Headlines News :
முகப்பு » , , , » 'இந்திய பக்தியும்” காஷ்மீர் விடுதலைப் போராட்டமும் - என்.சரவணன்

'இந்திய பக்தியும்” காஷ்மீர் விடுதலைப் போராட்டமும் - என்.சரவணன்

1999 இந்தியாவில் கார்கில் யுத்தம் நிகழ்ந்த போது இந்தியாவுக்கு ஆதரவான உளவியலுக்குள் எப்படி இலங்கைவாழ் தமிழர்களும் சிக்க வைக்கப்பட்டார்கள் என்பது பற்றி 1999இல் சரிநிகரில் வெளியான கட்டுரை. உண்மைக்கும் புனைவுக்கும் உள்ள இடைவெளி பற்றிய கட்டுரை.

"இந்திய மாயை”க்குள் சிக்காத இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறைவென்றே கூறலாம். இந்தியாவை எதற்கும் விட்டுக்கொடுக்காத அளவுக்கு பழக்கப்பட்டுள்ளோம். இந்தியா எமது நாடு என்றோ அல்லது இந்தியா எங்களுக்காக "குரல் கொடுக்கின்ற", "குரல் கொடுக்கக்கூடிய" நாடாக எம்மில் பலர் நம்ப பழக்கப்பட்டுள்ளனர். 

கிரிக்கெட் போட்டி ஆரம்பித்து விட்டால் இந்தியா வெல்ல வேண்டுமென பிரார்த்தனை செய்வது தொடக்கம், தமது இருக்கின்ற சொத்துக்களை பந்தயம் கட்டுவது, இதனால் சண்டைகள் தோன்றுமிடத்து அதற்குமுகம் கொடுப்பது, இந்தியா வெற்றியீட்டினால் வெடி கொழுத்தி, "தண்ணி பார்ட்டி" வைத்து சந்தோஷத்தைக் கொண்டாடுவது வரை நமது இந்திய ஆகர்ஷிப்பைக் காண முடியும்.

இது வெறுமனே விளையாட்டு மட்டுல்ல இந்திய அரசியல் பற்றிய புரிதலும் இப்படித் தான் இருக்கிறது. இந்தியாவை எதிர்த்து நிற்கும் எந்தஒரு நாடும் எமக்கும் எதிரி நாடு, இந்தியா அணுச்சோதனை நடத்தினால் அதனை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ இங்குவாழும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு வெற்றிப்பெருமிதம் கொள்வர். பாகிஸ்தானோ, சீனாவோ, அமெரிக்காவோ இதனைக் கண்டிக்க முயன்றால் அந்நாடுகள் எமது ஆத்திரத்துக்குப் பலியாகும். பி.ஜே.பி. கவிழாமல் காக்க வேண்டும் எனத் தோன்றும். (பி.ஜே.பி. தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவான கட்சி என்கிற நம்பிக்கை வேறு)

இந்தியாவை இந்தியா நியாயப்படுத்தாத பக்கத்திலிருந்து கூட நாங்கள் நியாயப்படுத்துவோம். இந்திய பார்ப்பனிய, இந்துத்துவ, சுரண்டும் வர்க்க, ஆணாதிக்க நலன்களிலிருந்து பிறக்கும் அனைத்து விளைவுகளுக்கும் எம்மிடம் சமாளிப்புகள் இருக்கும்.

ஆனால் இந்தியா ஒரு போதும் தமிழ் மக்களுக்கு சார்பாக, ஏன் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்காகக் கூட இருந்ததில்லை என்பதுதான் வரலாறு கற்றுத் தந்த பாடம். இலங்கையின் அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இந்தியா தலையிட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியாவின் நலனை கருத்திற்கொண்டுதான் தலையிட்டு வந்துள்ளது. அது மட்டுமன்றி இங்குள்ள அனைத்து பிரச்சினைகளையும் இந்திய நலனுக்கு காவு கொடுக்கும் வகையில் தான் நடந்துகொண்டு வந்துள்ளது. இவை குறித்து ஏற்கெனவே சரிநிகரிலும் பல கட்டுரைகள் பிரசுரமாகியிருக்கின்றன.

இந்தியா ஒரு போதும் ஒரு நாடாக இருந்ததில்லை. எப்படி இலங்கை என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு நாடோ, இலங்கை என்பது எப்படி ஒரே நாடு என்று கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறதோ அது போலத்தான் இந்தியாவும் ”பாரத தேசம்”, ”இந்திய தேசம்”எனும் கருத்தாக்கமும் போலியானதும், கற்பிதமானதுமாகும். இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாகத் தான். இது வரை இருந்துவருகிறது. காலனித்துவ சக்திகளின் நிர்வாக வசதிக்காக எப்படி இலங்கை என்ற ”ஒரு” நாடு உருவாக்கப்பட்டதோ அது போல தான் இந்தியாவும் காலனித்துவ சக்திகளால் ஒரு நாடாக்கப்பட்டதும்.

இந்தப் புனைவுகளுக்கு ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த வெளியீடுகள், (சஞ்சிகைகள், பத்திரிகைகள்) காரணமாக இருந்தன. இன்று சக்தி டிவிக்குடாக, சண் டி.வியும், சுவர்ணவாஹினிக்கூடாக ராஜ்டிவியும், எ.என்.எல். உக்கூடாக எம்.டி.வி.யும் அந்தப் பங்களிப்பை ஆற்றுகின்றன. இந்திய அரசியல் பிரச்சாரம், நுகர்பொருள் பிரச்சாரம், மற்றும் மோசமான ஆதிக்க கலாசாரக் கூறுகளைக்கொண்ட சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள், பொப் பாடல்கள் என இதனூடாக வந்து சேர்ந்துகொண்டேயிருக்கின்றன.


இன்று தென்னிலங்கையில் எப்படி ஒரே இனம், ஒரே மதம், ஐக்கிய இலங்கை, நாடு துண்டாடப்பட விட முடியாது எனும் கருத்தாக்கம் எல்லோர் மத்தியிலும் மரபான கருத்தியலாக புனையப்பட்டுள்ளதோ அது போலத்தான் இந்தியத் தேசியம் பற்றி புனையப்பட்டுள்ள கற்பிதங்களும்.

இந்தியா வலுக்கட்டாயமாக இணைத்து வைத்திருக்கின்ற பல தேசங்களும் சுயாட்சி கோரி போராடி வருகின்றன. அப்போராட்டங்கள் வெளியுலகுக்கு தெரியாதவாறு ஒளித்து வைக்கப்பட்டு வருகின்றன. அப்போராட்டங்களை ”பிரிவினைவாதம்” என்றும் அப்போராளிகளை ”பயங்கரவாதிகள்”, ”நாசகார சக்திகள்”, ”ஊடுருவல்காரர்கள்” என்றும் பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிறது. இது மக்கள் மத்தியிலும் ஆழமாக புனையப்பட்டிருக்கிறது.

நாம் பலியாகியிருக்கும் பல்வேறு புனைவுகளைப் போலவே இந்தப் புனைவுகளாலும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரிவினர் பற்றி எதுவும் தெரியாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளோம். இன்றைய காஷ்மீர் விவகாரத்திலும் இப்படித்தான். திரும்ப திரும்ப பேசப்படும் விடயம்
“...முதலில் போரைத் தொடங்கியது பாகிஸ்தானா, இந்தியாவா, முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தப்போவது யார், கிளின்டன் பாகிஸ்தானை எச்சரிப்பு, இரு நாடுகளுக்கிடையிலான ராஜதந்திர உறவுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் இரு நாடுகளுக்கிடையிலும் போர் மூளும் சாத்தியம்...”
இப்படிப்பட்ட பரபரப்பான செய்திகளுக்குள் உருமறைக்கப்பட்ட விடயம் தான் காஷ்மீர் மக்களின் பிரச்சினை.

இன்று காஷ்மீர் மக்களின் விடுதலைக்காகப் போராடுபவர்கள் “ஊடுருவல்காரர்கள்”, ”அத்துமீறல்காரர்கள்”, ”ஆக்கிரமிப்பாளர்கள்', பயங்கரவாதிகள்”, நாசகார சக்திகள், இதனை திருப்பித் திருப்பி எமது தொடர்பு சாதனங்கள் கூறவே, நாங்களும் அப்படியே அதனை விழுங்கி விடுகிறோம். அதனை அப்படியே நம்பிவிடுகிறோம். அம்மக்களின் உரிமைகளையும், அம்மக்கள் மீதான கொடுமைகளையும் மறந்து விடுகிறோம், அல்லது திட்டமிட்டு மறக்கடிக்கப்படுகிறோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளிருந்து கொண்டுதான் தற்போதைய “இந்திய-பாகிஸ்தான்” பிரச்சினையை அடக்கப்படும் காஷ்மீர் மக்களின் நலனில் இருந்து பார்க்க வேண்டியிருக்கிறது. உண்மையில் காஷ்மீர் மக்கள் இந்த இரு நாடுகளையும் ஆக்கிரமிப்பாளர்களாகக் கூறிக்கொண்டிருக்க மறுபுறம் இரு நாடுகளும் மாறி மாறி பரஸ்பரம் ஆக்கிரமிப்பாளர்கள் என குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கும் விநோதத்தைக் காண்கிறோம்.

ஜம்மு காஷ்மீர் பிரதேசம் 217,000 சதுரகிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பிரதேசம். (இதனை விடச் சிறிய நாடுகள் 93 உலகில் உள்ளன) இதில் இந்தியா ஆக்கிரமித்துள்ள பகுதி135,000 சதுர கிலோமீற்றர் பகுதியாகும். (இதில் 1962 இலிருந்து சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் 35,000 சதுர கிலோமீற்றர் பகுதியும் உள்ளடங்கும்.) அஸாத் காஷ்மீர் எனும் 11,000 கிலோ மீற்றர் பகுதி பாகிஸ்தானின் மறைமுக ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பகுதியாகும். கில்கித்-பல்திஸ்தான் எனும் 71,000 கிலோமீற்றர் பகுதி பாகிஸ்தானின் நேரடி ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பகுதி. 

இவ் அத்தனை பகுதியிலுமாக காஷ்மீரின் மொத்த சனத்தொகை 13.5 மில்லியன்களாகும். (இது உலகில் உள்ள 127 நாடுகளின் சனத் தொகையையும் விட அதிகமானதாகும்.) இந்திய ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் 8.5 மில்லியன் மக்களும், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்ட பிரதேசங்களான அஸாத் காஷ்மீர்மற்றும் கில்கித்-பல்திஸ்தான் பகுதிகளில் முறையே2.5 மில்லியன் மற்றும் ஒரு மில்லியன் மக்களும் அடங்குகின்றனர். இது தவிர 77 வீத முஸ்லிம்களும், 20 வீதஇந்துக்களும் ஏனைய 3 வீதம் சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்களும் அடங்குகின்றனர்.


உலகின் மிகவுயர்ந்த மலைத் தொடர்களால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்குப் பிரதேசம் தான் ஜம்மு காஷ்மீர். 14ஆம் நூற்றாண்டு வரை (இந்திய) இந்து மன்னர்களினாலும் பின்னர் (1579) மொகலாய ஆட்சியின் கீழும் வந்த இப்பிரதேசம் 18ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் ஆட்சியினரின் கட்டுப்பாட்டிலிருந்தது. 1819இலிருந்து சீக்கியப் பேரரசு இங்கு உருவாக்கப்பட்டதுடன் 1846இல் இது பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்படும் வரை ரஞ்சித்சிங் என்பவரால் ஆளப்பட்டதாக அறியப்படுகிறது. தற்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது இரண்டாவது ஆங்கில சீக்கியயுத்தத்தின் பின்பு பிரித்தானியர் காஷ்மீர் மீதானகட்டுப்பாட்டினை ஜம்முவிலிருந்த பட்டத்து மகாராசாவிடம் ஒப்படைத்ததன் மூலம் 1847இல் உருவாக்கப்பட்டது. இப்படி ஒரு மாநிலம் உருவாக்கப்பட்டமைக்கு உள்நோக்கமும் உண்டு. இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தான், சீனா என்பவற்றிற்கும் இடையில் ஒரு தாங்கு அரசை (Buffer State) உருவாக்குவதே இதன்  உள்நோக்கமாகும். அப்போதைய கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிர்ப்பந்தத்தினால் ஏராளமான சமஸ்தானங்கள்இந்தியாவுடன் இணைவதென்ற தீர்மானத்தையே எடுத்தன. இதன்படி காஷ்மீரும் இணையவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. இங்கே பெரும்பான்மையானோர் முஸ்லீம் மக்கள். ஆனால் ஆட்சியாளர் இந்துக்கள். மகாராஜா ஹரிசிங் ஆட்சியிலிருந்தார்.

இந்தியாவின் முதல் பிரதமரான நேருவும் கூட காஷ்மீரிய பிராமணர் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் சனத்தொகையில் 12 வீதமுஸ்லிம்கள் ஜம்மு காஷ்மீரில் தான்வாழ்கின்றனர். காஷ்மீர் தொடர்ந்தும் சுதந்திரமாக இருக்கும் என இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் கூட மகாராஜா ஹரிசிங்குக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது. ஆனால் முதலில் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலுமிருந்த பதான்ஸ் என்ற இனக்குழுவினர் படையெடுப்பு நடத்தத் தொடங்கிய போது (1947 செப்டம்பர்) இந்த நம்பிக்கை தளர்ந்தது. இதனால் மகாராஜா இந்தியாவின் உதவியை நாடினார்.

இந்தியா இந்தக் கோரிக்கையை தனக்குசாதகமாகப் பயன்படுத்தியது. இந்த பிரதேசம் இந்தியாவுடன் மாநிலமாக இணைந்த பின்னரே படைகளை அனுப்பி ஆக்கிரமிப்பை முறியடிப்பதாகக் கூறினார். இதன் விளைவாக 1947 ஒக்டோபர் 27 அன்று ஹரிசிங் காஷ்மீரைஇந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். இதனைத் தொடர்ந்து இந்தியப் படைகள் காஷ்மீரில் விமானத்தின் மூலம்இறங்கி ஆக்கிரமிப்பை பின்வாங்கச் செய்தன. இதன் போது பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமே அசாத் காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.

மகாராஜா ஹரிசிங் ஒப்பமிட்ட இணைப்பு ஆவணத்தில் ஏழாவது வாசகத்தின் பிரகாரம்”இந்த ஆவணத்திலுள்ள எதுவேனும் ஏற்பாடு இந்தியாவின் எதிர்கால அரசியல் அமைப்பு எதனையும் ஏற்குமாறு என்னை வற்புறுத்துவதாகாது. அல்லது அத்தகைய அரசியலமைப்பு எதனதும் கீழ் இந்திய அரசாங்கத்துடன் உடன்படிக்கைகள் செய்யும் எனது சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதுமாகாது” என்கிறது. இந்த இணைப்பின் காரணமாகத் தான் இந்திய அரசியலமைப்பின் 370வது உறுப்புரை சேர்க்கப்பட்டது. இதன்படி இந்திய அரசியலமைப்பு திருத்தங்களின் போது ஜம்மு காஷ்மீர் விடயத்தில் அந்த மாநிலத்தின் சம்மதமின்றி மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமன்றி காஷ்மீருக்கு மட்டும் இந்தியாவின் எந்த மாநிலத்துக்கும் இல்லாத வகையில் தனியானமாநில அரசியலமைப்பைக் கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் கண்ட உடன்பாட்டின்படி ”மாநிலத்தில் இணைப்பு விவகாரம் பிணக்கிற்குஉட்படுமானால் இணைப்பானது அந்த மாநில மக்களது விருப்பத்தின்படி தீர்மானிக்கப்படும். காஷ்மீரைப் பொறுத்தளவில் அங்கு சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டு படையெடுப்பாளர் அகற்றப்பட்டதும் இணைப்பு தொடர்பாக அங்குசர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படும்” என இந்திய தரப்பில் உத்தரவாதம் அளித்திருந்தனர். ஆனால் இன்று வரை அப்படியொரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படாமல் ஏமாற்றி வந்திருக்கிறது இந்தியா. இந்தியாவைப் பொறுத்தளவில் மேற்படி உத்தரவாதத்தில்” “படையெடுப்பாளர்கள் அகற்றப்பட்டதும்” எனும் வாசகத்தை சாதகமாக்கிக்கொண்டு (காஷ்மீரின் ஒரு பகுதியான அசாத் காஷ்மீர் இன்னும் ஆக்கிரமிக்கப்பட்டபடி இருப்பதைக் காட்டிவருகிறது. இந்த ”அகற்றுதல்” லுக்காகவே முன்னர் இரண்டு யுத்தங்கள் புரியப்பட்டிருந்தன. அப்படியொருதேர்தல் வைத்தால் அதன் முடிவுகள்எப்படி இருக்கும் என்பதை விளங்கிக்கொண்டே இந்தியா இன்னமும் நொண்டிச் சாட்டுகளை கூறி இழுத்தடித்து வருகிறது.


காஷ்மீர் மக்கள் ஏமாற்றப்பட்டதும், காஷ்மீரை ஆக்கிரமித்து அங்கு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து, ஜனநாயகக் கோரிக்கைகளை நசுக்கியதுமே காஷ்மீரின் முதலாவது விடுதலை இயக்கமான ஜம்மு காஷ்மீர்விடுதலை இயக்கம் (JKLF-Jammu Kashmir Liberation Front) 1964இல் தோற்றுவிக்க காரணமானது. பூரண தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போராடத் தொடங்கியது. அதன் பின்னர் பல இயக்கங்கள் தோன்றின. அவற்றில் சிலவற்றை பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்த இந்தியாவும், இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த பாகிஸ்தானும் இயக்கங்களைக் கையாண்டு வருகின்றன. வேறும் சில இயக்கங்கள் இருநாடுகளையும் எதிர்த்து போரிட்டு வருகின்றன. இன்று மொத்தம் 43 இயக்கங்களுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.

சில இயக்கங்கள் பாகிஸ்தானோடு இணைவதையும் சில இயக்கங்கள் இந்தியாவோடு இணைவதையும், சில இயக்கங்கள் தனிநாடாகவே இருப்பதையும் தங்களின் கொள்கையாகக் கொண்டுள்ளன. எது எவ்வாறிருப்பினும் மக்களை இது குறித்து தீர்மானிக்க சந்தர்ப்பமளிக்க கோரப்பட்டு வருகிறது.

எப்படியிருந்தபோதும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்கும் இரு நாடுகளுமே காஷ்மீர் மக்களைப் பொறுத்தவரை எதிரிகள் தான். இது வரை இருநாடுகளும் போராட்டத்தை நசுக்க தமது நாட்டுபடைகளைக் கொண்டு பண்ணி வரும் அட்டுழியங்களும், பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும், படுகொலைகளும் பெரும்போக்கிற்கூடாக (mainstream) வெளித்தெரியாமல் போய்விட்டுள்ளது. விடுதலை இயக்கங்களின் ஆவணங்கள், பிரசுரங்கள் தான்இவற்றை அம்பலப்படுத்துவனவாக இருக்கின்றன. உலகின் பரிய ஜனநாயக நாடு என்கின்ற போலிமுகத்தை வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டு அஸாமிலும், பஞ்சாப்பிலும், மிசோராமிலும், நாகாலாந்திலும், காஷ்மீரிலுமாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை திட்டமிட்டு நசுக்கும் பயங்கரவாதத்தை நாம் நுணுக்கமாக அறிந்து கொண்டிருத்தல் அவசியமாகும். ஏனெனில் இந்த பின்னணிகளை வைத்துத் தான் இந்தியா ஈழ விடுதலைப் போராட்டத்தில் வகிக்கும் பாத்திரத்தைக் கணிக்கலாம்.

நன்றி - சரிநிகர்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates