Headlines News :
முகப்பு » » 'கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது' - மல்லியப்புசந்தி திலகர்

'கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது' - மல்லியப்புசந்தி திலகர்

(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 17)

நமது தொழில்துறைநோக்கி புதிதாக உள்நுழையும் 'முள்ளுத்தேங்காய்' எவ்வாறு விஸ்தரிக்கப்படப் போகின்றது என்பதை நாம் தொடர்ச்சியாக அவதானித்து வரவேண்டியிருக்கிறது. அது ஒரு புறமிருக்க தேயிலைத் தொழில்துறை கட்டமைப்பு மாற்றம் எவ்வாறு இடம்பெற்று வந்துள்ளது என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். 

1992ஆம் 22 பிராந்திய கம்பனிகளாக பெருந்தோட்டங்கள் பிரிக்கப்பட்டு தனியாருக்கு வழங்கப்பட்டபோது முழுமையாக எல்லாத்தோட்டங்களும் வழங்கப்படவில்லை. அல்லது தனியார் கூட்டுப்பிராந்திய கம்பனிகள் எல்லாத்தோட்டங்களையும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. சில மாவட்டங்களில் சில தோட்டங்கள் அரச நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கூட்டுத்தாபனங்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்டயாக்கம் என்பனவற்றின் கீழ் இயங்கத்தொடங்கின. எல்கடுவ பிளான்டேஷன் எனும் கம்பனி ஆரம்பத்தில் பிராந்திய கம்பனியாக இயங்கி பின்னர் பொறுப்பேற்ற நிறுவனம் அதனைக் கைவிட அதனையும் அரச பொறுப்பிலேயே இயக்கத்தொடங்கியது. 

இந்தக்கட்டமைப்பு மாற்றம் பெருந்தோட்டங்களக்குததான். 'சிறுதோட்டங்கள்' என வகைப்படுத்தப்பட்ட 50ஏக்கருக்கு மேற்படாத பல்வேறு அளவினைக்கொண்ட தனியார் தோட்டங்களும் ஆங்காங்கே இயங்கிக்கொண்டிருந்தன. அவை இந்த பிராந்திய கம்பனிகள் எனும் வகுதிக்குள் அடங்காது. இவற்றையும் கடந்ததுதான் 'சிறுதோட்ட உடமையாளர்கள்' தனிநபர்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்து அதனூடாக தேயிலைத் தொழிலை முன்னெடுப்பது. 

இந்த தனியார் சிறுதோட்ட உடமையாளர்கள் என்போர் வீதாசார அடிப்படையில் தாழ்நில தேயிலை உற்பத்தியில் அதிகமாக அமைந்தது. ஆக, மலையகத் தமிழர் பெரும்பாலும் வாழும் உயர்நில, மத்திய நில தேயிலைத் தோட்டங்கள் ஏதேனும் ஒரு வகையில் 'நிறுவனமயப்பட்ட' முறைமையின் கீழ் தொடர்ந்து வைக்கப்பட சிங்கள பெரும்பான்மை மக்கள் வாழும் தாழ்நிலத் தேயிலை உற்பத்தி பிரதேசங்கள் 'சிறு தேயிலை தோட்ட உடமையாளர்கள்' (Tea Small holders) எனும் முயற்சியில் அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

 அவர்கள் ஆளுக்கு ஆள் தேயிலைக்காணிகளின் பரப்பளவு மாறுபட்டாலும் அவர்கள் 'உடமையாளர்கள்' எனும் நிலைமைக்கு மாற்றப்பட்டனர். அந்த பிரதேசங்களில் ஏற்கனவே பெருந்தோட்டங்களில் 'செக்ரோலில்' பதிவு செய்து தொழிலாளிகளாக வேலை செய்த மலையகத் தமிழர்கள் 'மாத்தையா தோட்டத்திற்கு' வேலைக்குப்போகும் அன்றாடத் தொழிலாளர்கள் ஆகிப்போனார்கள். 

'சிறு தோட்ட உடமையாளர்களை' நமது மக்கள் குறிப்பிட்ட உடமையாளரின் பெயர்களைக்கொண்ட 'மாத்தையா' தோட்டங்கள் என்றே கொண்டனர். கொள்கின்றனர். இந்த நடைமுறை பெருமளவில் இடம்பெற்றது களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டத்தின் ஒரு பகுதி, கண்டி மாத்தளை மாவட்டத்தின் ஒரு பகுதி என அமைந்தது. இந்தக் கட்டமைப்பு மாற்றங்கள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல.

 இது 1972ஆம் ஆண்டுக்குபிறகு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள். 1980களில் துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டபோதும் அந்த ஆற்றுப்படுக்கையை அண்மித்திருந்த பெருந்தோட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு வெவ்வேறு பெருந்தோட்டங்களுக்கு தொழிலாளர்களாகவே மாற்றப்பட்டனர். அவர்களுக்காக அமைக்கப்பட்ட இரட்டை வீடுகள் 'மாவலி குவாட்டர்ஸ்' என அழைக்கப்படுவதன் காரணம் இதுதான். இவர்கள் வெளியேற்றப்பட்டதுடன் அவர்கள் வாழ்ந்த  பெருந்தோட்டங்கள் ஒன்றும் தண்ணீரில் மூழ்கிவிடவில்லை. அவை துரித மகாவலி அபவிருத்தித்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டபோது அவையும் 'மாத்தையா' தோட்டங்களானது. 

நமது மக்களும் இந்த மாத்தையா தோட்டத் தொழிலாளர்களாகவே தொடர்ந்து தொழிலாளர்களாயினர். ஆனால், பெருந்தோட்ட நிர்வாகம் இருந்தபோது நடைமுடிறையில் இருந்த முறையான தொழிலாளர்களாக அல்ல. அவ்வப்போது அந்த தேயிலை சிறு தோட்ட உடமையாளர்களின் காணிகளில் வேலைக்கு போதல். இவ்வாறு அகப்பட்ட ஒரு தோட்ட மக்கள்தான் கொத்மலை திஸ்பன மொச்சகொட்ட, கட்டுக்கல போன்ற தோட்ட மக்கள். இவர்கள் இப்போது மாத்தையா தோட்ட வேலைகளையும் இழந்து தமக்கு பாரம்பரியமாக இருந்த லயன் அறைகள் தவிரந்த வேறு எந்த உடமையும் தொழிலம் இல்லாதவர்களாக 33 வருடங்கள் வாழ்ந்துவிட்ட நிலையில் புதிய தலைமுறையினர் பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவர்களின் குறித்த பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்று 2017 ஏப்பிரல் 7 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. ஹன்சார்ட்டின் (தொகுதி 251 -இல 12)1574 முதல் 1587 வரையான பக்கங்கள் இந்த மக்களின் பிரச்சினைகளை விரிவாக பேசியுள்ளதுடன் அவர்களுக்கான தீர்வு பற்றிய அமைச்சருடனான விவாதமும் இடம்பெற்றது. இங்கு வாழும் மக்களும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களையும் சந்திப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர். 

துரதிஷ்டவசமாக நாட்டில் ஏனைய பிரதேசங்களலில் இடம்பெறும் காணிப்போராட்டங்களின் அளவுக்கான முக்கியத்துவத்தை மலையக காணிப் போராட்டங்கள் முதன்மைப்படுத்தப்படுவதோ முன்னுரிமைப்படுத்தப்படுவதோ இல்லை. மேற்படி ஹன்சாட் பதிவுகள் தமிழ் ,சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பதிவு பெற்றுள்ளன. அவற்றை இணையத்திலும் பெறலாம். இதுபோன்ற பல இடங்களில் பல்வேறு போரட்டங்களுடன் நமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவை ஆய்வுக்கு உட்படுத்தி அடையாளம் காணப்பட்டு தீர்க்கட வேண்டிய பிரச்சினைகள். 

கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களின் இரப்பர் தோட்டங்கள் பெருந்தோட்ட உடமைகளாக இருந்தபோதும் அவையும் முன்புபோன்ற இயக்கத்தில் இல்லாமைக்கு செயற்கை ரப்பரின் வருகை இயற்கை இரப்பரின் உற்பத்தியில் வீழ்ச்சியைக் கண்டது. இதனால், பெருமளவான இரப்பர் தோட்டங்கள் கைவிடப்படலாயின.

தாழ்நிலப்பிரதேசங்களில் 'சிறுதோட்ட உடமையாளர்களுக்கு' பகிர்ந்தளிக்கப்படாது பெருந்தோட்ட கம்பனிகளின் உடமையாகவே இருந்த தேயிலை, றப்பர் தோட்டங்கள் 'பாம் ஒயில்' (முள்ளுத்தேங்காய்) நோக்கி பெருந்தோட்டக்கம்பனிகளாலாளேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றும் 'பாம் ஒயில்' (முள்ளுத்தேங்காய்) உற்பத்திகளை மேற்கொள்வது 'பெருந்தோட்டக் கம்பனிகளாகவே' உள்ளன. 2006 ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டங்களில் அவை அறிமுகப்படுத்தப்படும்போது நமது மக்கள் பாரிய வேலைநிறுத்தப் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் மேற்கொண்டு எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

 ஆனால், காலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அதனைக் காட்டி சமாதானப்படுத்தப்பட்டுள்ளனர். ஏதோவொரு வகையில் மலேஷிய தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட முள்ளுத்தேங்காய் இங்கே இலங்கை மலையகத் தமிழர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

 மலேஷியாவில் பெரும்பாலும் தமிழர்கள் இந்த முள்ளுத்தேங்காய் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்வதில் இருந்து வெளியேறிய நிலையில் இப்போது பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர் வரவழைக்கப்பட்டு அந்த தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அங்கு எவ்வாறு மலேஷிய தமிழர்கள் இந்த முள்ளுத்தேங்காய் உற்பத்திக்குள் உள்வாங்கப்பட்டார்கள் அதில் இருந்து விடுபட அவர்கள் எவ்வாறான மாற்று வழிகளைக் கையாண்டார்கள் என்பது போன்ற படிப்பினைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 

பெருந்தோட்டத்துறையின் இந்த கட்டமைப்பின் இறுதி இலக்காக பாதிக்கப்படுவது அதனை நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களே. இதனால் தான் 1992ல் தனியார் மயத்துக்கு உள்ளாகுமபோது 5 இலட்சத்துக்கு அதிமாக இருந்த அதிமாக இருந்த தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்து 35 ஆயிரம் எனும் அளவுக்கு குறைந்துள்ளது. இது தோட்டத் தொழிலாளர்கள் வேறு தொழில் நோக்கிச் சென்றதனால் ஏற்பட்ட குறைவல்ல. 

உயர்நிலப்பகுதிகளில் தேயிலைக் கைத்தொழில் விரைவாக கைவிடப்பட்டுவருவதன் காரணத்தால் ஏற்பட்ட சரிவு. இன்றும் கூட பெருந்தோட்டப் பிரதேசங்களுக்குள் மாத்திரம் 9 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையான சனத்தொகை வாழ்வதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. ஒட்டுமொத்த 15 இலட்சம் மலையக தமிழ் மக்களுள் 5 இலட்சம் அளவானோர் பெந்தோட்டங்களில் தங்கியிருந்து வாழ்கின்றனர். ஆக, மூன்றில் இரண்டு பகுதி மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்க தீர்வு தேட வேண்டிய பொறுப்பு மலையக சமூகத்துக்கு முன் நிற்கின்றது.

இந்த தொழிற்துறை கட்டமைப்பு ஒரு புறம் சென்று கொண்டிருக்க அதனோடு இணைந்த சமூக நிர்வாகத்தையும் இந்த நிறுவன கட்டமைப்புகளே முன்னெடுத்து வந்த நிலையில் 1992 இல் உருவாக்கப்பட்டதே பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் எனப்படும் 'ட்ரஸ்ட்'. இதன் பணிகள் எவ்வாறு அமைந்தன. சமூக கட்டுமான வசதிகளுக்காக தோட்ட நிர்வாகங்கள் இந்த  நிதியத்துக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளை செலுத்துகின்றனவா? என பார்த்தால் அதுவும் இப்போது சரிவுப்போக்கில் செல்கின்றது. அண்மைக்கால தரவுகளின்படி பிராந்திய கம்பனிகள் சுமார் 200 மில்லியன் ரூபாய்களை ட்ரஸ்ட் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டியிருப்பதாக தெரிகிறது. ஆக, தொழில் சார்ந்து மட்டுமல்ல சமூகம் சார்ந்தும் பிராந்திய கம்பனிகள் பெருந்தோட்டத்தை கைவிட்டு வருகின்றன. 

கடந்த வாரம் திடீரென பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த சீன விவசாய அமைச்சர் தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு விஜயம் செய்துள்ளார்.ஏற்கனவே தேயிலை ஆராய்ச்சி நிலைய ஆய்வுகள் யாருக்காக இடம்பெற்றுக்கொண் டிருக்கின்றன என்பது பற்றி நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. இவை பெரும்பாலும் சிறு தோட்ட உடமையாளர்களுக்கான ஆராய்ச்சிப்பணிகளையே முன்னெடுத்து வருகின்றன. இதில் சீன அமைச்சரின் வியத்தின் பின்னரான ஆய்வுகளும் முயற்சிகளும் உயர்நிலத் தேயிலை உற்பத்தி மேம்பாட்டுக்கு உதவுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

இதற்கிடையில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றம் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டுள்ளது 

'தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றிய 'கூட்டு ஒப்பந்தப்பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது' என்பதால் சமரசம் மூலம் தீர்க்கப்படுவது நல்லது. சமசரசம் காண முடியாதவிடத்து மனுவில் பெயர் குறிப்பிட்டுள்ள பிரதிவாதிகள் அடுத்துவரும் அமர்வில் ஆட்சேபனைகளைப் பதிவு செய்ய வேண்டும்' 

இந்த நீதிமன்ற அறிவிப்பில் 'கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது' எனக்குறிப்பிடப்படுவது  அதன் பின்னணியில் இருக்கக்கூடிய சிக்கல்களை பிரதிபலிப்பதாகவுள்ளது.  பிரதிவாதிகள் அடுத்துவரும் அமர்வில் ஆட்சேபனையைப் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதிவாதிகளான பிராந்திய கம்பனிகள் 'அவுட்குரோவர்' முறையை மாற்றுத்திட்டமாக முன்வைக்கும் சாத்தியங்களே அதிகம் உள்ளன. 

இந்த அவுட்குரோவர்  முறைபற்றி பிராந்திய கம்பனிகள் இப்போதுதான் முன்மொழிவுகளைச் செய்து வருகின்றன. ஆனால், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் இயங்கும் பல தோட்டங்களில் (நாவலப்பிட்டி நாகஸ்த்தன்ன), மாத்தளை, எல்கடுவ பிளான்டேசன் போன்ற தோட்டங்களில் அவை 205 ஆண்டு முதலே நடைமுறைக்கு வந்துள்ளமையை நாம் அறியாமலே உள்ளோம். வலப்பனை மஹாஊவா தோட்டத்தில் மத்துரட்ட பிளாண்டேசன் கம்பனியினால் இந்த அவுட்குரோவர் (வெளியகப்பயிரிடல் முறை) அறிமுகப்படுத்தப்பட்டபோது அதில் பல்வேறு சிக்கல்கள் வெளிப்பட்டன. இந்த அவுட்குரோவர் முறை என்றால் என்ன? அடுத்து வரும் அத்தியாயங்களில் பாரக்கலாம். 
(உருகும்)

நன்றி - சூரியகாந்தி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates