இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும்போது நாட்டில் ஏனைய மக்களுக்குக் கிடைக்கின்ற நிவாரண நிதியை மலையக தோட்டத் தொழிலாளர்களால் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. காரணம் அவர்கள் குடியிருக்கும் வீடுகள் அவர்களுக்குச் சொந்தமானவை என்பதை நிரூபிக்கக் கூடிய காணி உறுதிகள் இல்லாமையே ஆகும். இதனால், கஷ்டப்பட்டு உழைத்தும், இயற்கை அனர்த்தத்தில் உண்மையிலேயே பாதிக்கப்பட்டும் உரிய நிவாரணத்தையும் உதவியையும் பெற்றுக் கொள்ள முடியாமல் இருகின்றார்கள்.
இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இந்த நாட்டில் குடியேறி 200 ஆண்டு கால வரலாறு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாகத் திகழும் அவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த மண்ணில் மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்து, உரிமையற்ற சமூகமாக அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று பழைய புராணத்தையே தொடர்ந்தும் பாடிக் கொண்டிருக்க முடியாது.
அந்த வகையில், ஆங்கிலேயர் தேயிலைத் தோட்டங்களை நிர்வகித்து வந்த காலத்தில் தொழிலாளர்கள் குடியிருக்க கட்டிக் கொடுத்த லயன் காம்பரா வாழ்க்கை முறையிலிருந்து விடுபட வேண்டும், அவர்கள் சொந்தக் காணியில் சொந்தமான தனி வீடுகளில் குடியிருக்க வேண்டும், கிராம மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.
கொஸ்லாந்தை மீரியாபெத்தை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் மனித உயிர்கள் பலியாகிய அவலத்துக்குப் பின்னர் இந்தக் கோரிக்கை அனைத்து மக்களிடமும் உண்மையான உணர்வலையைத் தூண்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
கிராம வாழ்க்கை முறை எதற்காக ?
தோட்டங்கள் கிராமமாக மாற வேண்டும் என்று பரவலாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. தோட்டங்கள் ஏன் கிராமமாக மாற வேண்டும்? அதனால், யாருக்கு என்ன பயன்? இத்தனை ஆண்டு காலமாக இல்லாத இந்தச் சிந்தனை இப்போது தோன்றுவதற்குக் காரணம் என்ன? ஆமாம், காலத்துக்குக் காலம் ஏற்படும் அவலங்களும், ஓலங்களுமே மனித வாழ்வின் சிந்தனைக்கு மாற்றத்தைக் கொண்டு வருகின்றன என்று சொல்லலாம். தோட்ட மக்கள் காலங்காலமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களித்து வருகின்றார்கள். உறுப்பினர்களையும், பிரதேச, நகர சபைத் தலைவர்களையும் தெரிவு செய்து வருகின்றார்கள். ஆனால், உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.
குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் இன்னமும் தோட்ட நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றார்கள். தோட்ட நிர்வாகங்கள்தான் அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும், தலையெழுத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றன. எனினும், அரசாங்கத்தின் உதவிகளை ஏனைய கிராம, நகர்ப்புற மக்கள் பெற்றுக் கொள்வது போல, தோட்ட மக்களால் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.
உதாரணமாக வெள்ள அனர்த்தம், மண்சரிவு முதலான இயற்கை அனர்த்தங்களோடு, தீ விபத்து சம்பவங்களிலும் மலையக தோட்டத் தொழிலாளர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். அதில் குடியிருப்புகள் முற்றாக சேதமடையும்போது, புனரமைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தின் ஊடாக 25 இலட்ச ரூபா நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், பாதிக்கப்பட்ட வீட்டுச் சொந்தக்காரர்கள் அது தமக்கு உரியது தான் என்பதை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்க காணி உறுதிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான், அரசாங்கத்தின் நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாறு காணி உறுதிப் பத்திரம் இல்லாத காரணத்தால் இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டும் அரச நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாகவே இருந்து வருகின்றார்கள்.
அரச நிவாரண உதவிகள் விபரம்
தோட்டங்களில் அனர்த்தங்கள் நிகழும்போது, கிராம உத்தியோகத்தர் உடனடியாக விபரங்களை சேகரிக்கின்றார். அவற்றை பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கின்றார். பிரதேச செயலக அதிகாரிகளும் வந்து பார்வையிடுகின்றார்கள். அதற்கு முன்னதாக மக்கள் பிரதிநிதிகள் ஸ்தலத்துக்கு விரைந்து சென்று தோட்ட நிர்வாகங்களுடன் தொடர்பு கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கத் தூண்டுகோலாக இருந்து வருகின்றார்கள்.
தோட்ட நிர்வாகங்கள் தற்காலிகமாக குடியிருக்க வசதிகளைச் செய்து கொடுக்கின்றன. அதேபோல், சமைத்த உணவுகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றன.
பிரதேச செயலகத்தின் ஊடாக அரசாங்கம், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு வாரத்துக்கு 700 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும், 2 பேருக்கு ஒரு வாரத்துக்கு 900 ரூபாவுக்கும், 3 பேருக்கு ஒரு வாரத்துக்கு 1100 ரூபாவுக்கும், 4 பேருக்கு ஒரு வாரத்துக்கு 1300 ரூபாவுக்கும், 5 பேருக்கு ஒரு வாரத்துக்கு 1500 ரூபாவுக்கும் உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், பாதிக்கப்பட்டவரின் மரணச் செலவுக்கு ஒரு இலட்ச ரூபாவும், தேவைக்கேற்ப, சமையல் பாத்திரங்கள், பயிர்ச் சேதங்களுக்கான நிவாரணம், மருத்துவ உதவி, சிறிய அளவில் சுய தொழிலுக்கான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
2017 மே மாதம் வரை வீடுகள் சேதம்
2017 மே மாதம் வரையில் இந்த ஆண்டில் பெய்த பலத்த மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா தொகுதிகளில் 269 குடும்பங்களைச் சேர்ந்த 1089 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். 51 குடியிருப்புகள் சேதத்துக்கு உள்ளாகியிருந்தன. ஒரு வீடு மாத்திரம் முற்றாக சேதமடைந்திருந்தது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமைத்த மற்றும் உலர் உணவுப் பொருட்கள், தற்காலிக முகாம்கள், தற்காலிகக் குடில்கள் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டும், தோட்டப் பகுதிகளில் வீடுகள் முற்றாகச் சேதமடைந்தமைக்கான 25 இலட்ச ரூபா நிதியையும், தீ விபத்துக்கான நிதியையும் காணி உறுதிப் பத்திரம் இல்லாத காரணத்தால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
காணி உறுதிகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
இந்தச் சூழ்நிலையில் தோட்ட மக்களுக்கு கிராமிய அடிப்படையில் தனித்தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளமை உண்மையிலேயே வரவேற்கத்தக்க விடயமாகும். அதற்காக முன்னர் இருந்த “தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு” நீக்கப்பட்டு, “மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு” உருவாக்கப்பட்டுள்ளமை மலையக மக்கள் அரச நிர்வாகத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதிதாகக் கட்டப்படும் வீடுகள் தேசிய கட்டட ஆய்வு மையத்தின் அறிக்கை கிடைத்த பின்னரே பொருத்தமான இடங்களில் கட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும், வீட்டு “வயரிங்” உரிய முறையில் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது. அனைத்துக்கும் மேலாக புதிதாக கட்டப்படும் அனைத்து வீடுகளுக்கும் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கவும் அமைச்சர் பி. திகாம்பரம் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். சுமார் 3000 குடும்பங்கள் விரைவில் காணி உறுதிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளன. இதன் மூலம் எதிர்காலத்தில் அனர்த்தங்களில் பாதிக்கப்படும் போது அரசாங்கத்தின் நிதியைப் பெற்றுக் கொள்ளவும் வழி பிறந்துள்ளது.
உள்ளூராட்சி நிர்வாகத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.
எத்தனையோ அரசாங்கங்கள் பதவிக்கு வந்தும், எமது மக்கள் வாக்களித்தும் தோட்ட மக்கள் உள்ளூராட்சி நிர்வாகத்தின் பயன்பாடுகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதை உணர்ந்து நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஏனைய கட்சிகளும் பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்துள்ளன. புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்போது தோட்ட மக்கள் உள்ளூராட்சி நிர்வாகத்தில் பங்கு பெறும் நிலை உருவாக வேண்டும். அதற்கான அழுத்தங்களும் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கம் சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாக்க முன்வந்துள்ளது. இன்றைய சாதகமான அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் சாதித்துக் கொள்ளத் தவறினால், அது மலையக அரசியல்வாதிகளின் வரலாற்றுத் தவறாக அமைந்துவிடும் என்பதையும் மறந்து விடக்கூடாது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...