Headlines News :
முகப்பு » » யாழ்ப்பாணத்தில் இந்தியப் புத்தகக் கண்காட்சியும் ஈழத்துத் தமிழ்ப் பதிப்புலகமும் : என். செல்வராஜா (நூலியலாளர்)

யாழ்ப்பாணத்தில் இந்தியப் புத்தகக் கண்காட்சியும் ஈழத்துத் தமிழ்ப் பதிப்புலகமும் : என். செல்வராஜா (நூலியலாளர்)


யாழ்ப்பாணத்தில் 2017க்கான நல்லூர்த் திருவிழா தொடங்கிவிட்டது. அதற்காகவே காத்திருந்த எம் புலம்பெயர் தமிழர்களும்; யாழ்ப்பாணப் படையெடுப்பைத் தொடங்கிவிட்டார்கள். முன்னெப்பொழுதுமில்லாத அதிக அளவில் வெளிநாட்டுப் பிரஜைகள் நல்லூரில் தமிழ்க் கலாச்சாரத்தைப் பேணி, நல்லூரானிடம் பக்தி சிரத்தையுடன் சென்றுவருகிறார்கள் என்று பத்திரிகைச் செய்திகள் வேறு. ஐரோப்பிய, கனேடிய, அமெரிக்கத் தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினரின்; இனம் மதம் மொழி கடந்த குடும்ப உறவுகளின் எண்ணிக்கையின் விகிதாசாரம் இனிமேல் வருங்காலங்களில் நல்லூர்த் திருவிழாக்களில் வெளிப்படையாகத் தெரியவரும். எனது கட்டுரை அது தொடர்பானதல்ல. இது நல்லூரில் கொடியேறியுள்ள வேறொரு ‘சீரியசான” விசயம் பற்றியது.

12.8.2017 அன்று முதல் நல்லூர்த் திருவிழாவையொட்டி யாழ்ப்பாண மாநகரசபையின் ஆதரவில், புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் களைகட்டத் தொடங்கியுள்ளது. 21ம் திகதிவரை இது இடம்பெறப்போகின்றது. இதிலென்ன விசேஷம் என்று நீங்கள் கேட்கலாம். யாழ்ப்பாண மக்களுக்கு மலிவு விலையில் வகைதொகையின்றி புத்தகங்கள் தேர்வுசெய்து வாங்கிக்கொள்ள முடிகின்றது. சிவசங்கரியும், லட்சுமியும் சுஜாதாவும் பாலகுமாரனும் தெணியானையும் செங்கைஆழியானையும் அகஸ்தியரையும் யோ.கர்ணனையும் விட மலிவாகக் கிடைப்பார்கள் அல்லவா?

உண்மைதான். 35 ஆண்டுகளுக்கு முன்னர் ஃலங்கா புத்தகசாலையும், பூபாலசிங்கம் புத்தகசாலையும் வேறும் சில புத்தகசாலைகளும் நல்லூர்க் கொடியேற்றத்துடன் நல்லூர் வீதியில் கடைவிரிப்பதை நாம் மலரும் நினைவுகளாக அறிவோம். போர்க்காலச் சூழலில் புத்தகக் கலாச்சாரம் காணாமல் போய்விட்டது. இப்பொழுது மீண்டும் நல்லூரடியில் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியே.

ஆனால் எம்மைச் சிந்திக்கத் து}ண்டும் விடயம் என்னவென்றால், இவ்வாண்டு இருபதாயிரம் நூல்களுடன் தமிழகத்தின் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் (The Booksellers and Publishers Association of South India BAPASI) யாழ்ப்பாண மாநகரசபையின் அனுமதியுடனும், யாழ். இந்திய துணைத் து}தரகத்தின் ஆசீர்வாதத்துடனும்; இந்தப் புத்தக விற்பனைச் சந்தையை நடத்தியிருப்பதுதான். புத்தகச் சந்தையை எமது வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் அவர்கள் திறந்துவைத்து இந்தியத் தமிழ்நூல்களின் நேரடி விற்பனையை யாழ்ப்பாணத்தில் தொடக்கிவைத்து தென்னிந்தியப் பதிப்பாளர்களின் நெஞ்சில் பாலை வார்த்திருப்பதுடன் ஈழத்துப் பதிப்பாளர்களின் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிவிட்டுள்ளார். கண்காட்சி முடிந்ததும் எஞ்சிய நூல்கள் திரும்பிப் போகவா போகின்றன. முன்னாள் யாழ்ப்பாண ஆளுநர் சந்திரசிரி க்ரியாவின் தமிழ் அகராதியின் 3000 பிரதிகளை அனைத்து நூலகங்களின் தலையிலும் கட்டிவிற்ற கதையை நாம் மறக்கமுடியுமா?

இருபதாயிரம் தமிழ் நூல்களை இந்த மண்ணில் இறக்கி தமிழகத்தின் புத்தகச் சந்தை வாய்ப்பை வரவேற்றிருக்கும் மாகாண அரசோ, யாழ்ப்பாண மாநகரசபையோ, யாழ். இந்திய துணைத் து}தரகமோ நலிந்துசெல்லும் ஈழத்தமிழ்ப் பதிப்பாளர்களின் வளர்ச்சிக்கு உரமூட்டும் திட்டங்கள் எதையாவது முன்னெடுத்ததாக தகவல்கள் இல்லை. வடக்கு மாகாணசபையின் அதிகாரத்தின்கீழ் ஆரம்பம் முதலே நூலகசேவைகள் இருந்தும், அதனை வளர்த்தெடுக்காமல், கிடைக்காத உரிமைகளையிட்டு குறைகூறியதைத் தான் கடந்த காலங்களில் நாம் கண்டோம்.

வடக்கு மாகாண அரசு, குறைந்தபட்சம் ஒரு சில ஆயிரம் நூல்களையாவது சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு இவ்வாண்டு அனுப்பிவைத்து ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளினதும், பதிப்பாளர்களினதும் நெஞ்சில் பாலை வார்க்க முன்வரவேண்டும் என்பது ஒரு சாமானியனின் வேணவாவாகும். இந்தியாவின் இறக்குமதிக் கொள்கை மாநில மொழிப் புத்தகங்களின் (குறிப்பாகத் தமிழ்மொழிப் புத்தகங்களின்) இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்திருப்பதை அனைவரும் அறிவோம். அதனை மாற்றியமைக்கும் வேண்டுகோள்களை இராஜதந்திர முறைப்படி யாழ்ப்பாண இந்திய துணைத்து}தரின் வாயிலாக முன்னெடுக்கலாம் அல்லவா?. ஈழத்துத்; தமிழ் மக்களின் நலன் பற்றியே சிந்தித்து செயலாற்றிவரும், துணைத்து}தர் இதைக்கூடவா செய்ய முன்வரமாட்டார்?

யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் சுற்றாடலில்; அதன் அருகாமையிலேயே பாரிய கலாச்சார மையத்தைக் கட்ட இந்திய அரசிற்கு அனுமதி வழங்கிய யாழ்ப்பாண மாநகரசபை, தனித்துவமான யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்குள்ளேயே ஒரு இந்திய மூலையை (Indian Corner) உருவாக்கவும் அனுமதி வழங்கியிருக்கின்றது. இந்தப் பின்னணியிலேயே இப்பொழுது யாழ். மண்ணில் இருபதாயிரம் நூல்களுடனான தமிழகப் புத்தகச் சந்தையும் நல்லூர் மண்ணில் கால்பதித்துள்ளது. தொடர்ந்தும் ஆண்டுதோறும் தாங்கள் வந்துசெல்வோம் என்ற நம்பிக்கையையும் எமக்கு அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் ஈழத்துத் தமிழ்ப் பதிப்பாளர்கள், எழுத்தாள வெளியீட்டாளர்களின் நூல்களுக்கு தமிழகத்தில் சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது நெஞ்சிலும் பாலை வார்க்க முடியுமே.

2013இல் ஜுலை 20-21 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 41ஆவது இலக்கியச் சந்திப்பு நடைபெற்ற வேளையிலும் தமிழ்ப் புத்தகத் திருவிழாவொன்றை ‘கிரீன் கிளாசிக் எக்ஸ்போர்ட்டர்ஸ்” என்ற வர்த்தக நிறுவனத்தின் வாயிலாக நடத்துவதற்கு தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் முயற்சிசெய்திருந்தது. அவ்வேளையில் ‘செந்தமிழன்” சீமான், வைக்கோ உள்ளிட்ட பல தமிழக அரசியல்வாதிகள் அதனை அரசியலாக்கி எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தார்கள்.

இலங்கையிலிருந்து ‘தமிழ்க் கலை இலக்கியப் பேரவை” என்ற அமைப்பு பபாசி BAPASI அமைப்பினருக்குத் தமது எதிர்ப்பையும் தெரிவித்திருந்தார்கள். ஒன்றுபட்ட பேரெழுச்சிக்குப் பணிந்த தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் அன்று தமது புத்தகக் கண்காட்சியை யாழ்ப்பாணத்தில் ரத்து செய்திருந்தார்கள். இன்று 2017இல் தமிழகத்தில் மாத்திரமல்ல இலங்கையில்கூட எந்தவொரு தமிழ்ப் பதிப்பாளரும் இந்தக் கண்காட்சி பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்ஷவிற்குப் பின்னரான இலங்கையின் அரசு மாற்றம் அவர்களை மெளனிக்கச்செய்திருக்கலாம். அல்லது இதைவிட வேறு முக்கிய ‘சோலி” தமிழக தமிழ்த் தேசியவாதிகளுக்கும், எங்கள் ஈழத்துப் பதிப்பாளர்களுக்கும் இருந்திருக்கலாம்.

அமரர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க இரண்டாவது தடவை பிரதமராக ஆட்சிக்கட்டில் ஏறிய 1970-1977 காலகட்டம் ஈழத்துத் தமிழ்ப் பதிப்புத்துறையின் வசந்தகாலமாகும். 1972இல் அவர் கொண்டுவந்த இறக்குமதிக் கொள்கை, இந்தியாவிலிருந்து தமிழ் நூல்கள் சஞ்சிகைகள் இலங்கை வருவதைக் கட்டுப்படுத்தியது. இக்காலகட்டத்தில் ஈழத்துத் தமிழ்ப் பதிப்புலகம் வீறுகொண்டு எழுந்தது. இலங்கையில் உருவான தமிழ் நூல்கள் சஞ்சிகைகளுக்கான இடைவெளியை நிரவுவதற்காக பல சிறு சஞ்சிகைகள் துணிச்சலுடன் தொடங்கப்பெற்றன. வீரகேசரி நிறுவனத்தின் நூல் வெளியீடு சுமார் 75 பிரசுரங்களைத் தொட்டதும் இக்காலகட்டத்தில்தான். 1977வரை இருந்த ஆரோக்கியமான வளர்ச்சிநிலை அரசு மாற்றத்துடன்-ஐக்கியதேசியக் கட்சியின் வருகையுடன் நின்றுபோனது.

ஈழத்துத் தமிழ்ப் பதிப்புத்துறையை இன்று உற்றுநோக்கும் எவரும் அதன் கீழ்நோக்கிய சரிவுப் பயணத்தைக் கவலையுடன் நுகர்வார்கள். 1000 பிரதிகள் அச்சடிக்கும் துணிவற்று 200-300 பிரதிகளுடன் தமது நூல்களை அச்சிட்டு திருப்தியடைந்து கொள்பவர்களை இங்கு நாம் காண்கிறோம். இலங்கையில் அச்சிடுவதைவிட தமிழகத்தில் அச்சிடுவதால் அதிக வாசகரைச் சென்றடையும் வாய்ப்பு உள்ளது என்ற ‘மாயமான்” கனவில் ஏங்குபவர்களையும் எம்மிடையே காணமுடிகின்றது.

எம்மவரை இந்திய நூல்களையும் இந்தியப் பதிப்பாளர்களையும் நாடிச் செல்லத்து}ண்டும் கலாச்சாரத்தை வளர்த்துவிட்டவர்கள் எமது எழுத்தாளர்களும் பதிப்பாளர்களுமே. தமக்கிடையேயான கொள்கைரீதியான வேறுபாடுகளை ஒருபக்கமாக வைத்துவிட்டு தாமும் ஈழத்தின் சிறு பதிப்பாளர்கள் தான் என்று ஒற்றுமையாகக் குரல்கொடுக்க இன்றுவரை அவர்களால் முடியவில்லை. இலங்கையில் தமிழ்ப் பதிப்புலகத்தின் எதிர்காலத்தை மையப்படுத்தி ஒரு தொடர் கருத்தரங்கையாவது எம்மால் நடத்தி எம்மவரிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியவில்லை. சிறுகதைச் சிறப்பிதழ், கவிதைச் சிறப்பிதழ் என்பனவற்றை காலம்தோறும் நடத்தும் சிறுசஞ்சிகைகளாவது ஈழத்துப் பதிப்புலகச் சிறப்பிதழ் ஒன்றை நடத்தி உள்ளுர் பதிப்பாளர்களிடையே ஒரு சிந்தனையை விதைத்திருக்கலாம். எதுவுமே செய்யாமல் தமக்கென குரல்கொடுக்கக்கூடிய ஒரு அதிகாரபூர்வ மையத்தை உருவாக்கி அதன் வழியாக தமிழ்ப் பதிப்புலகம் தொடர்பான தேசிய பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேடாமல் காலத்தைக் கடத்திவந்திருக்கிறோம் என்பது கசப்பானதொரு உண்மை.

இன்று ஈழத்தின் நூல்வெளியீடுகளின் நிலை என்ன என்பதை விபரிக்கத் தொடங்கினால் அது இந்தக் கட்டுரையை மேலும் நீட்டிவிடும். ஒரு முக்கிய விடயத்தை மாத்திரம் தேவை கருதி இங்கு குறிப்பிடுகிறேன். ஈழத்தின் நூல்வெளியீடுகள் உரிய விநியோகத்திட்டங்கள் இல்லாது சொந்த மாவட்டத்துக்குள் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு நூலை ஆவலுடன் வெளியிடும் ஒரு படைப்பாளி, அதனை விநியோகிப்பதற்கு நண்பர்களையும், வெளியீட்டு விழாக்களையும் மாத்திரமே நம்புகின்றார். அச்சடித்த நூல்கள் அதன்பின்னர் விநியோகிக்கப்படாமல் தேங்கிக் கிடக்க, அந்த எழுத்தாளன் தனது அடுத்த நூலை வெளியிடத் தயங்குகின்றார். சில முதுபெரும் படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களை நூலுருவில் காணாமலே வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன?

அரச இயந்திரத்தின் பதிப்புத்துறை சார்ந்த செயற்பாடுகள் பெரும்பான்மைச் சமூகத்தைச் சார்ந்ததாகவே அமைகின்றன. அவர்களால் எடுக்கப்படும் தீர்மானங்களும் ஏகமனதாக பெரும்பான்மையினரின் நன்மையை அனுசரித்ததாகவே அமைந்துவிடுகின்றன. சிங்களப் பதிப்பாளர்களுக்கு இலங்கைக்கு அப்பால் போட்டிச் சந்தை என்பதே இல்லை. அதனால் அரசின் இறக்குமதிச் சட்ட திட்டங்கள், தீர்மானங்கள் என்பன அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் தங்களை வலுவாக ஒழுங்கமைத்துக்கொண்டு வெற்றிகரமாக பதிப்பகங்களை இயக்குவதுடன், வாசிப்புக் கலாச்சாரத்தினை சர்வதேச ஆதரவுடன் கட்டியெழுப்பிச் செல்கிறார்கள்.

தமிழ்ப் பதிப்பாளர்களின் நிலை வேறு. அண்டை நாட்டின் போட்டிச் சந்தைக்கு ஈடுகொடுக்கவேண்டியவர்கள் அவர்கள். தமிழ்ப் பதிப்பாளர்களின் குரல் அவர்களை எட்டவேண்டுமானால் ‘இலங்கைத் தமிழ்ப் பதிப்பாளர் சங்கம்” ஒன்று ஐக்கிய உணர்வுடன் உடனடியாக உருவாக்கப்படவேண்டும். இலங்கையில் அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருமித்த குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுமளவுக்கு எங்கள் பதிப்பாளர்களிடையே ஒற்றுமை இல்லை. இதற்குக் காரணம் தமிழில் ஒன்றிரண்டு பதிப்புத்துறை ஜாம்பவான்களைத் தவிர ஏனையோர் பெரும்பாலும் சமய, சமூக, இலக்கியத்துறைசார்ந்த அமைப்புகளாகவோ பதிப்பாளர்களாகவோ தான் இயங்குகிறார்கள். அனைவரும் தமது கொள்கைப் பற்றுக்கேற்ப தனித்தியங்கும் சிறுகுழுக்களாகவே இயங்குகிறார்கள். இவர்கள் தமது கொள்கைகளை ஒருபக்கம் வைத்துவிட்டு பதிப்பாளர்கள் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ந்தால்தான் ஈழத்துப் பதிப்புலகிற்கு விமோசனம் கிட்டும்.

இன்று இலங்கையில் நூல்களின் விலை நிர்ணயம் அல்லது நூல் இறக்குமதிக்கான பணமாற்று வீதத்தை நிர்ணயிப்பவர்களாக இலங்கை புத்தக விற்பனையாளர் சங்கம் (Sri Lanka Book Sellers Association) இயங்குகின்றது. இலங்கையில் இறக்குமதியாகும் நூல்களின் விலை நிர்ணயத்தை 3.75சதவிதமாக நிர்ணயித்திருப்பவர்கள் இவர்களே. அதாவது 100 இந்திய ரூபாவக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு இந்திய நூலை 375 ரூபாவாக இலங்கையில் விற்பனை செய்யலாம் என்ற இன்றைய விலை நிர்ணயம் இவர்களால் தீர்மானிக்கப்பட்டதே. இந்த அதி உயர் விலை நிர்ணயத்தால், இலங்கையின் தமிழ் நூல் இறக்குமதி செய்து விற்கும் வியாபாரிகள் இந்திய நூலை இங்கு இறக்குமதி செய்து விற்பதால் அதிக லாபம் அடைகின்றனர். இந்த விலை நிர்ணயத்தால், இலங்கைப் படைப்பாளியின் உள்ளுர் நூல்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் லாபத்தை விட இந்திய நூல்களை இறக்குமதி செய்வதால் கிடைக்கும் லாபம் அதிகமாகும். அதனால்தான் பிரபல நூல்விற்பனையாளர்களின் வர்த்தக நிலையங்களின் மேல்தட்டுகளையும் முன்னணி இறாக்கைகளையும் தமிழகத்தின் ஜனரஞ்சகங்கள் ஆட்கொள்கின்றன. ஈழத்துப் படைப்பாளியின் நல்ல நூல்கள் கூட எங்கோ ஒரு மூலையில் து}சுடன் து}ங்குகின்றன.

இலங்கை புத்தக விற்பனையாளர் சங்கம் இறக்குமதியாகும் நூல்களின் விலை நிர்ணயத்தை 3.75இலிருந்து 3.25 சதவிதமாகக் குறைத்தாலே எம்மவரின் நூல் விற்பனையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். காரணம், தமிழக நூல்களின் விற்பனையின் நிகரலாபத்தை விட உள்ளுர் நூல்களின் விற்பனையின் நிகரலாபம் உடனடியாகவே அதிகமாகிவிடும். இதன் காரணமாக காலக்கிரமத்தில் லாபநோக்கத்தையே குறியாகக் கொண்ட எமது முன்னணி புத்தக வியாபாரிகளின் பார்வை ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களை நோக்கித் திரும்பும். இலங்கை புத்தக விற்பனையாளர் சங்கத்தில் இந்த வேண்டுகோளை தமிழ்ப் பதிப்பாளர்களின் சார்பில் இன்று முன்வைக்கும் தகுதியில் உள்ள ஒன்றிரண்டு தமிழ் நூல் இறக்குமதியாளர்கள் கூட இதனை முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அதனால் இலங்கைத் தமிழ் புத்தக வெளியீட்டாளர், விற்பனையாளர் சங்கம் ஒன்றின் உருவாக்கம் முக்கியமாகப்படுகின்றது.

இன்று ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தையின் முக்கிய வாடிக்கையாளராக கல்வி அமைச்சே இருக்கின்றது. ஆண்டுதோறும் பாடசாலைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபா வரையில் நூல்கொள்வனவுக்காக ஒதுக்கப்படுகின்றது. அதே வேளை பாடசாலைகளுக்கான நூல் கொள்வனவில் இந்திய நூல்கள் மற்றும் உள்ளுர் நூல்கள் கொள்வனவு செய்யப்படவேண்டிய விகிதாசாரம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை. இதனால் பாடசாலைகளுக்கான நூல் கொள்வனவாளர்கள் அதிகப்படியான இந்திய நூல்களை வாங்குகிறார்களேயொழிய ஈழத்துப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

தமிழ்ப்பதிப்புச் சூழலைப் பாதிக்கும் விடயங்களையிட்டு சிந்தித்து அதனை உரிய கல்வி நிர்வாகத்திடம் வலியுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் தமிழ்ப் பிரதேசங்களின் அனைத்துப் பாடசாலை நூல்கொள்வனவிலும் அதிகளவில் பயிற்சிப் புத்தகங்களும், அடுத்ததாக இந்திய வெளியீடுகளும் இறுதியாக இடம் இருந்தால் சில ஈழத்துப் படைப்புகளுமாகவே கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகின்றது. பாடசாலை நூலகங்களில் பயிற்சிப் புத்தகங்களுக்குத் தடைவிதிக்கும் கொள்கையொன்றை மாகாண அரசு முன்வைக்குமிடத்து, மறைமுகமாக ஈழத்துப் பதிப்புலகச் சூழலை அது மலர்விக்கும்.

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வருடம் தோறும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சிகளில் பாடசாலைகளின் நூல்கொள்வனவு தந்திரோபாயங்களையும் கொமிஷன் சர்ச்சைகளையும் நேரில் காணலாம். பாடசாலைக்கான நூல் கொள்வனவாளர்களின் அக்கறையின்மையும் ஈழத்தின் தமிழ்ப் பதிப்புலகத்தின் வீழ்ச்சிக்குத் துணைபோகின்றன. மேற்குறிப்பிட்ட விடயங்களை கண்காணித்து, அதிகாரபூர்வமாக அவற்றை உரிய அமைச்சகங்களுக்கு அறிவிப்பதற்காகவேனும் ஒற்றுமையுடன் இயங்கும் ஒரு தமிழ்ப் பதிப்பாளர்களுக்கானஅமைப்பு வேண்டும்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடக்கும் இருபதாயிரம் நுல்களுடனான நூற்சந்தை (கண்காட்சி?) எமக்கு ஒரு அபாய மணியை ஒலிக்கவைத்துள்ளது. ஈழத்துத் தமிழ்ப் பதிப்புலகின் ஒற்றுமையின்மை எதிர்காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழகத்தின் நூற்சந்தையை விரிவாக்கும் வாய்ப்பினை அவர்களுக்கு எவ்வித போராட்டமுமின்றியே வழங்கும். தமிழகத்தின் பதிப்பகங்களின் கிளைகள் ஈழ மண்ணில் வேரோட இது வழிவகுக்கும். அதற்குத் தயாராக எம்மிடையே சில பினாமிகள் ஏற்கெனவே உருவாகியிருக்கக்கூடும். யார் கண்டார்கள்?

ஈழமண்ணில் அன்றொரு இதமான, ஆரோக்கியமான பதிப்புலகச் சூழல் இருந்ததை நாங்கள் அறிந்திருப்போம். ஆறுமுகநாவலரின் சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, வண்ணார்பண்ணையிலிருந்து தமிழகத்தின் சிதம்பரம் வரை வரலாறு படைத்திருந்தது. 1954இல் உருவான இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், சைவ பரிபாலன சபை, குரும்பசிட்டி சன்மார்க்க சபை, சிறீலங்கா புத்தகசாலை, திருமகள் பதிப்பகம், சரஸ்வதி புத்தகசாலை, யாழ்.கூட்டுறவு தமிழ்நூற் பதிப்பகம் என ஒரு பட்டியலே உள்ளது. கொழும்பில் இயங்கிய கலாநிலையம் அகத்தியர் ஆரூடம், பெரியசுந்தர சேகரம், புலிப்பாணி முனிவர் ஜாலத் திரட்டு என இந்திய சோதிட நூல்களை இலங்கையிலேயே அச்சிட்டு விற்பனை செய்த காலமும் ஒன்றிருந்தது.

மீண்டும் ஒரு பொற்காலத்தை உருவாக்க> அறிஞர் அப்துல் கலாம் சொன்னது போல கனவு காண்போம். எமது ஒற்றுமையால் கனவுகள் கைகூடட்டும்.

(17.8.2017)

நன்றி - http://thesamnet.co.uk
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates