மலையக பாடசாலைகளுக்கு கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களைக் கற்பிப்பதற்கான பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களைக் கற்பிக்க போதிய துறைசார்ந்த பட்டதாரிகள் இல்லாமையே இதற்குக் காரணமாகும்.
மலையகத்தில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள 25 கணித, விஞ்ஞான பாடசாலைகளுக்கும் ஏனைய விஞ்ஞான பிரிவுகளுடன் இயங்கும் பாடசாலைகளுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பெரும் எண்ணிக்கையிலான பட்டதாரி கணித, விஞ்ஞான ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஏற்கனவே மலையகத்திலுள்ள பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம் கற்பிப்பதற்கு போதிய ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
பெரும்பாலும் கணித, விஞ்ஞானத்துறை பட்டதாரிகள் ஆசிரியத் தொழிலுக்கு வரவிரும்புவதில்லை. காரணம், ஆசிரியத் தொழிலை விட வேறுதுறைகளில் அவர்களுக்கான கேள்வி அதிகம் இருப்பதும், அதிக சம்பளம் கிடைப்பதும் ஒரு காரணமாகும். அவ்வாறு சிலர் ஆசிரியர் தொழிலுக்கு வந்தாலும் கூட,பின்னர் தமது கல்வித் தகைமைகளை அதிகரித்துக்கொண்டு, வேறு துறைகளுக்குச் சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் ஆசிரியர்களாக கணித, விஞ்ஞான பட்டதாரிகள் நிலைத்து நிற்பது குறைவாகிவிட்டன.
இதுபோன்ற பல காரணங்களினால் ஆசிரியர்களாக வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவடைந்துள்ளன. மலையக பாடசாலைகளில் உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் கற்கும்; கற்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அவர்களுக்கு கற்பிப்பதற்கு போதிய பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற முடியாதிருப்பதுடன், பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பையும் இழக்க வேண்டிய நிலைக்குட்படுகின்றனர்.
அநேகமாக உயர்தர கணித, விஞ்ஞான மாணவர்கள் தனியார் வகுப்புக்களை நம்பியவர்களாகவே இருக்கின்றனர். தனியார் வகுப்புக்களுக்குச் செல்லாத மாணவர்களே இல்லையெனலாம். இந்த நிலைமையை பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். அளவுக்கதிகமான கட்டணத்தை வசூலிக்கின்றனர். ஒரு மணி நேர டியூசன் வகுப்புக்கு 1000 ரூபா முதல் 1500 ரூபாவரை அறவிடும் விஞ்ஞான ஆசிரியர்கள் மலையகத்தில் தாராளமாக இருக்கின்றனர்.
இவர்களிடம் சமூக உணர்வோ, இன உணர்வோ சிறிதளவும் இருப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் மாதமொன்றுக்கு 1000 ரூபா முதல் 1500 ரூபாவரை கட்டணமாக அறவிடுகின்றனர். இது ஓரளவு சாதாரணமான கட்டணம் என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.
மலையக பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை தீர்ப்பதற்கு பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வேறு மாகாணங்களிலுள்ள விஞ்ஞான பட்டதாரிகளை மலையக பாடசாலைகளுக்கு உள்வாங்க வேண்டுமென்பது அதில் பிரதான கோரிக்கையாகும்.
அதேவேளை, வடக்கு –கிழக்கு– அம்பாறை பிரதேசங்களிலுள்ள பட்டதாரிகள் தமக்கு அரச சேவையில் நியமனம் வழங்குமாறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களில் கணித, விஞ்ஞான பட்டதாரிகள் இருந்தால் அவர்களும் மலையக ஆசிரிய சேவைக்கு விண்ணப்பிக்க முடியுமென்று கூறப்பட்டது. ஆனாலும் அவர்களில் விஞ்ஞான, கணித பட்டதாரிகள் இருக்கின்றனரா என்றகேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கலை, வர்த்தக பட்டதாரிகள் எனவும் இவர்களால் விஞ்ஞான பாங்கள் கற்பிக்க முடியாதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே ஓய்வுபெற்ற கணித, விஞ்ஞான ஆசிரியர்களின் சேவைகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதற்கென பாராளுமன்ற அனுமதியும் பெறப்பட்டுள்ள நிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் அதில் போதியளவு ஆர்வம் காட்டவில்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே கல்வியமைச்சினால் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பாடங்களைக் கற்பிப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட 25 பாடசாலைகளுக்கும் தேவையான விஞ்ஞான உபகரணங்கள், தளபாடங்கள், ஆய்வுக் கருவிகள் அனைத்தும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையிலும் வகுப்பில் இணைந்து படிப்பதற்கு மாணவர்கள் தயாராக இருக்கின்ற நிலையிலும் அங்கு தேவையான பொருத்தமான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லையென்றால் அதனால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. மாணவர்களை வெறுமனே வகுப்பில் அனுமதித்து அவர்களது வாழ்க்கையை வீணாக்க முடியாது.
இந்த நிலையில் இந்தியாவிலிருந்து கணித, விஞ்ஞான ஆசிரியர்களை வரவழைத்து இங்குள்ள பாடசாலைகளில் கற்பிப்பதற்கான திட்டத்தை கல்வி ராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் முன்வைத்துள்ளார். இது ஒரு நல்ல திட்டமாகும்.
ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வாக அமையுமே தவிர நிரந்தர தீர்வாக அமையாது என்பது பெரும்பாலானோரின் அபிப்பிராயமாகும். எனவே இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். எதிர்காலத்திலும் கூட நமது நாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் கணித, விஞ்ஞான பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைந்து கொள்வார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கான மாற்றுத் திட்டம் என்னவென்பதை ஆராய வேண்டும்.
தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு குறிப்பாக பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரிக்கு அதிக எண்ணிக்கையிலான க.பொ.த. உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு குறுகியகால நீண்டகால பயிற்சிகளை வழங்கி பாடசாலைகளுக்கு நியமனம் செய்ய வேண்டும். இது ஒரு சாத்தியமான நிரந்தரமான தீர்வாக அமையக்கூடும்.
உடனடித் தீர்வாக தற்போது க.பொ.த. உயர்தர விஞ்ஞான, கணித பிரிவில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட திட்டத்தின் கீழ் குறுகியகால பயிற்சிகளை வழங்கி அவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம். கணித, விஞ்ஞான கற்பித்தல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு பயிற்சிகளை வழங்கி நியமிப்பதுடன் எதிர்காலத்தில் அவர்களின் தகைமைகள் மற்றும் கற்பிக்கும் ஆற்றலை அதிகரித்துக் கொள்வதற்கான திட்டங்களையும் முன்வைக்க வேண்டும். இதன் மூலம் தற்போதைய இக்கட்டான நிலையிலிருந்து ஓரளவு விடுபட முடியும்.
எவ்வாறெனினும் தற்போது நிலவும் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பது கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் முன்னுள்ள மிகப்பெரிய சவாலாகும். அவருடைய இந்தப் பதவிக் காலத்திலேயே இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
மலையகத்திற்கு உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம் கற்பிக்க 25 பாடசாலைகள் உருவாக்கம், மூன்று தேசிய பாடசாலைகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி ஆகியவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு காரணமாக இருக்கும் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனே இதற்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது அனைவரிதும் எதிர்பார்ப்பாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...