காலங்கள் கடந்துச் சென்றாலும் காரிருள் சூழ்ந்த வறுமையும், வளம் செழிக்கும் வாழ்க்கையும், வாழ்வியல் மேம்பாட்டு பொருளாதாரமும், அடிப்படை உரிமையுமின்றி ஆண்டாண்டு காலமாய் மலையக மண்ணில் அடிமை வாழ்வை வாழும் மலையக மக்களின் உள்ளம் குமுரல்களை இந்த வானுயர் அதிகாரம் கொண்ட இலங்கை அரசு இன்னமும் உறுதிப்பட கண்டுகொள்ள வில்லையே என்று ஏங்கும் நெஞ்ஞங்களின் வழி நீரே இந்தக் கட்டுரையின் விளக்க நோக்காகும்.
மலையக மக்கள் என்பவர்கள் இன்று இலங்கைப் பொருளாதாரத்தில் வலிமை மிக்கச் சக்தியாக இல்லாவிடினும் 19, 20ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய வருமானத்திலும், நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சியிலும் முதுகெழும்பாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இந்தச் சமூகத்தின் உழைப்பை உறுஞ்சிய ஆங்கிலேயரும் சரி சுதந்திர இலங்கையின் அரசியல் தலைவர்களும் சரி உரிமைகள் அற்ற ஓர் அடிமை சமூகமாகவே கொண்டு நடத்தப்பட்டு வந்தனர்வருகின்றனர்.
புதிய நல்லாட்சி அரசு அமைந்தும் இதுவரை மலையக மக்கள் தொடர்பில் அரசின் தலைவர்களான ஜனாதிபதியும் சரி பிரதமரும் சரி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால நாட்டின் பல இடங்களுக்குச் சென்று வருகிறார். வெளிநாடுகளுக்கும் செல்கிறார். ஆனால், 200 வருடங்களாக இந்த மண்ணில் தேசிய நீரோட்டத்தில் கலக்கத் துடிக்கும் மலையக மக்களின் அவல வாழ்வை அவர் பதவியேற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும், இன்னமும் சென்று பார்க்கவும் இல்லை. அவர்களின் உரிமைகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் எவ்விதம் கருத்தோட்டமும் தெரிவிக்கவும் இல்லை.
இது மிகப் பெரிய அநீதியாகும். இந்த நாட்டில் ஆட்சிமாற்றமொன்று ஏற்பட பிரதான பங்குதாரர்களாக இருந்தவர்கள் மலையக மக்கள் என்பதை தட்டிக்கழிக்க முடியாது. குறிப்பாக இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பொது அணியை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோட்கடித்த மாவட்டம் நுவரெலியா மாவட்டமாகும். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறியிருந்தார். குறிப்பாக தொண்டமான் யார் பக்கம் என்று சவால்கூட விடுத்திருந்தார்.
ஆனால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பிரதமர் கொடுத்த வாக்குறுதியை இன்றளவும் நிறைவேற்ற முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் காலத்தை கடத்தி வருகிறார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் எட்டாக் கணியாகவே உள்ளது. ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் சகல மக்களினதும் சமத்துவமான பொருளாதாரத்தை முன்மையாகக் கொண்டு செயற்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசாங்கம் வெறுமனே மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்துகொள்வார்கள் என்று எண்ணி மலையகம் தொடர்பில் தமது கரிசனையை செலுத்தாது உள்ளது.
மக்கள் சமத்துவத்தை பேண இயலாமையையே அரசாங்கத்தின் செயற்பாடுகள் காட்டுகின்றன. கடந்த மார்ச் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புப் பிரேரணையின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸ்ஸா நாயக்க ஒரு பொறுப்பு வாய்ந்த உரையை பதிவுசெய்திருந்தார். மலையக மக்களின் அவல வாழ்வையே அவர் சித்தரித்திருந்தார். குறிப்பாக தற்போதைய மலையகத் தலைமைகள்கூட அவ்வாறான ஒரு ஆக்கப்பூர்வமான கணிப்புகளுடன் மலையக மக்களின் அவலத்தை சித்திரிக்கவில்லை என்பது நிதர்சனம்.
மலையக சமூகத்தின் கல்வி, பொருளாதரம், வாழ்க்கைச் செலவு, சம்பள விடயம் உள்ளிட்ட ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் அனல் பறக்கும் வகையில் சபையில் தெறிக்க விட்டிருந்தார். இவரின் இந்த உரையை மலையகத்தின் புத்திஜீவிகள் வரவேற்றிருந்ததுடன், வெறும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துகொண்டு நாட்டின் சகலத்துறையிலும் தமது கவனத்தை செலுத்தும் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாழ்த்தையும் தெரிவித்திருந்தனர்.
இந்த நாட்டின் ஏனைய சமூகங்களுக்கு மலையக சமூகத்தின் அவல நிலையை தெளிவுப்படுத்துவதும், அதனைத் தீர்க்க வேண்டிய கடமையும் அரசாங்கத்துக்கே உள்ளது. ஆனால், அரசாங்கம் எவ்விடயம் தொடர்பில் பாரபட்சமாக நடந்துகொள்வதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில் மலையக மக்களும் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகோடிகள் தானே என்று கேள்விகளை தொடுத்திருந்தார். எண்ணற்ற பெரும் தேசிய தலைவர்கள் வாழ்ந்த மலையக மண்ணில் தற்போது உள்ள தலைமைகள் ஒரு முதுகொழும்பு அற்ற தலைமைகளாகவே பார்க்கப்படுகின்றனர்.
தாம் சார்ந்த மக்களின் அவல நிலையை சித்தரிக்க நாடாளுமன்றத்தில் சுதந்திரம் காணப்பட்டும் அதனை ஒரு சில தலைமைகளைத் தவிர ஏனையவர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்த மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கான அடிப்படை காரணிகளை அரசுக்குத் தௌவுப்படுத்த வேண்டியதும், அழுத்தம் கொடுக்க வேண்டியதும் உண்மையில் மலையகத் தலைமைகளின் பிரதான கடமையாகும். தலைமைத்துவத்தின் பலவீனமும் இந்த மக்களின் பின்னடைவுக்கு வழிவகுக்கும் என்பதை இன்னமும் இவர்கள் உணர்ந்துகொள்ள வில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வினைதிறனற்ற தலைமைத்துவத்தின் காரணமாகத்தான் மலையக மக்களின் அடிப்படை கட்டமைப்பு முதல் பொருளாதாரக் கட்டமைப்புவரை எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
2005ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கையில் பின்னடைவை சந்தித்துள்ள மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அவர்களின் வாழ்வில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தவும் 10ஆண்டு திட்டமொன்றை ஐ.நா. நடைமுறைப்படுத்த நினைத்தது. ஆனால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆக்கப்பூர்வமற்ற அணுகுமுறையால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இன்று அத்திட்டம் கைவிடப்பட்டு பத்தாண்டுகள் கடந்துள்ளன. அத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் மலையக சமூகம் ஒரு நிலையை எட்டியிருக்கும். அந்த விடயத்தைப் பொறுத்தமட்டில் இ.தோ.கவின் அலட்சிய போக்குதான் காரணம். மீண்டும் தற்போதை மலையகத் தலைமைகளால் அத்திட்டம் இந்த ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்தும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, மலையக மக்களின் தேவைகளை பிரதிபளிக்கக் கூடியவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கு வேண்டும். அதையும் தாண்டி ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் தமது ஆட்புள நிலப்பரப்பில் வாழும் மக்களின் தேவையை உணர வேண்டியது இன்றியமையாததாகும். இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் சர்வதேச ரீதியில் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றமையை காணக்கூடியதாக உள்ள நிலையில, அரசாங்கத்தின் கவனிப்பு மற்றும், கொள்கை வகுப்பு என்ற நிலையில் மலையகம் காணப்படுகிறது.
மக்கள் விடுதலை முன்னணிக்கு உள்ள அக்கரை கூட இந்த அரசாங்கத்திற்கு இல்லை என்பதே ஒட்டுமொத்தமாக அலசி பார்த்தால் கிடைக்கும் விடையாகும். நல்லிணக்கத்திற்கு வித்திட்ட மலையக மக்களையும் இந்த மைத்திரி அரசாங்கம் எண்ணி பார்க்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...