்த மாதத்துடன் முடிவடையவுள்ளன.
சப்ரகமுவ மாகாண சபை செப்டெம்பர் 25 ஆம் திகதியும், கிழக்கு மாகாணசபை செப்டெம்பர் 30 ஆம் திகதியும், வடமத்திய மாகாண சபை அக்டோபர் 01 ஆம் திகதியும் முடிவடைவதால் அவை கலைக்கப்பட்டு தொடர்ந்து புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
சப்ரகமுவ மாகாண சபையில் தற்போது இரண்டு தமிழ் உறுப்பினர்கள் உள்ளனர். மலையகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு மேற்கொண்ட முயற்சி காரணமாக கடந்த தேர்தலில் இந்த இரண்டு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். அதற்கு முன்னர் தமிழ் உறுப்பினர்களை தெரிவுசெய்ய முடியாததொரு துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது. மலையகக் கட்சிகளின் ஒன்றுபட்ட சக்திமூலம் 2 உறுப்பினர்களை தெரிவு செய்யக்கூடியதாக இருந்தது.
அதேவேளை இம்முறை தேர்தல் நடைபெறுமானால் இந்த இரண்டு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த முறை இ.தொ.கா, ம.ம.மு, ஜ.ம.மு உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றிணைந்து வேட்பாளர்களை முன்னிறுத்தியதால் வெற்றி சாத்தியமானதாக இருந்தது. அதேபோன்று இம்முறையும் குறித்த கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுமா?
இ.தொ.கா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாகும் அல்லது தனித்துப்போட்டியிடக்கூடும். ஆனால், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் கூட்டணியான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐ.தே.க. சார்பு நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன.
இவ்வாறானதொரு நிலையில் இரண்டு தரப்பினரும் தமது சார்பில் தனித்தனி வேட்பாளர்களையே தேர்தலில் நிறுத்துவதற்கு முற்படுவர். அவ்வாறான நிலையில் சப்ரகமுவ மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களான இரத்தினபுரி மற்றும் கேகாலையிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிப்போகக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, தமிழ் உறுப்பினர்களின் வெற்றியில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இரத்தினபுரி, காவத்தை, பலாங்கொடை மற்றும் எட்டியாந்தோட்டை, தெரணியகலை போன்ற பிரதேசங்களில் மாகாண சபைத் தேர்தலை குறிவைத்து பல கட்சிகளின் பிரமுகர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பலரும் போட்டியிட்டு, தற்போது இருக்கும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து விடக்கூடாது. இவ்விடயத்தில் கட்சிகளிடையே ஒரு இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அதற்கு இப்போதிருந்தே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ் பிரதிநிதித்துவம், மாகாண சபையில் இல்லாத காரணத்தினால் அம்மாகாண தமிழ் மக்கள் ஒரு காலப்பகுதியில் அடைந்த துயரங்களைப் பற்றி நினைத்துப் பார்த்தால் அதன் தேவை புரியும். இப்போதுகூட களுத்துறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் மாகாண சபை மற்றும் பாராளுமன்றம் போன்றவற்றில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் தமது பிரதேச தேவைகள், அபிவிருத்திகள் மற்றும் பொது விடயங்களையும் நிறைவேற்றிக்கொள்வதில் எவ்வாறான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை அந்த மக்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும்.
இவ்விடயத்தில் சப்ரகமுவ மாகாண மக்கள் மட்டுமன்றி களுத்துறை மாவட்ட மக்களும் கூட விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
இதனைத் தொடர்ந்து, மத்திய மாகாண சபை அடுத்த வருடம் (2018) அக்டோபர் 8 ஆம் திகதியும், வடமேல் மாகாண சபை அக்டோபர் 10 ஆம் திகதியும், வடமாகாண சபை அக்டோபர் 24 ஆம் திகதியும், தென்மாகாண சபை 2019 ஏப்ரல் 10 ஆம் திகதியும், மேல்மாகாண சபை 2019 ஏப்ரல் 20 ஆம் திகதியும், ஊவா மாகாண சபை 2019 அக்டோபர் 8 ஆம் திகதியும் முடிவடைவதால் அவையும் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மேற்கண்ட திகதிகளில் அல்லாமல், சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. மாகாண சபை சட்டமூலத்தில் இது தொடர்பாக திருத்தங்களை கொண்டுவந்து தேர்தல் நடத்தப்படலாம். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள திருத்தங்களில் தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த முறையில் தேர்தல்களை நடத்துவது மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 30 சதவீதமாக அதிகரிப்பது போன்ற விடயங்களும் உள்ளடக்கப்படலாமென்று கூறப்படுகிறது.
மேற்கண்ட திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதால், அடுத்த மாதத்துடன், முடிவடையவுள்ள சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் தேர்தல்கள் குறித்த காலத்தில் நடத்தப்படாமல் மாகாண ஆளுநர்களின் கீழ் கொண்டுவரப்படலாம்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...