மலையக மக்கள் அன்றாடம் ஏதோ ஒரு இன்னலோடுதான் வாழ்ந்து வருகின்றனர் என்பதே உண்மை. காலங்காலமாக அடிமைகளாக, கூலிகளாக பிறரின் நலனுக்காக வாழ்ந்து வரும் மலையக சமுதாயத்திற்கு ஏன் இந்த நிலைமை? எவர் கேள்வி கேட்பது? எதனால் இப்படி நடக்கிறது? எத்தனை காலம் இப்படி வாழ்வது? அவர்களது அடிப்படை பிரச்சினை என்ன? எங்கு மாற்றத்தை கொண்டுவர வேண்டும்? எதனில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்? யார் கொண்டுவர வேண்டும்? எதற்காக கொண்டுவர வேண்டும்? என்ற ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு சேவை செய்ய அரசியல் பிரமுகர்கள் முன்வர வேண்டும் என்பதை உணர வேண்டும்.
அன்றாட வாழ்க்கையை போராட்டத்தின் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு ஏழ்மை வாழ்க்கையிலேயே மலையக மக்கள் தினமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நரக வாழ்க்கை வாழ்கின்றனர். ஒரு நாள் காலையிலிருந்து மாலை வரை சாதாரண மனிதராக ஒரு விருந்தாளியாக மலையக மக்களின் வீட்டில் சென்று வாழ்ந்து பார்த்தால், அம்மக்கள் தினமும் படும் அவதியும் அவஸ்தையும் வேதனையும் அரசியல்வாதிகளுக்கு விளங்கும்.
காலையில் தேநீர் ஊற்றுவதற்கு பிறரிடம் பால்மா கடன் வாங்குவது முதல் தண்ணீருக்கு காத்திருப்பதோடு, ஏன் பழைய தலையணையையும் போர்வையையும் போர்த்தி தூங்குவது வரை அனைத்தும் தினம் தினம் வாழ்வில் எதிர்நோக்கும் சவால்களே.
இதை சொல்லால், எழுத்தால் புரிய வைக்க முடியாது. ஒருகணம் அந்த வாழ்க்கை அவலத்தை, இன்னலை அனுபவித்து பார்த்தால் அவர்களுக்கு என்ன தேவை என அடிமனதில் உணர்வீர்கள். எட்டி பார்த்துவிடுவதில் பிரச்சினை தீராது. அவர்களோடு ஒட்டி வாழவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு என்ன தேவை என்பது புரியும். அதே போல அவர்களுக்கு எந்த வகையில் தீங்கு வருகிறது? எதனால் தீங்கு வருகிறது? எதை ஒழிக்க வேண்டும்? என்பது புரியும். அவர்களுக்கு கூரை, தகரம் கொடுத்தால் மழையிலிருந்து பாதுகாப்பாக வாழ முடியும். வீடு அமைத்து கொடுத்தால் பாதுகாப்பாக வாழ முடியும். அத்தோடு, நாற்காலி கொடுத்தால் அமர்ந்து ஓய்வெடுக்க முடியும். பசி பட்டினியுடன் வழ்பவர்களுக்கு கொடுக்க வேண்டியது உணவு. தினம் தினம் பயன்படுத்தும் பொருட்கள். இதற்கு அர்த்தம் இதை மட்டும் கொடுக்க வேண்டும் என்பதல்ல, இதையும் கொடுக்க வேண்டும் என்பதாகும். எனவே, மக்களின் நாடி பிடித்து உதவுங்கள். தேடிபிடித்து உதவுங்கள் என்றே கேட்கின்றனர்.
கொழுந்து பறித்தலோ, கூடை சுமப்பதோ, மண்வெட்டி பிடித்து கொத்துதலோ, கையால் புற்களை பிடுங்குவதோ எந்த வேலையாயினும் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். இது எத்தனை கஷ்டம் என்பதை தொழிலாளியோடு தொழிலாளியாக தன்னை மாற்றி பணி புரிந்து பாருங்கள். "தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்" என்பார்கள். அன்று கூலிகளாக வந்தவர்களுக்கு பெரிய கங்காணிமாரும் கணக்கப்பிள்ளை மாரும் வெள்ளையர்களும் கொடுத்த தொல்லை பற்றி அறிந்திருந்தும், அதை அப்படியே பின்பற்றி அதைவிட மோசமாக அடிமைபோல் நடத்தும் அவலவாழ்க்கை பற்றி அறியமுடியுமா? கணவர்மார்களிடம் வாங்கும் ஏச்சுக்களைவிட அநாகரிகமாக கங்காணிமாரிடம் வாங்குவதை பாருங்கள். பலரின் மத்தியில் தன்மானத்தை இழந்து தொழில் செய்ய வேண்டிய பரிதாப நிலையில் மக்கள் தொழில் செய்கின்றனர். அத்தோடு, கணக்கபிள்ளையும் சேர்ந்து கொள்வதும் பத்தாத குறைக்கு தோட்ட துரையும் திட்டி தீர்ப்பதும் கொச்சை தமிழில் இச்சைவார்த்தைகள் ஏசுவதும் பரிதாபத்துக்குரியவை.
இதை ஒருநாள் அனுபவித்து பாருங்கள். இவையெல்லாம் போதாத குறைக்கு மிருகங்களின் தொல்லையும் வேறு. ஒருநாள் குளவி கொட்டலை வாங்கிபாருங்கள். எம் அவல நிலையை வந்து பாருங்கள். வாக்கு கேட்க வரும் போது கூட அமைத்து வைத்திருக்கும் மேடையில் ஆவேசமாக பேசிவிட்டு அடுத்து மேடைக்கும் சென்று விடுகின்றீர்களே என ஆதங்கம் மேலிட அடிமை மக்கள் கூறுகின்றனர்.
வாரம் ஒருநாள் வருகை தாருங்கள் உங்கள் அட்டவணையில் ஒருநாளை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். எம்மை அரியாசனத்தில் அமர வைத்து சுக போக வாழ்வுக்கும் வழங்கிய அங்கீகாரத்துக்கும் அர்த்தமுள்ளவர்களாய் இருங்கள். சிலர் குறித்த செயல்களை செய்தாலும் பலர் இவ்வாறு செய்வதில்லை என்றே கூற வேண்டும்.
கயிறுகட்டி இழுக்கும் புகையிரதத்தை போலாகிவிட்டது இந்த சம்பளப்பிரச்சினை. எத்தனைகாலம்தான் இப்படி செய்வார்கள் என்பதையும் பொறுத்து பொறுத்து காத்திருந்து காத்திருந்து அவர்களுக்கு கவலை மிகுந்துவிட்டது. எனவே, சம்பள பிரச்சினைக்கான தீர்வு எப்போதுதான் கிடைக்கும் என பாலுக்காக ஏங்கி நிற்கும் குழந்தைகளாக இன்று தொழிலாளர்கள் சோர்வடைந்துவிட்டனர்.
அத்தோடு, சம்பளம் கிடைக்கும் நாளில் அவர்கள் படும் துன்பம் துயரம் பற்றி அறிந்து கொள்ள சம்பளநாளில் சென்று பாருங்கள். வாங்கிய கடனை திருப்பி பெற பலர் இருக்க, பிள்ளைகள் தமது குறையைக்கூறி பணம் கேட்க, பொருட்கள் வாங்க மீதி இருக்கிறதா என்று பார்த்தால், எதுவுமில்லை மிச்சமாய். என்ன செய்வது அவற்றை அனுபவித்தால்தான் தெரியும்.
மலையகத் தலைவர்கள் பிரிவதும் மீண்டும் கைகோர்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது. சென்றவர்கள் மீண்டும் தாய்வீட்டுக்கு வந்தமையும் ஜென்ம விரோதிகள் என மக்கள் பேசி கொண்டவர்கள் அருகருகே அமர்ந்து அளவலாவி கொண்டமையும் இலங்கை அரசியலில் குறிப்பாக, மலையக அரசியலில் இடம்பெற்றதை அறிந்தும் இன்னும் தமக்குள் அடித்து கொள்கின்றனரே இந்த மக்கள் என்பதுதான் கவலை.
ஒரு கட்டத்தில் ஒரு உறுப்பினர் தம்மிலிருந்து விலகி பிரிதொரு அணியுடன் சேர்ந்து எமது தலைவரை தாக்குகிறார் என்று அவரை தாக்கினார்கள். தமக்குள்ளும் சண்டையிட்டு பொலிஸ் வழக்கெல்லாம் போனது. இப்போது மீண்டும் அடித்து கொண்டவர்கள் அணைத்து கொள்கின்றனர். அவர்களுக்காக சண்டையிட்ட அப்பாவி மக்கள் அதே கர்வத்துடன் ஒரே தோட்டத்தில் முகத்தை திருப்பி நடக்க வேண்டியிருக்கிறது.
மேடைகளில் நீங்கள் சொல்வதை கிளி பிள்ளைபோல் மீண்டும் சொல்லிக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக பஸ்ஸில் கூச்சமிட்டு வரும் கபடமற்ற மலையக சனங்களை அரசியல் பிரமுகர்களான உங்களது வார்த்தைகள், பேச்சுக்கள் மாற்றும். மேடைகளில் அரசியல் மட்டுமன்றி, அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுங்கள். ஏனெனில், உங்கள் கூட்டங்களுக்கே அவர்கள் வருகை தருகின்றனர். உங்களை நம்பியே வாழ்கின்றனர். உங்கள் பேச்சை வேத வாக்காக எடுத்து கொள்கின்றனர் என்பதை ஒரு கணம் எண்ணிப்பாருங்கள்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...