கடந்த 27 வருடங்களாக இடம்பெற்றுவரும் இலக்கியசந்திப்பு நிகழ்வின் 47 ஆவது இலக்கிய சந்திப்பு எதிர்வரும் 29, 30 ஆம் திகதிகளில் அட்டன் கொட்டகலை மேபீல்ட் சந்தி கிறீன் ஹில் ரிட்ரீட் சென்டரில் நடைபெறவுள்ளது.
29 ஆம் திகதி முதலாம் நாள் காலை 9.30 மணிக்கு புகலிட இலக்கிய சந்திப்பின் வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய சந்தூஸ் வழங்கும் தொடக்கவுரையுடன் ஆரம்பமாகும்.
முதலாம் அரங்காக மீனாட்சி அம்மை அரங்கு மு.ப.10.00 மணிமுதல் 12.30 மணி வரை 'நாட்டாரியல்' என்ற தலைப்பில் பேராசிரியர் செ.யோகராசா தலைமையில் நடைபெறவுள்ளது. மலையக நாட்டார் பாடல்கள் மரபும் மாற்றமும் (லெனின் மதிவானம்), கிழக்கிலங்கை நாட்டாரியல் மரபு– கருத்துரிமை – பெண்ணியம் (ஏ.பி.எம்.இத்ரிஸ்) மலையக நாட்டுபுற கலைகளின் இயங்குதன்மையும் சமகால நிலைமைகளும் (வே.ராமர்) அருகிவரும் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமிய வாழ்வியலும் பாரம்பரியமும் (எம்.ஐ.உமர் அலி) தன்னிறைவான பொருளாதார உருவாக்கமும் நாட்டார் பாடல்களும் (இ.குகநாதன்) ஆகிய தலைப்புகளில் உரைகள் இடம்பெறவுள்ளன.
பி.ப 1.15 முதல் 2.45 வரை இடம்பெறும் பெண்ணிய அரங்கு 'கிருஸ்ணம்மாள்' நினைவாக யோகேஸ்வரி கிருஸ்ணன் தலைமையில் நடைபெறும். இவ் அரங்கில் இன்றைய பொருளாதாரச் சூழமைவில் மலையகத் தொழிலாளப் பெண்களின் வாழ்வியல் பங்கு (குழந்தைவேல் ஞானவள்ளி), முன்னாள் போராளிப் பெண்களின் புனைவெழுத்துக்களின் ஊடே மேலெழும் பெண்ணியக்குரல் (ஷாமிலா முஸ்டீன்) மலையகப் பெண்களின் கல்வி உரிமைக்கான தடைகள் (அ.சண்முக வடிவு) மரபுசார் கூத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும் (ஜே.நிலுஜா) ஆகிய தலைப்புகளில் உரைகள் இடம்பெறவுள்ளன.
இலக்கியம் சார் உரையாடல் சி.வி.வேலுப்பிள்ளை அரங்காக பி.ப 3.00 முதல் 5.30 மணி வரை தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெறும். இவ்வரங்கில் மலையகப் படைப்பிலக்கியங்களில் வெளிப்படும் வீர உணர்ச்சி (ஆ.கலையரசன்), போருக்குப் பின்னான காண்பிய கலைகளில் திரைப்படங்கள் (அனோஜன் பாலகிருஸ்ணன்), மலையகப் பெண் கவிதைகளில் மேலெழும் போர்க்குணம் (லுணுகலை ஸ்ரீ), தமிழிலக்கியத்தின் சமகாலப் போக்கு- ஓர் அறிமுகம் (றியாஸ் குரானா) போரிலக்கியம் : இரு நாவல்களை முன்வைத்து ஒரு கதையாடல் (எஸ்.எம்.மிஹாத்), நவீன இலக்கிய கண்ணோட்டத்தில் ஒளவையாரும் மூதுரைகளும் (ஏ.எம்.ஜாபீர்) ஆகிய தலைப்புகளில் உரைகள் இடம்பெறவுள்ளன.
முதலாம் நாளின் இறுதி நிகழ்வாக மாலை 6 மணி முதல் 8 மணிவரை மலையக கலைஞர்கள் பங்குகொள்ளும் காமன் கூத்து நிகழ்த்துகையும் அரங்க நிகழ்வாக இடம்பெறும்.
இரண்டாம் நாளான 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை 'அரங்கியல்' எனும் தலைப்பில் திருச்செந்தூரன் அரங்கு சி.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்வரங்கில் மலையக நவீன நாடகங்கள் பேசும் பன்முக நோக்கு (சு.சந்திரகுமார்), சமகாலச் சவால்களை எதிர்கொண்டு மீண்டெழுதலுக்கான அரங்கச் செயற்பாடுகள் (து.கௌரீஸன்), மலையக அரங்கியல் தளம் (அ.லெட்சுமணன்), சமூக மதிப்பீட்டுக் களங்களாகக் கதைப்பாடல்கள் (பா.கிருஷ்ணவேனி) ஆகிய தலைப்புகளில் உரைகள் இடம்பெறவுள்ளன.
மொழிபெயர்ப்பு மற்றும் இதழியல் தொடர்பான உரைகள் மு.ப.11.15 மணி முதல் 12.45 மணி வரை கே.கணேஸ் அரங்காக இரா.சடகோபன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்வரங்கில் மலையக இலக்கிய வளர்ச்சிப் போக்கில் அச்சு ஊடகங்கள் (சுப்பையா கமலதாசன்), சமகால இணைய இதழ்கள் (கிரிசாந்த்), மலையக சிறு சஞ்சிகைகள் (பபியான்) தமிழ், சிங்கள மொழிப்பெயர்ப்பு சில அனுபவக்குறிப்புகள் (ஹேமச்சந்திர பத்திரன) ஆகிய தலைப்புகளில் உரைகள் இடம்பெறவுள்ளன.
இறுதயரங்காக நடேசய்யா அரங்கு பி.ப 1.30 மணி முதல் 5.00 'அரசியல்' என்ற தலைப்பில் க.ரவீந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்வரங்கில் இலங்கையின் அரச அரசியல் நிறுவனங்களும் அதன் மீதான மலையக மக்களின் நம்பிக்கையும் (இரா.ரமேஸ்) மலையக மக்கள் சிதறி வாழும் மாவட்டங்களும், அந்நியப்படுத்தப்படும். அவர்களின் சமூக அரசியல் இருப்பும் (ஏ.ஆர்.நந்தகுமார்), மலையக மக்களின் தேசிய இருப்புக்கு தடையாக உள்ள சட்ட ஏற்பாடுகளும் அவற்றை நிவர்த்திக்கும் தேவைப்பாடுகளும் (மு.சிவலிங்கம்), வடக்கு வாழ் மலையகத் தமிழர்கள் வாழ்வியல் நெருக்கடிகள் (தமிழ்ச்செல்வன்), மலைகளை வரைதல் மலையகத் தமிழர்களைப்புரிந்து கொள்வதற்கான வழித்திட்டம் (சிராஜ் மஷ்ஷுர்), வடக்கின் புதிய அடையாளங்களைக் கட்டியெழுப்புவதும் நிலம் கொண்டிருக்கும் எதிர்கேள்விகளும் (யதார்த்தன்), சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான ஐக்கியமும் இன உறவும் விரிசல்களும் - கிழக்கு மாகாண சபையை முன்வைத்து (திலிப்குமார்), தமிழ் அரசியலின் ஜனநாயகச் சூழல் (கருணாகரன்), புலம் பெயர் தமிழர்களின் இலங்கை அரசியல் பற்றிய புரிதல் (தேவதாசன்), மலையக அரசியல் சமகால போக்கு குறித்து ஓர் அவதானம் (காமினி ஜெயவீர) ஆகிய தலைப்புகளில் உரைகள் இடம்பெறவுள்ளன.
இலக்கிய சந்திப்பு அரங்க இடைவெளிகளில் நூல்களின் அறிமுகமும் உரைகளும் இடமடபெறவுள்ளன. உசுல பி விஜயசூரிய எழுதிய (தமிழில் தேவா) அம்பரய எனும் நூலினை திலிப்குமாரும், மு.சிவலிங்கம் எழுதிய பஞ்சம் பிழைக்க வந்த சீமை. இரா.சடகோபன் எழுதிய கண்டிச்சீமையிலே ஆகிய இரு நூல்கள் பற்றிய ஒப்பீட்டு உரையை மல்லியப்புசந்தி திலகரும், யதார்த்தன் எழுதிய மெடுசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் எனும் நூலைஅனோஜனும், ஜமீல் எழுதிய அவன் பையில் ஒழுகும் நதி எனும் நூலை அம்ரிதாவும், அம்ரிதா ஏஎம் எழுதிய விலங்குகள் தொகுதி 1 அல்லது விலங்கு நடத்தைகள் எனும் நூலை சிராஜூம் அறிமுகம் செய்து உரையாற்றவுள்ளதுடன் தில்லைநடேசனின் வட்டுக்கோட்டை அரங்க மரபு எனும் நூலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் உரைகள் மாத்திரம் அன்றி தோட்டப்புற பாடல்கள் (விமலநாதன்) நவீன நாட்டார் கவி அளிக்கை (எழுகவி ஜெலீல்) மலையக விடுகதைகள் (காளிதாசன்), இசைப்பா (இசைவாணி) நாட்டார் பாடல்கள் (க.வேலாயுதம்), மெல்லிசை (பெரியநாயகம்) என்பனவும் இடம்பெறவுள்ளது.
ஏற்பாட்டுக் குழுவினர்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...