கல்வியானது ஒரு சமூத்தை மாற்றக்கூடிய வல்லமை கொண்ட ஆயுதம். இக்கல்வியின் மூலம் தனி மனித முன்னேற்றத்தோடு ஒரு சமூக முன்றேத்தையே ஏற்படுத்திவிடலாம். சமகாலத்தில் விற்பனைக் கூடங்களில் விற்கப்படும் ஒரு பண்டமாக கல்வி மாறிவருவது கவலைதரும் விடயமாகும் என்றாலும் முற்றும் முழுதாக இலவசக் கல்வி கிடைக்கவில்லை என்றும் கூறிவிட முடியாது.
இலங்கையில் சிறுபான்மையினங்களுக்குள் சிறுபான்மையினமாக நசுக்கப்பட்டு வாழும் மலையக மக்களுக்கு இலவசக் கல்வி கிடைத்தமையானது மிகப் பெரிய வரபிரசாதமே. மூன்று தசாப்தங்களுக்கு பின்னே இவ்விலவசக் கல்வி கிடைத்தமை துரதிஸ்டம் என்றாலும் குறிப்பிடத்தக்களவு சமூக மாற்றத்தை நோக்கிச் செல்ல இவ்விலவசக் கல்வியே காரணமாக அமைகின்றது.
இலங்கையின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கக்கூடிய முக்கிய தூணாக மலையகத்தவர்கள் காணப்படுகின்றனர். இவர்களின் வாழ்க்கை வட்டமானது துயரங்களின் கூடாரமாக காணப்படுகின்றது. இந்நிலையினை அடுத்த தலைமுறைக்கும் கடத்தாமல் இருக்க வேண்டுமாயின் கல்வி புரட்சியை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. பரம்பரை பரம்பரையாக தேயிலைக்கே உரமாகும் இவர்களின் தலைமுறை மாற்றமுற கல்வியை கரத்தில் எடுக்க வேண்டும்.
மலையகத்தில் கல்வி வளர்ச்சியடைய வேண்டுமாயின் அதற்கான அடித்தளத்தினை இடவேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமுமே உள்ளது. தோட்டப்புரங்களிலுள்ள பெற்றோர்களிடம் கல்வியறிவு குறைவாக காணப்படுவதால் பிள்ளைகளை வழிநடாத்த வேண்டிய அவசியம் ஆசிரியர்களிடமே உள்ளது. ஒரு நாட்டில் ஆசிரியர்கள் எந்த தரத்தில் உள்ளனரோ அந்தத் தரத்திலே அந்த நாட்டு அபிவிருத்தி காணப்படும் என்ற கருத்திற்கிணங்க சிறந்த மாணவத் தலைமுறையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.
இயல்பியலாளர் ஆல்ப்ரட் ஐன்ஸ்டீன் என்பவர் "பள்ளி வாழ்க்கை வெறுப்பு மனப்பாடம் ஒப்பிவிக்கும் முறை" எனக் கூறி பாடசாலை கல்வியை நொந்துக்கொண்டார். இதற்கு காரணம் பாடசாலையில் பரீட்சை என்ற இலக்கை மாத்திரம் வைத்து ஆசிரியர்கள் மாணவர்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். மாணவர்களின் தனிப்பட்ட திறன்களை இனங்கண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில் மாணவச் சமுதாயத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
வரலாற்றுப் பார்வை, சமூக அக்கறை மற்றும் தனி மனித உயர்வினை அடிப்படையாகக் கொண்ட கல்வியே சிறந்த கல்வியென காந்தியடிகள் கூறியுள்ளோர். மலையக சமூகத்தின் வரலாறு எத்தனை மாணவர்களுக்குத் தெரியும் என்று கேட்டால் இருபத்தியைந்து சதவீதமானோருக்காவது தெரியுமா என்பதே கேள்விக்குறி. வரலாறு பற்றிய அறிவில்லையாயின் சமூக அக்கறையை மாணவரிடம் விதைப்பது கடினமாகும். எனவே மலையக மக்களின் வரலாற்று பக்கங்களை புரட்டிக்காட்டி சமூக அக்கறையை ஊட்டி மாணவர்களை உருவாக்க வேண்டும்.
தாழ்வு மனப்பாங்கு, முன்வராமை என்பது பல மாணவர்களிடம் இயல்பாகவே காணப்படும். இந்நிலையினை மாற்றியமைக்க வேண்டுமாயின் குறைந்தது வாரத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் ஒரு நாளில் பத்து நிமிடங்களையாவது ஒதுக்கி தன்னம்பிக்கையூட்டும் உளவியல் ஆலோசனைகளை கூறி மாணவர்களை தைரியசாலிகளாகவும் தலைமைத்துவ பண்பு மிக்கவர்களாகவும் மாற்ற வேண்டும். தனியாள் விருத்தி, நடத்தை விருத்தி, ஆளுமை விருத்தி மற்றும் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு ஒழுக்கமான மாணவராக மிளிர ஆசிரியர்கள் துணைபுரிய வேண்டும்.
மாணவர்களிடையே குழு மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டும். இத்தகைய குழு மனப்பாங்கானது ஒற்றுமையை வளர்த்தெடுக்க உதவும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற பழமொழிக்கு இணங்க மாணவர்கள் செயற்பட இது வழியமைக்கும். அத்தோடு பாடசாலையில் இயங்கும் மன்றங்களிலோ, குழுக்களிலோ அனைத்து மாணவர்களும் அங்கத்துவம் பெறுவதற்கான வழிவகைகளை செய்வது நல்லது. பரீட்சை அடைவு மட்டங்களோடு மாத்திரம் முடக்கிவைக்காது இசை,நாடகம்,விளையாட்டு மற்றும் விஞ்ஞானம் என அனைத்தாற்றல் கொண்ட மாணவ சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும்.
வறுமை என்பது மலையகத்திற்கு புதிதல்ல. வறுமையை காரணம் காட்டி படிப்பதை நிறுத்திவிட்டு கடைகளில், ஆடைத்தொழிற்சாலைகளில் அல்லது தேயிலை மலைகளுக்கு வேலைக்குச் சென்று விடுகின்றனர். சில பெற்றோர் படித்தது போதும் வேலைக்கு போ என கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்பக்கூடிய நிலை கூட காணப்படுகின்றது அதேவேளை தான் பட்ட கஷ்டங்கள் தன் பிள்ளை படக்கூடாது என வறுமைக்கு மத்தியிலும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் இல்லாமல் இல்லை. பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய அவசியமும் உள்ளதால் கருத்தரங்குகள், கூட்டங்கள் மூலமாக அவர்களுக்கு தெளிவு படுத்துவதோடு வறுமையை இல்லாதொழிக்க சுயத்தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய பயிற்சி பட்டறைகளை அரச சார்பற்ற அமைப்புகளின் உதவியுடன் மேற்கொள்ளலாம் அல்லது நிதியுதவி வழங்கக்கூடிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு உதவலாம். இதன் மூலம் மாணவர்களின் இடைவிலகலை தடுக்க முடியும்.
ஏட்டுக் கல்வியோடு நின்று விடாது தொழில் கல்விக்கும் மாணவர்களை பழக்கப்படுத்த வேண்டும். சாதாரணத்தரத்தில் சித்தியடையா விட்டால் அதனோடு வாழ்க்கை முடிந்து விட்டதென சில மாணவர்கள் எண்ணிக் கொண்டு தலைநகரை நோக்கி படையெடுக்கின்றனர். தற்போது தொழில்நுட்ப கல்வியினூடாக தொழில் கல்வியை பெற முடியும் என்பதை ஆசிரியர் தெளிவு படுத்த வேண்டும். அத்தோடு பாடத்திட்டத்தோடு மாத்திரம் நின்று விடாது நுண்ணறிவு, பொது அறிவு மற்றும் பன்மொழி அறிவு என்பவற்றை வளர்க்க துணை புரிய வேண்டும். காரணம் உயர் தரத்தில் சிறந்த பெறுபேறு எடுத்து பல்கலைக்கழகம், கல்வியற்கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் கூட போட்டி பரீட்சைகள் எழுதி அரச தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்.
மனிதப் பிறவியாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கெளரவம் என்பது மிக முக்கியமானது. ஒவ்வொரு மாணவனும் தனக்கான கெளரவம் கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறான். இதனை ஆசிரியர்கள் புரிந்து கொள்ளவேண்டும். தரக்குறைவான வார்த்தைகளை மாணவர்களிடம் பிரயோகிப்பதை தடுக்க வேண்டும். முடிந்தவரை நாகரிகமான சொற்களை பிரயோகிப்பது சிறந்தது.
ஒரு ஆசிரியரைப் பிடிக்குமென்றால் அவர் படிப்புக்கும் பாடம் கூட மாணவனுக்கு பிடித்த பாடமாகிறது. எனவே மாணவர்களின் மனநிலைகளை புரிந்துக்கொண்டு நடந்துக்கொள்வது மிக அவசியம்.
வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்பதை உணர்ந்து வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். தரமான புத்தகங்களை தெரிவு செய்து மாணவர்களிடம் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணித்தியாலமாவது மாணவர்களை வாசிக்கவிட வேண்டும். இது மாணவர்களின் சுய ஆளுமையை விருத்தி செய்யும். தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த காலமிது என்பதால் தரமான காணொளிகளை மாணவர்களுக்கு காண்பிப்பதன் மூலம் சுய ஆளுமையை விருத்தி செய்ய வழியமைக்கலாம். புதிய தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கலாம்.
இன்று மலையகத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால் என்னவென்றால் ஒருவர் படித்து முன்னேறிவிடாடால் தான் வாழ்ந்த சமூகத்தை திரும்பிப் பார்க்காமல் செல்லக்கூடிய நிலை காணப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் சமூக பற்றினை அவர்களிடம் ஊட்டி வளர்க்காததாகும். இந்நிலை மாற வேண்டுமாயின் மாணவப் பருவத்திலே சமூக அக்கறையினையும் விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும்.
கொத்தடிமைகளாக இருந்த மலையகச் சமூகம் அரை அடிமையாக மாறி நவீன அடிமைகள் என்ற நிலையிலே இன்றும் வாழக்கூடிய நிலை காணப்படுகின்றது. இந்நிலை முற்றாக மாற வேண்டுமாயின் கல்வியோடு கூடிய சமூக எழுச்சியே வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டுமுயற்சியாலே இது சாத்தியமாகும். "மற்றவர் வாழ்க்கையை மேம்படச் செய்யவும், நமக்கு கிடைத்ததை விட மேம்பட்டதாக ஒரு சமூகத்தையும், உலகத்தையும் மாற்றிச் செல்லவுமே கல்வி" என்ற மரியான் ரைட் ஈடல்மேனின் கருத்தை நனவாக்க கூட்டு முயற்சியோடு அர்ப்பணிப்பு மிக அவசியமாகிறது. இருந்த போதிலும் அரசியல்மயமாக்கலுக்கு உள்ளாகி பாடசாலைகள் உள்ளாகி வருதல், போதிய வளங்களில்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை, கல்வி கற்பதற்கேற்ற குடும்ப பின்னணி இல்லாமை, நவ நாகரிக கலாசாரத்திற்கு மாணவர்கள் அடிமையாதல் போன்ற காரணங்களால் உடனடியான மாற்றங்களை எதிர்பார்ப்பது முடியாத காரியம் என்றாலும் சிறிய சிறிய மாற்றங்களை விதைத்து கல்வி வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம்.
நன்றி - சுடரொளி
+ comments + 1 comments
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...