இரா.ஜெயராமன் ட்ரொட்ஸ்கி ஆற்றிய அமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் பத்தாவது ஞாபகார்த்த நினைவுப் பேருரை இது. நூல் வடிவில் வெளியாகியிருக்கும் இந்த விரிவான ஆய்வுக் கட்டுரை இந்த நேரத்தில் மிகவும் அவசியமானதொரு பதிவு. பல ஆய்வுகளுக்கு திறந்துவிடும் கட்டுரையும் கூட. தொழில்நுட்ப காரணங்களால் இதனை "நமது மலையகம்: பகுதி பகுதியாக வெளியிடுகிறது.
பண்டாரவளை நீதிமன்றின் நீதவானாகவும் நுவரெலியா மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் தற்போது கடமையாற்றுகின்ற திரு.இரா.ஜெ. ட்ரொட்ஸ்கி அட்டன் பிரதேசத்தினை பிறப் பிடமாகக் கொண்டவராவார்.
அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி, ஹைலண்ஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டமாணி (விசேட) பட்டத்தை பெற்றுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சட்டபீடங் களில் வருகை தரு விரிவுரையாளராகவும் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் கடமையாற்றிய திரு.ட்ரொட்ஸ்கி பல்வேறு மனித உரிமை அமைப்புகளில் மனித உரிமைகள் தொடர்பாக விரிவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் :
ஒரு விமர்சன நோக்கு
ஒரு விமர்சன நோக்கு
அனைவருக்கும் வணக்கம்!
அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த பத்தாவது நினைவுப்பேருரையை நிகழ்த்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தமை குறித்து நான் உண்மையில் மகிழ்ச்சியடைவதோடு இதனை எனக்கு கிடைத்த கெளரவமாகவும் கருதுகிறேன்.
அறுபதுகளில் ஹைலன்ஸ் கல்லூரியில் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் கடமையாற்றிய அமரர் இர. சிவலிங்கம் மலையக சமூக மேம்பாட்டுக்கு தன்னை அர்ப்பணித்த ஒருவராவார். அவரோடு இணைந்து பணிபுரிந்த அவரது நண்பரான அமரர். எஸ். திருச்செந்துரனையும் நாம் இங்கு நினைவிற் கொள்ளவேண்டும். இந்த இருவரது தன்னலமற்ற சேவைகளின் காரணமாக மலையகத்தில் கல்வி, கலை இலக்கியம், சமூக மற்றும் அரசியல் தொடர்பான ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அத்துடன் மலையக இளைஞர்களையும் யுவதிகளையும் அமைப்பு ரீதியாக ஒன்று திரட்டுவதிலும் அமரர்கள் இருவரும் பெரும் பங்களிப்பு செய்தனர்.
எனவே அப் பெருமகனது பத்தாவது ஞாபகார்த்த நினைவுப் பேருரையை ஆற்றுமாறு ஞாபகார்த்த குழுவின் தலைவர் திரு.எம்.வாமதேவன் அவர்கள் என்னை தொலைபேசி மூலமாகக் கேட்டுக் கொண்டபோது நான் பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன்.
கடந்த பத்துவருடங்களாக அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழுவினர் பல உயரிய பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். நினைவுப் பேருரைகள், நூல்வெளியீடு, ஆய்வுகள், மற்றும் பல்வேறு போட்டிகள் என அவர்களது பணிகள் தொடர்கின்றன. அவர்கள் நடத்திய முதலாவது கட்டுரைப் போட்டியில் முதலாவது பரிசினைப் பெறும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது. அவர்களது சீரிய பணிகளுக்காக அவர்களைப் பாராட்டுவதோடு அப்பணிகள் தொடரவேண்டுமென்றும் வாழ்த்துகிறேன். -
இந்த ஞாபகார்த்த உரை அழகிய நூல் வடிவில் உங்களது கைகளில் தவழ்கிறது. இதன் கையெழுத்துப் பிரதியை வாசித்து நூலுருவாக்கிய ஞாபகார்த்த குழு உறுப்பினர் திரு.தை.தனராஜ் அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
இனி எனது தலைப்பு தொடர்பான கருத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
சட்டமும் சமூகவியக்கமும் - ஒரு மேல் நோக்கு
" மனித குடும்பத்தினைச் சேர்ந்த சகலரினதும் உள்ளார்ந்த கெளரவத்தையும் அவர்கள் யாவரதும் சமமான பாராதினப்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம் நீதி சமாதானம் என்பவற்றிற்கு அடிப்படையாக அமைகின்றது."(1) மேலும் "மனித உரிமைகள் பற்றிய அசிரத்தையும் அவற்றினை அவமதித்தலும் மனித குலத்தின் மனச்சாட்சியினை அவமானப்படுத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு" இடமளித்துள்ளதாகவும் "அச்சத்திலிருந்தும் வறுமையிலிருந்தும் விடுதலையினை மனிதன் பூரணமாக துய்க்கத்தக்க ஒரு உலகின் வருகையே சாதாரண மக்களின் உயர்ந்த குறிக்கோளாக இருப்பதாகவும், சட்டத்தின் ஆட்சியால் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியம் எனவும் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் பாயிரம் குறிப்பிடுகின்றது. இக்கூற்று முழு மனித குலத்தின் மீதே சட்டம் செலுத்த கூடிய தாக்கத்தினை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.
சமுதாயத்தின் உள் முரண்பாடுகள், உற்பத்தி சக்திகளுக்கும் உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள், பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான முரண்பாடுகள் என்பவற்றின் அபிவிருத்தியே சமுதாய மாற்றத்திற்கும் அதன் முன்னோக்கிய நகர்விற்கும் களம் அமைக்கின்றது. இந்த வகையில் சமூகமானது அது தற்போது இருக்கின்ற நிலையிலிருந்து சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரத்தில் முன்னேறிய கட்டம் ஒன்றிற்கு நகர்வதினையே இங்கு நான் "சமூக அசைவியக்கம்"என குறிப்பிடுகின்றேன். இந்த சமூக நகர்வினை விரைவுபடுத்துவதில், தடுப்பதில் அல்லது பின்னோக்கி இழுத்து செல்வதில் சட்டத்தின் தாக்கத்தினை அவதானிப்பது சம காலத்தில் அவசியமாகின்றது.
இன்றைய நிலையில் திருமணம், விவாகரத்து, பிள்ளைகள் மீதான பெற்றோரின் கட்டுப்பாடு, கல்வி, கலாசார அபிவிருத்தி, சுகாதாரம் போன்ற மனிதனின் தனிப்பட்ட விடயங்களில் தொடங்கி சமூக, பொருளாதார, அரசியல் விடயங்கள், உற்பத்தி உறவுகள், போக்குவரத்து, சமயம், இலக்கியம் ஆகிய பொது வாழ்வின் அனைத்து அம்சங்களின் மீதும் சட்டத்தின் தாக்கத்தினை தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
சமூக அசைவியக்கத்தின் மீது சட்டம் செலுத்தக் கூடிய தாக்கத்தின் சில தத்துவார்த்த விடயங்களை குறிப்பிட்ட வரையறைக்குள் நின்று சுட்டிக்காட்ட முனைகின்றேன்.
சட்டம் என்றால் என்ன? அது எங்கிருந்து வருகின்றது? எதற்காக வருகின்றது? யாருக்காக உருவாக்கப்படுகின்றது? அது என்ன செய்தது? என்ன செய்துகொண்டிருக்கின்றது? அதன் நோக்கம் என்ன? அதன் எதிர்காலம் என்ன? சட்டம் தன்னளவில் இயங்கக்கூடிய சுயாதீனமான விடயமா? இவை போன்ற வினாக்கள் சுவாரஸ்யமானவை.
பென்தம், ஜோன் ஒஸ்டின் ஆகியோர் சட்டம் என்பது இறையின் ஆணையெனவும் அதை மீறினால் தண்டிக்கப்படுவர் எனவும் இறை'என்பது அரசன், பாராளுமன்றம், நிறைவேற்றுதுறை போன்ற சட்டம் இயற்றும் நிறுவனங்களை உள்ளடக்குகின்றது எனவும் விளக்கினர்.(2)
ரோம சாம்ராஜியத்தின் அடிமைச் சட்டங்கள், அமெரிக்காவின் மற்றும் தென்னாபிரிக்காவின் நிறபாகுபாட்டு சட்டங்கள், ஹிட்லர், முசோலினி ஆகியோரின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஜனநாயக விரோத சட்டங்கள், சித் திரவதை தொடர்பான சட்டங்கள் அனைத்துமே'இறையின் ஆணைகள் தான்' எனவே இறையே பிழையானதாக இருக்கும் போது என்ன செய்வது, சட்டம் தீமையானதாகவும் மனித உரிமைகளை மறுப்பதாகவும் இருக்கும் போது என்ன செய்வது, சட்டத்துக்கு அடிபணிவதா அல்லது அதனை மீறுவதா, போன்ற தத்துவார்த்த பிரச்சனைகள் மேற்பிளம்பின.
பொப்ஸ், ஜோன் லொக், ரூசோ, ஆகியோர் சமூக ஒப்பந்த கோட்பாட்டின் அடிப்படையிலே அரசு உருவாகியதனால் , அரசின் சட்டங்கள் மக்களின் பிரிக்கமுடியாத உரிமைகளை மதிக்கவும், சமாதானம், ஒழுங்கு, மக்களின் பொருளாதார அபிவிருத்தி, சொத்துரிமை போன்றவற்றினை பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டுமென கருதினர். (3)
இந்த வகையில் அவர்கள் சட்டம் எப்படி இருக்கின்றது என்பதை விட எப்படி இருக்க வேண்டும் என சிந்தித்தனர். ஹென்றி மெயின் பொது சித்தத்தின் வெளிப்பாடே சட்டம் " என கருதினார். இங்கு அரசினால் இயற்றப்படுகின்ற சட்டங்கள் சமூக உறுப்பினர்களில் ஒரு பகுதியினருக்கு நன்மையானதாகவும் இன்னொரு பகுதியினருக்கு தமையானதாகவும் அமையும் போது தீமையான பகுதியினை அனுபவிக்கும் மக்கள் அச்சட்டத்தை பின்பற்றுவதா, அல்லது மீறுவதா, மீறுவதற்கு அவர்களுக்கு சட்ட உரிமை இருக்கின்றதா, பின்பற்றுவதாக இருப்பின் சட்டத்தினால் அல்லது அரசினால் அந்த பிரிவினருக்கு ஏற்படக்கூடிய நன்மை என்ன, தீமை எனின் ஏன் அதனை பின்னபற்ற வேண்டும், என்ற பிரச்சனைகள் தோன்றின.
மேற்கூறப்பட்ட வகையிலான சட்டப்பிரச்சனை நெல்சன் மண்டேலா 1962 இல் தென்னாபிரிக்க நீதிமன்றத்தில் அவர் குற்றவாளியாக பிரகடனப்படுத்தப்பட்டபோது குற்றவாளிக் கூட்டில் இருந்து மேற்கொண்ட சமர்ப்பணத்தில் தெளிவாக பிரதிபலித்தது. அவருடைய உரையின் சாராம்சம் பின்வருமாறு அமைந்தது. "சிந்திக்கும் ஆற்றல் கொண்ட எந்தவொரு ஆப்பிரிக்கனும் தன்னுடைய மனச்சாட்சிக்கும் சட்டத்திற்கும் உள்ள முரண்பாட்டினை உணரமுடியும். இந்நிலை இந்த நாட்டிற்கு மட்டுமே உரித்தான ஒரு பிரச்சனையல்ல. மனச்சாட்சியுடன் சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் இந்த சட்டத்தை எதிர்ப்பதை தவிர வேறொன்றையும் செய்ய முடியாது.(4)
நான்கு வருடங்களின் பின்னர் நெல்சன் மண்டேலாவின் சடட்த்தரணி Bram Fischer நிற பாகுபாட்டு சட்டத்தின் அஎப்படையில் குற்றம் சாட்டப்பட்டார். தனக்கு எதிரான அனைத்து குற்ற சாட்டுகளையும் ஏற்றுக்கொண்ட Fischer பின்வருமாறு நீதிமன்றத்திலே கருத்து வெளி யிட்டார்: “சமூகத்தின் பாதுகாப்பிற்காக சட்டத்திற்கு அடிபணிய வேண்டும் என்பதை பொதுவான விதியாக நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் சட்டங்கள் தன்னளவில் முறை கேடானதாக இருக்கும் பொழுது உயர்ந்த கடமை எழுகின்றது. அக்கடமை ஒருவரை அச்சட்டத்தினை நிராகரிக்க நிர்ப்பந்திக்கின்றது. நிறப்பாகுபாடு சட்டங்கள் இந்த நாட்டின் பெருந் தொகையான பிரஜைகளை அவர்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதில் இருந்து நிற அடிப்படையிலே தடுப்பதோடு அவர்களுடைய எதிர்ப்பினை இல்லாதொழிப்பதனை (நசுக்குவதனை) நோக்கமாக கொண்டு இயற்றப்பட்டவை. எனவே என்னுடைய மனச்சாட்சி இந்த சட்டங்களுக்கு அடிபணிவை வழங்க என்னை அனுமதிக்க வில்லை.(5)
இக் கூற்று சமூக ஒப்பந்தக் கோட்பாடு, இயற்கைச் சட்ட கோட்பாடு ஆகியன சட்டம் தொடர்பில் வழங்கிய விளக்கத்தினை கேள்விக் குட்படுத்தியது.
பெண்ணிலைவாதிகள் சட்டம் என்பது சமூக அமைப்பிலே நிலவுகின்ற ஆண் பெண் சமத்துவமின்மையை பாதுகாத்து, ஆணாதிக்க சமூக அமைப்பினை பேணுவதோடு பொருளாதார ரீதியிலே பெண்களின் உழைப்பினை சுரண்டுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனவும் ஆகவே சட்டங்கள் பெண்களின் சம உரிமையினை சுதந்திரத்தினை, சமூக, பொருளாதார, அரசியல், கலாசார மற்றும் ஆளுமைக்கான அபிவிருத்தியினை உத்தரவாதம் செய்ய கூடிய வகையிலே புதிதாக உருவாக்கப்படல் வேண்டும் எனவும் சமத்துவ உரிமைக்கு எதிரான சட்டங்கள் அனைத்தும் திருத்தப்பட அல்லது இல்லாதொழிக்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. (6) எனினும் மார்க்ஸிய பெண்ணிலை வாதிகள் சட்டங்கள் பெண்களின் உழைப்பு சுரண்டலை நிலை பெறச்செய்யும் தன்மை கொண்டிருப்பதினால் அவை இல்லா தொழிக்கப் படல் வேண்டும் என்ற நிலைப்பாட்டினை வெளிப் படுத்தியுள்ளனர். (7)
மார்க்சிய கோட்பாடு சட்டம் தொடர்பில் இயக்கவியல் பொருள்முதல்வாத நோக்கில் வேறுபட்ட கருத்தினை கூறுகின்றது. அதன் படி சட்டம் அரசியல், இலக்கியம் என்பன பொருளாதாரம் எனும் அடிக்கட்டுமானத்தின் மீது அமைக்கப்படுகின்ற மேல்கட்டுமானங் களாகும் எனவும் எனவே, சட்டம் என்பது பொருளாதார உற்பத்தி சாதனங்களின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற சக்தி தன்னுடைய நலன்களுக்காக தன்னுடைய வர்க்க ஆதிக்கத்தினை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பயன்படுத்துகின்ற சாதனமாகும். எந்த ஒரு கட்டத்திலும் அது உற்பத்தி சாதனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் நலனை பேணுவதாகவே அமையும் எனவும் மார்க்சியவாதிகள் வாதிடுகின்றனர். (8)
பூர்ஷுவா சமுக அமைப்பில் உருவாக்கப்படுகின்ற சட்டங்கள் அனைத்தும் உழைப்பாளரை குறிப்பிட்ட உற்பத்தி உறவுக்குள் கட்டுப்படுத்த ஆக்கப்பட்ட விதிகளே. அவை உழைப்பாளனின் நலனுக்காக ஆக்கப்பட்டவை அல்ல. சட்ட சீர்திருத்தங்கள் என்பன ஆதிக்க வர்க்கத்தின் பொருளாதார நலனை பாதுகாக்க அவ்வப்போது முன்வைக்கப்படுகின்ற ஏமாற்று நடவடிக்கைகளே. எனவே சட்டம் முதலாளிகளின் நலனுக்கு சேவை செய்கின்றது. சோசலிச சமூகமொன்றிலே அச்சமூகத்தை கம்யூனிசத்தை நோக்கி நகர்த்துவதற்கு சட்டம் சேவையாற்றுவதுடன் வர்க்கபேதமற்ற கம்யூனிச சமூகத்திலே அரசு உலர்ந்து உதிர்ந்து போவதால் அங்கு வர்க்கரீதியில் அமைந்த சட்டம் இருக்காது என மார்க்ஸியம் குறிப்பிடுகின்றது. (09)
விமர்சன சட்ட ஆய்வாளர்கள், சட்டம் என்பது தன்னளவில் தனித்தியங்கும் ஒரு விடயமல்ல என்பதுடன், அது ஒரு அரசியல் விடயம் எனவும் சட்டத்தின் வெளித்தோற்றம் வேறு, உள்நோக்கம் வேறு எனவும் கூறுகின்றனர்.(10)
சட்டத்தினை பொருளாதார ரீதியில் நோக்கும் அணியினர் சட்டத்தின் நோக்கம் உரிமைகளை பாதுகாப்பதாகவும் நீதியினை வழங்குவதாகவும் இருப்பினும் அதன் ஒரு பகுதி சந்தை பொருளாதாரத்தினை பாதுகாத்து அபிவிருத்தி செய்வதாக காணப்படுகின்றது. எனவே சட்டம் பொருளாதார சந்தையின் பாதுகாவலனாக செயல்படுகின்றது என்கின்றனர். (11)
உற்பத்தியின் பூகோளமயமாக்கல், பிரமாண்டமான வர்த்தக அமைப்புக்களின் செயற்பாடுகள் மனித உரிமைச் சிந்தனைகள உலகில் ஏற்பட்டுள்ள வளப்பற்றாக்குறை, வறுமை, யுத்தம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்பன மரபுரீதியான சட்டக் கோட்பாடுகளை மீளாய்வு செய்ய நிர்ப்பந்தித்துள்ளதுடன் சட்டத்தின் செயற்பாடுகளை சிக்கலடையச் செய்துள்ளன.
இன்றைய நிலையில் சட்டம் தன்னளவில் தனித்தியங்கும் ஒரு காரணியாக இல்லாத போதும் சமூக முரண்பாடுகளின் உச்சக் கட்டத்திலே சட்டத்தின் செயற்பாடு சர்வதேச அக்கறை வாய்ந்ததாகவும் விமர்சனத்திற்குரியதாகவும் காணப்படுகின்றன. மேற்கூறிய பின்னணியில் சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கத்தினை தெளிவாக அவதானிக்க முடியும்.
தொடரும்...
சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 1)
சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 2
சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 3)
அடிக்குறிப்புகள் :
- 1948 ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட "அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்”
- J. Bentham, Of Laws in General, H.L.A. Hart-Athlone press 1970, J. Austin-The Province of Jurisprudence Determined Weidenfeld and Nicolson 1955.
- Prof-Hilare McCoubrery and Dr.Nigel. D.White Jurisprudence’ Blackstone Press Limited Second Edition 1993 page -77,79,81
- Christopher Roederr & Darrel Moellendorf'Jurisprudence’JUTA
- Company Ltd 2004-p-25
- Ibid at page 26.
- Ibid Page 300
- Ibid 304 -
- Ibid page 138 and see Supra note 3 at page 113.
- Supra Note 3 page 113.
- Supra Note 4 page 246.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...