பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மையப்படுத்தி மலையகத்தில் கொண்டாடப்பட்ட மே தினங்கள் சாதித்துள்ள விடயங்கள் எவை? வெறும் வெத்து வார்த்தைகள் வெளியேறியமை மாத்திரம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இம்முறை நடைபெற்ற மே தினக் கூட்டங்கள் இலங்கையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதிகாரம் தொடர்பில் உச்ச போட்டி நிலவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய மேதினக் கூட்டங்களையே ஒட்டுமொத்த இலங்கையர்களின்ம் அவதானத்திற்கு உள்ளாகியிருந்தது. காரணம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நேர் எதிரில் போட்டிப் போட்ட தற்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன மட்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையேற்று நடத்திய மேதினக் கூட்டங்களாக அவை அமைந்தமையே. ஆனால், மீண்டும் மஹிந்த தோற்றமை மட்டுமே இறுதியில் கிடைத்த பதிலாகும்.
காலங்காலமாக நடப்பதை போன்றே இம்முறையும் மலையகத்தில் மேதினக் கூட்டங்கள் அரங்கேறின. கூடிய கூட்டத்தை பொருத்தமட்டில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு அதிகமான கூட்டம் இருபது போல் தென்பட்டது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மேதினக் கூட்டத்திலும் அதிகமான மக்கள் கலந்துகொண்டிந்தனர். இந்த இரு மேடைகளிலும் ஒலித்த குரல் சம்பளப் பிரச்சினைதான். ஆனால், அது அன்று மாத்திரம்தான் ஒலிக்கும் என்பதை சாதாரண பாமரனுக்கும் தெரிந்த விடயம்.
மலையகத்தில் இடம்பெற்ற இரண்டு கூட்டங்களும் தங்கள் பலத்தை காட்டு முனைப்போடு நடைபெற்ற கூட்டங்களாகும். மாறாக தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுத்த மேதினங்களாகத் தெரியவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு மே முதலாம் திகதி பேசிய பேச்சுகளும் கடந்த முதலாம் திகதி பேசிய பேச்சுகளும் சற்றும் மாறுப்படவில்லை. அன்று கொடுத்த அதே வாக்குறுதிகளை இம்முறையும் கொடுத்துள்ளனர். ஆனால், கொடுக்கப்பட்டவை வெறும் வாய்வார்த்தைகளாகவே இதுவரை காலமும் இருந்துள்ளன இருக்கப் போகின்றன. ஆனால், இம்முறை அரசியல் வாதிகளின் குரல் மாத்திரம் சற்று ஓங்கியோலித்தது.
இ.தொ.காவின் பொதுச் செயலாளர் உரிய நேரத்தில் சம்பளத்தை பெற்றுத்தருவோம் எனக் கூறியுள்ளார். இதை திரிவுப்படுத்தி பார்த்தால் இன்னமும் தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க இவர்கள் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சம். பொருளாதார நெருக்கடியால் மக்கள் அதலபாதாளத்தில் உள்ளனர். நேரம் வரும்போது பெற்றுத்தருவோம் என்று சர்வசாதாரணமாகச் சொல்லியுள்ளார்.
அவரை போலவே இ.தொ.கா. தலைவர் முத்துசிவலிங்கமும் தெரிவித்துள்ளார். முதலாளிமார் சம்மேளனம் எப்போதும் பேச தயாராகிறார்களோம் அப்போதுதான் இவர்களும் தயாராகுவார்கள் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். அதேபோல் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மேதினக் கூட்டத்திலும் சம்பள விடயம்தான் பிரதான பேசும்பொருளாக இருந்தது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் கைச்சாத்திடப்படா விட்டால், 25 ஆம் திகதி மலையகம் தழுவிய
இந்த விடயம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு மறைமுகமாக கொடுக்கப்பட்ட அழுத்தமாகவே பார்க்க வேண்டியுள்ளது. தேசிய அரசில் இந்த இரு கட்சிகளும் அங்கம் வகித்தும் இன்னமும் தொழிலாளர்களின் சம்பள விடயத்தை தீர்க்க முடியவில்லை என்றால் எவ்வாறு ஏனைய உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கப் போகிறார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பள பிரேரணை நாடாளுமன்றத்தில் அரசால் சமர்ப்பிக்கப்பட்ட போது நாடாளுமன்றத்திற்குச் செல்லாதவர்கள் இன்று தமது ஆவேசப் பேச்சுகளை கட்டவிழ்த்துவிடுகின்றனர்.
அமைச்சர் மனோகணேசனின் அறிவிப்பு வரவேற்க ஒவ்வொரு தொழிலாளியும் கடமைப்படும் அதேவேளை, இதுவரைக்காலமும் அவர் மௌனமாக இருந்ததற்கு காரணமென்ன.
தொழிலாளர் தினம் என்பதால் சற்று ஆவேசப்பட்டுவிட்டாரோ என்னவோ. மலையக மக்களுக்கு இவ்வாறான அறிவிப்புகளும், கருத்துகளும் ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால், அவரவர் தேவைக்கு இந்த மக்களை பயன்படுத்துதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒரு மாற்று அரசியலுக்காகவே த.மு.கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவை வழங்கியிருந்தனர். ஆனால், அதனை த.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் எத்தினை அரசியல்வாதிகள் பூர்த்திச் செய்துள்ளனர் என்பதே கேள்விக்குறியே. கூட்டு ஒப்பந்தம் காலாவமியாகி ஒருவருடம் கடந்துவிட்டது. அது இன்னமும் கைச்சாத்திடப்படாமை ஒட்டுமொத்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசால் தனியார்த்துறைக்கு வழங்கப்பட உள்ள 2,500 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிப்பதில் பாரிய சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. வேலை நாட்களுக்கு ஏற்பவே தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் த.மு.கூட்டணி எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமைக்கு இ.தொ.காவின் வினைத்தினற்றச் செயற்பாடும் ஒரு காரணமாகும்.
கட்டாயம் தற்போது சம்பள அதிகரிப்புடன் கூடிய கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டே ஆகவேண்டும். மீண்டும் மழை ஆரம்பித்துள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை நாட்கள் இனிவரும் காலங்களில் குறைவாகத்தான் இருக்கும். காலநிலை என்பது தோட்டத் தொழிலாளர் வாழ்வில் முக்கிய தாக்கத்தைச் செலுத்தும் காரணிகளில் ஒன்றாகும்.
மே தினக் கூட்டத்தன்று அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஒரு முக்கிய விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது, தொழிற்சங்கள் ஒற்றுமையின்றிச் செயற்படுகின்றமையே இத்தனை பிரச்சினைகளுக்கும் பிரதான காரணம் என்றார். இந்த விடயத்தைதான் அன்றுமுதல் மலையக புத்திஜீவிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதை எந்தவொரு தொழிற்சங்கமும் கண்டுகொள்வதில்லை. உலக எவ்வளவோ நாகரிகமடைந்துள்ளது. ஆனால், மலையகத்தில் மாத்திரம் இன்னமும் பிற்போக்கானத் தொழிற்சங்க அரசியல் வோரூன்றியுள்ளது.
இதனை மாற்ற இளைஞர்கள் குரல் கொடுத்தாலும் அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் அவை மலுங்கக்கடிக்கப்படுகின்றன. உண்மையில் இன்று சம்பளப் பிரச்சினையும் இந்தளவு இழுபறியில் உள்ளமைக்குத் தொழிற்சங்களின் ஒன்றுமையின்மையே பிரதான காரணம். எனவே, தொழிற்சங்கள் மக்கள் நலன் கருதி குரல் கொடுக்க முன்வருமாயின் எந்தவொரு பிரச்சினையையும் வெற்றிகொள்வது இலகுவாகும். சம்பளப் பிரச்சினை ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...