நாடு இரண்டு தேர்தல்களை எதிர்கொண்டிருக்கின்றது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆகிய இரண்டுமே அவையாகும். முதலில் எந்தத் தேர்தல் நடைபெறப் போகின்றது என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் தனித்தனியாக நடத்தப்பட்டன. எனினும் அந்த முறையை ஒழித்து ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தல்களை பழையபடி ஒரே முறையில், ஒரே தினத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது.
எனவே, அடுத்தமாதம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட வேண்டிய சப்ரகமுவ மாகாணம், வட மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றுக்கான தேர்தல் குறித்த காலத்தில் நடத்தப்படமாட்டாதென்றே தெரியவருகிறது. சகல மாகாண சபைகளும் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் போதே இம்மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல்களும் நடைபெறக்கூடும்.
இந்த மூன்று மாகாண சபைகளும் கலைக்கப்பட்டு அங்கே மாகாண ஆளுநர்களின் பொறுப்பின் கீழ் நிர்வாகம் முன்னெடுக்கப்படும். எனவே இம்மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல்களை நடத்துவதற்கு மேலும் பல மாதங்களாகலாம்.
அதற்கிடையில், கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், ஏறக்குறைய 1½ வருடகாலமாக மேற்படி உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகங்கள் விசேட ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளரும் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். இதனிடையே தேர்தல் பழைய விகிதாசார முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும். புதிய வட்டார முறையில் நடத்தப்பட வேண்டுமென்றும் இவை இரண்டும் கலந்த கலப்பு முறையில் நடத்தப்பட வேண்டுமென்று பரவலாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் புதிய பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டு அதன் பின்னரே அவற்றுக்கான தேர்தல் நடைபெறுமென்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் எவ்வாறான வகையில் எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன என்ற கேள்விகள் இயல்பாகவே எழுந்துள்ளன.
நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் மலையக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் புதிய பிரதேச செயலகங்கள் அமையப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு மலையக மக்களிடையே காணப்படுகிறது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் சுமார் ஏழரை இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 51 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்களாவர்.
7½ இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட இந்த மாவட்டத்தில் அம்பகமுவ, ஹங்குராங்கெத்த, வலப்பனை, நுவரெலியா, கொத்மலை ஆகிய ஐந்து பிரதேச செயலகங்களே செயற்படுகின்றன. சராசரியாக ஒன்றரை இலட்சம் மக்களுக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையில் இதனை அவதானிக்க முடியும்.
அதேவேளை, கிழக்கு மாகாணத்தின், அம்பாறை மாவட்டத்திலுள்ள லஹுகல (Lagugala) பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் சுமார் 9 ஆயிரம் (2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) மக்களே உள்ளனர். இதுபோன்று வேறுபல பிரதேச செயலகங்களும் நாட்டில் உள்ளன. வெறும் 9 ஆயிரம் மக்களுக்கு லஹுகல பிரதேச செயலகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதைப்போன்று 15 மடங்கு மக்கள் தொகையைக் கொண்ட நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேசத்திற்கும் ஒரேயொரு பிரதேச சபையே அமைக்கப்பட்டுள்ளது. இதனூடாக இரு பிரதேச செயலகங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் அம்பகமுவ பிரதேச மக்கள் மட்டுமன்றி, நுவரெலியா மாவட்டத்திலுள்ள மக்கள் அரச சேவைகளை பெற்றுக்கொள்வதில் எந்தளவில் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
நுவரெலியா மாவட்ட மக்களின் எண்ணிக்கை மற்றும் தேவையைக் கருத்திற்கொண்டு பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த காலத்தில் உள்ளூராட்சி மன்ற எல்லை மீள்நிர்ணயக்குழு முன்னிலையில் இது தொடர்பாக மலையக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், இயக்கங்கள், தனிநபர்கள் என பல்வேறு தரப்பினரும் சாட்சியமளித்தனர். பெரியளவில் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் 5 பிரதேச செயலகங்களை 12 ஆகவாயினும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
இதுபோன்ற கோரிக்கைகளை மலையக் கட்சிகள் பலவும் முன்வைத்திருந்தன. இ.தொ.க. ஆரம்பமுதல் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென தெரிவித்து வந்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியும் இவ்விடயத்தில் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றது.
குறிப்பாக அமைச்சர் மனோ கணேசன், நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பதுடன் ஹட்டன்–டிக்கோயா மற்றும் தலவாக்கலை–லிந்துலை நகர சபைகளை மாநகர சபைகளாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதேச செயலகங்களையும் பிரதேச சபைகளை உருவாக்குவதற்கும் நகர சபைகளை தரம் உயர்த்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்விடயத்தில் மலையகக் கட்சிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும். இந்த சந்தர்்பத்தை தவறவிட்டால் இனியொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அத்துடன் உள்ளூராட்சி மன்ற சட்டங்களிலும் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பிரதேச சபை சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
பிரதேச சபை தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று அத்தேர்தலில் போட்டியிடவும் கூட தடை இல்லை. ஆனால் பிரதேச சபையினூடாக தோட்டங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்களுக்கு உரிய சேவைகள் கிடைப்பதில்லை. அரச உதவிகளும் சென்றடைவதில்லை. வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டுள்ள போதிலும் அச்சபைகளின் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதில் சட்டச்சிக்கல்கள் உள்ளன. இது நீக்கப்பட வேண்டும்.
மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்வதற்கு இதுபோன்ற குளறுபடிகளே காரணமாக இருக்கின்றன. இவை முழுமையாக நீக்கப்பட்டு மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எதிர்வரும் நவம்பர்–டிசம்பர் இறுதிப் பகுதியிலோ அல்லது அடுத்த வருட முற்பகுதியிலோ உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர், மலையக மக்கள் நலன்சார் திருத்தங்களை அரசிடம் முன்வைத்து நிறைவேற்றுவதற்கு மலையகக் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...