Headlines News :
முகப்பு » , , , , » அஸ்தமனங்களின் வரிசையில் “சன்சோனி ஆணைக்குழு” என்.சரவணன்

அஸ்தமனங்களின் வரிசையில் “சன்சோனி ஆணைக்குழு” என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 22

77 இனக் கலவரத்துடன் தான் ஜே.ஆர்.அரசாங்கம் பதவிக்கமர்ந்தது என்பதை பார்த்தோம். இந்தக் கலவரத்துக்கு நீதி கோரி பாராளுமன்றத்தில் வாதிட்ட அமிர்தலிங்கம் விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டினார். மேலும் உலக நாடுகளின் கண்டனங்களின் விளைவாக ஜே.ஆர். இதனை விசாரிக்க முன்னாள் பிரதம நீதியரசரான மிலானி க்ளோட் சன்சோனி (Miliani Claude Sansoni ) தலைமையில் கண்துடைப்புக்காக ஒரு தனிநபர் விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார். சன்சோனி ஆணைக்குழு என்று பிரசித்தம் பெற்ற அந்த ஆணைக்குழு அறிக்கை வெற்று காகித அறிக்கைகளின் வரலாற்று வரிசையில் பின்னர் சேர்ந்து கொண்டது.

விசாரணையின் முடிவுகளுக்கேற்ப நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தார். சன்சோனியைத் தெரிவு செய்ததற்கான காரணம் அவர் தமிழரோ, சிங்களவரோ அல்லர். மாறாக அவர் ஒரு பறங்கி இனத்தவர். பக்கசார்பில்லாமல் அவர் நடுநிலையாக விசாரணைகளை மேற்கொள்வார் என்கிற ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியிருந்தது.

ஆனால் உத்தியோகபூர்வமாக இந்த விசாரணை ஆணைக்குழு சற்று தாமதமாகவே அமைக்கப்பட்டது. 1977 நவம்பர் 9ம் திகதி அன்றைய ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ விசாரணை ஆணையாளர் சட்டத்தின் கீழ் 1977 ஓகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 15 வரையான 34 நாடுமுழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் பற்றி விசாரிக்க முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனியை ஆணையாளராக நியமித்தார். இந்த ஆணைக்குழு நடைமுறையில் 'சன்சொனி ஆணைக்குழு' என்று அறியப்பட்டது. இந்த ஆணைக்குழு தன்னுடைய விசாரணைகளை 1978 பெப்ரவரி 8ம் திகதி ஆரம்பித்தது. 959 பேரை விசாரித்தது. 15,000க்கும் மேற்பட்ட தட்டச்சு செய்யப்பட்ட பக்கங்களைக் கொண்ட சாட்சியங்கள் தொகுக்கப்பட்டன. மொத்தம் 298 அமர்வுகளின் பின்னர் 1979 ஒக்டோபர் 12ம் திகதி ஆணைக்குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டது. 2 ஜூலை 1980 அன்று 277 பக்க அறிக்கையை வெளியிடப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியேறியதும் தனது கவனத்தை நீண்ட காலத்துக்கு ஐ.தே.க ஆட்சியைத் தக்கவைப்பதற்கும், அதற்காக அரசியலமைப்பை மாற்றுவதற்கும், விகிதாசார பரதிநிதித்துவதை அறிமுகப்படுத்துவதற்கும், திறந்த பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்குமே முழு கவனத்தை செலுத்தியது. அந்த நிகழ்ச்சிநிரலுக்கு முன்னால் இந்தப் படுகொலை ஜே.ஆருக்கு துச்சமானது.

கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நீதி என்பது சன்சோனி ஆணைக்குழுவின் அறிக்கையோடு நின்றுவிட்டது. சன்சொனி ஆணைக்குழுவின் அறிக்கை கூட நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது, ஜே.ஆர் அரசாங்கம் 77 படுகொலைச் சம்பவங்களை எந்தளவு துச்சமாக கருதியிருந்தது என்பதற்கு சான்று.

குற்றவாளிகளைப் பாதுகாக்க சட்டம்
ஆணைக்குழு குற்றம்சாட்டிய எவரின் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாதபடி ஜே.ஆர் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்.

சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் ஜே.ஆர் அரசாங்கம் எடுக்கவில்லை. மாறாக, இதில் சம்பந்தப்பட்ட சில பொலிஸ் அதிகாரிகள் பதவியுயர்வு பெற்றிருந்ததைப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1982 மே 20 ஆம் திகதி ஜே.ஆர் அரசாங்கம்  1982ஆம் ஆண்டின்  20ஆம் இலக்க “சட்டவிலக்குரிமை” குறித்த  சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது (Indemnity Act). அதன் படி 1977 ஓகஸ்ட் 1 இலிருந்து 31 வரை நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பில் எந்தவொரு அமைச்சர், பிரதி அமைச்சர், முப்படையினர், பொலிஸார் மற்றும் அமைச்சரின் நல்லெண்ண வழிகாட்டுதலின் பேரில் நடந்த எந்தவொரு நபர் மீதும் எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படுவதிலிருந்து விலக்களிக்கும் வகையில் அமைந்தது. சுருக்கமாக 1977 ஓகஸ்ட் இனக்கலவரத்துக்குக் காரணமானவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பொன்றை ஜே.ஆர் அரசாங்கம் வழங்கியது. இலங்கை வரலாற்றில் இதுவொரு கரும்புள்ளி.

1915ஆம் ஆண்டு கண்டி கலவரத்தின் போது இந்த சட்டம் முதன் முறையாக சட்டசபையில் கொண்டுவரப்பட்டு படுகொலைகளை நிறைவேற்றிய அன்றைய ஆங்கிலேய படைகளை பாதுகாத்தது அரசு. அதன் பின்னர் 1977இல் அத்தகைய ஒரு சட்டத்தைப் பயன்படுத்தினார் ஜே.ஆர். பின்னர் 1988 டிசம்பர் 16 வரை இந்த சட்டம் நீடிக்கப்பட்டது. அது ஜே.வி.பி.யினரையும் தமிழர்ககளையும் கொன்றொழித்த படையினரைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டது.

அந்த அனுபவத்திலிருந்து தான், சமீபத்தில் கூட ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தால் யுத்தக் குற்றங்களுக்காக படையினர் தண்டிக்கப்பட முன்னர் “சட்டவிலக்குரிமை” சட்டத்தைக் கொண்டுவந்து இலங்கைப் படையினரைப் பாதுகாக்கவேண்டும் என்று இரு வருடங்களுக்கு முன்னர் உதய கம்மன்பில கூட தெரிவித்திருந்ததையும் இங்கு நினைவுகொள்ளத் தக்கது.

தமிழர்களே கலவரத்துக்கு காரணம்
சன்சோனி ஆணைக்குழு பற்றி சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கெனவே போலிப் பிரச்சாரங்களும், பிழையான தகவல்களும் பதிவாகியுள்ள்ளன. ஏராளமான நூல்களில் அந்தக் கலவரமே சிங்களவர்களுக்கு எதிராக தமிழர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்றே பதிவாகியுள்ளன என்பதை நூற்றுக்க்கனக்கான நூல்களிலும், ஆவணங்களிலும் காண முடிகிறது.
ஹரிஸ்சந்திர விஜேதுங்க
அந்த ஆணைக்குழு அறிக்கையை யுத்தம் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை பிரபல சிங்கள பதிப்பகமான கொடகே பதிப்பகம் மீண்டும் வெளியிட்டது. அப்போதைய மகிந்த அரசின் கலாச்சார விவகார அமைச்சராக இருந்த மகிந்த யாப்பா அபேவர்தனவின் முன்னுரை எழுத,  அதற்கு அணிந்துரையை எழுதியவர் பிரபல இனவாதத் தலைவரான ஹரிஸ்சந்திர விஜேதுங்க (“சிங்ஹலயே மஹா சம்மத்த பூமி புத்திர பக்ஷய”வின் தலைவர்). யுத்த வெற்றி பற்றிய ஒரு சிங்கள காவியத்தை “சாபலத் யுத்தயே நிமாவ” (சபிக்கப்பட்ட யுத்தத்தின் முடிவு) என்கிற நூலை எழுதும் பொறுப்பை மகிந்த அரசு இவரிடம் தான் ஒப்படைத்திருந்தது. கலாசார அமைச்சு அதனை வெளியிட்டிருந்தது.

ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பவர்களை குறுக்கு விசாரணை செய்யும் வழிகளை சன்சோனி ஏற்படுத்தியிருந்தார். ஹரிச்சந்திர விஜேதுங்க 07.08.1978 -22.10.1979 வரையான காலப்பகுதியில் சிங்களவர் சார்பாக அந்த ஆணைக்குழுவின் முன் வழக்கறிஞராக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த ஆணைக்குழுவின் தகவலின் படி அவர் "சிங்கள மகாஜன பெரமுன" என்கிற கட்சியையும், "சிங்கள வாலிபர் முன்னணி" (சிங்கள தருன பெரமுன) என்கிற அமைப்பையும் பிரதிநிதித்துவப் படுத்தியதாக குறிப்பிடுகிறது. அவருடன் பேர்சி கருணாரத்ன, டபிள்யு.பீ.குணதிலக்க ஆகிய வழக்கஞர்களும் இலவசமாக சிங்களவர்களுக்காக தொடர்ந்து வாதாடினார்கள். இதனை எதிர்கொள்வதற்காக தமிழர் தரப்பில் இருந்தும் தமிழ் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். தமிழர் தரப்பு வழக்கறிஞர்கள் பலவீனமாகவே இருந்தார்கள் என்று பிற்காலத்தில் UTHR அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கலவரம் தொடர்பில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீதும் அமிர்தலிங்கத்தின் மீதும் ஆணைக்குழு சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக 1981ஆம் ஆண்டு வெளியான போதே பல பிரதிகளை அவர்கள் கொள்வனவு செய்து எவருக்கும் கிடைக்கச் செய்யாமல் தீயிட்டுக் கொழுத்தி விட்டதாக தெரிவிக்கிறார் ஹரிஸ்சந்திர. இதை அமைச்சரின் முன்னுரையிலும் “எதிர்க்கட்சித் தலைவர் (அமிர்தலிங்கம்) உள்ளிட்ட  அன்றைய தமிழ் இனவாதிகள் சர்வதேசத்துக்கு தமது தவறை மூடிமறைக்க ஆணைக்குழு அறிக்கையை மலிவாக கொள்வனவு செய்து அத்தனையையும் தீயிட்டனர்” என்று குறிப்பிடுகிறார். ஏற்கேனவே இந்த கருத்து பல சிங்கள நூல்களில் இருக்கின்றன. அதுமட்டுமன்றி “பிரிவினைவாதத்துக்கும், தமிழ் இனவாதத்துக்குமான சாட்சி இந்த அறிக்கை” என்று முன்னுரையில் முடிக்கிறார் அமைச்சர். 

மடிகே பஞ்ஞாசீல தேரர் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அமரபுர நிகாயவின் அதிமாநாயக்க தேரராக அவர் இருந்தார். ஜே.ஆர். ஆட்சி காலத்தில் அவர் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் முக்கிய பிரமுகராக இருந்தார். 77 கலவரம் பற்றி சன்சோனி ஆணைக்குழுவிலும் சாட்சியம் வழங்கியவர். குறிப்பாக தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராக அவர் பல விடயங்களை ஆணைக்குழுவில் தெரிவித்துவிட்டு ஜே.ஆருக்கு ஒரு நீண்ட கடிதத்தையும் தமிழர்களை எப்படி ஒடுக்க வேண்டும் என்பது பற்றிய 5 யோசனைகளையும் முன்வைத்தார். வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும், ஆனையிறவிலும் சிங்களவர்களை குடியேற்ற வேண்டும் என்று அழுத்தமாக அதில் பல இடங்களில் வலியுறுத்துகிறார் அவர். அன்றைய “தவச” நிறுவனத்தின் பத்திரிகையான ரிவிரெச பத்திரிகையில் அது வெளிவந்தது. அதே கடிதத்தை ஒரு சிறு கைநூலாகவும் மடிகே பஞ்ஞாசீல தேரர் வெளியிட்டார். சிரிசோம ரணசிங்க என்பவர் எழுதிய “Eelam the truth” (ஈழம் பற்றிய உண்மைகள்) என்கிற ஒரு நூல் பற்றிய குறிப்புகளையும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடுகிறார். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இங்கிலாந்து, ஜேர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு 500பிரதிகளை அனுப்பியதாகவும் குறிப்பிடுகிறார். 

தமிழ் அரசியல் தலைவர்களின் தீவிரவாதப் போக்கும் கலவரத்துக்கான அடித்தளம் என்று சன்சோனி அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிற அதேவேளை; கலவரமானது தமிழர்களுக்கு எதிராகவே நடந்து முடிந்ததை உறுதிபடுத்தியிருக்கிறது.

இந்தக் கலவரத்தின் போது 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்ட போதும் அதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக அரசசார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவித்தன. 1500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சில அறிக்கைகளை தெரிவித்தன. நடந்த வன்முறைகளையிட்டுக் கவலையும் கண்டனமும் தெரிவித்த விசாரணைக்குழு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்று மேலெழுந்தவாரியாகக் கூறிவிட்டு நாட்டில் ஏற்பட்ட இந்நிலைமைக்கு அமிர்தலிங்கத்தின் உரைகளே காரணம் என்றும் அதனால் தமிழ் இளைஞர்கள் உணர்ச்சியடைந்து வன்முறைகளில் ஈடுபட்டதால் உருவான வன்முறை என்று தமிழர் தரப்பின் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது.

சர்வதேச கண்டனம்
“20 ஆண்டுகளாக இலங்கையின் விசாரணை ஆணைக்குழுக்களை நம்பவைத்தல்” (Twenty years of make-believe Sri Lanka’s commissions of inquiry) என்கிற தலைப்பில் சரவதேச மன்னிப்புச் சபை 2009ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை சன்சோனி ஆணைக்குழு பற்றி இப்படி குறிப்பிடுகிறது.

“இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக அரசு புதிய சட்டத்தை உருவாக்கி அரசப் படைகளின் அட்டூழியங்களை மூடி மறைத்தது. ஆணைக்குழு விசாரணை அமர்வுகள் அரசியல் தலையீடுகளால் குழப்பப்பட்டமையும் பதிவாகியுள்ளன. அந்த அறிக்கை தமிழ் அரசியல் தலைவர்களின் மீது வன்முறைகளுக்கான பழியைப் போட்டதுடன் இந்த வன்முறைகளில் அரசாங்கத்தின் பங்களிப்பும் சாட்சிகளின் மூலம் நிரூபணமானது. போது மக்களை பாதுகாக்கவும், மோதலை தடுப்பதற்கும் பொலிஸ் தவறியிருப்பதையும், சில பொலிஸ் அதிகாரிகள் தமிழர்களுக்கு எதிரான வன்செயலுக்கு ஆதரவு வழங்கிய விதம் குறித்தும் குறிப்பிட்டது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரையும் செய்தது. ஆனால் அந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக எந்த வழக்கும் தொடுக்கப்படவில்லை....

அதுமட்டுமன்றி அவர்களை குற்றங்களில் இருந்து தப்பச்செய்யும் வகையில் தண்டனையிலிருந்து விலக்குரிமை பெரும் சட்டமும் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் அவர்களின் குற்றங்களுக்கு சட்ட அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்கியது.”

இந்த ஆணைக்குழுவின் உண்மை நிலையை ஒப்புவிக்க இந்த சர்வதேச அறிக்கையே போதும். குற்றமிழைத்தவர்களும் தப்ப வைக்கப்பட்டார்கள். அவர்களில் பலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது. இழப்பீடுகளும் எவருக்கும் எதுவும் கொடுக்கவுமில்லை. பிறகெதற்கு இந்த ஆணைக்குழு. இறுதியில் தமிழர்கள் தங்களைத் தானே வன்செயல் புரிந்து அழித்துக்கொண்டார்கள் என்றல்லவா முடிகிறது. ஆம் இன்றளவிலும் சிங்களவர்கள் பலர் அப்படித் தான் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சன்சோனி எனும் “போடு தடி”
இந்த ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பல சிங்கள தேசியவாதிகளும் பிக்குமாரும், விசாரணை அமர்வுகளில் தொல்லியல் குறித்தும், வரலாறு, அரசியல் என்றெல்லாம் வகுப்பெடுத்து தமிழர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை. சிங்கள நாட்டில் வந்து குடியேறிய வந்தேறிகள் என்று நிறுவதில் அதிக சிரத்தை எடுத்து இருக்கிறார்கள் என்பதை பல சிங்கள நூல்களில் இருந்து தெரியவருகிறது.

“சன்சோனி ஆணைக்குழு சாட்சியங்கள்” (The Sansoni Commission Evidence) என்கிற பெயரில் ஆங்கிலத்தில் ஒரு சஞ்சிகை தொடர்ச்சியாக இந்த காலப்பகுதியில் வெளியாகியது. எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன் வெளியிட்ட இந்த சஞ்சிகைக்கு அன்றைய சட்டர்டே ரிவியு (Saturday Review) ஆசிரியர் எஸ்.சிவநாயகம் ஆசிரியராக இயக்கினார். பல புகைப்பட ஆதாரங்களுடன் பல சாட்சியங்கள் அந்த சஞ்சிகையில் பதிவாகின.

உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பிற்காலத்தில் வெளியிட்ட நூலில் சன்சோனி அரசியல் அழுத்தத்தின் மத்தியில் இயங்கினார் என்று நிறுவியது. சன்சோனி கையறு நிலையிலேயே இருந்தார் தனக்குள்ளேயே போராடிக்கொண்டிருந்த ஒரு மனிதன் என்றது. 15,000 பக்க சாட்சியங்களில் தமிழர்களின் நியாயங்கள் உள்ளடங்கியிருந்த பக்கங்களை அவர் பார்க்கத் தவறியிருந்தார் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தது.

இறுதி அமர்வுகளின் போது ஒரு முறை “நான் இதற்கு முன்னர் அரசியல் ஆணைக்குழுவுக்கு தலைமை தாங்கியதில்லை” என்று புலம்பியதன் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார் என்றே கூற வேண்டும். சன்சோனி அறிக்கை பற்றிய பல்வேறு கோணங்களில் அறைந்து விமர்சிக்கப்பட்ட நூல்களும் அறிக்கைகளும் ஏராளமாக வெளிவந்துள்ளன.

இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல பாதிக்கப்பட்ட எந்த மக்களுக்கும் ஆணைக்குழுக்களின் மீது கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லாது போனதற்கான காரணம் அவை அனைத்தும் வெறும் கண்துடைப்புக்காக காலத்துக்கு காலம் அதிகார வர்க்கம் பாதுகாக்க மட்டுமே ஏற்படுத்திய விசாரணைக் கொமிஷன்கள். பல ஆணைக்குழுக்கள் இடையிலேயே நின்று விட்டன. சில ஆணைக்குழுக்கள் இறுதி அறிக்கை கூட வெளியிடவில்லை. சில ஆணைக்குழுக்கள் பக்கசார்பாகவே நடத்தப்பட்டுள்ளன. சில ஆணைக்குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும்படி பரிந்துரைத்த போதும் எதையும் அரசாங்கம் கண்டுகொண்டதில்லை. பாதிக்கப்பட்டவர்களும் பழக்கதோசத்தால் இதனை மறந்துவிட்டு தமது வேலையைக் கவனிக்க போய்விடுகிறார்கள்.


வரலாற்றில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத கண்துடைப்பு ஆணைக்குழுக்களின் வரிசை 
1. சன்சோனி ஆணைக்குழு – 9. நவம்பர் 1977 (02.07.1980 வெளியிடப்பட்டது)
2. இனக்கலவரம் பற்றிய உண்மையறியும் ஜனாதிபதி ஆணைக்குழு (1981-1984) 
3. சர்வதேச மருத்துவ தொண்டு நிறுவன (MSF) வாகனத்தின் மீதான வான்படைத் தாக்குதலை (பாலம்பிட்டி – இரணை வீதி) ஆராயும் ஆணைக்குழு 9 மே, 1991 நியமிக்கப்பட்டு ஜூன் அறிக்கை வெளியிடப்பட்டது. 
4. கொக்கட்டிச்சோலை படுகொலை விசாரணை ஆணைக்குழு 18.06.1991 (09.03.1992 அறிக்கை வெளியானது) 
5. 1991-1993 ஜனாதிபதி ஆணைக்குழுவை 11.01.1991 ஜனாதிபதி பிரேமதாச நியமித்தார். – ஆட்கடத்தல்கள் பற்றி ஆராயும் ஆணைக்குழு – இந்த அறிக்கை கூட இறுதி வரை வெளியிடப்படவில்லை. 
6. தனிநபர்கள் காணாமல் போகச் செய்தவை பற்றி விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதி டீ.பீ.விஜேதுங்கவால் மூன்று ஆணைக்குழுக்கள் 23.08.1993 கசட் செய்யப்பட்டு 13.19.1993 நியமிக்கப்பட்டது. 27,526 முறைப்பாடுகளில் 1681 சம்பவங்களை ஏற்றுக்கொண்டது. அறிக்கை வெளியிடப்படவே இல்லை. 
7. காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஜனாதிபதி சந்திரிகாவால் 30.11.1994 நியமிக்கப்பட்டு அதன் அறிக்கை 30 செப்டம்பர் 1997 வெளியிடப்பட்டது. ஒன்றும் நடக்கவில்லை. 
8. “பட்டலந்த” விசாரணை ஆணைக்குழு டிசம்பர் 1995 
9. 30.04.1998இல் நியமிக்கப்பட்ட இலங்கை முழுவதுமான காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஆணைக்குழு. மார்ச் 2001 அறிக்கை வெளியிடப்பட்டது. 
10. 1981-1984 வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த இனக் கலவரங்களை விசாரணை செய்வதற்கான உண்மையறியும் ஜனாதிபதி ஆணைக்குழு சந்திரிகாவால் 23.07.2001 நியமிக்கப்பட்டது. 2002 செப்டம்பர் இறுதி அறிக்கையும் வெளியானது. ஒரு உருப்படியான பெறுபேறும் இல்லை. 
11. 2000ஆம் ஆண்டு பிந்துனுவெவ தடுப்பு முகாமில் 14-23க்கும் இடப்பட்ட வயதுடைய 28 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டும், 14பேர் படுகாயத்துக்கும் உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு 08 மார்ச் 2001இல் நியமிக்கப்பட்டது. அறிக்கை கூட இறுதிவரை வெளியாகவில்லை. 
12. இந்தியாவின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் பீ.என். பகவதி தலைமையில் இலங்கையின் கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு (மகிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டது) (The International Independent Group of Eminent Persons (IIGEP)) 2006 நவம்பரில் நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவை சுயாதீனமாக நடத்த விடவில்லை என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலையீடு தொடர்ந்தும் இருந்தது என்றும் பீ.என்.பகவதி குற்றம் சாட்டியிருந்தார். 14 குற்றச் செயல்கள் பற்றிய அறிக்கையை கொடுத்து யார் குற்றவாளிகள் எனக் கண்டறியும் விசாரணைகளை நடத்துமாறு கோரியது. அந்த குழு அறிக்கையை வெளியிடுமுன்னமே நாட்டில் இருந்து விரட்டாமல் விரட்டிவிட்டனர்.
நன்றி - தினக்குரல்


மேலதிக தகவல்களுக்காக சில அறிக்கைகள்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates