Headlines News :
முகப்பு » , , , , , » இன அழிப்புக்கு “1978 யாப்பு” என்று பெயர் வை! - என்.சரவணன்

இன அழிப்புக்கு “1978 யாப்பு” என்று பெயர் வை! - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 23 

1978 செப்டம்பர் 7 அன்று இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி தலைமையை ஏற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிர்ப்பின் மத்தியில், தமிழ் மக்களின் பங்குபற்றலையோ, சம்மதத்தையோ பெறாமலேயே அது நிறைவேற்றப்பட்டது. குறுகிய காலத்திற்குள் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்ட இந்த அரசியல் யாப்பு அவசர சட்டமாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அரசியல் யாப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்து தனிமனித சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்ததுடன், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்தது. மிகக் கடுமையான ஒற்றையாட்சி முறையைக் கொண்ட இந்த அரசியல் அமைப்பால்தான் இனப் பிரச்சினை யுத்தமாக வடிவமெடுத்தது. இந்த நிமிடம் வரை நாம் அனுபவிப்பது அந்த அரசியலமைப்பைத் தான்.

இந்த அரசியலமைப்பு உருவாக்கத்திலோ, அதனை நிறைவேற்றுவதிலோ தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எவரும் சம்பந்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்னரான அரசியலமைப்பு நிறைவேற்றங்களின் போதும் தமிழ் தரப்பு ஆதரவில்லாமல் தான் நிகழ்ந்தது. 

ஒரு அரசியலமைப்பு மாற்றமென்பது அடிப்படையில் அரச கட்டுமானத்தை எப்படி பிரதிபலிக்கப் போகிறது என்பது முக்கியமானது. எந்த அடிப்படை சித்தாந்தத்தை அடித்தளமாகக் கொள்ளப் போகிறது என்பதும் முக்கியமானது.

இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையை இறுக்கமாக கட்டிக்காக்கின்ற; சிங்கள மொழியை இலங்கையின் உத்தியோக பூர்வ மொழியாகவும், பௌத்த மதத்தை அரச மதமாகவும் பிரகடனப்படுத்திய ஒரு யாப்பாகும்.

புதிய மொந்தையில் பழைய 'கள்'
1972 யாப்பு எப்படி சோல்பரி யாப்பை மாற்றி இலங்கையின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகக் கூறி அந்த யாப்பின் மூலம் இனப்பிரச்சினையை மேலும் மோசமான நிலைக்கு தள்ளியதோ அந்த இனப் பிரச்சினையை அடுத்த நிலைக்கு தள்ளியது இந்த 78 குடியரசு அரசியல் அமைப்பு. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கிடைத்த இன்னுமொரு அரிய சந்தர்ப்பத்தையும் சிங்கள ஆட்சியாளர்கள் தவறவிட்டது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினையைத் தீர்க்க சர்வ கட்சி மாநாடு நடத்தப்படும் என்று கூறிய ஜே.ஆர் அரசாங்கம். எந்த மக்களின் கருத்தையோ, தமிழ் அரசியல் தரப்பின் கருத்துக்களையோ கூட ஆராயாமல் தன்னிச்சையாக அரசியலமைப்பை உருவாக்கி திணித்தது.

இந்த அரசியலமைப்பு ஒரு அவசர சட்டமாகவே கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டதிலிருந்து அதன் எதேச்சதிகாரப் போக்கை இனங்காணலாம்.

“இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு” என்பதே இலங்கையின் அதிகார பூர்வமான பெயர் ஆனால் 78ஆம் ஆண்டு அரசியலமைப்பைப்போல சோஷலிச விரோத முதலாளித்துவ சார்பு அரசியலமைப்பும் ஆட்சியதிகாரமும் இலங்கையில் வரலாற்றில் அதற்கு முன்னர் அமைந்ததில்லை.

நீதிக்கு பூட்டு
1926இல்  எஸ்.டபிள்யூ. ஆர்.டீ.பண்டாரநாயக்கா, இலங்கைக்கு சமஷ்டி முறை அவசியம் என்று அறிவித்த போது தமிழ்த் தலைவர்கள் மாறாக ஒற்றையாட்சி போதும் என்று கருதினார்கள் என்பது உண்மை தான். ஆனால் அதே தலைவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 1948 “சமஸ்டிக் கட்சி”யை (Federal Party – தமிழரசுக் கட்சி) ஆரம்பித்து விட்டார்கள். அடுத்த 30வது ஆண்டில் 78 யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட வேளை இனப்பிரச்சினை உக்கிரமமான வடிவம் பெற்று சமஸ்டிக் கோரிக்கை முக்கிய கோஷமாக ஆகிவிட்டிருந்தது.

ஆனால் அவையெல்லாம் உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமன்றி அதற்கு நேரெதிராக ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் யாப்பாக ஆக்கப்பட்டது. அதிகாரப் பகிர்வை நிராகரித்து; 78 யாப்பின் இரண்டாவது சரத்து அழுத்தமாக “இலங்கைக் குடியரசு, ஓர் ஒற்றையாட்சி அரசாகும்” என்று பிரகடனப்படுத்தியது. 9வது சரத்து “இலங்கைக் குடியரசானது பௌத்தத்துக்கு முதன்மையிடத்தை வழங்குவதோடு, புத்தசாசனத்தைக் காப்பதும் வளர்ப்பதும், அரசின் கடமையாகும்” என்றது.

இந்த  யாப்பின் 83 ஆவது சரத்தின்படி, மேற்குறிப்பிட்ட 2வது சரத்தையும், 9வது சரத்தையும்  திருத்தவோ மாற்றவோ, நீக்கவோ வேண்டுமாயின், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு (சமூகமளிக்காதவர்கள்) பெரும்பான்மைக்கு குறையாதவர்களின் அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். அதன் பின்னர் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, மக்களின் அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். அதையும் தாண்டியதன் பின்னர் ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறப்பட்டு கையெழுத்திட்டு மாற்றத்துக்கு உள்ளாகும் என்கிறது.


அதுபோல இந்த யாப்பை மாற்ற முடியாத அளவுக்கு அதன் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் எவருமே பெற முடியாத அளவுக்கு அதே யாப்பில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தினார் “ஆசியாவின் குள்ளநரி” என்று பலராலும் அழைக்கப்படும் ஜே.ஆர். 1956, 1960, 1970 ஆகிய தேர்தல்களில் ஐ.தே.க தோல்வியுற்று இருக்கிறது. தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறை ஐ.தே.க வின் வெற்றிக்கு சாதகமானதாக இல்லை என்று கணித்து வைத்திருந்த ஐ.தே.க தமது வெற்றி வாய்ப்பை உறுதி செய்யக்கூடிய ஒரு தேர்தல் முறையை ஆராய்ந்தது. அதன் விளைவே விகிதாசார தேர்தல் முறை. அதேவேளை இந்தத் தேர்தல் முறையின் மூலம் ஒரு போதும் எவரும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியாத வகையில் இயற்றப்பட்டது. தமிழ் மக்களின் நீதியான தீர்வுக்கான வாய்ப்புகள் இந்த யாப்பின் மூலம் பூட்டு போட்டு மூடப்பட்டது.

ஜே.ஆர் கணித்தது போல இந்த 40 ஆண்டு காலத்துக்குள் இந்த அரசியல் யாப்பின் அந்த முக்கிய சரத்துக்களை மாற்றவோ அல்லது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரவோ எந்த அரசாங்கத்தாலும் முடியவில்லை. இறுதியில் இன்று பிரதான அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தான் அரசியலமைப்பு மாற்றம் சாத்தியமாகும் என்ற நிலை உருவாகிய போது இந்த 4 தசாப்தத்துக்குள் “சிங்கள – பௌத்தம்” நிறுவனமயப்பட்டு ஒற்றயாட்சியையோ, பௌத்த மத முன்னுரிமையையோ மாற்ற விடப்போவதில்லை என்கிற நிலைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.

இனப்பிரச்சினையைத் தீர்ப்பது தான் இந்த அரசியலமைப்பின் தலையாய இலக்கு என்று அறிவித்து புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் “நல்லாட்சி” அரசாங்கமும் கூட  மேற்படி சரத்துகளை மாற்றப் போவதில்லை என்று சிங்கள பௌத்தர்களுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளது என்பதும் தமிழ் மக்களுக்கும் பகிரங்கமாக அதனை அறிவித்திருக்கிறது என்பதும் இந்த இடத்தில் குறித்தாக வேண்டும். அது மட்டுமன்றி வரலாற்றில் முதற் தடவையாக தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் மக்களின் அபிலாஷகளுக்கு எதிரான யாப்பு மாற்றம் நிகழ்த்தப்படுகிற வரலாறும் பதியப்படப் போகிறது.

இந்தப் புறக்கணிப்புகளே தமிழர்களை தனி நாட்டுக் கோரிக்கைக்கு நகர்த்தியதும், அதை அடையும் வழிமுறையாக ஆயுத வழிமுறையை தெரிவு செய்ததும் நிகழ்ந்தது. 

பௌத்த மதம் “மதமானது”
இவற்றின் அடிப்படையில் பௌத்த மதம் அரச மதமாக ஆனது. ஏனைய மதங்களைப் தமது மதங்களைப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டதாகவும் ஏனைய மதங்களின் உரிமைகள், அடிப்படை உரிமைகளின் கீழ் பாதுகாக்கப்படுவதாக அந்த அரசியல் அமைப்பில் கூறப்பட்ட போதும் அரசியல் அமைப்பின் படி அவை தொடர்பில் அரசாங்கத்துக்கு ஏதும் கடப்பாடோ கடமையோ நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால்,
பௌத்தமதத்தைப் (புத்த சாசனத்தைப்) பாதுகாப்பதும் வளர்ப்பதும், அரசின் கடமையாக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே சிலர் ஏனைய மதங்கள் புறக்கணிக்கப்பட்டன, பாரபட்சம் காட்டப்பட்டது எனச் சொல்ல முடியாது என வாதிடுவர். மேலோட்டமாக இது சரியான கருத்தாகப்படினும், இரண்டாவது குடியரசு யாப்பின் ஏனைய சில சரத்துக்களோடு, சேர்த்துப் பார்க்கும் போது, எமக்கு வேறுபட்டதொரு சித்திரமே தென்படுகிறது.

அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் 10வது மற்றும் 14வது சரத்தின் ஒன்று (உ) உபபிரிவு ஆகியவற்றின் மூலமே மற்ற மதச் சுதந்திரத்தை அங்கிகரிக்கிறது. அதேவேளை அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில், பதினைந்தாவது சரத்தின்   ஏழாவது உபபிரிவானது தேசிய பாதுகாப்பு, பொது  ஒழுங்கு மற்றும் பொதுச் சுகாதாரம் மற்றும்  விழுமியங்கள் தொடர்பில்   பதின்நான்காம்   சரத்திலுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் சட்டரீதியாக கட்டுப்படுத்தலாம் என்று மட்டுப்பாடு விதிக்கிறது. ஆக ஏனைய மதங்கள் தாம் பின்பற்றும், போதிக்கும், நடைமுறைப்படுத்தும் உரிமையை கட்டுப்படுத்த முடியும்.

சிங்களம் மட்டும்
மொழி விடயத்தில் மூன்று விதமாக அரசியலமைப்பு வரைவிலக்கனப்படுத்தியது. உத்தியோகபூர்வ மொழி அரச கரும மொழி, தேசிய மொழிகள் என்கிற வரையறைகள் 4 வது அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகிறது.

உத்தியோகபூர்வ மொழியாக சிங்களத்தை ஆக்க வேண்டும் என்கிற பிரயத்தனம் ஜே.ஆருக்கு பல்லாண்டுகளாக இருந்து வந்த கனவு என்று தான் கூற வேண்டும். சுதந்திரத்துக்கு முன்னர் 22.06.1943 இல் அவர் அரச சபையில் சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தார் என்பதையும் இங்கு நினைவுறுத்த வேண்டும். சரியாக 35 வருடங்களின் பின்னர் தான் இயற்றிய யாப்பில் அவரது கனவை நனவாக்கி உறுதிசெய்து கொண்டார்.

எப்படி 1972 ஆம் ஆண்டின் முதலாவது அரசியலமைப்பு அறிமுகப்படுத்திய பௌத்தமத முன்னுரிமையை 1978 அரசியல் யாப்பால் மாற்ற முடியாமல் அதை தக்க வைத்துக் கொண்டதோ அது போல 72 யாப்பு அறிமுகப்படுத்திய சிங்கள மொழி உத்தியோகபூர்வமான மொழி என்கிற பிரிவையும் அப்படியே 18 வது சரத்தின் மூலம் தக்கவைத்து உறுதி செய்தது 1978 யாப்பு.

1972ஆம் ஆண்டு யாப்பைப் போலவே 1978 யாப்பும் சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக அறிவித்ததனூடாக தனிச்சிங்களச் சட்டத்துக்கு அரசியல்யாப்பு அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் வழங்கியது.

அது மட்டுமன்றி 22 ஆம் சரத்தின் முதலாவது உபபிரிவானது இலங்கையின் நிர்வாக மொழியாக உத்தியோகபூர்வ மொழியே இருக்கும் (அதாவது சிங்களம் மட்டும்) என்று குறிப்பிட்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுப் பதிவுகளைச் செய்வதிலும், பொது நிறுவனங்களின் அன்றாட கொடுக்கல்வாங்கல்களிலும் நிர்வாக மொழியாக தமிழ் பயன்படுத்தப்படலாம் என்று கூறியது. இந்த சரத்து நீண்ட போராட்டத்தின் பின்னர் 10 வருடங்கள் கழித்து 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 திருத்தச் சட்டத்தின் மூலம் சிங்களமும் தமிழும் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும் என்று மாற்றப்பட்டது.


அது கூட ஏற்கெனவே பண்டாரநாயக்கவால் 1958ஆம் ஆண்டு தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தாலும், அதன் பின்னர் டட்லி சேனநாயக்க ஆட்சியில் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டவொழுங்குகளாலும் சற்று சீர் செய்யப்பட்டவை தான்.

அதே வேளை இலங்கையின் அரசகரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும் என்று பிரகடனப்படுத்தியது. ஆனால் 9 ஆண்டுகளின் பின்னர் 1987இல் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் “தமிழும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும்” என்று (18(2)) சேர்க்கப்பட்டது.

தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் என்று 19வது சரத்து கூறிய போதும் இன்று வரை அதன் பெறுபேறுகளை தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாமல் தான் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்.

மேலும் 22 ஆம் சரத்தின் ஐந்தாவது உபபிரிவானது பொதுச் சேவை, நீதிச் சேவை, உள்ளூராட்சிச் சேவை, பொது நிறுவனம் அல்லது அரசாங்க அமைப்பொன்றிற்குள் இணைக்கப்பட்டு நியாயமான காலத்தினுள் உத்தியோகபூர்வமொழியில் (சிங்களமொழி) தேர்ச்சி பெறுதல் அவசியம் என்று கட்டாயப்படுத்தியது. ஆனால் சிங்களவர்களுக்கு தமிழ் மொழி கற்பது கட்டாயமில்லை என்கிற பாரபட்சத்தையும் விளங்கிக்கொள்ள வேண்டும். (இது பின்னர் மாற்றப்பட்டது).

இந்த யாப்பு ஒருபுறம் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை கதவடைப்பு செய்திருந்த அதே வேளை அதன் பின்னர்  இதுவரையான 19 யாப்பு சீர்திருத்தங்களில் பெரும்பாலானவை எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுத்தன. தமிழர்களை மோசமாக நசுக்க பிரயோகிக்கப்பட்டன.

திருத்தங்களின் திருப்பம்

08.08.1983இல் 6வது திருத்தத்தின் மூலம் தனி நாட்டுக் கோரிக்கை சட்டவிரோதமாக்கப்பட்டது. தனி நாட்டுக்கான இயக்கங்களில் அங்கம் வகித்தல், பிரச்சாரம் செய்தல், ஆதரவு கொடுத்தால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடியியல் உரிமை பறிக்கப்படும் என்றது. ஆக இதன் மூலம் கூட்டணி உள்ளிட்ட அனைத்து தமிழ் அரசியல் சக்திகளினதும் தனி நாட்டுக்கான அரசியல் செயற்பாடுகள் முடக்கப்பட்டன. கூட்டணியினர் பாராளுமன்றத்தில் இருந்து விலகி தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்தனர். தமிழ் இயக்கங்கள் தலைமறைவு செயற்பாட்டுக்கு தள்ளப்பட்டன.
14.11,1987இல் இந்தியாவின் நிர்பந்தத்துடன் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட மாகாண சபை வழங்கிய குறைந்த பட்ச அதிகாரங்களைக் கூட நடைமுறைப்படுத்த விடவில்லை. குறுகிய காலத்தில் அதுவும் கலைக்கப்பட்டு வடக்கு கிழக்குக்கு வெளியில் மாத்திரம் அது பல்லாண்டுகளாக இயங்கியது. எந்த மக்களுக்காக கொண்டு வரப்பட்டதோ அந்த வட-கிழக்கு பிரதேசங்களில் மாகாணசபை சபை ஆட்சி வழக்கொழிந்தது. 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் பின் வந்த பேரினவாத அரசியல் நிர்ப்பந்தங்களால் நீதிமன்றத்தின் மூலம் நிரந்தரமாக பிரிக்கப்பட்டது.
17.12.1988 இல் 16வது திருத்தச் சட்டத்தின் மூலம் சிங்களத்துடன் தமிழும் நிர்வாக மொழி, நீதிமன்ற மொழி என்று மாற்றப்பட்டது. ஆனால் இதில் இந்த சட்டத்திற்கு எந்தவித நடைமுறைப் பெறுமதியும் இதுவரை கிடைக்கவில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழு என்கிற ஒன்று உருவாக்கப்பட்டபோதும் அதனால் எந்த பயன்பாடும் இதுவரை கிடையாது. வெறும் கண்துடைப்பு ஆணைக்குழு வரிசையில் அதுவும் கிடப்பில் இருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியலமைப்பு கொண்டுவரப்பட்ட வேகத்துடன் 1978இல் தடைசெய்யப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டே பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழர் பிரதேசங்களின் மீதான வேட்டை தொடங்கப்பட்டது. அந்த சட்டம் நினைத்தபடி சந்தேகத்தின் பேரில் கைது செய்வதற்கும், விசாரணயின்றி நீண்ட காலம் தடுத்து வைப்பதற்கும், சித்திரவதை செய்வதற்குமான அனுமதியையும் வாய்ப்பையும் அரச படைகளுக்கு வழங்கியது. சித்திரவதையின் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டனை பெற்றுக்கொடுக்கவும் வழிசமைத்தது. இந்த இரு சட்டங்களாலும் மேற்கொள்ள முடியாத அரச பயங்கரவாதத்தை மேற்கொள்ள அவசர காலச் சட்டத்தின் மூலம் மேற்கொண்டது.

1978 அரசியல் யாப்பு பாராளுமன்றத்தில் யாப்பு நிறைவேற்றப்பட்ட அதே நாள் தமிழர்கள் தரப்பில் தமது எதிர்ப்பை வெளியிடும் வண்ணம் இரத்மலானை விமான நிலையத்தில் தரித்திருந்த யாழ்-பலாலி விமான சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அவ்ரோ விமானம் (Avro 748 4R-ACJ) குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. எந்த அரசியலமைப்பும் தமிழர்களுக்கு நீதியான தீர்வைத் தரப்போவதில்லை என்பதையும் தமக்கான தலைவிதியை தாமே நிர்ணயித்துக் கொள்ளப்பவதாக புதிய ஆட்சியாளர்களுக்கு கொடுத்த செய்தி அது. அரசியல் யாப்புக்கு மட்டுமல்ல, அது துரோகங்களுக்கு பதிலடியாகவும், இனி வருங்காலத்துக்கான எச்சரிக்கையாகவும் கொள்ளப்பட்டது.

துரோகங்கள் தொடரும்

நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates