(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 27)
இலங்கை தேயிலைக்கு 150 ஆண்டுகள் என பெருமையோடு இந்த ஆண்டு ஆரம்பித்தது. இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையம் தலவாக்கலையில் விழா ஒன்றினை ஏற்பாடு செய்து ஜனாதிபதியை பிரதம அதிதியாகக் அழைத்து கொண்டாடியது. அதன் தொடர்ச்சியாக தென்மாகாணத்திலும் தேசிய ரீதியாக அந்த விழா கொண்டாடப்பட்டது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தபால் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை தேயிலையின் 150 ஆண்டுகால நிறைவைக் குறிக்கும் தபால் முத்திரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் ஆங்காங்கே சில தோட்டங்களில் இந்த 150 வருட நிறைவை நினைவுபடுத்தும் நிகழ்வுகளை நடாத்தியுள்ளன. இதன்போது தொழிலாளர்கள் சிலரையும் கௌரவித்துள்ளனர்.
ஆனாலும் இந்த 150 ஆண்டுகால வரலாற்றுக்குள் தமது வரலாற்றையும் கொண்டிருக்கும் மலையக மக்கள் தரப்பில் இருந்து எவ்வித கொண்டாட்ட ஏற்பாடுகளும் இடம்பெற்றதாக தெரியவில்லை. அதற்கான காரணம் தேயிலைத் தொழில் துறை மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையீனமா எனும் கேள்வியும் எழுகின்றது.
தோட்டத் தொழிலாளர்களின் 150 வருடகால வரலாற்றைப் பின்னோக்கி பார்க்கின்றபோது இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையான பிணைப்பு தோட்ட நிர்வாகத்துடனேயே பிணைக்கபட்டிருக்கிறது. தற்போது நேரடியாக பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கின்ற போதும் கூட தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பிறந்தவுடன் அவர்களுக்கான பிறப்பு உறுதிப்படுத்தலை கூட தோட்ட நிர்வாகம் வழங்கும் 'பிறப்பு அட்டை' (birth card) மூலமே உறுதிப்படுத்திய காலம் இருந்தது. இன்றும் கூட அத்தகைய பிறப்பு அட்டைகளுடன் தமது அடையாளத்தை கொண்டிருப்பவர்கள் உள்ளனர். அவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தினை தொண்டு நிறுவனங்கள் செயது வருகின்றன.
அவர்களது குடியிருப்பு முறை நாட்டின் ஏனைய பிரதேச மக்களுடன் ஒப்பிடுகின்றபோது திட்டமிட்ட அடிப்படையில் 'லயன்' முறை குடியிருப்பாக ஒரு குடும்பம் வாழ்வதற்கு பொருத்தமற்ற ஒன்றாகவே அமைந்து காணப்படுகிறது. தனிவீட்டுத் திட்டத்திற்கான கோரிக்கையும் திட்டங்களும் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளபோதும் இந்த 150 வருடகால வரலாற்றில் அவ்வாறு குடியமர்த்தப்ட்டிருக்கும் மக்கள் அனைவரையும் தனிவீட்டுத் திட்டத்திற்குள் கொண்டுவருதற்கு இன்னும் எத்தனைக் காலம் எடுக்கும் எனும் கேள்வி எழாமல் இல்லை.
இன்று முன்வைக்கப்பட்டிருக்கும் தனிவீட்டுக்கான ஏழு பேர்ச் காணி திட்டத்தினை பெற்றுக்கொள்வதற்கும் அரசியல் தளத்தில் பல்வேறு போராட்டங்களை நடாத்த வேண்டியுள்ளது. தேசிய கொள்கை ஒன்று முன்வைக்கப்பட்டபோதும் அமைச்சரவை அனுமதிக்கின்றபோதும் பெருந்தோட்ட நிர்வாக மட்டத்தில் முழு மனதுடன் ஒத்துழைப்பு கிடைப்பதாக இல்லை. ஒவ்வொரு வீடமைப்புத் திட்டத்திற்காகவும் மிகுந்த இழுபறிகளுடனேயே காணிகள் பெற்றுக்கொள்ளும் நிலையுள்ளது.
கல்வித்துறையில் மிக தாமதமாகவே இந்த மக்கள் தேசிய கல்வி வலையமைப்புடன் இணைக்கப்பட்டார்கள். சுதந்திரமடைந்த காலப் பகுதியில் இருந்தே இலவச கல்வி நாட்டின் தேசிய கல்விக்கொள்கையாக இருந்துவந்தபோதும் பெருந்தோட்டப்பகுதிகளில் அரசாங்கம் பாடசாலைகளை பொறுப்பேற்றல் 70களின் பிற்கூறுகளிலேயே இடம்பெறத் தொடங்கியது. அதுவரை கல்வி நிர்வாகத்தையும் பாட விதானங்களையும் கூட தோட்ட நிர்வாகமே தீர்மானித்து வந்துள்ளது.
இன்று தேசிய கல்வி நிர்வாகத்திற்குள் பெருந்தோட்டப் பாடசாலைகள் கொண்டுவரப்பட்டுள்ளபோதும் அதன் பௌதீகத்தன்மை முழுமையாக ஏனைய பிரதேச பாடசாலைகளின் தரத்திற்கு வரவில்லை. அவற்றை விஸ்தரிப்பதற்கு, மைதானம் அமைப்பதற்கு என இரண்டு ஏக்கர் காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டபோதும் அவற்றைப் பெற்றுக்கொடுப்பதில் தோட்ட நிர்வாகங்கள் தாமதமும் இழுபறியும் காட்டி வருகின்றன.
தோட்டப் பகுதி சுகாதார முறைமையும் இன்று வரை தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அவை குறைந்த தரத்தையும் வசதியையும் கொண்டதாகவே காணப்படுகின்றன. அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான உடன்பாடுகள் 2006இல் எட்டப்பட்டபோதும் இன்றுவரை அது முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. அப்போது சுமார் 50 வைத்தியசாலைகள் இன்று வெறும் 31 வைத்தியசாலைகளே அரச பொறுப்பில் உள்ளது.
திட்டம் கைவிடப்பட்டு இன்றும் 300 க்கு மேற்பட்ட வைத்திய நிலையங்கள் தோட்ட நிர்வாகத்தினாலேயே குறைந்த சுகாதார வசதிகளுடன் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை மாற்றுவதற்கான யோசனைகள், வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றபோதும் இழுத்தடிப்பகளும் காலதாமதங்களும் இடம்பெறுவதை மறுக்க முடியாதுள்ளது.
தோட்டப்பகுதி பாதை வலையமைப்பு முற்று முழுதாக அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபைகளுக்கு உட்பட்ட கிராமிய பாதைகள் ஆகிய மூன்று வகுதிகளுக்குள்ளும் அடங்காது அவை தோட்ட வீதிகள் என தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்கும் பொறுப்பு தோட்ட நிர்வாகத்திற்கு உரியது எனும் மனநிலையே அரச இயந்திரத்திடம் இருந்து வந்துள்ளது. ஆனால், பெருந்தோட்ட நிறுவனங்களோ முற்றுமுழுதாக இந்த வீதிகளைப் பராமரிக்கும் பணியில் இருந்து விலகிக் கொண்டுள்ளன.
இவ்வாறு பெருந்தோட்டங்கள் சார்ந்ந்து வாழும் மக்களின் தொழிலும் அடிப்படைத் தேவைப்பாடுகளும் முழுமையாக பொது நிர்வாகப்படுத்தப்படாத நிலையில் தோட்டப்பகுதிகளில் தங்கி வாழும் தொழிலாளர்கள் தமது நாளாந்த ஊதியத்தைப் பெறுவதற்கு நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்த முறையும் தற்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது. நீதிமன்றத்துக்கு முன்கொண்டு செல்லப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்த முறைமை குறித்த விடயங்கள் அடுத்துவரும் மாதங்களில் பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தக்கூடும்.
சுமார் 25 வருடங்களுக்கு முன்பதான காலப்பகுதியை எடுத்துக்கொண்டால் தேயிலை மலைகளை மக்கள் நேசமுடன் அணுகிய நிலையிலிருந்தார்கள். வருடத்தின் முதல் நாள் ஆலய முன்றலில் ஒன்று கூடி புது கூடை வாங்கி பொலி போட்டு தமது பணிகளை ஆரம்பித்த அந்த நாட்கள் இப்போது பெரும்பாலும் நடைமுறையில் இல்லை. தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலாளர் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்துவிட்ட நிலையில் தேயிலை பயிரிடும் பரப்பளவும் தோட்டங்களில் குறைவடைந்து வருகின்றது. தேயிலை மலைகள் காடுகளாக மாறிவருகின்ற நிலையில் தேயிலை சார் தொழிலில் இருந்து மக்கள் விலகிச்செல்லும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது.
தேயிலை உற்பத்தி ஆரம்பமான காலம் முதல் இற்றை வரையான காலப்பகுதியில் முற்று முழுதாக தேயிலையே வாழ்க்கையாக கொண்டிருந்த மக்கள் மலையகத் தமிழ் மக்களே. ஆனால், அந்த தொழில் துறை அவர்களை அப்படியே வைத்திருந்தமை ஒரு சாபமே. ஒரு தொழில் துறை 150 ஆண்டுகாலம் இந்த நாட்டில் முக்கிய துறையாக விளங்கும் பட்சத்தில் அந்த தொழில் துறையுடன் இணைந்த தொழிலாளர்களும் அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்தை அடைந்திருத்தல் வேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக பெருந்தோட்டத் தொழில்துறைசார் நிறுவனங்கள் தொடர்ந்தும் அவர்களை அவ்வாறே பராமரித்து இன்றும் கூட கட்டுண்ட வேலையாட்களாக (Captive Labourers) பராமரித்து வருகின்ற நிலைமையிலேயே இருந்து வருகின்றது. இதனால் தேயிலை தொழில் துறை சார்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக குறைந்து வருகின்ற நிலையில் தேயிலையின் 150 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் மனநிலையில் லட்சக்கணக்கான தொழிலாளர் மக்கள் இல்லை என்றே கொள்ளலாம்.
தேயிலை செடிபோல தோன்றினாலும் உண்மையில் அது செடியல்ல. அது மர வகையைச் சார்ந்தது. தேயிலை மரங்களைக் கவ்வாத்துச் செய்யாது வளர விடுகின்றபோது அவை கொய்யா மரங்களைப்போன்று வளர்ந்து செல்லக்கூடியது. தேயிலை மரங்களில் இருந்து தளிர்களை பராமரிப்பதற்காக அவை பறிக்கும் மட்டத்தில் கவ்வாத்து செய்து மட்டம் வெட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதேபோலத்தான் இந்த மக்களின் வாழ்வும் அது சுதந்திரமாக வளரவிடப்படாது.
தொழிலாளர் சமூகத்தில் இவர்கள் குறிப்பிட்ட மட்டத்திற்குள்ளேயே வைக்கப்பட்டுவிட்டார்கள். இன்று பரவலாக அந்த தேயிலை சார்ந்த சமூகத்தில் இருந்து தொழிலாளர்கள் மாத்திரமின்றி தோட்ட சேவையாளர்கள், அரச ஊழியர்கள், தனியார் தறை ஊழியர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், பால் பண்ணை செய்கையாளர்கள் என பல வகுதியினர் தொழில் ரீதியாக கவ்வாத்துக்கு தப்பிய மரங்களாக வந்துகொண்டிருக்கின்றனர். எனினும் அவர்களின் வாழ்விடம் இந்த தேயிலை மலைகளின் இடையே அமைந்த அந்த குடியிருப்பு தொகுதியாகிவிட்ட நிலையில் தொழிலாளர்கள் மாத்திரமின்றி இதர பிரிவினரும் இந்த பெருந்தோட்ட நிர்வாகக் கட்டமைப்புக்குள் சிக்குண்டவர்களாகவே உள்ளனர்.
தொடர்ந்தும் இந்த இறுக்கமான நிர்வாக கட்டமைப்புக்குள் தொழிலாளர் சமூகம் வைக்கப்படும்போது இலங்கைத் தேயிலையின் 200 வது நிறைவின்போதும் அதனைக் கொண்டாடுவதில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படாது. தொடர்ந்தும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக அல்லாது அவர்கள் சிறு தேயிலைத் தோட்டங்களின் உடமையாளரக மாறும்போதே தேயிலையின் மீதான நேசமும் நம்பிக்கையும் மக்களுக்கு ஏற்படும்
நன்றி சூரிய காந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...