மலையக பெருந்தோட்டப்பாடசாலைகளில் விஞ்ஞான, கணித பிரிவுகளுக்கு கற்பித்தலுக் கென்று இந்தியாவின், தமிழ்நாட்டில் இருந்து நூறு ஆசிரியர்களைக் கொண்டுவர தீர்மானித்துள்ள விடயம் பெரும் பிரச்சினையாக பேசப்படுகின்றது. சகல மொழி ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகளும் அறிக்கைகளும் வெளிவரத் தவறவில்லை. இது பற்றி பலமுனை விவாதங்களை இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் அவதானிக்கலாம். தலைநகரை மாத்திரம் பிரதானமாகக் கொண்டிருந்த 'பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்' தற்போது ஏனைய பிரதேசங்களுக்கும் பரவிவிட்டது.
இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டு ஆசிரியர்களின் தேவை ஏன் திடீரென ஏற்பட்டது என்பது பற்றிய கேள்வி எழுகிறது. அதனையே இவ்வார 'அலசல்' அலசுகிறது. இந்த விடயத்துக்கு முன்பதாக மலையகக் கல்வியின் பின்புலம் பற்றி சிறு அலசல் பார்வை ஒன்றை செலுத்த வேண்டியுள்ளது.
கூலிகளாக வந்தவர்களுக்கு படிப்பு எதற்கு?' என்ற நிலையில் இருந்து பெற்றோரின் உழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக அவர்களின் பிள்ளைகளை பராமரிக்கும் ஒரு நிலையமாக உருவாக்கப்பட்ட' பிள்ளைக்காம்பராக்கள்' (Creche) எனும் கொட்டகைகள் தான் பரிணாம வளர்ச்சிபெற்று இன்று மலையகத் தோட்டப்பாடசாலைகள் (Estate Schools) எனும் பெயருடன் இயங்கிவருகின்றன. மறுபுறத்தில் 'பிள்ளைக்காம்பரா'கலாசாரத்தில் இருந்தும் இன்னும் முழுமையாக விடுதலை பெற்றதாகவும் இல்லை.
1948 இல் சுதந்திரத்தின் தொடர்ச்சியாகவே இலங்கையில் இலவசக்கல்வி எனும் கோட்பாடு சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரவினால் முன்வைக்கப்பட்டபோதும் 1972 ஆம் ஆண்டு காணி சுவீகரிப்புச்சட்டத்தின் பின்னர் தோட்டங்களை அரசு பொறுப்பேற்றது. இதன் பின்னர்தான் படிப்படியாக தோட்டங்களுக்குள் இயங்கிய தோட்டப் பாடசாலைகள் அரசாங்க பாடசாலைகளாக மாற்றம் பெற்றன. எனவேதான் இலவசக்கல்வி–சமத்துவக்கல்வியாக இருக்கவில்லை என்கிற கருத்தை வலியுறுத்த வேண்டியிருக்கின்றது
எது எவ்வாறாயினும் இன்றைய இருநூற்றாண்டு கால மலையக வரலாற்றில் நூற்றாண்டு கடந்த வரலாற்றைக்கொண்ட பல பாடசாலைகளை மலையகத்தில் நாம் காணலாம். எனவே மலையக கல்வி, வரலாறு என்பது மலையக மக்களின் இன்னல்கள் நிறைந்த வாழக்கை வரலாற்றுடன் ஒன்றித்தே பயணித்துள்ளது.
மலையகம் கல்வியில் பின்தங்கிய சமூகமோ, கல்விக்காக பின்நிற்கும் சமூகமோ இல்லை. ஆனால், அந்த தொழில்துறையில் அந்த நிர்வாக முறையில் உள்ள கட்டமைப்பு அவர்களுக்கான கல்விவாய்ப்பை குறைத்திருக்கிறது என்பதே உண்மையாகும். இந்தக் கல்வி வரலாற்று பின்புலத்துடன்தான் இன்று இலங்கையின் சட்டத்துறையில் நீதிபதிகளாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், நிர்வாகத்துறையில் ஆணையாளர் களாகவும், அதிகாரிகளாகவும் ஊடகத்துறையில் பரவலாக பணியாற்றுபவர்களாகவும் பணி புரியும் ஆற்றலை மலையகத்துக்கு வழங்கியிருக்கிறது.
தோட்டப்பாடசாலைகள் கொண்ட ஒரு பிரிவு தனிப்பிரிவாக கல்வி அமைச்சில் ஒரு அலகாக (UNIT) தொழிற்படுகின்றது. இன்றைய நிலையில் இலங்கைக் கல்வி அமைச்சின் கீழ், கல்வித் திணைக்களத்தின் கீழ தோட்டப்பாடசாலைகளை விருத்திசெய்யும் நோக்கோடு அந்த அலகு செயற்படுவது நல்ல வாய்ப்பு. எனினும் அதன் மறுவடிவமாக தோட்டப்பாடசாலைகள் தேசிய கல்வித்துறை நீரோட்டத்திற்குள் இன்னும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை என்பதற்கான குறியீடும் அதுவாகவே இருக்கின்றது..
மொத்தமாக மலையகத்தில் 843 பெருந்தோட்டப்பாடசாலைகள் இருக்கின்றன. இதில் 1 AB தரப் பாடசாலையாக 22 பாடசாலைகள் இருக்கின்றன. தரம் 1 முதல் உயர்தரத்தில் கலை,வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய உயர்தரப் பிரிவுகளை உள்ளக்கிய பாடசாலைகளைக் கொண்டவையே தரம் 1AB பாடசாலையாகக் கணிக்கப்படுகின்றது.
1C தரத்திற்குட்பட்ட 121 பாடசாலைகள் இருக்கின்றன. முதலாம் வகுப்பு முதல் கலை, வர்த்தக உயர்தரப்பிரிவுகளைக் கொண்ட பாடசாலையாக 1C தர பாடசாலை கணிக்கப்படுகின்றது.
தரம் 2 பாடசாலைகள் மத்திய, தென், வடமேல் ஆகிய மாகாணங்கள் களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக 252 பாடசாலைகள் இருக்கின்றன.
இதில் மூன்றாந்தரப் பாடசாலைகளாக 448 பாடசாலைகள் இருக்கின்றது. இது கல்வி அமைச்சின் தகவல்.
இவ்வாறு பாடசாலைகள் தரப்படுத்தப்பட்டிருக்கின்றபோதும் அந்த தந்த பாடசாலைகளுக்கான ஆசிரியர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.
இந்தப்பற்றாக்குறை உடனடியாக ஏற்பட்டது அல்ல. ஆரம்ப காலங்களில் மலையகப்பகுதிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் தேவை வடக்கு, கிழக்கு ஆசிரியர்கள் மூலம் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டது. அவர்கள் மூலம் பல பட்டதாரிகள் மலையகத்தில் உருவானார்கள். ஆனால், இப்போது குறிப்பிட்ட துறைகளுக்கு வடக்கு, கிழக்கிலேயே பட்டதாரி ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு பகுதியில் இருந்து விஞ்ஞான, கணித பாடத் துறைகளுக்கு ஆசிரியர்களை எடுப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்ற போதும் தேவையான விஞ்ஞான பட்டதாரிகள் இல்லை.
மலையகத்தில் நுவரெலியா தவிர்ந்த ஏனைய பாடசாலைகளுக்கு அதாவது விஞ்ஞான உயர்தர பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் உடனடி தேவை இருக்கின்றது. அதற்குரிய தற்காலிக தெரிவு இந்தியா என்பதற்கு பிரதான காரணம் போதனா மொழி தமிழில் இருக்கின்றமையே . இது அமைச்சரின் கூற்று.
அப்படியே அதனை ஏற்றுக்கொண்டாலும் அது வெறுமனே தற்காலிக தீர்வாக இருக்கலாமே தவிர இது நிரந்தர தீர்வாக அமையாதிருந்தால் சிறப்பு. அதற்கான இடத்தை வழங்காது எதிர்வரும் காலங்களில் உள்நாட்டிலேயே அதிகளவு விஞ்ஞான ,
கணித பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலை தெரிவுசெய்வதற்கு உட்படுத்தும் போது இவ்வாறானதொரு இறக்குமதிகளை தவிர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மலையகத்தைப்பொறுத்தவரையில் கடந்த பத்து வருட காலத்தை நோக்குகையில் கணித, விஞ்ஞானத் துறையில் அத்துறையைச் சார்ந்த பெருமளவானோர் உருவாகியிருக்கின்றார்கள். அட்டன் நகரில் நீண்டகாலமாக பல பொறியியல் துறை மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர் ஜீவராஜன் உட்பட பலரைக் குறிப்பிடலாம். இவர் கிழக்கை சேர்ந்தவராக இருந்தாலும் இவரது ஆசிரியர் சேவையின் மூலம் சமூகத்தில் பல பொறியியலாளர்கள் உருவா கியிருக்கின்றார்கள்.
இந்த பத்து வருட காலப்பகுதிக்குள் எத்தனையோ விஞ்ஞான, கணித பட்டதாரிகளை உருவாக்கியிருக்கலாம். உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளைத் தெரிவு செய்யும் மாணவர்களின் மனநிலைபற்றி இங்கு பேசவேண்டியிருக்கிறது. கணிதத்துறையை தெரிவு செய்தவர் பொறியியலாளர் ஆவது என்றும் உயிரியல் விஞ்ஞான துறையை தெரிவு செயதவர் வைத்தியராவது என்ற இலக்குடன் மாத்திரமே களத்தில் இறங்குகின்றனர்.
உதாரணமாக 40 பேர் கல்வி கற்கும் ஒரு வகுப்பில் 12 பேர் பொறியியலாளராக/ மருத்துவராக உயர்கல்விக்கு தெரிவானார்கள் என்று வைத்துக்கொள்வோம். குறைந்தது ஆறு பேராவது விஞ்ஞான பிரிவுக்கு (BSC) தெரிவாகாமலா இருந்திருப்பார்கள்? அப்படிப் பார்த்தால் குறைந்தது அறுபது விஞ்ஞான பட்டதாரிகள் இப்போது மலையகத்தில் இருந்தாக வேண்டும். அவர்கள் எங்கே என்பதுதான் கேள்வி.
பொறியியல் அல்லது மருத்துவம் கிடைக்காதபோது அதற்கு கீழான BSC போன்ற பட்டப்படிப்பை நம்மவர்கள் தெரிவுசெய்வதில்லை. அப்படியே தெரிவு செய்தாலும் இவ்வாறு படித்து விட்டுச் செல்பவர்களின் தொழிற்தெரிவில் ஆசிரியர் தொழிலை தெரிவு செய்பவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே இருக்கின்றது. மலையகம் சார்ந்தவர்கள் இத்துறைகளில் கற்றுத்தேர்ச்சி பெற்றாலும் அவர்களின் தொழில் தெரிவு ஆசிரியர் தொழிலாக அமைவதில்லை.
எனவே சமூகம் என்ற வகையில் கணித, விஞ்ஞான பாட ஆசிரியர்களின் விடயத்தை ஒரு சமூகமாக எவ்வாறு இந்த பணியில் பங்கேற்க முடியும் என்பதிலேயே தீர்வு தங்கியுள்ளது.
இப்போது கூட மத்திய மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டவர்களை அழைத்து ஒரு கட்சிக் காரியாலயத்தில் தங்களது கட்சிதான் இந்த தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தது என வகுப்பு எடுக்கப்பட்டதாம். இதுபோல தான் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை இறக்குமதி செய்து மலையகக் கல்வி வளர்ச்சிக்கு உதவியதாக (இது நடைமுறைக்கு வந்தால்) கல்வி இராஜாங்க அமைச்சரும் மார்தட்டிக்கொள்ளலாம்.
இவை போன்ற செயற்பாடுகள் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டவை. இப்போதைய கல்வி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பும் ஏற்பாடும் தற்காலிகமானதே தவிர அதுவே நிரந்தரமாகிவிட முடியாது. மலையக சமூகம் தமக்கான விஞ்ஞான, கணித பாட ஆசிரியர்களை உருவாக்கும் பணியை தானே பொறுப்பேற்க வேண்டும். அதற்கு அர்ப்பணிப்பான சமூக அக்கறையாளர்களாக கல்விச் சமூகமும் கல்வி கற்கும் இளைய சமூகமும் செயற்பட முன்வரவேண்டும். அதுவரை இறக்குமதிகளை எதிர்ப்பதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...