Headlines News :
முகப்பு » , » சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 2) - இரா.ஜெ. ட்ரொட்ஸ்கி

சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 2) - இரா.ஜெ. ட்ரொட்ஸ்கி



பிரித்தானியர் ஆட்சியில் சட்டமும் பாதுகாப்புமும்

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்திலே இந்தியாவில் சிருஷ்டிக்கப்பட்ட வறுமை நிலைமை காரணமாக இந்தியத் தொழிலாளர்கள் இலங்கை வந்தனர். "தமது கிராம எல்லைக்குள்ளேயே தமது உலகத்தை தரிசித்துக்கொண்டு சலனமற்றிருந்த அந்த விவசாயிகள் காலனித்துவ கொள்ளையடித்தலுக்கு உட்பட்டு உணவு தேடி ஊர்ந்தனர். ரொட்டித்துண்டுக்கு முன்னே அவர்களின் கிராமிய உலகம் மண்டியிட்டது. அவர்கள் தமது உழைப்பு சக்தியை விற்பனை செய்வதற்கு தயாராகிக்கொண்டனர். வரலாறு புதிய அத்தியாயத்தினை தொடங்கியது. இந்திய விவசாயிகள் அந்நிய நாடுகளில் உழைப்பு சக்தியை விற்பதற்கு தமது கிராமிய எல்லைகளைக் கடந்தனர்(12) எனவும் 1866ல் ஒரிசா மாநிலத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பசியினால் இறந்தனர்'(13) எனவும் இந்நிலை விளக்கப்படுகின்றது.
'எண்ணி குழிவெட்டி இடுப்பொடஞ்சி நிற்கையிலே
வெட்டு வெட்டு என்கிறானே வேலையத்த கங்காணி”
"பாவி கணக்கபுள்ளே, பத்துராத்து போடுறானே"
"கோண கோண மலையேறி
கோப்பிப்பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சின்னு
உதைச்சானைய்யா சின்னதொர”
"ஒர மூட்ட தூக்கச் சொல்லி
ஒதைக்கிறானே கண்டாக்கையா"
போன்ற நாட்டார் பாடல்கள் தொழில் துறையில் இருந்த பாதுகாப் பற்ற நிலைமையினை தெளிவுபடுத்துகின்றன. இக்காலகட்டங்களிலே நிலவிய தொழில் சட்டங்கள் கூட முறையாக தொழில் தருனர்களினால் பின்பற்றப்படவில்லை என பிரெஸ்கெடிலின் வழக்கு விசாரணைகளின் போது தெரியவருகின்றது.

பிரெஸ்கெடில் (Bracegirdle) என்தோட்டத்துரை நாவலப்பிட்டிய நகரில் தொழிலாளர் மத்தியில் வெளியிட்ட கருத்துகளுக்காக அப்பொழுதிருந்த ஆளுனர் Edward stubbs, பிரெஸ் கெடிலை இலங்கையில் இருந்து வெளியேறும் படி கட்டளையிட்டார். பிரெஸ்கெடில் அதன்படி இலங்கையை விட்டு வெளியேறாமையினால் அவரை கைது செய்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில நாட்கள் தலைமறைவு வாழ்க்கையின் பின்னர் பிரெஸ் கெடில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆட்கொணர் எழுத்தாணை " கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. Abrahams, C.) (பிரதம நீதியரசர்) Maartensz. SoertS J ஆகிய நீதியரசர்கள் அப்போதிருந்த சட்ட நிலைமைகளை கவனமாக ஆய்வு செய்ததன் பின்னர் பிரெஸ்கெடிலின் கைதும் அவரை நாட்டில் இருந்து வெளியேற்று வதற்கான கவர்னரின் கட்டளையும் சட்டமுரணானது எனத் தீர்ப்பளித்து பிரெஸ்கெடிலை விடுதலை செய்தனர். (14)
இந்த தீர்மானத்தின் பின்னர் 1937 ம் ஆண்டளவில் இலங்கையின் அரசியலில் ஜனநாயக பாரம்பரியங்கள், சட்டவாட்சி விழுமியங்கள், அரசியலமைப்பு மரபுகள், தொழிலாளர் சட்டங்கள், இலங்கையின் சுதந்திரம் என்பன தொடர்பிலே அரச சபையில் மிகவும் முக்கியமான விவாதங்கள் நடைபெற்றன. இலங்கையின் சட்டவரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் இவ்வழக்கு தீர்ப்பின் தாக்கங்கள் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. (15)

பிரெஸ்கெடிலின் உரையின் சாராம்சம் பின்வருமாறு அமைந்திருந்தது. "நீங்கள் அந்த வெள்ளை மலையினை பாருங்கள். அங்குள்ள வெள்ளை மாளிகையிலே வெள்ளையர்கள் சொகுசாக வாழ்கின்றார்கள். அவர்கள் உங்கள் இரத்தத்தினை உறிஞ்சுகின்றனர். நீங்கள் 9 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும் அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட நீங்கள் வேலை செய்யத்தேவையில்லை. அவ்வாறு நீங்கள் வேலை செய்தால் தோட்டம் அதற்கு மேலதிக நேர கொடுப்பனவினை வழங்க வேண்டும். ஆனால் உங்களுக்கு தெரியும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 12 மணித்தியாலம் வேலை செய்ய வேண்டும் என்ற விதியுள்ளது. உங்கள் மேலதிக நேர வேலைக்கு தோட்ட துரைமார் கொடுப்பனவு செய்வதில்லை. (16)

"தோழர்களே! சுதந்திரமும் நீதியும் நிறத்தினால் தீர்மானிக்கப்படக் கூடாது என நான் நம்புவதனால் உங்கள் பக்கத்தில் இருக்கின்றேன். என்னுடைய நண்பர்களே, நீங்கள் கறுப்பு நிறத்தோல் உடையவர்களாக இருந்தாலும் வெள்ளை இதயத்தினை கொண்டிருக்கின்றிர்கள். ஆனால் என்னுடைய நாட்டவர்களோ வெள்ளை நிறத் தோலை கொண்டிருந்தாலும் கறுப்பு சூழ்ச்சிகள் நிறைந்த உள்ளத்தினை கொண்டுள்ளனர். (17)

பிரெஸ்கெடில் தன் அனுபவத்தினை கூறும் பொழுது எச்.டி. தோமஸ் என்ற பெரிய துரையினைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார். "எச். டி. தோமஸ் தன்னுடைய வேலையாட்களை கடுமையாக நடத்தினார். தொழிலாளர்களின் லயக்காம்பிராக்களுக்கு சென்று அவர்களை வேலைக்கு செல்லும் படி வற்புறுத்தினார். பல தொழிலாளர்கள் மலேரியா நோயினால் வருந்திய போதும் அவர்களை தேயிலை பறிக்கும் படி கூறினார். மேலும் அவர் தோட்ட பாட சாலைக்குச் சென்று சிறுவர்களையும் தேயிலைபறிக்க செல்லும் படி கட்டாயப்படுத்தினர். அவர்கள் படிப்பதைவிட தேயிலை பறிப்பதே நல்லது என்றார். எழுத வாசிக்க அவர்கள் படிப்பது பின்னர் அவர்களுக்கு அவர்களுடைய வாழ்நிலையைப்பற்றிய சிந்தனையினை தந்துவிடும். (18) மேற்கூறிய கூற்று அந்தக்காலகட்டத்திலே இருந்து சட்டங்களினால் முறையான பாதுகாப்பினை வழங்க முடியாமற்போனமையினை சுட்டிக்காட்டுகின்றது.

பெருந் தொகையான தொழிலாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்ட தொழில் துறையின் காரணமாகவும் உற்பத்தி உறவுகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாகவும் பல தொழில்சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இச்சட்டங்கள் அனைத்தும் உழைப்பாளிகளின் போராட்டங்களை மந்தப்படுத்தி அவர்களின் உழைப்புச் சுரண்டலுக்கே வழிவகுத்தன என மனித உரிமை ஆய்வாளர்களினால் விமர்சிக்கப்படுகின்றன. மனித உரிமைகள் மற்றும் சமூகவியல் அபிவிருத்தி நோக்கில் இச்சட்டங்களில் காணப்பட்ட விமர்சனத்துக்குரிய சில விடயங்களை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

1865 ம் ஆண்டின் 11 ம் இலக்க இந்திய தோட்ட தொழிலாளர் கட்டளைச்சட்டம், 1889 ம் ஆண்டின் 13 ம் இலக்க தோட்டதொழிலாளர்கள் (இந்திய) கட்டளைச்சட்டம் (இச்சட்டம் 1890 ல் 7 ம் இலக்க சட்டத்தாலும் 1909 ம் ஆண்டின் 9 ம் இலக்க, 1921 ம் ஆண்டின் 43 ம் இலக்க, 1955 ஆண்டின் 22 ம் இலக்க சட்டங்களினாலும் திருத்தப்பட்டன. மேலும் 1921,1932,1941, 1943,1945,1978 ஆகிய ஆண்டுகளிலும் இச்சட்டத்திற்கு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு ள்ளன.) ஆகியன சில பிரதானமான தொழில் சட்டங்களாகும். 1889 ஒக்டோபர் மாதம் 31 ம் திகதி நடைமுறைக்கு வந்த 1889 ம் ஆண்டின் 13 ம் இலக்க தோட்ட தொழிலாளர் (இந்திய) கட்டளைச்சட்டத்தின் முகப்புரையில் இலங்கை தோட்டங்களில் தொழில்புரியும் இந்திய தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களை தொகுக்கும் சட்டம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதன் பொருள்கோடல் பகுதியிலே 'labourer என்ற பதம் தொழிலாளி, கங்காணி (பொதுவில் இந்திய கூலிகள்) துலுக்கன் என்று அறியப்படும் முஸ்லீம்களையும் குறிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் தீர்க்கப்பட்ட வழக்குகளிலே நீதியரசர்களும் 'கூலிகள் என்ற பதத்தினையே பாவித்துள்ளனர். உதாரணமாக Scovel v Mootammah (9 NLR, Page – 83), Solamalay v Waitilingham (16 NLR- Page 353) Jacob v Velaian kangani (1 NLR, Page -42), Saunders v Sinniah kangani, Price v Suppan(15 NLR-Page 283) போன்ற வழக்குகளிலே இவ்வழக்கின் தீர்ப்பினை எழுதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் இந்தியன் கூலிகள் என்றே தொழிலாளர்களை குறிப்பிடுகின்றனர்.

Labourer, workmen,employee, servant போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அக்காலத்தில் நடைமுறையில் இருந்த போதும் 'Cooly என குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தினை சுட்டிக்காட்டியிருப்பது அக்காலத்தில் இம்மக்களின் மீதான அப்போதைய சமூக கணிப்பீட்டினை காட்டுகின்றது. கூலிகள்'என்ற நிலையில் இருந்து 'பிரஜைகள் என்ற நிலையினை நோக்கி இந்த சமூகம் முன்னேறுவதற்கு சில நூற்றாண்டுகளை கடக்க வேண்டியிருந்தது.

இந்த மாற்றத்தினை Angamuthu v The Superintendent of Tangakele Estete (58 NLR Page 190) என்ற வழக்கில் அவதானிக்க முடிகின்றது. 1956 ம் ஆண்டு நீதியரசர் T.S Fernando தன்னுடைய வழக்கு தீர்ப்பிலே கூலிகள்'என்ற வார்த்தைக்கு பதிலாக Labourer என்ற பதத்தினையே பாவித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

1865 ம் ஆண்டின் 11 ம் இலக்க தோட்ட தொழிலாளர் (இந்திய) சட்டத்தின் பிரிவு 21 ன் படி தோட்ட நிர்வாகத்திடம் விடுமுறை பெறாது அல்லது நியாயமான காரணமின்றி தொழிலாளி ஒருவர் தோட்டத்தை விட்டு வெளியேறினால் அது தண்டிக்கப்படக்கூடிய குற்றமொன்றாகும்.

மேலே கூறப்பட்ட Scovell y Mootammah வழக்கில் பெண் தொழிலாளி ஒருவர் தோட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் தோட்டத்தை விட்டு வெளியேறியமையினால் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவ்வழக்கு அட்டன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதுடன் இப்பெண் தொழிலாளி கொட்டகலை DerryClare தோட்டத்தைத் சேர்ந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் இவ்வாறான ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் பல தொழிலாளிகள் இவ்வாறான பிரச்சனைக ளுக்கும், தண்டனைகளுக்கும் முகங் கொடுத்தனர். இவ் விடயம் தொடர்பிலே அறிக்கையிடப்படாத பல வழக்குகளின் விபரங்கள் திரட்டப்பட வேண்டும். இன்றைய தொழிலாளர் உரிமை தொடர்பிலான சர்வதேச மனித உரிமை பிரகடனங்களின் அடிப்படையில் நோக்கும் போது மேற்கூறிய சட்டத்தின் தாக்கத்தினை தெளிவாக அளவிட முடியும்.

இச்சட்டங்களில் காணப்பட்ட இன்னுமொரு விமர்சனத்துக் குரிய அம்சத்தினை இவ் விடயத்தில் குறிப்பிடுவது பொருத்த மானதாகும். தொழிலாளி ஒருவரின் சேவை நிர்வாகத்தினால் முடிவு றுத்தப்படின் அவர் அந்த தோட்டத்தினை விட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாத சந்தர்ப்பத்திலே அச்செயல் குற்றமுறையான அத்து மீறல் எனக் கருதப்பட்டு அத்தொழிலாளிதண்டிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான அடிப்படையிலேயே தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக தொழிற்சங்கவாதிகள் தோட்டங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டிருந்தது. இச்சட்டங்களை எதிர்த்து தொழிற்சங்கவாதிகள் போராடியமை மற்றும் அவர்கள் மீதான வழக்கு நடவடிக்கைகளின் தொடர்பில் தகவல்கள் அறியக்கிடக்கின்றன.

Marimuthu v Wright (NLR page 253) என்ற வழக்கில் அரசியல், நிறுவன ஸ்தாபனம் ஒன்றினால் பிரகடனப்படுத்தப் பட்ட வேலை நிறுத்த போராட்டமொன்றில் பங்குபற்றிய தொழிலாளி ஒருவரின் சேவைகள் தோட்ட நிர்வாகத்தினால் முடிவுறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் தோட்டத்தை விட்டு வெளியேறும் படி அறிவிக்கப்பட்டார். அதனை மீறி அவர் தோட்டத்தில் இருந்ததனால் 'குற்றமுறையான அத்துமீறல்புரிந்தார் என்ற அடிப்படையிலே 5 கிழமை கடுழிய சிறைத் தண்டனையும் 50 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

இதே போல் மேலே கூறப்பட்ட Angamuthu v the Superintendent of Tangakele Estate என்ற வழக்கிலே தோட்ட வேலை முடிவுறுத்தப் பட்டதன் பின்னர் தோட்டத்தில் தங்கியிருந்தார் என்ற வகையிலே குறிப்பிட்ட தொழிலாளிக்கு 6 வார கடுழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இன்றைய தொழில் சட்டத்தினதும் தொழிலாளர்களினதும் உரிமைகள் தொடர்பான கருத் தேற்புகளினதும் அடிப்படையில் நோக்கும் போது மேற்கூறிய சட்டத்தின் செயற்பாடு இலங்கை சட்டமுறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினை அவதானிக்க முடியும்.

தோட்ட தொழிலாளி ஒருவரின் சேவை தோட்ட நிர்வாகத்தினால் முடிவுறுத்தப்படும் பொழுது அவருடைய வாழ்க்கைத் துணையின் சேவையினையும் தோட்ட நிர்வாகம் முடிவுறுத்த முடியும் என மேற்கூறிய சட்டப்பிரிவுகளிலும், உயர்நீதிமன்ற தீர்ப்புகளிலும் குறிப்பிட்டுள்ளன. The Ceylon Workers Congress v The Superintendent of Gona.kelle Estate (73 NLR page 494) The Superintendent of Oakwell Estate Haldamulla v Lanka Estate Workers Union, The Superintendent of Walapane Estate v Walapane SriLanka Wathukamkaru Sangamaya ஆகிய வழக்குகளிலே வாழ்க்கைத் துணையின் சேவையினை முடிவுறுத்துவது சட்ட ரீதியானது எனத்தீர்க்கப்பட்டுள்ளது. எனினும் The Ceylon Workers Congress v The Superintendent of Kalabokka என்ற வழக்கிலே வாழ்க்கைத் துணையின் சேவையினையும் முடிவுறுத்துவது சட்ட முரணானது எனத் தீர்க்கப்பட்ட போதும் பின்வந்த வழக்குகளிலே இத்தீர்ப்பு பின்பற்றப்படவில்லை. இச்சட்டங்கள் இன்றுவரையும் நடை முறையில் இருந்து வருகின்றன என்பதுடன் அவை மாற்றப்பட்டு தேசிய ரீதியில் உருவாக்கப்படும் தொழில் சட்டங்களுக்குள் பெருந்தோட்ட தொழில் துறையும் உள்ளடக்கப்படல் வேண்டும் என சட்ட ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

1927 ம் ஆண்டு 27 ம் இலக்க சட்டத்தினால் 2 (561755 Ll il Minimum Wages Ordinance தொழிலாளர்களின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலே பிரதானமான சட்டமாக கருதப்படுகின்றது. சம்பள சபை ஒன்றினால் தொழில் துறைகளுக்கான ஆக குறைந்த சம்பளம் தர்மானிக்கப்படுகின்றது. அந்ததந்த காலங்களிலே நிலவுகின்ற சமூக, பொருளாதார அரசியல் நிலைமை களுக்கு ஏற்றவகையிலே தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப் படின் ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு எதிரான பல சவால்களை வெற்றி கொள்ள கூடிய வாய்ப்பும் சமூக அபிவிருத்தியும் ஏற்படுகின்றன. தொழி லாளர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பிலே கையாளப்படுகின்ற அளவு கோல்கள் தொடர்பிலே வாதபிரதிவாதங்கள் காணப்படுகின்றன. 1980 கள் வரை ஆண் பெண் சம்பள பாகுபாடு காணப்பட்டது. பெண்ணு ரிமை நோக்கில் பெண்களின் மீதான உழைப்பு சுரண்டலாக இவ்விடயம் அடையாளம் காணப்படுகின்றது.

பெருந்தோட்ட தொழில் துறையில் நிலவிய துண்டு முறை ஒப்பந்த கூலி முறை நவீன அடிமைமுறையாக அடையாளம் காணப்பட்டது. ஆய்வாளர் திரு வ.செல்வராஜா இந்நிலையினை பின்வருமாறு விபரிக்கின்றார் "அடிமை முறை வாழ்நாள் முழுவதும் அடிமைத்துவம் காணப்பட ஒப்பந்த கூலி முறை குறிப்பிட்ட காலத்திற்கு அதாவது ஒப்பந்தகாலத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. எனினும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் தலைமுறை தலைமுறையாக கடனாளிகளாகவே இருந்தைமையால் ஒப்பந்தம் என்பதும் காலவரையறையற்றதாகவும் இருந்தது. எனவேதான் இது நவீன அடிமைமுறைக்கு ஒப்பானதாக இனங்காணத்தக்கதாக அமைகின்றது. (19)

தொழிலாளர்களுக்கு கங்காணியினால் தோட்டத் துரை மார்களினால் கடனாக வழங்கப்பட்ட தொகை முழுமையாக செலுத்தப் படும் வரை தொழிலாளி தோட்டத்தை விட்டு வெளியேற முடியாது. தொழில் உறவினை முடிவுறுத்திக்கொள்ள முடியாது. இந்நிலையில் 1921 ம் ஆண்டின் 43 ம் இலக்க கட்டளைச்சட்டத்தின் மூலம் 'துண்டுமுறை” ஒழிக்கப்பட்டது. இச்சட்டம் இத்தொழிலா ளர்களின் சமூக வாழ்விலே அப்பொழுதிலிருந்த வெளிப்படையான அடிமை முறையினை தளர்த்தியது என்ற வகையிலே முக்கியமானதாக கருதப்படுகின்றது.

தொடரும்
அடிக்குறிப்பு :

12. எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள்
13. S.Nadesan ‘A History of The Upcountry Tamil People’Nandalala puplishers Note -
14. Wesley S.Muthiah and Sydney Wanasinghe ‘The Bracegirdle Affair” AYoung Socialist Publications, Colombo -1997 page 1998.
15. Ibid 454.
16. Ibid 524.
17. Ibid 289.
18. Ibid page 1
19. வ.செல்வராஜா "மலையக மக்களும் புத்தி ஜீவிகளும்-ஒரு மீள்
நோக்கு" இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு 2004 பக்கம் 4



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates