Headlines News :
முகப்பு » , , » இந்திய மாயை! (Indian Myth) - என்.சரவணன்

இந்திய மாயை! (Indian Myth) - என்.சரவணன்

 

இந்தக் கட்டுரை சரிநிகர் பத்திரிகையில் (17.07.1997) வெளியாகி சரியாக 20 வருடங்கள் ஆகின்றன. காலப்பொருத்தம் கருதி மீளவும் இதனை வெளியிடுகிறோம்.

இந்திய இலங்கை உடன்படி க்கை செய்யப்பட்டு 10 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ் போராளிகளை சரணாகதியாக்குவதில் ஆதிக்க அரசுகள் வெற்றிபெற்று 10 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவும் இலங்கையும் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் மீது விரும்பாததைத் திணித்து 10 வருடங்கள் ஆகின்றன.

இரண்டு ஆதிக்க அரசுகளும் தமிழ் மக்களை பகடைக் காய்களாக பாவித்து தமது நலன்களை அடைந்து 10 வருடங்கள் ஆகின்றன.இந்த 10 வருடங்களில் என்னவெல் லாமோ நடந்து முடிந்து விட்டன. குறிப்பாக புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஆயுதங்களைக் களைந்து, சரணடைந்து "ஜனநாயகவழி"க்கு வரவழைத்து விட்டு பின்னர் எதனையும் தராதுவிட்டது, இருந்ததையும் திருப்பி வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டமை, தமிழ், முஸ்லிம் மக்கள் வரலாறு காணாத அவலங்களை அனுபவித்து விட்டமை, இலங்கை அரசின் அட்டுழியங்களுக்கு போராளி இயக்கங்களே துணை போய்விட்டமை, சமாதானம், பேச்சுவார்த்தை, தீர்வு என்பவற்றின் பேரால் அரசின் போலியான தொடர் நடவடிக்கைகள், யுத்தம், அதை நியாயப்படுத்த புதிய புதிய கற்பிதங்கள் என்று இந்த 10 வருடகாலத்தில் நடந்து முடிந்தவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இத்தனைக்கும் பின்புலத்தில் இந்தியாவின் பாத்திரத்தை கூர்ந்து கவனிக்க தமிழ் சக்திகள் தவறிழைத்து வந்துள்ளனர். மீண்டும் மீண்டும் இந்தியாவை நாடிநிற்பதும், இந்தியாவை நம்பியிருப்பதுவும் தொடர்ந்தும் நிகழிந்து கொண்டு தான் இருக்கின்றன.இந்தியா யார்? அதன் குறுகிய கால நீண்ட கால நலன்கள் என்ன? அந்த நலன்களை அடைவதற்காக அது இது வரை மேற்குலக நாடுகளை கையாண்டது எப்படி? அயல்நாடுகளை நடத்தியது எப்படி? அயல்நாடுகளை தனது நலன்களுக்காக ஈடுபடுத்துவதற்காக உள் முரண்பாடுகளை அது எப்படி கையாண்டு வந்தது? அவ்வாறான தலையீடுகளின் போது எந்தத் தரப்பின் நலன் முதன்மைப்படுத்தப்பட்டது? என்பன போன்ற கேள்விகளுக்கு தமிழ் சக்திகள் விடை காண தவறிவிட்டன என்றே கூறலாம்.


இந்தியா: பேட்டை ரவுடி
தென்னாசியப் பிராந்தியத்தில் சனத்தொகை, நிலப்பரப்பு, கைத்தொ ழில் வளர்ச்சி, இராணுவ வலிமை என்பவற்றில் இந்தியா ஒரு பெரிய நாடு. இதனால் பிராந்தியத்தில் ஆதிக்க வலிமை கொண்ட நாடாக திகழ்கிறது. இதனால் இந்தியாவின் இறுமாப்பும், திமிரும் அண்டை நாடுகளின் மத்தியில் அதனை ஒரு பேட்டை ரவுடியாக செயற்படச்செய்துள்ளது. இதன் காரணமாக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் யுத்தம் புரியவும் நேரிட்டதுடன். சிக்கிம் என்ற நாட்டை விழுங்கி ஏப்பமும் விட்டது. நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளைத் தன்னில் தங்கியிருக்கச் செய்து அவற்றின் வெளியுறவுக் கொள்கையையும் கூட தாமே வரையறுக்கிறது. நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் உள் நாட்டு யுத்தங்களில் அரசுக்கெதிரான சக்திகளுக்கு உதவி செய்வதற்கூடாக அவ் அரசுகளுக்கு தொல்லையும் கொடுத்து வருகிறது.

பனிப்போர் காலகட்டத்தில் ரஷ்யாவுடனும் பனிப்போரின் பின்னைய (Post Cold War Period) காலகட்டத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளையும் சார்ந்து இருக்கிறது. தனது பிராந்திய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளத்தயாராக இருக்கும் வரையில் அது வல்லரசு களுக்கு பணிந்து போவதில் பிரச்சினையில்லை என்று கருதுகிறது. இன்று அமெரிக்கா வுக்கும் மேற்குலகுக்கும் இந்தியா பணிந்து போவதையும் அப்படித்தான் பார்க்கலாம்.

இலங்கையின் இனப்பிரச்சினையானது இந்தியா இலங்கையைக் கையாள நல்ல வாய்ப்பாகப் போனது. இலங்கை மேற்குலக வல்லரசுகளுக்கு முண்டு கொடுக்கின்ற காலங்களில் அதனை தடுத்து நிறுத்துவத ற்காக, இலங்கைக்கு நெருக்கடி கொடுப்பதும், ஏனைய காலங்களில் நெருக்கடி கொடுக்கக்கூடிய சக்திகளை பலப்படுத்துவதும் இந்தியாவின் தந்திரோபாய நடவடிக்கையாக இருந்தது. இப்படியான காலங்களில் இலங்கை அரசுக்கு வழங்கக்கூடிய ஏனைய ஆதரவுகளை வழங்கி தனது "பெருந்தன்மை"யையும் "நட்பை"யும் அது வெளிப்படுத்தி வந்துள்ளது.

இந்தியாவின் கூட்டாளி
உதாரணத்திற்கு, மலையக மக்களின் குடியுரிமை பிரச்சினையானது இலங்கைக்கு ஒரு நெருக்கடியா, சரி, அதில் குறிப்பிட்ட சின்ன தொகையை ஏற்கலாம் என ஒப்பந்தம் (1964 சிறிமா-சாஸ்திரி, 1974 சிறிமா-இந்திரா) செய்து கொள்ளும். இந்த இடத்தில் (இந்தியாவுக்கும் பொறுப்பு உள்ள) மலையக மக்களின் நலனில் அக்கறையிருந்தால் குடியுரிமையற்ற ஏனையோரையும் பொறுப்பேற்பது இந்தியாவுக்கு ஒன்றும் சிக்கலான காரியமே அல்ல. ஆனால் இலங்கையை கையாள கருவிகளை எஞ்ச வைப்பதும் தயார்படுத்துவதும் இந்தியாவின் நீண்டகால நோக்கிலான தந்திரோபாயமாகும். அதேபோல் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்கவும், கச்சதீவை விட்டுக்கொடுக்கவும் இந்தியா தயார். இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இலங்கையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சியின் போதெல்லாம் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியுடன் நெருங்கிய நல்லுறவு நிலவும். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக இரண்டும் முன்னைய ஏகாதிபத்திய விரோத மேலோட்டமான அர்த்தத்தில் சோஷலிச தன்மை சார்ந்த வெளியுறவுக் கொள்கையை பின்பற்றியவை என்பது முக்கியமானது. மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கும் இலங்கையில் ஐ.தே.க ஆட்சிக்கும் இடையில் நல்லுறவு இருந்தது கிடையாது. இதன் காரணமாகத்தான் இலங்கையின் 1977 ஐ.தே.க ஆட்சியமர்வும் அதனைத் தொடர்ந்து திறந்த பொருளாதாரக் கொள்கையின் அறிமுகம், மேற்குலகுடனான நல்லுறவுகள், அவற்றின் முதலீடுகள், தலையீடுகள் என்பன இந்தியா இலங்கை விடயத்தில் கூடிய அவதானம் கொள்ளச் செய்தது எனலாம்.

1977 தொடக்கம் இலங்கையின் இனப்பிரச்சினை தென்னாசியப் பிராந்தி யத்துக்கு அச்சுறுத்தலென்றும், தமிழ் மக்களில் தமக்கும் அக்கறையுண் டென்றும் கூறி இலங்கை அகதிகளை ஏற்கச்செய்ததும், (சில நேரங்களில் செயற்கையாகவே அகதிகள் வருகையை தூண்டிவிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு) தமிழ் போராளிகளுக்கு தஞ்சமளித்ததும் அவர்களது தளங்கள் இந்தியாவில் செயற்பட அனுமதித்ததும் , ஆயுதங்களை வழங்கியதும் ஆயுதப் பயிற்சிகள் அளித்ததும் அவதானிக்கத்தக்கவை. இதன் மூலம் பல "பிடி"களை தம்வசமாக்கியது.

இந்தியாவின் பிடியில் தமிழ் இயக்கங்கள்
விடுதலை இயக்கங்களுக்கு வழங்கிய ஆயுதங்களைக் கொண்டே இந்தியாவின் எதிர்ப்பார்ப்பை கணிக்கலாம். அவ் ஆயுதங்களைக் கொண்டு ரோந்து செல்லும் படையினரையும் காவலரண்களையும் மாத்திரமே தாக்க முடியும். பெரிய படை முகாம்களை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றவோ அல்லது அரசின் பாரிய படை படை நகர்வை முறியடிக்கவோ அல்லது ஒரு பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோ இவ்வாயுதங்களால் சாத்தியப்படாது. இந்தியாவுக்கு தேவைப்பட்டதெல்லாம். ஸ்ரீ லங்கா படையினரை ஆங்காங்கு தாக்கி தொல்லை கொடுப்பதற்கூடாக இலங்கையை வழிக்கு கொண்டு வருவதே. ஆயுதங்கள் விடயத்தில் இந்தி யாவை நம்பியிருக்காமல் சர்வதேச சந்தையில் ஆயுத கொள்வனவு செய்ய முயன்ற தமிழ் இயக்கங்களின் மீது பகைமை கொண்டது இந்தியா. சில இயக்கங்களுக்கென ஆயுதங்கள் சென்னை துறைமுகத்தை வந்தடைந்த போதே அவற்றை பறிமுதல் செய்தது. இந்திய அரசுடன் முரண்டு பிடிக்கின்ற காலகட்டங்களிலெல்லாம் இலங்கை அரசை தண்டிக்கும் விதத் தில் பாரியளவிலான தாக்குதல்களை நடத்துமாறு "றோ" இயக்கங்களை பணித்தது. குறிப்பாக அனுராதபுரம் பௌத்தமதத்தளங்களை தாக்கியதும். கொழும்பில் அப்பாவி பொதுமக்களை இலக்காகக் கொண்டு பாரிய குண்டு வெடிப்புகளை நடத்துவது எல்லாம் இதன் தூண்டுதலின் காரணமாகவே நடந்ததாக பல போராளிகள் கூறுகின்றனர்.

இலங்கை தனக்கு பணிந்து போகும் காலகட்டங்களில் பேச்சுவார்த்தைக்கு போகுமாறு இயக்கங்களை தூண்டு வதும் ஏனைய காலங்களில் இயங்கங்களை தாக்குதல் நடத்தத் தூண்டுவ தும் அதற்காக தயார்படுத்துவதையும் செய்து வந்தது.

இப்படியாக இயக்கங்களை தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு போராட செய்வதும் பேச வைப்பதும், போராட வைப்பதும் பேசவைப்பதுமாக மாறி மாறி நகர்த்தியது.


இந்தோ - இலங்கை உடன்படிக்கை
இந்தியாவின் இந்த போக்கு கேள்விக் குறியாகும் நிலை 1987இல் ஏற்பட்டது. 1987 மே மாதம் இலங்கை அரசு வடமராட்சியை தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் "ஒப்பரேஷன் லிபரேஷன்" இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதுடன் பொருளாதாரத் தடையையும் விதித்தது. யாழ் நகரை கைப்பற்றுமானால் இலங்கை அரசை நெருக்கி பணிய வைக்கும் பலம் குறைந்துவிடும் என்பதைக் கண்டு கொண்ட இந்திய அரசு தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்தது. சர்வதேச அளவில் இலங்கை அரசு பெற்றிருந்த அவப்பெயர், தமிழக மக்களின் உணர்வலைகள் எல்லாமே தனக்கு சாதகமாக இருந்ததைக் கண்ட இந்தியா நேரடியாகவே தலையிட முடிவு செய்தது. பாதிக்கப்படட மக்களுக்கு நிவாரணம் எனும் பேரில் இலங்கை வான்பரப்பில் அத்துமீறி போர்விமானங்களுடன் வந்து உணவுப் பொட்டலங்களை போட்டதற்கூடாக "அடுத்ததும் நடக்கும்" என்று அச்சுறுத்தியது இந்தியா. இந்தியாவின் யோசனைக்கு இலங்கை பணிந்தது.தனது மூலோபாய நோக்கங்களை உடனடியாக நிறைவு செய்ய இதனை ஒரு சந்தர்ப்பமாக இந்தியா பயன்படுத்தியது. தமிழ் தலைமைகளின் அபிப்பிராயங்கள் எதனையும் கேட்காமல் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கொண்டிராத ஒரு தீர்வை இந்தியாவும் இலங்கையும் தயாரித்தன. தயாரித்த பின்புதான் ஏனைய இயக்கங்களின் மீது அதனை திணிக்க முயன்றது. புலிகள் உட்பட ஏறக்குறைய எல்லா இயக்கங்களும் இந்த மூன்றாம் தரப்பின் நலன்களுக்கான ஒரு தீர்வுக்கு பலியானார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தமும் நடைபெற்றது.

இந்திய-இலங்கை நலன்கள்
இந்தியாவைப் பொறுத்தளவில் இலங்கையில் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கக் கூடிய வகையிலான வெளிநாட்டு இராணுவ, உளவுச் சேவைகள் செயற்படுவதோ, திருகோணமலை உட்பட வேறெந்த துறைமுகமோ வேறொரு நாட்டின் பாவனைக்கு ஈடுபடுத்துவதோ, வெளிநாட்டு ஒலிபரப்பு நிறுவனங்கள் இராணுவத் தேவைக்காக பாவிக்கப்படுவதோ இல்லை என்பன போன்ற விடயங்களை ஒப்பந்தத்தில் இலங்கை அரசிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இந்தக் காலப்பகுதியில் அமெரிக்கா "வொய்ஸ் ஒப் அமெரிக் கா"வை அமைக்கவும் எண்ணெய்க்குத பயன்படுத்தலுக்கும் முயற்சி செய்து வந்ததும் கவனிக்கத்தக்கது.அதே போல் இலங்கைக்கும் பல தேவைகள் இருந்தன. குறிப்பாக தமிழ் இயக்கங்கள் அனைத்தையும் நிராயுத பாணிகளாக்குவது இந்திய ஆதிக்க த்தை (ஆபத்தை) தணிப்பது, தென்னிலங்கையில் உக்கிரம் பெற்றிருந்த ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்க அவகாசம் பெறுவது, உலக அளவில் பெற்றிருந்த அவப்பெயரை நீக்கும் வகையில் "தீர்வை" வழங்கிவிட்டதாக வெளியுலகுக்கு காட்டுவது. இரு நாடுகளும் தமது நோக்கங்களில் வெற்றி பெற்றன. ஆனால் எதனை தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு இத்தனையும் நடந்ததோ அந்தப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் கிட்டவில்லை. போதுமான அதிகாரமில்லாத ஒரு மாகாணசபையை ஆயுதங்களை களைந்துவிட்டு சரணாகதியடைந்த தமிழ் இயக்கங்கள் ஏற்றுக்கொண்டன. இந்த விடயத்தில் புலிகள் இயக்கம் பலியாகவில்லை என்றே கூறலாம்.

"அமைதிப்படையையும்" இந்தியா இறக்கியது. அதன் எண்ணிக்கையும், படைக்கலங்களும், இது அமைதிப்படையல்ல தேவைப்பட்டால் நசுக்கவுமே வந்துள்ளது என்பதை உணர்த்தியது.இயக்கங்களை நிராயுதபாணிகளாக்குவதில் காட்டிய ஆர்வத்தை ஒப்பந்தத்தின் மூலம் வழங்குவதாகக் கூறிய அரைகுறை தீர்வுகளைக் கூட நடைமுறைப்படுத்த இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவற்றை நிறைவேற்றும்படி பல போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் நடந்தன. புலிகளின் அங்கத்தவர் திலீபனும் மட்டக்களப்பில் அன்னபூரணி எனும் பெண்ணும் உண்ணாவி ரதத்தில் உயிர் நீத்தனர்.
2015 இல் மோடி வந்த போது இலங்கையில் கொல்லப்பட்ட IPKFஇனருக்கான நினைவுத் தூபிக்கு மரியாதை செலுத்த வந்த போது
தட்டிக்கேட்க யாருமில்லை
ஆரம்பத்தில் உலகிலேயே நான்காவது பெரிய படையுடன் மோதி வெற்றி பெறமுடியாது என கருதியதால் பணிந்து போன புலிகள் கூட அடுத்தடுத்து நடைபெற்ற கசப்பான நிகழ்வுகளினால் இந்தியப்படையை எதிர்த்து போரிடாவிட்டாலும் தாம் அழிந்து போக நேரிடுமென்பதை உணர்ந்தனர். புலிகளுக்கும் "அமைதிப்படை"க்கும் இடையில் போர் நடந்தது. அதற்கு முன்னர். இலங்கைப்படையினரால் தமிழருக்கு இழைக்கப்பட்ட அத்தனை கொடுமைகளையும் விட அகோரமானதாக, மூர்க்க மானதாக இந்தியப்ப படையினரின் நடவடிக்கைகள் இருந்தன. இலங்கை அரசு அதற்கு முன், ஓரளவு எச்சரிக்கையுனேயே இவ்வகை அட்டுழியங்களைச் செய்தது. ஏனெனில் இந்தியா அதனையே பெரும் பிரச்சாரமாக சர்வதேச அளவில் எடுத்துச் சென்றுவிட்டிருக்கும் என இலங்கை கருதியிருந்தது. ஆனால் இந்தியப் படைகளே நேரடியாக களத்தில் இருந்ததால் எதிர் விளைவுகள் பற்றிய எந்த தயக்கமும் இன்றி போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தி குண்டு மழை பொழிந்து ஈவிரக்கமின்றி தமிழ் மக்களை கொன்றொழித்தது. பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்கள். முன்னெப்போதையும் விட அதிகளவு உயிர், உடமை, சொத்துக்களின் இழப்பு காணப்பட்டது. இதனைத்தான் அன்று கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று IPKF என்பதை Innocent People Killing Force என்றது. வேறும் சில பத்திரிகைகள் Indian Peace Killing Force என்றன.

இதற்கிடையில் இந்தியாவிலும் இலங்கையிலும் முறையே வி.பி.சிங்கும், பிரேமதாசவும் ஆட்சியலமர்ந்தனர். பிரேமதாசவுக்கு தேர்தல் வாக்குறுதிக ளில் ஒன்றான "இந்தியப்படையை வெளியேற்றுவது" என்பதை நிறைவேற்ற வேண்டியிருந்தது. அதன்படி புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததுடன் இந்தியப் படையை "வெளியே போ!" என்றார். இந்தியா மிகவும் கோபமடைந்திருந்த நிலையில் வரதராஜப்பெருமாளைக் கொண்டு தமிழீழப் பிரகடனமும் செய்யப்பண்ணி பிரச்சினையை வேறுபக்கமாக திருப்பி மேலும் சிக்கலாக்கிவிட்டு இந்தியப் படை வெளியேறியது. மாகாண சபையும் கலைக்கப்பட்டது. சரதராஜப் பெருமாளையும் கூடவே கூட்டிச்சென்று விட்டது இந்தியா.

இந்தியப்படையை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்காகவே உருவான பிரேமதாச-புலிகள் கூட்டு இந்தியப் படை வெளியேறியதைத் தொடர்ந்து அவசியமற்றதாகியது. இவ்வாறு இந்திய நலனையே முதன்மயாகக் கொண்ட இவ்வுடன்படிக்கை குறித்தும் 13வது திருத்தச்சட்டம் குறித்தும் இன்றும் தமிழ் இயக்கங்கள் நம்பிக்கை வைத்திருப்பதுதான் வேடிக்கை. சில இயக்கங்கள் தமது ஆயுதங்களைக் களைந்தமை குறித்து இன்றும் கவலைப்படுவதை காணமுடிகிறது. இந்தியா குறித்து நிலவுகின்ற மாயை இரண்டு வகையானது. முதலாவது வகை, இந்தியா தமிழ் மக்களில் அக்கறையுள்ளது. தமிழக மக்களின் அக்கறைக்காக இலங்கை தமிழரிலும் அதற்கு அக்கறையுண்டு, தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரானது. தேவைப்பட்டால் தலையிடும், உணவு அனுப்பும், அகதிகளை ஏற்கும், பராமரிக்கும், ஆயுதங்களை வழங்கும் பயிற்சி வழங்கும்... என இந்தியாவில் அதீத நம்பிக்கை கொண்ட மாயை.

அடுத்த மாயையானது இந்தியாவை மீறி எதனையும் செய்யமுடியாது என்பதாகும். அது உலகின் நான்காவது பெரும் படை, ஒரு வல்லரசு, பிராந்தி யத்தின் ஏகபோக சண்டியன். எந்த நேரத்திலும் இந்தியா எனும் பாறை சிறு எறும்பின் மீது விழுந்து நசுக்கி விடும். ஆகவே அதை மீறி எதையும் செய்யமுடியாது அதன் ஆதரவு கட்டாயம் தேவை. அது சொல்வதைக் கேட்டு நடப்போம் என்பதே.

இரண்டு போக்குமே அபாயகரமானது. இந்தியாவை மையப்படுத்தி பிரச்சினையை பார்க்கும் போக்கு அபத்தமானது. ஒடுக்கு முறை, ஒடுக்கு முறை கருவிகள், என்பவற்றிலிருந்து பாதுகாப்பது, உரிமை பெறுவது எப்படி என்கின்ற மூலோபாயங்களிலிருந்து கொண்டு அவற்றை கையாள்வது தொடர்பான தந்திரோபாய நிலையை எட்டுவதே இலக்கை அடைய வழிசெய்யும். மாறாக ஒடுக்குமுறை சக்திகளைக் கண்டு அதீத பீதி கொள்வதோ அதீத நம்பிக்கை கொள்வதோ அவற்றின் தந்திரோபாயங்களுக்கு பலியாவதில் போய் தான் முடியும்.

ஏற்கெனவே இந்த வரலாற்றை பல தடவை படித்துவிட்டோம். இன்னும் தொடர்ந்து புதிதுபுதிதாக படிக்கத்தான் வேண்டுமா?



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates