மலையக சமூகம் பல்வேறு வரலாற்று கால கட்டங்களைத் தாண்டி, இன்று அபிவிருத்திப் பாதையில் பயணிக்கத் தலைப்பட்டு வருகின்றது. ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கல்வித்துறையில் பின்னடைவை கண்டிருந்தாலும், இன்று கல்வியிலும் துறைசார் வளர்ச்சியை கண்டு வருவதானது சமூக மாற்றத்தின் ஆரோக்கியமான நகர்வையே சுட்டி நிற்கின்றது. இந்நிலைமை ஏற்படக்காரணம் பாடசாலைகளின் அர்ப்பணிப்புடனான செயற்பாடு என்பதை மறுப்பதற்கில்லை.
மலையக சமூகம் கல்வியில் வளர்ச்சியைக்கண்டு வந்தாலும் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவோரின் தொகை ஒப்பீட்டு ரீதியில் குறைவடைந்து வருகின்றது. க. பொ. த. சாதாரண தர வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சைக்கு முகங் கொடுத்து தோல்வியடைந்ததும் மீண்டும் கல்வியைத் தொடர முயற்சிக்காமல் தொழிலுக்காக கொழும்பு, கண்டி போன்ற வெளிமாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர்.
இதேவேளை, தோட்டப்புற பாடசாலைகளில் இடைநிலை வகுப்பு மாணவர்களின் இடைவிலகலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பொதுவாக மாணவர்களின் இடைவிலகலுக்கு வறுமை, பெற்றோரின் பாராமரிப்பில் வளராமல் பிள்ளைகள் பாதுகாவலர்களின் பாதுகாப்பில் வளர்தல், தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காகச் சென்று விடுவதால் பராமரிப்பில் ஏற்படும் குறைபாடு, சகபாடிகளின் தகாத நட்பு, பாடசாலைக்கு செல்வதில் விருப்பமின்மை மற்றும் நவ நாகரிக மோகம் என்பவை முன்னிலை காரணங்களாக அமைகின்றன.
இவ்வாறு இடைவிலகும் மாணவர்களில் அதிகமானோர் எவ்வித பயனுமற்ற வகையில் தமது பொழுதை கழித்து வருகின்றனர். சிலர் தகாத நட்பின் காரணமாக சமூகம் ஏற்றுக்கொள்ளாத குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு சமூகத்திலிருந்து ஓரங்கட்டி வைக்கப்படுகின்றனர்.
சிலர் பாடசாலை கல்வியை இடை நடுவில் நிறுத்திக் கொண்டதும் நவநாகரிக மோகத்தால் ஈர்க்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு தொழிலுக்காகச் சென்று கூலித் தொழில் செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ விருப்பம் கொள்கின்றனர்.
இது ஒரு புறமிருக்க, உண்மையிலேயே குடும்பத் தேவை, வருமானம் ஈட்ட வேண்டியதன் .அவசியம் என்பவற்றைக் கருதி இளைஞர், யுவதிகள் தொழிலுக்காக செல்வதும் அதிகரித்து வருகின்றது. உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறும் மாணவர்கள் வெளிவாரியாக பட்டப்படிப்பை மேற்கொள்ளக் கூடிய தகைமையை பெற்றுள்ள போதிலும், பொருளாதார சூழ்நிலையும் தொழில் செய்து வருமானம் ஈட்டிக் கொள்ளக் கூடிய வழிமுறைகள் இன்மையும் அவர்களின் கல்வி வளர்ச்சியை தடை செய்து விடுகின்றன.
இந்நிலையில், மலையகத்திலுள்ள இளைஞர், யுவதிகள் பயன்பெறக் கூடிய வகையில் சுயதொழில் முயற்சிகள் அரசாங்கத்தினால் ஊக்குவிக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். சுயதொழில் பயிற்சி நிலையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வருகின்ற போதிலும், பயிற்சி நெறிகளுக்குப் பொருத்தமான தமிழ் மொழிமூல வளவாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பது குறைவாகவே உள்ளது. சில சந்தர்ப்பங்களில் தமிழ் மூல வளவாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றதா அல்லது அவர்களுக்குரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லையா என்பது குறித்து தெளிவாக அறிய முடியாதுள்ளது.
ஹட்டனிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளமை எமது சமூகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். எனினும், இப்பயிற்சி நிலையத்தில் மலையகத்தை சேர்ந்த வெளிமாவட்ட மாணவர்கள் இணைந்து பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்து கொள்வதில் அதிக ஆர்வங்காட்டுவதில்லை.
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தினை ஒத்த சுயதொழில் பயிற்சி நிலையங்கள் பதுளை, இரத்தினரி, மாத்தளை போன்ற பகுகளில் மலையக மாணவர்களுக்காக அமைக்கப்படுமானால், அதில் அதிகமான இளைஞர், யுவதிகள் நன்மையடையக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
மலையகத்தில் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, பூக்கன்றுகளை வளர்த்தல் உட்பட மரத்தளபாட வேலை, மின்சார உபகரணங்களை பழுது பார்த்தல், கைத்தொலைபேசி திருத்தம், தையல் பயிற்சி, சிகையலங்காரம், மணப்பெண் அலங்காரம் போன்ற சுயதொழில்களில் ஈடுபட இளைஞர், யுவதிகள் ஆர்வமாக உள்ளனர்.
எனினும், அவர்களுக்குரிய பயிற்சி நெறிகளை தமிழ் மொழி மூலம் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் நிலவி வருகின்றது. அத்தோடு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தொழிற் பயிற்சி நிலையங்கள் செயற்பட்டு வருவதால், துறைசார் ஆர்வம்மிக்க இளைஞர், யுவதிகள் தமது திறமைகளை உரிய முறையில் வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற்றங்காண்பதில் தோல்வி காண்கின்றனர்.
பதுளை மாவட்டத்தை பொறுத்தவரையில் பசறை செயலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தொழிற் பயிற்சி நிலையத்தில் மரத்தளபாட வேலை வகுப்புகள் தமிழ் மொழி மூலம் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சி நெறியில் பங்கு கொண்ட ஏராளமான மலையக இளைஞர், யுவதிகள் நன்மையடைந்துள்ளனர்.
மலையகம் முழுவதும் பயன்பெறக் கூடிய வகையில் வெளி மாவட்டங்களில் கைத்தொழில்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவேண்டியது அவசியமாகும். இது குறித்த ஆய்வுகளை இத்துறைக்குப் பொறுப்பாக இருக்கும் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சு மேற்கொள்ள வேண்டும். வெளி மாவட்டங்களில் பொருத்தமான இடங்களில் ஒருசில தொழிற்பயிற்சி நிலையங்களாவது அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் தொழிற்றிறன் மிக்க சுயதொழிலாளர்களை சமூகத்திற்கு வழங்கி மலையகத்தில் சுயதொழில் முயற்சிகளுடன் கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியைக் காணமுடியும்.
நன்றி = வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...