மேன்மை தங்கிய பாரதப் பிரதமருக்கு!
ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து சிறப்பிக்க உங்களது வருகை பிரதானமாக அமைந்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. பௌத்தத்திற் கானதாக உங்களது விஜயம் அமைந்திருந்தாலும் இதன்போது தமிழ் மக்களது விடயம் தொடர்பில் நீங்கள் அவதானத்தை செலுத்தவுள்ளதாகவும் ஊடகங்களின் ஊடாக அவதா னிக்கக் கூடியதாக இருக்கின்றது. இரு மொழி ஊடகங்களும் இரு வேறுபட்ட விடயங்களை உள்ளடக்கவும் தவறவில்லை.
இப் புனித நிகழ்வுடன் தமிழ் மக்கள் வாழ்விலும் ஒளியேற்றப்படும் என்பதுதான் உங்களது விஜயத்தின் மீதுள்ள சிறுபான்மை சமூகத்தினரின் பெரும் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது. நல் லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் இரண்டாவது தடவையாக தங்களது விஜயம் அமைந்திருக்கின்றது. இலங்கையில் தமிழர் பிரச்சினை மீதான தலையீடு தொடர்பில் இந் தியாவின் கரிசனை காலம் காலமாக இருந்து வருகின்றது என்பது பலரும் அறிந்ததே.
இந்தத் தொடர்ச்சியான தலையீட்டுக்கு தென்னிலங்கையும் காலங்காலமாக எதிர்ப்பி னையே வெளிகாட்டியும் வந்துள்ளது. இந்நாட்டில் சிறுபான்மையினருக்கு தென்னிலங் கையில் பல எதிர்ப்புகள் ஏற்படும் போது அதனை எதிர்த்து இந்தியா தொடர்ச்சியாக செயற் பட்டு வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறு இந்தியா , இலங்கை தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள தொடர்ச்சியான கரிசனையே தமிழர்கள் இங்கு தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதாக நம்பப்படுகின்றது.
இதற்கமையவே கொழும்பும் - புதுடில்லியும் அடிக்கடி சந்திப்பினை ஏற்படுத்தி தமிழ் மக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானிக்கலாம். இப்பேச்சில் தமிழர் தீர்வு என பொதுப்படையாக கருதி பேசப்படுகின்றபோது இதில் இந்திய வம்சாவளியினர் எனப்படும் மலையகத் தமிழர்களின் உரிமை சார் விடயங்கள் தொடர்பில் அதிகளவு அழுத்தம் கொடுக் கப்படுகின்றதா? கரிசனை காட்டப்படுகின்றதா? என்ற கேள்வியும் எழத் தவறவில்லை.
இலங்கையில் தமிழர் பிரச்சினை என்றவுடன் அது வடக்கு,கிழக்கு மட்டுமே சார்ந்ததாக ஒரு வரியில் அமைந்துவிடுகின்றது. இதுவே சர்வதே சமயப்படுத்தப்பட்ட நிலையில் வியாபித் திருக்கின்றது. கொடிய யுத்தம், கொடிய அழிவுகள் காரணமாக இவ்வாறு இருப்பதை தவிர்க்கவும் முடியாது. ஆனால், அந்த தமிழர்களில் உட்படுத் தப்படாமலும் வேறுபட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலி னூடாக பாதிக்கப்பட்ட அதற்கு சமனான அளவு தமிழ் மக்கள் இந் நாட்டில் வாழ்பவர்களாக மலை யகத் தமிழர்கள் இருக்கின்றனர். அவர்களின் பிரச்சினையும் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதுவும் சர்வ தேச கவனத்தை பெற வேண்டிய அவசியம் இருக்கின்றது.
அவர்களது அரசியல் பலத்தை உறுதிப்படுத்துவதும் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்ற வீடு, சுகாதாரம், கல்வி இது போன்ற மனிதாபிமான தேவைகளில் எந்தளவு தூரம் பங்களிக்க முடியுமோ அந்தளவு தூரம் பங்களிப்புச் செய்ய வேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இருக் கின்றது.
உங்களது முதலாவது இலங்கை விஜயத்தின் போது வடக்கிற்கு சென்ற நீங்கள் இந்தியாவின் தொப்புள்கொடி உறவாக இன்று துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மலையக மக் களை பார்க்க வரவில்லை என்று பல்வேறு தரப்பிலும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தங்களது இரண்டாவது விஜயத்தின் 'மலையக' விஜயமே பிரதானமாக பேசப்படுகின்றது. ஆறு தசாப்தங்களுக்கு பின்னர் இந்திய தலைவர் ஒருவரின் மலையக விஜயமாக இது அமைகின்றது.
உங்களது விஜயத்தால் உடனடியாக மலையகத்திற்கு முழுமையான மாற்றம் ஏற்பட்டு விடுமா? என்பது பலரது கேள்வி. உடனடி மாற்றம் எழாது விட்டாலும் 'மலையகமும் ஒரு தேசியம்' என்பது சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதாகவே இருக்கும். ஏன்? இலங்கையின் மூலை முடுக்குகளுமே மலையகம் என்ற பிரதேசத்தை அறிந்து விடும். பாரதப் பிரதமர் என்ற மேன்மை தங்கிய தலைவர் ஊடாக 'மலையகம்' வெளி உலகிற்கு தெரிய வருவது மகிழ்ச்சியான விடயமே.
மலையகத்தின் வரலாறோ மிகவும் வலி நிறைந்தது. இவர்கள் காலனித்துவ ஆட்சியில் பலவகையில் அடிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு வாழ்வியலை நடத்தி இன்றை க்கு 200 வருடங்களை எட்டியுள்ளனர். அவர்களின் வரலாற்றுப் பின்னணியை ஓரிருவரிக ளால் மாத்திரம் வர்ணித்து விட முடியாது.
அதில் முக்கியமானதொரு விடயமே மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது தான். கணிசமான தொகையினர் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது, இலங்கை -இந்திய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் 7 பேர் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இது குறித்து இந்தியா உரிய தீர்வு கிடைக்க வழி செய்யவில்லை.
மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டமையானது மிகப்பெரிய துரோகம். குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த போது இந்நாட்டின் இரண்டாவது சனத்தொகையாக மலையக மக்களே காணப்பட்டனர்.
1964 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி இந்தியாவுக்கு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதனால் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருந்த மலையக சனத்தொகை நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இவ்வாறான நிலைமை அவர்களது அரசியல் பலத்தினை இந்நாட் டில் கேள்விக்குறியாக்கியது. இது அவர்களது அரசியல் பலத்தை முற்றாக வலுவிழக்கச் செய்து விட்டது என்று கூட சொல்லலாம். எனவே இந்த மக்கள் சக்தியை குறைத்த ஒப் பந்தத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடும் இந்தியாவுக்கே இருக்கின்றது.
இவ்வாறானதொரு நிலையிலும் கூட, அதனையெல்லாம் உணர்ந்து அவர்கள் சிறுகச் சிறுக வாக்குரிமை பெற்றுக் கொண்டபோதிலும் கூட இன்றும் முழுமையாக அந்த வாக்கு ரிமை பலத்தை அனுபவிப்பதாக இல்லை. இலங்கையின் பொது நிர்வாக முறைக்கு அவர் கள் இன்றும் உள்வாங்கப்படவில்லை. இன்னும் அந்த கம்பனிகளின் நிர்வாக கட்டமைப் பிற்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
குறைந்த பட்ச ஜனநாயக அமைப்பாக இருக்கும் பிரதேச சபைக்கு அவர்கள் வாக்களித்தாலும் அதில் இருந்து கூட பயன்களை பெற முடியாத நிலைமையிலேயே ஒரு இலட்சக்கணக்கான மக்கள் விடப்பட்டிருக்கின்றார்கள். இது போன்ற விடயங்களை இந்தியா கவனித்து இலங்கை அரசாங்கத்துடனான நல்லெண்ணத்தை பயன்படுத்தி இலங்கையின் பூரணமான பிரஜையாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டிய பாரிய தார்மீக கடப்பாடு இந்தியாவிற்கு இருக்கின்றது. இதனாலேயே, அவர்களின் அரசியல் பலம் குறைவாக இருப்பதற்கு இந்தியாவே காரணமாக இருந்திருக்கின்றது என்பதை நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது.
இலங்கை தமிழர்களை விட அதிகளவான மக்களை கொண்டதாகவே மலையகத் தமிழர்கள் இருந்துள்ளார்கள் என்பதும் அவர்கள் இவ்வாறு நான்காவது நிலைக்குத் தள்ளப்பட்டமைக்கு இந்தியாவின் பங்கும் கனிசமானது என்பதை மலையக மக்கள் மறந்துவிடவில்லை.
எனினும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இன்று குடி உரிமை பெற்றுக் கொண்டு அவர்கள் இங்கு மக்களாக வாழ்கின்றனர். இருந்தபோதிலும் பல அடிப்படை சார் உரிமைகள் இல்லாதவர்களாகவே இன்றும் இருந்து வருகின்றனர். இந்த சகல விடயங் களிலும் ஒரு பிராந்திய வல்லரசின் தலைவர் என்ற வகையிலும் இந்திய வம்சாவளி மக்க ளின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான வகையிலும் உங்கள், இலங்கையின் மலையக விஜயம் அமைய வேண்டும்.
ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு மலையக மக்களை சந்திக்க பாரதப் பிரதமர் வருவ தென்பது வரலாற்று பதிவே. அவரது வரவினால் கிடைக்கப்பெறும் நன்மைகள் என்ன என அவரது வருகையை புறக்கணிப்பதைவிடவும் இலங்கையில் இந்தியா வம்சாவளியினர் சுமார் 15 இலட்சம் பேர் வாழ்கின்றனர் என்ற இருப்பினை உணர்த்துவதாகவே இது அமையும். அது மாத்திரமன்றி தற்போது இந்திய அரசாங்கத்தினால் மலையகத்துக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளும் விஸ்தரிக்கப்படுவதாக அமையும்.
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் உங்களது விஜயம் அமைந்திருப்பது அது இந்தியாவிற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதா? என்றும் கூட எண்ணத் தோன்றுகின்றது.1939ஆம் ஆண்டு இலங்கை வந்த நேரு இலங்கை வந்திருந்த போது மலையகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது உருவானதுதான் இலங்கை - இந்திய காங்கிரஸ். அதுவே பின்னாளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆனது.
அதிலிருந்து அவ்வப்போது ஏற்பட்ட பிளவுகளே மலையகத்தில் பல்வேறு அரசியல் தொழிற் சங்க அமைப்புகளாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவற்றில் சில இன்று உங்களை வரவேற்பதற்காக இன்று ஆளுக்கொரு பக்கமாக இருந்து போட்டி போட்டுக் கொண்டு நிற்கின்றன. வரவேற்பதற்கே இந்தபோட்டி என்றால் உங்கள் வருகையினால் மலையகத்திற்கு வரவு ஏதும் ஏற்படின் அதில் எத்தனை போட்டிகளோ!
வணக்கம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...