தெ ன் மாவட்டங்களில் குறிப்பாக, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் மொத்தமாக 199,000 தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் சுமார் 85 முதல் 90% மானவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்களாக அடையாளப்படுத்தக் கூடியதாக உள்ளது. இவர்கள் நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள் போல், பெருந்தோட்டங்களில் தொடர்புபட்டவர்களாகக் காணப்பட்ட போதும் இவர்களுடைய வாழ்க்கை முறையில் வேறுபட்ட சவால்கள் உள்ளன. இவை யாவற்றையும் உணர்ந்து கொண்ட நிலையில், தனி நபர்களும், சில அமைப்புக்களில் இவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக்காண மேற்கொண்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டுவது இக்கட்டரையின் பிரதான இலக்காகும்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, தென் மாவட்டங்களில் 199,000 பேராக இருக்கும் தமிழர்களில் சுமார் 137,000 பேர் மாத்திரமே தங்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று கடந்த மக்கள் தொகைக் கணிப்பீட்டின் போது (2011) பதிவு செய்து கொண்டுள்ளவர்களாக உள்ளனர். மிகுதி 62,000 பேரும் தங்களை வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் இன அடையாளமான ‘இலங்கைத் தமிழர்கள்’ என்று அடையாளப்படுத்தியுள்ளனர். இந்த 62,000 பேரில், சுமார் 35,000 முதல் 40,000 பேர் வரை இந்திய தமிழர்களாக இருப்பார்கள் என முடிவுக்கு வரலாம். இந்நிலையில் இம்மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழர்களில் சுமார் 85 முதல் 90% மான ஏறக்குறைய 180,000 பேர் இந்திய வம்சாவளி தமிழர்களாக இருப்பதாக முடிவு செய்யலாம்.
இவர்களின் வாழ்க்கை முறை, இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கை முறையில் இருந்து குறிப்பிட்ட அளவு வேறுபட்டதும், மிக்க சவால் உள்ளதாகவும் காணப்படுகின்றது. மேலே குறிப்பிட்டது போல, தென் பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இவர்கள் வாழ்ந்தாலும், இவர்களின் அரைவாசிக்கு சற்று அதிகமானோர் சுமார் (110,000 பேர்) இரத்தினபுரி மாவட்டத்திலேயே வாழ்கின்றனர். ஏனையோரில் 15% மானவர்கள் (40,000 பேர்) களுத்துறை மாவட்டத்தில் வாழ்கின்றனர். இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் வாழ்பவர்கள் ஓரளவிற்கு ஒன்றில் கொழும்பு போன்ற மாவட்டங்கிளல் வளர்ந்துள்ள தமிழ் மக்களுடன் தொடர்பு கொண்டவர்களாக இருப்பதுடன் அந்த மாவட்டங்களில் வாழ்கின்ற பெரும்பான்மை மக்களுடன் ஒருங்கிணைந்து வளர்கின்ற நிலைமையையும் காணலாம். பாடசாலைக் கல்வியைப் பொறுத்தமட்டில் தமிழ் மூலமான கற்கை நெறிகளுக்கு இந்த மாவட்டங்களில் வளர்ந்துள்ள முஸ்லிம் பாடசாலைகள் அனுசரணையாக இருக்கின்றன. ஓரளவுக்கு வியாபாரம் மற்றும் வேறு முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட சமூகம் மிக வேகமாக பெருந்தோட்டங்களில் இருந்து விடுபட்டுச் செல்கின்ற நிலைமையையும் காணலாம். ஆனால், இந்நிலைமை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் வாழ்கின்ற இந்திய தமிழர்களில் அவதானிக்க முடியவில்லை. இங்கு சுமார் 43,000 பேர் முறையே காலி (20,000 பேர்), மாத்தறை (21,000 பேர்) அம்பாந்தோட்டை (2200 பேர்) வாழ்கின்றனர். இவர்களில் அம்பாந்தோட்டையில் இருப்பவர்கள் பெரும்பாலும் திஸ்ஸமாறாம பகுதிகளில் வாழ்பவர்களாகவும், பெருந்தோட்ட தொடர்புகள் அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.
பெருந்தோட்டங்கள் என்று கூறும் போது, மத்திய மலைநாட்டில் காணப்படுகின்ற தேயிலை, இறப்பர் போன்ற தொழில்கள் அன்றி இவர்கள் சிறுதோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர். காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களில் கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, என்போர்ட், அனின்கந்தை, என்சல்வத்த, பெவர்லி, உலந்தாவ போன்ற தோட்டங்களைக் குறிப்பிடலாம். இந்தத் தோட்டங்களில், தேயிலைத் தொழிலில் ஈடுபடுவோர் போக மிகுதியானவர்கள் இந்த மாவட்டங்களில் காணப்படும் சிறுதோட்டங்களில் தொழிலாளர்களாக வாழ்கின்றனர். இந்த இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 50,000 ஹெக்டயர் பரப்பளவில் தேயிலை சிற்றுடைமைகள் காணப்படுகின்றன. இலங்கையில் உயர்ந்த விளைவு தரும் சிறுதோட்டங்களின் உரிமையாளர்களிடம் நாளாந்த வேதனத்திற்கு தொழில் புரிபவர்களாக காணப்படும் இந்த தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களில் காணப்படும் தொழிற்சட்ட பாதுகாப்போ அல்லது தொழிற்சங்க அரவணைப்போ அல்லது அரசியல் பங்களிப்போ அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இலங்கையில் நிலச்சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்படும் பொழுது துண்டாடப்பட்ட நிலங்களில் பிரிந்துபோன இக்குடும்பங்கள் தொடர்ந்தும் தொழிலாளர்களாக அந்தந்தத் தோட்ங்களில் சிறுசிறு குழுக்களாக சிதைந்திருப்பதைக் காணலாம். காணிச் சீருதித்தத்தின் போது நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்தை வழங்க வேண்டும் என்ற ஏற்பாடு இருந்த போதிலும், மூன்றாவது தலைமுறையினராக வாழ்ந்து வரும் இந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தக் காணிச் சீர்திருத்தத்தில் எதுவிதமான வரப்பிரசாதமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்பிரதேசத்தில் சுமார் 190,000 சிறுதோட்ட உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டு அறுவடைகளை மேற்கொள்கின்றர். இதைவிட சுமார் 200 பேர் வரையில் ஐந்து ஹெக்டேயருக்கும் மேற்பட்ட தோட்டங்கள் உள்ளன. இந்த தனியார் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் சுமார் 10 குடும்பம் முதல் 25 குடும்பங்கள் வரை தமது நிலப்பரப்புக்கு ஏற்ப தொழிலாளர்களை தம்வசப்படுத்தி வைத்துள்ளனர். இவர்களின் நாளாந்த வேலைகளுக்காக ரூபா 450 மட்டுமே வழங்கப்படுகின்றது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தமது சொந்த காணி உரிமையாளரிடம் வேலை செய்யும் இவர்கள் ஏனைய நாட்களில் வேறு இடங்களுக்குச் சென்று தொழில்புரிந்து வருகின்றனர்.
மேற்குறிப்பிட்டது போல, சிறுதோட்டங்களில் வேலை செய்தால் என்ன, கம்பனி தோட்டங்களில் வேலை செய்தால் என்ன? இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்க்கை மிகவும் போராட்டம் மிகுந்ததாகும். ஏற்கனவே குறிப்பிட்டது போல உள்ள தோட்டங்களில் க.பொ.த சாதாரண தரம் வரையும் படிப்பதற்கு பாடசாலைகள் உண்டு. ஆனால், அங்கு போதுமான ஆசிரியர்கள் இல்லை. 2006 ஆம் ஆண்டளவில் 10 ஆண்டுகள் கட்டாயக் கடமையின் கீழ் இப்பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் பலர் அடுத்த வருடத்தில் இங்கிருந்து மாற்றலாகிச் செல்லும் வாய்ப்புகள் உண்டு. இது மேலும் ஆசிரியர் பற்றாக்குறையை பாதிக்கும் ஒரு விடயமாகும்.
இந்நிலையில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது விஸ்வரூபமாக முன்வைக்கப்படும் பிரச்சினையாகும். மேற்குறிப்பிட்டது போல தூர இடங்களில் வசிப்பவர்களுக்கு பாடசாலைக் கல்வி கிடைக்கப் பெறவில்லை. உதாரணமாக, தெனியாயவுக்கு அண்மையில் உள்ள பள்ளேகம, சிரிசிலி தோட்டத்தில் சுமார் 40 குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்களுக்கு அண்மையில் பாடசாலை இல்லை. எவருமே பாடசாலைக்குச் செல்லவும் இல்லை.
(௩ஆம் பக்கம் பார்க்க )
தென்மாவட்டங்களில்..... (தொடர்ச்சி)
இவ்வாறானவர்களுக்கு உதவும் வகையில் பல முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், வணக்கத்திற்குரிய மைக்கல் ராஜேந்திரம் அவர்களின் பணி அளப்பரியதாகும். இவர் மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1996 இல் தெனியாயவுக்கு வந்ததன் பின்னர், இந்த மக்களின் கல்வி, கலாசார, பாதுகாப்பு போன்றவற்றில் ஒரு புதிய பரிமாணத்தை இவர்கள் மத்தியில் ஏற்படுத்தினார். 1996 ஆம் ஆண்டு காலம் வரையும் பெயரளவிலேயே பாடசாலைகள் காணப்பட்டன. ஆனால், கற்பித்லுக்கு போதுமான ஆசிரியர்;கள் இல்லாத நிலையில் இவர் இப்பகுதியில் உள்ள இளைஞர்களை அழைத்து, அவர்களுக்கு சமூக விடயமாகக் கலந்துரையாடி, அவர்களை ஆசிரியர்களாக உபயோகித்து, பாடசாலையில் கற்பித்தலைத் தூண்டி விட்டார். அவ்வாறு ஆர்வத்துடன் இணைந்துகொண்ட பலர் இப்போது பயிற்சியுடன் அரசாங்க நியமனம் பெற்ற ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளதுடன், சிலர் அதிபர்களாகவும் கடமை புரிகின்றனர்.
கபொத. சாதாரண தரம் வரையில் பாடசாலைகள் இருந்தாலும், அண்மைக் காலம் வரையில் உயர் தரம் படிப்பதற்கு வாய்ப்புகள் இங்குள்ள மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. அங்கு நல்ல நிலையில் வளர்ச்சியடைந்திருந்த சென் மத்தியூ சிங்கள மொழிமூல பாடசாலையில் தமிழ் மொழிமூல வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு, க.பொ.த. உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர் வணக்கத்திற்குரிய மைக்கல் ராஜேந்திரம் அவர்களேயாவர். மிக நீண்ட காலமாக இனவாதத்தினால் நசுக்கப்பட்டு, உருக்குலைந்து போயிருந்த இப்பகுதி தமிழர்களை பெரும்பான்மை மக்களுடன் சமத்துவமாக நடமாட விடுவதற்கு மதகுருமார்களைக் கொண்ட ஒரு சபையை ஏற்படுத்தினர். இதனால், அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களும் சாதாரணமாக நடமாடக்கூடியதான ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
இவரது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட தோட்ட சமூக அபிவிருத்தி சபை ‘கொடசெப்’ வளர்ந்தோருக்கான கல்வி, மது ஒழிப்பு, பெண்களுக்கான தொழில் பயிற்சி, மாணவர்களுக்கான கணனிப் பயிற்சி, மாதாந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு என்பவற்றையும் கடந்த 25 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றது. இவரது அயராத முயற்சியால், கடந்த ஆண்டில் இப்பகுதியில் இருந்து 18 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தயாராக இருந்தனர். இவர்களில் கணிசமானோர் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பின்னர், ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி நெறியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதைவிட இரண்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவை யாவும் இந்த ‘கொடசெப்’ நிறுவனத்தின் பணியின் விளைவாகும்.
இங்கு வாழ்கின்ற மக்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஏற்படுத்தி வரும் இந்நிறுவனம் இந்த பெருந்தோட்ட சமூகத்தில் இருந்து படித்து உயர்ந்த நிலையில் இருக்கின்ற கல்விமான்களையும், சமூக ஆர்வலர்களையும் அழைத்து வந்து விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருவது இந்த நிறுவனத்தின் மற்றுமொரு பணியாகும். கடந்த காலத்தில் எம்.வாமதேவன், ஓ.ஆறுமுகம், க.மெய்யநாதன், பி.சிவப்பிரகாசம் ஆகியோர் இக்கருத்தரங்குகளில் வளவாளர்களாகப் பங்குபற்றியிருந்தனர்.
சிறு தோட்டங்களில் ஒரு அறையைக் கொண்ட காம்பறாக்களில் கழிவறைகளும் இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் இவர்கள் தவிர்க்க முடியாத நிலையில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்டு மது போதைக்கும் அடிமையாவதாகக் காணப்படுகின்றது. ஒருசிலர் வெளிநாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர். இன்னும் சிலர் நகரங்களில் வேலை செய்கின்றனர். அளவுக்கு மீறிய கடன் தொல்லைகளால் அல்லல் படும் மக்களுக்கு வணக்கத்திற்குரிய மைக்கல் ராஜேந்திரன் அவர்களது பணியும் அவரது வேலைத்திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் சதீஷ் மற்றும் அந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் யாவரது பணியும் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றனது.
பின்தங்கிய நிலையில் ஒடுக்கப்பட்டு அல்லது ஒதுங்கி வாழவேண்டியதாக நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்புக்களின் ஊடாக மாற்றம் கிடைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கொடசெப் மற்றும் மலையக மக்களுக்கென இயங்கி வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம், சுபீட்சம் மற்றும் உதவும் கரங்கள் என்பன கணிசமாக பங்களிப்பை நல்கி வருகின்றன. இத்தகைய நிறுவனங்களின் பணிகளை மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...