அரசியல் அமைப்பு சட்டங்களும் சமூக உருவாக்கமும்
1931 ம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட சர்வஜனவாக்குரிமை இலங்கையில் பொது ஜனங்கள் தொடர்பிலே பல்வேறு விதமான சட்டங்கள் தோன்றுவதற்கும் அரசியல் சமூக வாழ்விலே மாற்றங்கள் ஏற்றபடுவதற்கும் காரண மாகியுள்ளது. இந்தச் சட்டத்தினால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் முக்கியமானவை.
இலங்கையில் பிரஜா உரிமைச்சட்டங்கள் சமூக அசைவியக்கத்திலே மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.1948 ம் ஆண்டின் 18 ம் இலக்க பிரஜா உரிமைகள் சட்டம். 1949 ம் ஆண்டின் 3 ம் இலக்க இந்திய பாகிஸ்தானியர் வதிவிட (பிரஜா உரிமை)சட்டம் என்பன் பிரதானமானவை.
பிரஜா உரிமைசட்டம் 1950, 1955, 1987, 1988, 1993, 2003, ஆகிய ஆண்டுகளில் பலவிதமான திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது. 1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரஜா உரிமை பிரச்சினை 2003 ம் ஆண்டின் 16 ம் இலக்கச் சட்டத்தினால் பெருமளவில் தீர்க்கப்படும் வரை காலத்துக்கு காலம் இச்சட்டம் பல்வேறு அரசியல் காரணங்களின் அடிப்படையிலே திருத்தப்பட்டது. பிரஜா உரிமைச் சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலே முன்வைக்கப்பட்ட - ஒட்டுமொத்தமான கருத்துக்களை தொகுத்து நோக்கின் பின்வரும் விடயங்கள் பிரதானப்படுத்தப்பட்டுள்ளன:
- அரைநூற்றாண்டுக்கு மேலாக மலையக மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டனர்.
- பலம் பொருந்திய தொழிலாளவர்க்கத்தின் ஒரு பகுதியினர் பலமிழக்க செய்யப்பட்டனர்.
- கல்வி, தொழில் வாய்ப்புகளை இழந்தனர்.
- குறைந்த கூலிக்கு உழைக்கும் பட்டாளமாக மாற்றப்பட்டனர்.
- அரசியல், சமூக, பொருளாதார வாழ்வில் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டனர். 6. தேசிய அரசியலில் பங்குபற்றுவதில் இருந்து தவிர்க்கப்பட்டனர். அரசியலில் வலுவிழந்த அணியினராக மாற்றப்பட்டனர்.
இன்றைய நிலையில் மனித உரிமைகளுக்கும் 1978 ம் ஆண்டின் அரசியலமைப்புக்கும் முரணான பழைய தொழில் சட்டங்கள் பல இன்னும் நடைமுறையில் காணப்படுகின்றன. 1978 ம் ஆண்டின் அரசியல் அமைப்பின் உறுப்புரை 16 ஆனது இந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த சட்டவிதிகள் அவை அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் கூறப்பட்டவற்றிற்கு முரணாக இருப்பினும் அமுலில் இருக்க முடியும் என ஏற்பாடு செய்வதனால் இந்த சட்டங்களின் இருப்பு கேள்விக்குட் படுத்தப் படவில்லை. மேலும் இலங்கையில் ஒரு விடயம் சட்ட மாக்கப்பட்டதன் பின்னர் அதன் பெறுமதியினை கேள்விக்குட்படுத்தி செயலற்றதாக்கக் கூடிய சட்ட நிலைமைகள் காணப்படவில்லை.
இந்த வகையில் 1978 ம் ஆண்டின் அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் இருந்த சட்டங்களை கேள்விக் குட்படுத்த முடியாது. சட்டமொன்று நடைமுறைக்கு வந்ததன் பின்னர் அதனால் ஏற்படக்கூடிய நடைமுறை தாக்கங்களுக்கு ஏற்றவகையிலே அச்சட்டத்தின் பெறுமதியினை நிர்ணயம் செய்யக் கூடிய நிலமை எதிர் காலத்தில் ஏற்படுத்தப்படல் வேண்டும். இந்திய சட்ட முறையினை பொறுத்தவரையிலே ஒரு விடயம் சட்டமாக்கப்பட்ட பின்னரும் கூட அரசியலமைப்புக்கு முரணானது என்ற வகையில் செல்லு படியற்றதாக்கப்படலாம். அமெரிக்காவிலும் நீதியான நடைமுறை (Due Process) என்ற சட்ட அடிப்படையில் இந்நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.
அமெரிக்க மெய்யியல் வாதிகள் புத்தகங்களில் இருக்கும் சட்டத்தினை விட அவை நடைமுறைப்படுத்தப்படும் விதத் தினைப் பற்றி ஆய்வு செய்கின்றனர். இந்த வகையில் பிரித்தானிய சட்டமரபுகளுக்கு அமைய இந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட சட்டங்கள் நீதிமன்ற முறைகள் என்பன இந்நாட்டின் சாதாரண மக்களை பொறுத்தவரையில் சில நடைமுறை சிக்கல்களை தோற்றுவித்துள்ளன. உதாரணமாக கிராமிய சூழ்நிலையில் அங்குள்ள மரபுகளுக்கு பழக்கப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியமளிக்கும் போது அங்குள்ள அமைப்பு முறையின் காரணமாக உதாரணமாக நீதிபதி, சட்டத்தரணிகள், பொலிசார் சிறைச்சாலை அதிகாரிகள் ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்கள் பலதரப்பட்ட மக்கள் முன்னிலையில் பொலிசார் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவருடைய கல்வி, பொருளாதார மற்றும் சமூக நிலைமை என்பனவற்றின் காரணமாக பல சந்தர்ப்பங்களில் தடுமாற்றமான நிலைமைக்கு உள்ளாகின்றார். இந்நிலை அவருடைய உரிமை கோரிக்கை தொடர்பிலே மட்டும் அன்றி அவரைப் போன்ற சாதாரண மக்கள் நீதிமன்றத்திற்கு வந்து தமது உரிமை கோரிக்கைகளை முன்வைத்து நிவாரணம் கோருவதில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இந்நிலை மாற்றப்படல் வேண்டும்.
இன்று நடைமுறையில் உள்ள தொழில் சட்ட நியதிகளின் படி வேலையாளர் ஒருவரின் சேவை முடிவுறுத்தப்பட்டால் அவர் தான் வேலைமுடிவுறுத்தப்படும் போது இறுதியாக வேலை செய்த இடத்தில் உள்ள தொழில் நீதிமன்றத்திலே வழக்கினை தொடர வேண்டும். ஆரம்ப காலத்தில் தொழில் நியாய சபைகளுக்கு அகில இலங்கை நியாயாதிக்கம் காணப்பட்டது. தற்போதைய சட்ட நிலைமை தொழிலாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இன்று இலங்கையின் பல இடங்களிலிருந்தும் பலர் கொழும்பில் தொழில் புரிகின்றனர். அம்பாந்தோட்டையில் அல்லது பதுளையில் உள்ள வேலையாளின் சேவை கொழும்பில் முடிவுறுத்தப்பட்டால் அவர் கொழும்பிலேயே வழக்கு தொடர்ந்து சட்டத்தரணியினை அமர்த்தி ஒவ்வொரு தவணையும் வழக்கிற்கு சமூகமளித்து தொழில் அற்ற நிலையில் தன்னுடைய கிராமிய சூழலுக்கு அப்பால் தொழில் நீதிமன்றில் வழக்கின் இறுதிவரை போராடுவது என்பது நடைமுறை சாத்தியமற்றது. இந்நிலையிலே பல சந்தர்ப்பங்களில் பல வேலையாட்கள் தொழில் தருனரின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு அல்லது சரணடைந்து செல்ல வேண்டிய நிலைமை தோன்றுகின்றது. இது தொழில் சட்டத்தில் இருக்க கூடிய ஒப்புரவு நீதி முறை கோட்பாடுகளுக்கு முரணாக அமைகின்றது.
சட்ட விரோதமான மதுபான விற்பனை, இரத்தினக்கல் அகழ்வு போன்ற விடயங்களில் சில முக்கியமான விடயங்கள் நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியில் வசதிபடைத்த சிலர் மேற்கூறிய சட்டவிரோத செயலில் ஈடுபடுவதுடன் பல சந்தர்ப்பங்களிலே வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது சில அதிகாரிகளின் அனுசரணையுடன் சாதாரண நபருக்கு நாட் சம்பளத் தினை வழங்கி அவரது பெயரில் வழக்கை பதிவு செய்வதுடன், அக்குறிப் பிட்ட நபர் குற்றத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் தண்டப்பணத்தை செலுத்தி அவரை வெளியில் கொணர்வதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் குற்றவாளியாக்கப்பட்ட தண்டம் விதிக்கப்பட்டவரின் பிள்ளைகள் எதிர்காலத்திலே உயர் தொழில்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது தந்தை நீதிமன்றில் குற்றச்செயலுக்காக தண்டம் விதிக்கப்பட்டவர் என்ற விடயம் தாக்கம் செலுத்துகின்றது. இவ்விடயமானது சமூகமொன்றின் வளர்ச்சி மற்றும் குற்றம் செய்தவரே தண்டிக்கப்படல் வேண்டும் என்ற குற்றவியல் தத்துவ கோட்பாடு என்பவற்றிற்கு முரணாக காணப்படுகின்றது.
இன்றைய சூழலிலே சட்டவிரோதமான மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை என்பனவற்றில் பெண்கள் அதிகம் ஈடுபடுவதனை அவதானிக்க முடிகின்றது. மூதுர் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 98 வீதமான வழக்குகளில் பெண்களே எதிராளிகளாக காணப்படுகின்றனர். வறுமை விதவைகளாக்கப்பட்டமை தொழில் வாய்ப்புகளின்மை என்பன சட்டத்தரணிகளால் காரணங்களாக கூறப்படுகின்றன. இவ் விடயத்தில் பின்வரும் கருத்து நடைமுறை பயன்மிக்கதாக காணப்படுகின்றது. "சரியான முறையில் புரிந்து கொள்ளப்பட்டால் நலன்களே எல்லா ஒழுக்கநெறிகளுக்கும் இலட்சியம் என்பதால், மனிதனின் தனிப்பட்ட நலன் மனித குடும்பத்தின் நலனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.... குற்றங்களுக்காக தனி மனிதனை தண்டிக்க கூடாது. குற்றங்களின் சமூக விரோத பிறப்பிடங்கள் அழிக்கப்படல் வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உயிராற்றலின் இன்றியமையாத வெளிப்பாட்டிற்கு சமூக வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். மனிதன் புறச்சூழலினால் உருவாக்கப் படுகின்றான் என்றால் அந்த புறச்சூழல் மனித பண்புடைய தாக்கப்படல் வேண்டும்.(20) எனவேதான் ரஷ்யாவில் நடைபெறும் குற்றவியல் வழக்கு விசாரணைகளின் போது மக்கள் மதிப்பீட்டாளர்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றார்கள்.
முடிவுரை
இதுவரை அவதானிக்கப்பட்ட விடயங்களின் படி நோக்குகின்ற போது சமூக அசைவியக்கத்தினை தடுக்கின்ற சட்டங்கள் இருந்துள்ளதனை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான சட்டங்கள் பிற்காலத்தில் விமர்சிக்கப்படுகின்றன. எனினும் அவ்வாறான சட்டங்களினால் பின்னோக்கி இழுத்து செல்லப்பட்ட மக்களின் சமூக வாழ்க்கைக்கு சமகாலத்தில் வழங்கப்படும் நிவாரணம் என்ன அல்லது இவ்வாறான சட்ட செயற்பாடுகளினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு எதிர்காலம் வழங்கப்போகும் சட்ட நிவாரணம் என்ன, என்பதற்கு விடை தேடுதல் சமூகபயன் மிக்க விடயமாகும்.
உயர் நீதிமன்றங்களிலே தொடரப்படும் அடிப்படை மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான வழக்குகளை அவதானிக்கும் போது அதிலே இந் நாட்டின் சாதாரண ஏழை தொழிலாளர் விவசாயிகளினால் தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. சாதாரண மக்களின் உரிமைகள் அவ்வளவில் மீறப்படவில்லை என்பதாக இதனை கொள்ள கூடாது. அவர்கள் சுதந்திரமாகவும் தைரியமாகவும் நீதிமன்றங்களுக்கு வருவதனை தடுக்கும் சமூக, பொருளாதார அரசியல் காரணிகள் ஆழமாக ஆய்வு செய்யப்படல் வேண்டும்.
இறுதியாய்வுகளில் சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் மிக பலமானது. இவ் விடயத்தில் பின்வரும் கருத்தினை முடிவுரையாக இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
“ ..... ... தனிநபர்களுடைய நலன்களை காட்டிலும் சமுதாயத்தின் நலன்களே தலைமையானவை. அவை இரண்டும் நியாயமான, இணக்கமான உறவுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். முன்னேற்றம் கடந்த காலவிதியாக இருந்ததை போல எதிர்காலத்தின் விதியாகவும் இருக்க வேண்டுமென்றால், வெறும் செல்வத்தை தேடும் வாழ்க்கை மனித குலத்தின் முடிவான தலைவிதி அல்ல. நாகரிகத்தின் தொடக்கத்துக்குப் பிறகு கழிந்திருக்கின்ற காலம் மனிதன் இதுவரை வாழ்ந்திருக்கின்ற காலத்தில் ஒரு சிறு துளியே ஆகும். அது இனி வரப்போகின்ற யுகங்களின் ஒரு துளியும் ஆகும். சமுதாயம் தகர்ந்து மறைதல் செல்வத்தை முடிவான நோக்கமாக கொண்டிருக்கும் வாழ்க்கையின் முடிவு நிலையாகி விடுமென்று தோன்றுகின்றது. ஏனெனில் அப்படிப்பட்ட வாழ்வு தனக்குள் சுய அழிவுக்குரிய அம்சங்களை கொண்டிருக்கின்றது. நிர்வாகத்தில் ஜனநாயகம், சமுதாயத்தில் சகோதரத்துவம், உரிமைகளில் சமத்துவம், எல்லோ ருக்கும் கல்வி ஆகியவை வரப்போகின்ற முன்னிலும் உயர்வான சமூகக் கட்டத்தை நோக்கியே முன்னேறிக்கொண்டிருக்கின்றன (21) (மார்க்ஸ்).
முற்றும்
சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 1)
சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 2)
சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 1)
சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 2)
அடிக்குறிப்பு:
- மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் - கம்யூனிஸ்ட் சமூகம்’ முன்னேற்றப்பதிப்பகம் - மொஸ்கோ பக்கம் -10
- ஏங்கெல்ஸ்: குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ-290
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...