பெருந்தோட்ட மக்களை வேர் இல்லாத மக்களாக அதாவது நிலத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாத மக்களாக வைத்திருப்பதே அவர்களை நிரந்தர அடிமைத் தொழிலாளர்களாக வைத்திருப்பதற்கான சிறந்த வழி என்பதை ஆரம்பத்தில் தோட்டங்களை உருவாக்கி நிர்வகித்து வந்த வெள்ளைக்காரர்களின் தந்திரமாக இருந்தது. 'எதுவுமே எமக்கு சொந்தமில்லை' என்ற உணர்வை மக்கள் மத்தியில் உருவாகுவதற்காக அவர்கள் மக்களுக்கு வீடுகள் என்ற பெயரில் லயன் அறைகளையும் உணவுப் பொருட்கள் உட்பட அனைத்தையும் கொடுத்தார்கள். இவை இலவசமாக வழங்கப்படுவது போன்ற மாயை மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. மக்கள் இறந்த போதுகூட பிரேதப்பெட்டிகள் உட்பட சடலத்தை கொண்டுசெல்வதற்கான வசதிகளை செய்து கொடுத்தனர். அதன்மூலம் மரணத்தின் போதுகூட 'எதற்கும் சொந்தக்காரர்களல்ல' என்ற உணர்வோடு மரணிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது. ,
இந்தப் பின்னணியில் மலையக பெருந்தோட்ட மக்கள் இதுவரை காணி மற்றும் வீட்டுரிமை இல்லாத மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். தங்களது வசிப்பிடம் தங்களுக்கு சொந்தமானதல்ல என்ற உணர்வு காரணமாகவே அவர்கள் நிலையற்ற வாழ்க்கையை, அதாவது உயிருள்ளவரை எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்துடன்; வாழ்திருக்கிறார்கள். அதனால் கல்வித்துறையில் அதிக அக்கறை காட்டாமை, மற்றவர்களிடம் கையேந்தி தங்கி வாழ்தல், பிறந்தது முதல் இறக்கும் வரையில் கடன் கலாசாரத்தில் வாழ்தல் போன்ற பாரம்பரிய வாழ்க்கையே வாழ்ந்திருக்கிறார்கள். இந்த பழக்கமும் சிந்தனையும் எமது மக்களின் இரத்தத்திலேயே ஊறிவிட்ட விடயமாக இருந்தது. இந்தப் பின்னணியிலேயே எமது வராலாற்றில் முதல் முறையாக காணி உரிமையும் வீட்டுரிமையும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அரசியல் கொள்கை ரீதியில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இது எமது மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் சிறப்பான வரலாற்றுத் திருப்பமாகும். ஆனால் இந்த புதிய மாற்றம் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கிற ஒரு சரித்திரபூர்வமான மாற்றம் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் புதிய சூழலின் முக்கியத்துவம் பற்றி மக்கள் போதியளவு விளங்கிக்கொண்டிருப்பதாகவும் தெரிவில்லை. நாம் இப்போது உரிமையுள்ள மக்களாக மாறி வருகிறோம் என்ற உணர்வு கூட மக்கள் மத்தியில் காணப்படவில்லை. தங்களது வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் இந்த முக்கியமான மாற்றத்தை மக்கள் புரிந்து கொள்ளாமல் வழமை போலவே தொழிற்சங்க ரீதியிலும், கட்சி ரீதியிலும் பிரிந்து அதே நிலையிலேயே இருக்கிறார்கள். மக்கள் இவ்வாறு இருப்பதுதான் தமக்கு வாய்ப்பானது என்று மலையக அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள். இதனை மாற்றி மக்களை புதிதாக சிந்திக்க வைக்க எவரும் முயற்சிப்பதாகவும் தெரியவில்லை.
கடந்த அரசின் காலத்தின்போதும் பெருந்தோட்ட பகுதிகளில் சில வீடுகள் அமைக்கப்பட்டன. பாதைகளும் அமைக்கப்பட்டன. அபிவிருத்தி பணிகள் நடந்தன. ஆனால் புதிய அரசு வந்த பின்னர் தோட்டங்களில் வீடுகள் நிர்மாணித்தல், பாதைகள் அமைத்தல் போன்ற பணிகள் ஓரளவுக்கு வேகமடைந்திருப்பதை அவதானிக்க முடியகிறது. ஆயினும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் மக்களுக்கு வீட்டுக்கும் காணிக்குமான உரிமை வழங்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான உத்தரவாதம் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கப்படாத அதேவேளை, மறுபுறம் சொந்த வீடுகள் வந்தால் வரிகட்ட வேண்டியிருக்கும். நீருக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், இந்;த செலவை மக்களால தாங்க முடியாது, எனவே சொந்தமாக காணி வீடு பெற்றுக்கொள்வது புத்திசாலித்தனமான விடயம் அல்ல என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து, மக்களின் சொந்தம் கொண்டாடும் மனப்பாங்கை மழுங்கடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்தோடு ஒரு தோட்டத்திலுள்ள சிலருக்கு வீடுகள் அமைக்கும்போது அல்லது தோட்டத்திற்கு செல்லும் பாதை அமைக்கும்போது அதை எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அமைக்கிறார், எந்த தொழிற்சங்கத்தை சேர்ந்தவர் அமைக்கிறார் என்ற அடிப்படையில் அந்தப் தொழிற்சங்கத்தை அல்லது அந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமே பங்குபற்றுகிறார்கள். அந்தப் பாதைகள் பொதுப்பாதைகள். நம் எல்லோருக்கும் செந்தமான பாதை என்ற உணர்வுடன் மக்கள் பங்குபற்றுவதுமில்லை. பங்களிப்புசெய்வதும் இல்லை. இதனால் பதைதிறப்பு அல்லது வீடுதிறப்பு வைபங்களில் தோட்டத்திலுள்ள அனைவரும் பங்குபற்றுவதில்லை.
தோட்டங்களில் பாதையோ, வீடோ அல்லது எந்த ஒரு அபிவிருத்திபணியை எந்தகட்சியை சார்ந்தவர் அமைத்தாலும் அல்லது செய்தாலும் அவர் அரசாங்கம் ஒதுக்கும் பணத்திலேயே அமைக்கிறார். எந்த அமைச்சரும் மாகாண, பிரதேச சபை உறுப்பினரும் தமது சொந்தப்பணத்தில் எந்த அபிவிருத்தி பணியையும் செய்வதில்லை. எனவே வீடோ, பாதையோ எதை அமைத்தாலும் அது நமது வரிப்பணத்திலிருந்தே அமைக்கப்படுகிறது. எனவே அந்த நன்மை நம் எல்லோருக்கும் சொந்தம் என்று மக்களை நினைப்பதற்கு தூண்ட வேண்டும். யார் மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல காரியத்தை செய்தாலும் மக்கள் எல்லோரும் பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முன்பெல்லாம் பாதை அமைக்கும்போது அந்தப் பாதை அமைப்பிற்கு சிரமதானம் மூலம் பங்களிப்பு செய்யுமாறு மக்களை கேட்டால் கொந்தராத்துக்காரருக்கு அரசாங்க பணம் கிடைக்கிறதுதானே, நாங்கள் எதற்கு பங்களிப்புசெய்ய வேண்டும் என்று மக்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். இதன் காரணமாக கொந்தராத்துக்காரர்கள் தங்களுக்கு அதிக இலாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு மிகவும் மோசமான முறையில் பாதைகளையும், பாலங்களையும் அமைத்தார்கள். தோட்டப்பகுதிகளில் அமைத்த பாதைகள், பாலங்கள் ஓரிரு வருடங்களிலேயே மீண்டும் உடைந்து ஓட்டை உடைசலும் காணப்படுவதை நாம் காணலாம். இதற்கு காரணம் மக்களின் பங்களிப்பு இல்லாமையேயாகும். இதே வேளையில் கிராமப்புறத்தில் இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் நடக்கும்போது கிராமத்தவர் அனைவரும் தமது கிராமத்திற்கு அரசாங்கத்தின் மூலம் நன்மை கிடைக்கிறது என்ற அடிப்டையில் அந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சிரமதானம் செய்கிறார்கள். கிராமத்தில் அனைவரும் இணைந்து கண்காணிப்புக் குழுக்களை அமைத்து கொந்தராத்துக்காரர்களின் பணிகளை கண்காணிக்கிறார்கள். இதனால் கொந்தராத்துக்காரர்களால் மோசடி செய்ய முடிவதில்லை. இதனால் தான் கிராமங்களில் அமைக்கப்படும் பாதைகள் ,அபிவிருத்திப பணிகள் தோட்டங்களில் உள்ளவை போன்று ஒரிரு வருடங்ளேயே பழுதடைந்து விடாமல் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கின்றன. எனவே இந்த விடயத்தை நாம் கிராம மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அங்கு மக்கள் கிராமத்துக்கான அபிவிருத்தி வேலை என்று வரும் போது அவர்கள் கட்சி ரீதியில் அல்லது தொழிற்சங்க ரீதியில் பிரிந்து செயற்படுவதில்லை.
எனவே, பெருந்தோட்டத்திலுள்ள மக்கள் தங்கள் தோட்டத்தில் நடக்கும் எந்தவொரு அபிவிருத்தி விடயமாக இருந்தாலும் அந்தக் காரியத்திற்கு தொழிற்சங்க வேறுபாடுகளை மறந்து அதில் நேரடி பங்களிப்பு செய்ய வேண்டும். சிரமதானம் மூலம் அல்லது வேறுவழிகளில் பங்களிப்பு செய்ய வேண்டும் .உதாரணமாக ஒருதோட்டத்திற்கு பாதை அமைப்பதாக இருந்தால் அதற்கு மக்கள் சிரமாதானம் மூலம் பங்களிப்பு செய்தால் பாதைகளை தரமுள்ள பாதைகளாகவும் சில வேளைiயில் அதிக தூரத்திற்கு அமைக்கமுடியும்.
எனவே, தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை முன்னெடுத்து செல்ல வேண்டுமானல் மக்கள் மத்தியில் “சொந்தம் கொண்டாடும் “Ownership Mentality “” மனப்பாங்கை கட்.டியெழுப்புவது மிகவும் முக்கியமாகும்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...