"இந்திய பிரதமரையும், இலங்கை பிரதமரையும் இலங்கை சனாதிபதியையும் ஒரே மேடையில் அமரச்செய்து தனித்துவமான அரசியல் அடையாளம் கொண்ட மலையகத் தமிழ் மக்கள் நாங்கள் என ஆயிரக்கண்கில் அணிதிரண்டு உலகக்கு உணர்த்தியிருக்கிறோம். இனி இலங்கையில் எந்தவொரு தீர்வாகட்டும் அது மலையக மக்களையும் உள்வாங்கியதுதான் என்பதற்கான அடையாளத்தைக் கொடுப்பதற்கான வரலாற்று நிகழ்வுதான் நோர்வூட் கூட்டத்தின் வெற்றி என தமிழ் முற்போக்கு கூட்டணி தெளிவாக கூறிவைக்க விரும்புகிறது" என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்திருக்கின்றார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயம் தொடர்பாக ஞாயிறு தினக்குரலுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே இதனை அவர் தெரிவித்தார். அவரது பேட்டியின் விபரம்:
கேள்வி: மலையக மக்களின் பலத்த எதிர்பார்பார்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்து முடிந்த பாரத பிரதமர் மோடியின் மலையக விஜயம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என நினைக்கின்றீர்களா?
இங்கு மக்களின் எதர்பார்ப்புகள் என்ன என்பதற்கு அப்பால் ஊடகங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறினவா என்றே முதலில் பேசவேண்டியிருக்கிறது. 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி இலங்கை வந்தபோது அவர் வடக்குக்கு சென்றிருந்தார். கொழும்பிலே மலையக தமிழ்த் தலைவர்களை சந்தித்துவிட்டும் சென்றிருந்தார். ஆனால், மலையகத் தலைமைகள் அவரை மலையகத்துக்கு அழைக்கவில்லை. இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை அவர் வந்து பார்க்கவில்லை எனும் கடுமையான விமர்சனம் ஊடகங்களில் குறிப்பாக மலையகம் சார்ந்த ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன. அந்த அடிப்படையில் பார்க்கின்றபோது ஊடகங்களின் எதிர்பாரப்பு மலையகத் தலைவர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனி மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்ற கேள்விக்கு வரும்போது, மலையக மக்கள் மோடியின் வருகையின் ஊடாக மாத்திரமல்ல இந்தியா எப்போதும் தங்களது தாய்நாடு எனும் மன எண்ணம் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போதைய தலைமுறை ஓரளவு இலங்கை தமது தாய்நாடு இந்தியா தமது தந்தையர் நாடு எனும் நிலைக்கு வந்துள்ளனர் எனலாம். இந்த எண்ணப்பாட்டை விதைப்பதிலும் கூட ஊடகங்களின் வகிபாகம் அதிகம் என நினைக்கிறேன். குறிப்பாக ஜல்லிக்கட்டு போன்ற விடயங்களில் அது தமிழர்களின் பாரம்பரிய உரிமை அதற்காக தமிழகம் போராடுகிறது நாமும் போராடியாகவேண்டும் என காலிமுகத்திடலிலே மலையக இளைஞர்களை போராட்டம் செய்யத்தூண்டியது. இதே காலிமுகத்திடலிலே 'இலங்கை இந்திய காங்கிரஸ்' என்கின்ற கட்சியின் சார்பில் தாங்கள் அரசவையில் அமர்ந்திருக்கின்ற போதே தமது மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதற்காக அப்போதைய மலையகத் தலைவர்கள் 'சத்தியாக்கிரகம்' செய்தது பற்றியும் அதற்கு இந்தியா எவ்வாறு பதிற்குறியளித்தது என்பது பற்றியும் இன்றைய தலைமுறையினருக்கு ஆராய நேரமுமில்லை, ஆர்வமும் இல்லை என்று கூட சொல்லாம்.
இவற்றையெல்லாம் தாண்டிய எதிர்பார்ப்புகள் என்றால் 'இந்திய தமிழர்கள்' என்றே நாங்கள் தொடர்ந்தும் அழைக்கப்படவேண்டும் என வாதிட்டு கலாசாரம், பாரம்பரியம, அரசியல் பின்புலங்கள் குறித்து பெருமை பேசுபவர்களுக்கு மோடியின் மலையக விஜயமும் அவருடன் கூடவே இலங்கையின் ஜனாதிபதியினதும் பிரதமரின் வருகையும் அவர்கள் ஆற்றிய உரைகள் ஒரளவு தெளிவைக் கொடுத்திருக்கின்றன என்பதே எனது அபிப்பிராயம். அதுதான் 'இலங்கை' தான் உங்கள் நாடு இந்த நாட்டில் வசிக்கக்கூடிய ஏனைய இன மக்களான சிங்கள மக்கள், இலங்கைத் தமிழ் மக்கள், முஸ்லிம்கள், பேர்கர்கள் அனுபவிக்கக் கூடிய உரிமைகள் சமூக நீதியின் பிரகாரம் மலையக மக்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என்பதை அரசாங்கம் என்றவகையில் பொறுப்புடன் உணர்ந்துகொண்டுள்ளோம் என்கின்ற இலங்கை ஜனாதிபதியின் உரை இந்திய பிரதமர் முன்னிலையில் ஆற்றப்பட்டதே மோடியின் வருகைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நோர்வூட் கூட்டத்தின் முக்கிய கருப்பொருளாக அமைந்தது என நினைக்கிறேன்.
இலங்கை பிரதமரின் உரையிலும் அந்த கருத்து தொணித்தது. இந்திய பிரதமரும் அதையேதான் சொன்னார். கணியன் பூங்குன்றனார் சொன்ன 'யாதும் ஊரே.. யாவரும் கேளீர்' என்ற வரிகளையும் கூறி நீங்கள் தமிழர்கள்.. இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு இந்தியாவில் இருந்து உழைப்புக்காக வந்த நீங்கள் இப்போது இலங்கையையே உங்கள் நாடாக ஆக்கிக் கொண்டீர்கள் என்பதாக அவரது உரை அமைந்தது. ஆக, மலையக மக்கள் மீண்டும்..மீண்டும் இந்தியா மீது அதீத எதிர்ப்பார்ப்புகளைக் கொள்ளத் தேவையில்லை என்பதன் உள்ளர்த்தத்தை மலையக மக்களும் குறிப்பாக அவர்கள் சார்ந்த ஊடகங்களும் புரிந்து கொள்வது பொருத்தமானது.
கேள்வி: பத்தாயிரம் வீடுகள் மலையகத்துக்கு தருவோம், கல்விக்கு உதவிகளைச் செய்வோம் என்கிற அறிவிப்பைத் தவிர வேறு ஒன்றும் பெரிதாக அவரிடம் இருந்து மலையக மக்களுக்காக வெளிப்படவில்லையே?
நான் மீண்டும் அதையேதான் சொல்கிறேன். இவற்றையெல்லாம் தாண்டிய எதிர்ப்பார்ப்புகளை அபிவிருத்தி சார்ந்து எதிர்பார்ப்பது நமது தவறே தவிர அவர்கள் அறிவிக்கவில்லை, வழங்கவில்லை என்பது இந்தியாவின் தவறு அல்ல. இந்திய மக்களுக்கு ஆற்றவேண்டிய அபிவிருத்திச் சுமைகளே இந்தியாவுக்கு அதிகம் இருக்கிறது. அவர்கள் தங்கள் எல்லை என்ன என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள். பத்தாயிரம் வீடுகள் என்கின்ற அறிவிப்புக்கு அப்பால் முதலில் நான்காயிரம் வீட்டு விசயத்துக்கு வருவோம். அந்த வீடுகள் ஒன்றும் மலையக மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும் என்று திட்டமிட்டு வழங்கப்படவில்லையே. வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐம்பதினாயிரம் வீடுகள் என அறிவிக்கப்பட்டன. அது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட போது பங்கிட்டுக்கொண்டதில் ஒரு சிறு பகுதிதான் மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட அந்த நான்காயிரம் வீடுகள்.
ஆனால், மலையக மக்களின் வீட்டுத்தேவை என்பது மூன்று லட்சம். எனவே, மலையக மக்கள் லயன்களில் வாழ்கிறார்கள் அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடுகளை நன்கொடையாக வழங்க இந்தியா முன்வந்திருந்தால் வடக்கு, கிழக்கில் யுத்தம் முடியும் வரை பார்த்திருந்திருக்க வேண்டிய தேவை இல்லை. அதற்கு முன்னமே நடந்திருக்க வேண்டும். எனவே மலையகத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம் என்பது வடக்கில் இடம்பெற்ற யத்ததின் பின்னரான இந்தியாவின் உதவி என்கின்ற புள்ளியில் இருந்து உருவானது. அந்த நான்காயிரம் வீடுகள் கட்டுவதற்கான ஆரம்பத்தை செய்வதற்கே மலையகம் நான்கு வருடங்களைக் கடக்க வேண்டியிருந்தது. காரணம் அதற்கான காணியுரிமையை உரிய ஆவணங்களுடன் வென்றெடுக்க வேண்டியிருந்தது. அதனைத் தமிழ் முற்போக்கு கூட்டணி உரிய முறையில் அரசியல் பேரம் பேசுதல் ஊடாக வென்றெடுத்தன் விளைவாகத் தான் நான்காண்டு கிடப்பில் கிடந்த திட்டம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இது ஒரு கூட்டு முயற்சிதான்.
இந்திய வீடமைப்புத்திட்டத்தின் ஒவ்வொரு வீட்டுக்குமான காணியைப் பெற்றுக்கொடுப்பது, அவற்றை வீடமைப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்வது போன்ற விடயங்களுக்காக அமைச்சர் திகாம்பரத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சு தலா ஒவ்வொரு வீட்டிற்கும்; இலங்கை அரசாங்கத்தின் சார்பில் 15 சதவீதமான அளவு இலங்கை அரச நிதி எமது அமைச்சின் ஊடாக செலவிடப்படுகின்றது. கல்வி விடயங்களில் கூட இதே நிமைகைள்தான். இந்தியா சில உதவிகளைச் செய்யும் நாம் இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து செயற்படும் பாங்கில்தான் அந்த உதவியின் பயன்பாடு அமைகின்றது. இல்லாவிட்டால் நான்காயிரம் வீடுகள் தாமதமாகி பிறகு இல்லாமலே போகும் நிலை எற்பட்டது போன்ற ஒரு நிலைமையே எற்படும்.
இந்தியாவிடம் நாம் ரெடியாக 'ரெடிமேட்' திட்டங்களை எதிர்பார்க்க முடியாது. நமது அரசியல் பலத்திலேயே அனைத்தும் தங்கியிருக்கின்றது. தமிழ் முற்போக்குக் கூட்டணி கடந்த முறை சந்திப்பில் வழங்கிய கோரிக்கையில் 20000 ஆயிரம் வீடுகளைக் கோரியிருந்தோம். இந்திய பிரதமர் பத்தாயிரம் வீடுகளைத் தருவதாக அறிவித்திருக்கிறார். இரண்டு இலட்சம் வீட்டுத்தேவைகளைக் கொண்ட எமக்கு இலங்கை அரசாங்கம் இப்போதைக்கு ஐம்பதினாயிரம் என முதல் கட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றது. அதில் இந்த பத்தாயிரம் வீடுகள் ஒரு போனஸ். அவ்வளவுதான். இரண்டு லட்சம் வீடுகளையுமா? இந்தியாவிடம் எதிர்பார்க்க முடியும்.?
கேள்வி: அப்படியானால் இத்தனைப் பெரிய மாபெரும் பொதுக்கூட்டத்தினை மலையகக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு எற்பாடு செய்ததன் நோக்கம் என்ன?
மலையகக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு செய்தன என்பது வெளியே ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரமை அவ்வளவுதான். இந்திய பிரதமர் சர்வதேச வெசாக் நிகழ்வுகளுக்காகவே இலங்கை வந்தார். ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு இலங்கை வந்தவர் மலையகம் வரவில்லை தமது உறவுகளைப் பார்க்கவில்லை என ஊடகங்கள் எழுப்பியிருந்த விமர்சனத்தின் விளைவும் அதன் தொடர்ச்சியாக மலையக கட்சிகள் குறிப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய உயர்ஸ்தானிகரிடத்திலும் இந்திய வெளியுறவு செயலரின் வருகையின்போதும் இதனை வலியுறுத்தி மலையகத்திற்கான விஜயத்தை உறுதி செய்தன. அதில் டிக்கோயா வைத்தியசாலையை திறந்து வைப்பது ஒரு நிகழ்வு பொதுக்கூட்டத்தை நடாத்தி மக்களைச் சந்திப்பது இன்னுமொரு நிகழ்வு.
இலங்கை அரசாங்கத்தினால், வைத்தியசாலை திறப்புவிழா பொறுப்புகள் அனைத்தும் மாகாண முதலமைச்சருக்கு வழங்கப்பட்டது. பொதுக்கூட்ட ஏற்பாடுகள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சுக்கு வழங்கப்பட்டது. உத்தியோகபூர்வ ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில் அமைச்சும் இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்ற வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் கூட்ட எற்பாட்டு ஒழுங்குகளை செய்தன. இதில் இடையில் இரவில் மைதானத்தை பார்க்க குண்டர்களுடன் வருவது நள்ளிரவில் தமது கட்சி பதாகைகளை மைதானத்தில் காட்சிப்படுத்துவது, பின்னர் காலையில் அவர்களே வந்து அதனை கழற்றிக்கொண்டு செல்வது என இன்னுமொரு கட்சி தடுமாறிக்கொண் டிருந்தது.
கூட்டத்திற்கு கட்சி பேதமின்றி வருமாறு அமைச்சர் திகாம்பரம் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரண்டார்கள். அதில் கொஞ்சம் பேருக்கு வெசாக் காலம் என்பதாலோ என்னவோ தலையில் வெசாக் கூடு போன்ற ஒன்றை மாட்டி அழைத்து வந்து முன்னதாகவே திட்டமிட்டு அமர வைக்கப்பட்டிருந்தார்கள். ஜனாதிபதி அமைச்சர் திகாம்பரத்தின் பெயரையோ, அமைச்சர் மனோ கணேசன் பெயரையோ உச்சரிக்கும்போது அதனை பல்லாயிரம் பேர் கொண்ட கூட்டம் அமைதியாக இருந்தது. முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் என்றதும் வெசாக் கூடுகளை தலையில் போட்டிருந்த கூட்டத்தின் பக்கத்தில் 'ஊ' என்று கூச்சலிட்டார்கள். இது ஆர்ப்பரிப்பா? அவமதிப்பா? என தெரியவில்லை. ஆனால், இரண்டு நாட்டின் முக்கிய தலைவர்கள் பங்குகொள்ளும் முக்கிய ஒட்டம் ஒன்றில் அந்த திட்டமிடப்பட்ட கூச்சல் நாகரிகமானதாக தெரியவில்லை. நோர்வூட் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மலைநாட்டு பதிய கிராமங்கள் அமைச்சே முழுமையாக முன்னெடுத்தது. தமிழ் முற்போக்கு கூட்டணி முற்போக்கினையும் நாகரிகத்தையும் கடைபிடித்தது.
கேள்வி: பிரதமர் மோடி அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பணிகளை மறக்க முடியாது என கூறியுள்ளாரே?
ஆமாம். அவர் ஒருகாலத்தில் மலையக மக்களுக்கு தலைவராக இருந்தவர். இலங்கையில் தேசிய தலைவர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டு பழைய பாராளுமன்ற முன்றலில் சிலையும் புதிய பாராளுமன்றத்தில் உருவப்படமும் கூட வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் மலையக மக்களை ஒரு காலத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவரின் பணிகளை நாம் மறந்துவிடக்கூடாது என்ற தொணியில் பாரத பிரதமர் பேசியிருந்தார். அதற்காக இப்போதிருக்க இருக்கின்ற தொண்டமான்கள் அந்த தொப்பியைப் போட்டுக்கொண்டால் அது கேளிக்கையாகிவிடும். கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனையும் கூட பாரத பிதமர் மலையக மக்கள் இலங்கை நாட்டுக்கு அளித்த சொத்து என சொல்லியிருந்தார்.
கேள்வி: நோர்வூட் கூட்டத்தின் வெற்றி என நீங்கள் கருதுவது என்ன?
இதற்கு முன்னதான இலங்கைக்கான பாரத பிரதமரின் விஜயங்களைப் பற்றிப்பேசுவோர் ஜவர்கலால் நேருவையும், நரேந்திர மோடியையும் பற்றிய மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இடையில் 1987 ல் பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகையைப் பற்றியும் அதனோடு இலங்கையில இடம்பெற்ற அரசியல் மாற்றத்தையும் பேச மறக்கின்றனர். அதன்போது உருவானதுதான் 13வது அரசியலமைப்பு திருத்தமும் மாகாண சபை முறைமையும். அப்போது வந்த பிரதமர் ராஜீவ் காந்தியிடம் இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்களுக்கும் இந்த மாகாகண சபை முறையில் பங்கு வேண்டும் என கோரிக்கை வைத்து வென்றெடுக்கம் திராணியற்ற மலையகத் தலைவர்களே அன்று இருந்தார்கள். அந்த அழுத்தம் அன்று வழங்கப்பட்டிருந்தால் மாகாண அதிகாரப்பகிர்வில் மலையக மக்கள் உள்வாங்கப்பட்டிருப்பார்கள். ஆனால், இந்திய வம்சாவளியினரான மலையக மக்களை ஒரு பொருட்டாகவே அன்று கணக்கெடுக்கவில்லை. அன்று ராஜீவ் காந்தியிடம் இதுபற்றி யாரும் வாய்திறக்கவுமில்லை.
இன்று இந்த நாட்டில் அரசியலமைப்பு மாற்றம் ஒன்று பற்றிய செயன்முறை இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதன் வழிப்படுத்தல் குழுவில் எமது கூட்டணி தலைவர் மனோ கணேசன் மலையகத் தமிழ் மக்களைப் பிரதித்துவப்படுத்தி இருக்கிறார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் உபகுழுக்களில் இருக்கிறோம். அதிகாரப்பகிர்வு உட்பட மலையக மக்களின் உரிமைசார் விடயங்களை அரசியலமைப்பின் ஊடாக மலையக மக்களுக்காக வென்றெடுப்பதே எமது இலக்கு. இலங்கையில் இனப்பிரச்சினை என்றால் அது வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரச்சினை மட்டும்தான் என இந்தியாவும் சர்வதேசமும் கூட நினைத்திருக்கும் நிலையில், அந்த இலங்கைத்ததமிழர்களுக்கு சமமமான அளவில் மலையகத்திலும் தென்னிலங்கையிலும் வன்னியிலும் கூட வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்திய பிரமரையும், இலங்கை பிரதமரையும் இலங்கை சனாதிபதியையும் ஒரே மேடையில் அமரச்செய்து தனித்துவமான அரசியல் அடையாளம் கொண்ட மலையகத் தமிழ் மக்கள் நாங்கள் என ஆயிரக்கண்கில் அணிதிரண்டு உலகுக்கு உணர்த்திருக்கிறோம். இனி இலங்கையில் எந்தவொரு தீர்வாகட்டும் அது மலையக மக்களையும் உள்வாங்கியதுதான் என்பதற்கான அடையாளத்தைக் கொடுப்பதற்கான வரலாற்று நிகழ்வுதான் நோர்வூட் கூட்டத்தின் வெற்றி என தமிழ் முற்போக்குகூட்டணி தெளிவாக கூறிவைக்க விரும்புகிறது.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...