Headlines News :
முகப்பு » , , , , » அநகாரிக தர்மபாலாவுக்கு நேர்ந்த கதி! (1915 கண்டி கலகம் –31) - என்.சரவணன்

அநகாரிக தர்மபாலாவுக்கு நேர்ந்த கதி! (1915 கண்டி கலகம் –31) - என்.சரவணன்


1915 நிகழ்வுகளுக்கான சித்தாந்தப் பின்புலத்தை உருவாக்கியதில் அநகாரிக்க தர்மபாலவின் பாத்திரத்தைப் பற்றி ஏற்கெனவே கணிசமான விபரங்களைப் பார்த்தோம். கலவரத்தை தூண்டிவிட்டதாக அநகாரிக தர்மபாலாவின் மீது குற்றம் சுமத்திய ஆங்கில அரசு கல்கத்தாவில் அவரைக் வீட்டுக் காவலில் 6 ஆண்டுகள் வைத்திருந்தது. அவர் 1921 ஆம் ஆண்டு தான் விடுதலையானர்.

இலங்கையின் வரலாற்றில் கலவரங்கள் நிகழ்ந்த போதெல்லாம் கண்துடைப்புக்காக அரசாங்கங்கள் அதன் பொறுப்பிலிருந்து தாம் தப்புவதற்காக வேறு தரப்பிடம் பழியைப் போட்டுவிட்டு இதோ காரணகர்த்தாக்கள். இதோ நாங்கள் தண்டனை வழங்கிவிட்டோம், அடக்கிவிட்டோம் என்று உலகுக்கு காட்ட எத்தனித்து வந்திருக்கின்றனர். இறுதியாக 1983 கலவரத்தின் போது கூட கலவரத்துக்கு  காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டி ஜேவிபி, நவ சமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, ஆகிய கட்சிகளைத் தடை செய்ததை நாமறிவோம்.

அநகாரிக்க தர்மபால உள்ளிட்ட சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் 1915 நிகழ்வுகளுக்கான சித்தாந்தப் பாத்திரத்தை கணிசமாக ஆற்றியிருந்தபோதும் அந்த கலவரத்தில் நேரடி பாத்திரத்தை ஆற்றியிருக்கவில்லை. அவர்கள் பரப்பிய ஆங்கிலேய எதிர்ப்பு காலப்போக்கில் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கு எதிராக திருப்பினர். ஆங்கிலேயர்களை அந்நியர்கள் என்று பிரசாரப்படுத்தியவர்கள் பின்னர் சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த அனைவரும் அந்நியர்களே என்கிற பிரச்சாரத்தில் இறங்கினர். இந்த பிரச்சாரப் பின்புலத்தின் காரணமாக 1915 கலவர காலகட்டத்தில் சிங்கள பௌத்த சக்திகள் மத்தியில் இன வெறுப்புணர்ச்சி மிகையாக இருந்தது. அந்த காரணங்களே ஆங்கிலேயே அரசு சிங்கள தேசியவாத சக்திகளை வேட்டையாட வாய்ப்பைத் திறந்துவிட்டது. அவர்கள் அக்கலவரத்தில் நேரடி சம்பந்தமில்லாத போதும், கண்துடைப்புக்காகவும், சிங்கள சக்திகளை நசுக்குவதற்கும் பயன்படுத்திக்கொண்டனர். அவர்களுக்கு சுதந்திர கோஷம் எழாமல் தடுப்பதற்கான எச்சரிக்கையாகவும் இந்த மோசமான அட்டூழியங்களை ஆங்கிலேயர் நிறைவேற்றினர்.

அநகாரிக்க தர்மபாலவுக்கு (இயற்பெயர் எட்வர்ட் ஹேவாவிதாரன) மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தார்கள். அவர்களில் ஒரு சகோதரர் சைமன் ஹேவாவிதாரன 1913 இலேயே அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அடுத்த சகோதர்களான எட்மன்ட் ஹேவாவிதாரன, சீ.ஏ. ஹேவாவிதாரன (டொக்டர்) ஆகியோரும் 1915 இல் கலவரத்துக்கு காரணமானவர்கள் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்கள். சீ.ஏ. ஹேவாவிதாரன குறுகிய காலத்தில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் கொழும்பு கெய்சர் வீதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கிறிஸ்டல் பேலஸ் என்கிற கடையொன்றை உடைத்தததாகவும், கலவரக்காரர்களைத் தூண்டிவிட்டதாகவும் பழி சுமத்தப்பட்டு கைதுக்குள்ளானார் எட்மன்ட் ஹேவாவிதாரன. இராணுவ நீதிமன்றத்தில் மூன்று நாள் விசாரணையின் பின்னர் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் நோய்வாய்ப்பட்டு மோசமான நிலைக்கு உள்ளானார். எந்தவித சிகிச்சையும் வழங்கப்படாத நிலையில் வெறும் சிமெந்து தரையில் மோசமான பாயில் படுக்கையில் கிடந்தார். பல நாட்களின் பின்னர் தான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அவரது சகோதரரான டொக்டர் சீ.ஏ. ஹேவாவிதாரன தனது சகோதரரின் நிலையைப் பார்வையிட அனுமதிக்குமாறு காலனித்துவ செயலாளரிடம் கோரிக்கை விடுத்த போதும் எட்மன்ட் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது காலம் கடந்திருந்தது. 1915 நவம்பர் 19 அன்று ஐந்து மாதங்கள் சிறையில் வாடிய நிலையில் எட்மன்ட் சிறையிலேயே இறந்து போனார். அவரது இறுதிச் சடங்கு மிகப் பெரிய அளவில், பெருந்திரளான மக்களுடன், ஒரு தேசிய வீரருக்குரிய மரியாதையுடன் நிகழ்த்தப்பட்டது.

அநகாரிக்க தர்மபால தனது நாட்குறிப்பில் “எனது சகோதரனின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளக் கூட எனக்கு பாக்கியம் கிடைக்கவில்லை” என்று குறிப்பிடுகிறார். ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கு எதிராக பின்னர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலில் எட்மன்ட்டின்  மரணம் குறித்த விடயமும் உள்ளடங்கும். பொன்னம்பலம் இராமநாதன் தனது நூலில் குறிப்பிடும் போது “எட்மன்ட் குற்றம் செய்தார் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இறுதிவரை நிரூபிக்கப்படவில்லை.” என்றார். அதேவேளை பின்னர் புதிதாக வந்த ஆளுநர் வில்லியம் மனிங் பிரபு; ஹேவாவிதாரன குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அநீதிக்கு மன்னிப்பு கோரி கடிதம் எழுதியிருந்தார். மனிங் அம்மையார் ஹேவாவிதாரன குடும்பத்தின் நெருக்கமான நன்பியானார்.

1915 கலவரம் நிகழ்ந்த போது அநகாரிக தர்மபால கல்கத்தாவில் இருந்தார். புத்தகயாவை மீட்கும் பணியில் அவர் தொண்டாற்றிக்கொண்டிருந்தார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக அநகாரிக்க தர்மபாலவின் தொடர்ச்சியான பணிகளுக்கு பழிவாங்கும் முகமாகவே அவரும் அவரது குடும்பத்தினரும் பழிவாங்கப்பட்டார்கள் என்று பெரும்பாலான சிங்கள ஆய்வாளர்கள் குறிப்பிடுவது வழக்கம். அதில் உண்மையும் கலந்திருக்கிறது என்றே கூற வேண்டும். அவர் அவ்வாறு கைதுக்குள்ளாகியிருந்த வேளை 50 வயதை எட்டியிருந்தார். தனது பணிகள் முடக்கப்பட்ட நிலையில் மிகவும் சோர்வுக்குள்ளாகி மனநிம்மதி இழந்திருந்தார் என்பதை அவர் எழுதிய நாட்குறிப்புகளும், கடிதங்களும் வெளிப்படுத்துகின்றன.

புத்தகயாவை மீட்பதற்கு அவர் ஆற்றிய பாத்திரத்துக்கு மரியாதை செய்யுமுகமாக கல்கத்தா வாரணாசியில் ஒரு பிரதான பாதைக்கு அநகாரிக தர்மபாலவின் பெயர் சூட்டப்பட்டிகிறது. அதுபோல கடந்த வருடம் அவரது நினைவுக்காக இந்தியா முத்திரையொன்றையும் வெளியிட்டது.

தர்மபால தனது நாட்குறிப்பில் இப்படி குறிப்பிடுகிறார்.
“உலக யுத்தம் தொடங்கிவிட்டதால் ஆத்திரமுற்றுள்ள ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தமக்கு எதிரானவர்களை நசுக்க பல வகையிலும் முயற்சிக்கும். என்னை சிறைவைக்கவும் வாய்ப்புகள் உண்டு. கைது செய்யப்பப்பட்டால் நான் கொல்லப்படுவதை தவிர்க்கவும் முடியும். நான் மேற்கொண்டு வரும் மகாபோதி இயக்கம் இன, மத வெறுப்புணர்ச்சியை உருவாக்கி வருவதாக சைமன் டி சில்வா ஆங்கில அரசுக்கு தெரிவித்திருப்பதாக அறியக்கிடைத்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருப்ப்தாகவும் கவனமாக இருக்கும்படியும் எனது சகோதரன் பல தடவைகள் எச்சரித்து விட்டான். ஏற்கெனவே நான் ஆங்கிலேயர்களை “பற சுத்தோ” (அந்நிய வெள்ளையர்கள்) என்று திட்டியதால் பலமுறை பொலிசுக்கும் நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டியேற்பட்டுள்ளது. இந்த நிலைமையை விளங்கிக்கொண்டு நான் நாட்டுக்கு வெளியில் வாழுவது உசிதமெனக் கருதி 1915 ஜனவரியில் கல்கத்தாவை நோக்கி கப்பல் ஏறினேன்....”
தான் கைது செயப்பட்டது குறித்து அவர் இப்படி எழுதுகிறார்.
“.07.06.1915 கல்கத்தா பொலிசார் என்னைத் தேடி வந்தார்கள். “மிஸ்டர் தர்மபால இலங்கை அரசு உங்களை கைது செய்து வீட்டுக்காவலில் வைக்கும்படி எமக்கு அனுப்பிய ஆணையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கவே நாங்கள் வந்திருக்கிறோம் எங்கள் அனுமதியின்றி நீங்கள் வீட்டுக்கு வெளியில்  போகமுடியாது. உங்கள் வீட்டில் மூன்று பொலிசாரும், ம்மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் இருப்பார்கள். தயவு செய்து அவர்களின் ஆணைக்கு இணங்க நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் உங்களை சிறைச்சாலையில் அடைக்க நேரிடும்’ என்றார்கள். இலங்கை அரசின் செய்தியையும் எனக்கு காண்பித்தார்கள்.
நான் அவர்களுக்கு இணங்க வேண்டியேற்பட்டது. அவர்கள் வீடு முழுவதும் சோதனையிட்டதுடன் எனது ஆவணங்களையும், நாட்குறிப்புகள் அத்தனையையும் அவர்கள் எடுத்துக்கொண்டனர்....”
இந்த நிகழ்வுகள் குறித்து பல விடயங்களை குறிப்புகளாக எழுதியிருக்கிறார் தர்மபால. தகவல்களைப் பதிவு செய்வதற்காக அவர் எழுதிய மேலும் சில விடயங்களை இங்கு பகிரலாம்.
“மகாபோதி நிறுவனத்தினால் வெளியீடான “சிங்கள பௌத்தயா” பத்திரிகைக் காரியாலயத்திற்குள் நுழைந்த இரகசிய போலீசார் அந்த பத்திரிகையை மூடி சீல் வைத்தனர். மேலும் அந்த அலுவலகத்தை மோசமாக சேதப்படுத்தினர். அச்சு இயந்திரங்களைக் கூட அடித்து நொறுக்கினர். அங்கு சேகரிப்பில் இருந்த முன்னைய பத்திரிகைகள் அனைத்தையும் கொண்டு சென்றனர். இதனால் எனது தம்பியின் பேரில் நிறுவப்பட்ட “சைமன் ஹேவாவிதாரன அறக்கட்டளை”யின் மூலம் பிரசுரித்து வந்த அனைத்து வெளியீடுகளும் நின்றுபோனது. “சிங்கள பௌத்தயா” பத்திரிகையில் வெளிவந்த சில கட்டுரைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு அடங்கிய ஆவணக் கட்டுகளையும் அவர்கள் எடுத்துக்கொண்டனர். அதில் ஆங்கில அரசை கடுமையாகத் தாக்கி எழுதப்பட்டவையும் உள்ளடக்கம். எமது பத்திரிகை சிங்கள பௌத்தர்களை ஆங்கிலேயே அரசுக்கு எதிராக தூண்டிவிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு பத்திரிகைக் காரியாலயம் மூடப்பட்டதாக பின்னர் அறியக்கிடைத்தது. 
அதே வேளை யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த எல்பட் விஜயசேகரவும் மரணமான தகவல் கிடைக்கபெற்றது. அவர் ஒரு தேசிய வீரர். அநீதியான முறையில் சிங்களவர்கள் ஆங்கில ஆட்சியாளர்களால் கொலை செய்யப்பட்டுவருவது எத்தனை வேதனைக்குரிய செய்தி. நான் இங்கிலாந்துக்கு விரிவாக இது குறித்து ஒரு கடிதத்தை எழுதப்போகிறேன்.”
அநகாரிக தர்மபாலவை இலக்கு வைத்து ஆங்கிலேயர்கள் அவரையும் அவரது சகாக்களையும், அவரது நடவடிக்கைகளையும் முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இது சிங்கள இனவாத சக்திகளின் நடவடிக்கைகளுக்கு தற்காலிக பின்னடைவை ஏற்படுத்திய போதும் அது வேறு வடிவில் சில வருடங்களில் முகிழ்த்தன. அதனைப் பின்னர் பார்க்கலாம். அநகாரிக தர்மபால மற்றும் அவரது சகாக்கள் ஆற்றிய இனவாத பாத்திரம் என்ன என்பது குறித்து இந்த இடத்தில் சற்று மேலதிகமான தகவல்களைப் பகிர்வது பொருத்தமாக இருக்கும்.

தொடரும்.



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates