Headlines News :
முகப்பு » » மலையக மக்களின் விடயங்கள் சர்வதேச கவனத்தைப் பெற வேண்டும் - எம் . திலகராஜா

மலையக மக்களின் விடயங்கள் சர்வதேச கவனத்தைப் பெற வேண்டும் - எம் . திலகராஜா


மலையக மக்கள் இலங்கைக்கு வர காரணமானவர்கள் பிரித்தானியர் என்பதையும் அவர்களின் இன்றைய நிலைக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாடு பிரித்தானியாவுக்கு உண்டுஎன்பதை வலியுறுத்திய இதேவேளை ஐக்கிய இராச்சிய பாராளுமன்றில் இதற்காக குரல் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் . திலகராஜா எனது குரல் தேசியம், சர்வதேசம் என்றும் அரசியல், சமூகம், இலக்கியம், பண்பாடு, ஊடகம் என்று எல்லா மட்டத்திலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்து இவ்விஜயத்தின் போது மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா சபையில் குரல் கொடுத்த அதேவேளை, சர்வதேச ஊடகங்களுக்கு பல நேர்காணல்களை வழங்கி அதன் மூலம் சர்வதேச ரீதியில் மலையக மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்த இவர் வீரகேசரிக்கு கருத்துக்களை பகிர்ந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில் மேற்படி விஜயத்தின் போது இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் அவர் எம்முடன் மேலும் பகிர்ந்து கொண்ட விடயங்கள் இங்கு எமது வாசகர்களுக்காக...

மலையக மக்களின் பாராளுமன்ற உறுப்பினராக நீங்கள் ஐ.நா. சென்று வந்துள்ளீர்கள். இது தனிப்பட்ட விஜயமா அல்லது உத்தியோகபூர்வ விஜயமா? உங்கள் விஜயத்தின் நோக்கம் பற்றி சற்று விரிவாக அறியத்தர முடியுமா?

ஒரு சிவில் சமூக பிரதிநிதியாகவும் அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகுதி காரணமாகவும் கிடைக்கப்பெற்ற வாய்ப்பு இது. மனித அபிவிருத்தி தாபனம் இந்த வாய்ப்பை வழங்கியிருந்தது. இந்த விஜயம் குறித்து பாராளுமன்ற செயலாளருக்கும், சபை முதல்வருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்து ஐ.நா. மாநாட்டில் பங்கேற்கும் விசா அனுமதி பெற்றே ஐ.நா. கூட்டத் தொடரில் நான் பங்கேற்றேன்.

மலையக மக்கள் தொடர்பாக சர்வதேசத்துக்கு சொல்லப்படவேண்டிய அவர்களது பிரச்சினைகள் தொடர்பான பரப்புரைகளைச் சொல்வதே என் விஜயத்தின் நோக்கமாகும். அதனை என்னால் இயன்றளவுக்கு உச்ச மட்டத்தில் நிறைவேற்றி திரும்பியிருக்கிறேன் என நினைக்கிறேன். இதற்கு முன்பதாக சிவில் சமூகம் சார்பில் மலையக மக்கள் சார்ந்து செயற்படும் அரச சாரா நிறுவனங்கள் பல சர்வதேச தளத்தில் பரப்புரைகளைச் செய்துள்ளன. அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அரசியல் பரிமாணத்துடன் மலையக மக்கள் குறித்த விடயங்களை என்னால் பரப்புரை செய்யமுடிந்தமை வித்தியாசமான சூழலாகக் கொள்ளலாம்.

மலையக மக்கள் தொடர்பான விடயம் என்று கூறினீர்கள். அம்மக்கள் தொடர்பான என்ன விடயம் பேசினீர்கள்? யாருடன் பேசினீர்கள்?

ஐ.நா அபிவிருத்தி இலக்குகளில் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி இலக்குகள் (Sustainable Development Goals 2030’) என்பதாக நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த எண்ணக்கரு சார்ந்தே உரையாடல்கள் இடம்பெற்றன. 'Leave No one behind’ எனும் கோஷம் முன்வைக்கப்பட்டு ( 2030 ஆண்டளவில் அபிவிருத்தி நிலையில் யாரும் பின்தங்கியவராக இருக்க கூடாது என்பதாக) 2030 க்கான ஐ.நா அபிவிருத்தி இலக்குகள் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதில் மலையக மக்கள் விடுபட்டுவிடக் கூடாது என்பதாகவே எனது பரப்புரைகள் அமைந்தன.

மலையக மக்களின் குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி குறித்து புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகள் Millennium Development Goals உடன் இணைந்ததாக ஒரு பத்தாண்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டது. அப்போதைய தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் இந்த திட்டத் தயாரிப்பு இடம்பெற்றது. அப்போதைய அமைச்சின் செயலாளராகவிருந்த எம்.வாமதேவன் சிவில் சமூகத்தவரின் பங்களிப்புடன் அந்தத்திட்டத் தயாரிப்பில் முன்னின்று செயற்பட்டிருந்தார். இந்தத் திட்டம் 2005 இல் தொடங்கி 2015 இல் முடிவுறுத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டது. எனினும் துரதிர்ஷ்டவசமாக கடந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் இந்த திட்டத்தை முன்கொண்டு சொல்ல அனுமதிக்கவில்லை. பொறுப்பாக இருந்த அமைச்சர்களும் இதனை நடைமுறைப்படுத்துவதில் அக்கறை கொள்ளவில்லை.

இவ்வாறு கிடப்பில் போடப்பட்ட அபிவிருத்தி திட்டத்தை தூசு தட்டி மீளவும் வடிவமைக்கும் வேலைத்திட்டத்தை நாங்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தில் செயற்படுத்தியிருந்தோம். எமது தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையாக இந்த திட்டத்தை மீண்டும் செயற்படுத்த ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட வதிவிடப் பிரதிநிதிகளிடம் ஒத்துழைப்பு கோரியிருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட நிதியத்தின் ஒத்துழைப்புடன் தற்போது மீண்டும் திட்ட தயாரிப்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன. முன்னாள் செயலாளர் எம்.வாமதேவன் தற்போது அமைச்சின் ஆலோசகராக பணியாற்றி இதனை மேற்கொண்டு வருகிறார். இரண்டு ஆலோசகர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் இதில் அதிக அக்கறையுடன் பங்கேற்றுள்ளனர்.

இந்தத்திட்டம் தயாரிக்கப்பட்ட பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாரிய நிதி தேவைப்படும். நாம் உள்நாட்டு வரவுசெலவு திட்டத்திலேயே மலையக மக்களின் அபிவிருத்திக்கான நிதிக்காக தங்கியிருப்போம் எனில் இன்னும் சில நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவரும். எனவே அதனை துரிதப்படுத்தி 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றவே நாம் திட்டமிடுகின்றோம். எனவே ஐ.நா 2030 இலக்குகளில் இருந்து எமது திட்டம் விடுபட்டுவிடக்கூடாது. அதேநேரம் சர்வதேச ஒத்துழைப்பும் தேவை என்பதாகவே எனது பரப்புரைகள் அமைந்திருந்தன.

யாருடன் பேசினீர்கள்என்றும் கேட்டிருந்தீர்கள், பேசிய விடயங்கள் விரிவானவை எனினும் பேசிய தளங்களையும் விடயங்களையும் சுருக்கமாக சொல்கிறேன்.

முதலாவதாக பிராந்திய மட்டத்தில் அதாவது இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடி ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. அவர்கள் தத்தமது நாட்டில் பின்னிலையில் உள்ள மக்கள் குறித்த அபிவிருத்தித்தேவை குறித்து உரையாட வந்திருந்தனர். அவர்களுக்கு மலையக மக்கள் குறித்தும் அவர்களின் அபிவிருத்தியின் தேவை குறித்தும் உரையாற்றினேன். விரிவாக என்னுடன் கலந்துரையாடி நட்பு சக்தியாக ஏற்றுக்கொண்டவர்கள் தமது அடுத்த கட்ட எல்லா நகர்வுகளிலும் என்னை இணைத்துக்கொண்டார்கள்.
அடுத்த கட்டமாக நாங்கள் ஐக்கிய இராச்சிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினரை சந்தித்தோம். இந்தக்குழுவினர் தொடர்பில் நான் இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையில் கேள்விப்பட்டிருந்தேன். எனவே அவர்களை தொடர்பு கொள்ளவும் வசதியாக இருந்தது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஐக்கிய இராச்சிய தூதரகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில்,

மலையக மக்கள் இலங்கைக்கு வர காரணமானவர்கள் பிரித்தானியர் என்பதையும் அவர்களின் இன்றைய நிலைக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு பிரித்தானியாவுக்கு உண்டுஎன்பதை வலியுறுத்தி ஐக்கிய இராச்சிய பாராளுமன்றில் இதற்காக குரல் எழுப்ப வேண்டும் என்றும் எமது அபிவிருத்தியில் ஐக்கிய இராச்சியம் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ட்விக் தலைமையிலான குழுவினர் முழு மனதுடன் இதனை ஏற்றுக்கொண்டதோடு இது பற்றிய விரிவான வேண்டுகோள் அறிக்கை ஒன்றை என்னிடம் கோரியிருந்தனர். இடதுசாரி கருத்தியலுடன் பிரித்தானிய பாராளுமன்ற அவையில் புகழ்பெற்றுள்ள ஜெரமி லெப்ரோய் இந்த குழுவில் அங்கம் வகித்ததுடன் சில விடயங்களை கேட்டு அறிந்துகொண்டார்.

அடுத்ததாக ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமைகள் மற்றும் சமூக விடயங்களுக்காக ஐ.நா. தூதுக்குழுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐ.நா வில் அதிக செல்வாக்கு உள்ள ஐரோப்பிய ஒன்றியம் மலையக மக்களின் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளை மனித உரிமை கண்ணோட்டத்திலும் அணுகவேண்டும் என கோரிக்கை வைத்தேன். எமது வாழ்வாதார பிரச்சினைகள் அபிவிருத்தி சார்ந்தது மட்டுமல்லாது மனிதாபினமான அடிப்படையிலும் அனுகப்படவேண்டியது. பல்வேறு வகையான பேதப்படுத்தல்கள் எங்களுக்கு நிகழ்ந்துள்ளன என்பதையும் தெளிவுபடுத்தினேன். ஐ.நா. அபிவிருத்தி திட்டமிடல் தயாரிப்பில் ஐரோப்பிய ஒன்றியம் இதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டேன்.

இவை ஐ.நா வளாகத்தில் இடம்பெற்ற முக்கிய சந்திப்புகள். இதுதவிர மேலதிகமாக வாஷிங்டன் பயணித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் காரமேலா கொன்ராய் அவர்களை சந்தித்து ஐக்கிய அமெரிக்கா மலையக மக்கள் விடயத்தில் கவனம் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து உரையாற்றினேன். ஐக்கிய அமெரிக்க ஐ.நா. செயற்பாடுகளில் அதிக செல்வாக்கு உள்ள நாடு என்ற வகையில் எமது அரசியல் நிலைப்பாடு பணிகள் தொடர்பில் அவர்கள் உதவக்கூடிய மார்க்கங்களை எடுத்துச்சொன்னேன். அரசியலமைப்பு சீர்திருத்தங்களின்போதோ அல்லது பதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும்போதே எமது மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தும் வகையிலான திட்டமிடலுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குமாறுகேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுக்கொண்டார்கள். அதேநேரம் வீடமைப்பு முதலான விடயங்களில் கௌரவம் மாத்திரம் அன்றி பாதுகாப்பும் உறுதிப்படுத்தபடல் வேண்டும். குறிப்பாக அண்மைக்காலமாக மலையகப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் மண்சரிவு அபாயங்கள் எமது வீடமைப்புக்கான அவசர த்தை வேண்டி நிற்கின்றன. எனவே ஐக்கிய அமெரிக்கா இது விடயத்தில் உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

இதற்கு எவ்வாறான பிரதிபலன்கள் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்?
இவ்வாறான முயற்சிகள் முதலில் அவசியம் என நினைக்கிறேன். பிரதிபலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முதலில் நாம் நமது பிரச்சினைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் உபாயமாகவே நான் இதனைப்பார்க்கிறேன். இப்பயன்கள் இவ்வாறான முயற்சிகளின் பிரதிபலன்கள் குறித்த அனுபவங்கள் மலையக சூழலில் நான் அவதானிக்கவில்லை. எனக்கும் இது புதிய அனுபவம். பொறுப்புடன் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பது மாத்திரம் எனக்கு தெரிகிறது. ஏனெனில் நேபாள நாட்டில் அண்மையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அதனைத் தயாரிப்பதில் பங்கேற்ற நேபாள நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இத்தகைய பரப்புரைகள் மூலமே அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடம் பல அனுபவங்களைப்பெற முடிந்தது. குறிப்பாக இத்தகைய தொடர்புகளை உருவாக்குவதிலும் அவர்கள் எனக்கு பெரிதும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். நட்பாக மாத்திரமல்ல ஒரு உறவாகவே என்னை உபசரித்தார்கள். அரசியலமைப்பு விடயத்தில் தொழில்நுட்ப ஆலோசனை வழங்க சர்வதேச சட்ட புலமையுடைய நேபாள நண்பர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளார்கள். இத்தகைய தொடர்புகளே என்னைப் பொ றுத்தவரை சாதகமானவைதான் என்பேன்.

மலையக மக்களின் பிரச்சினைகள் இதற்குமுன் சர்வதேச மட்டத்திற்கு மலையகத் தலைமைகளினால் கொண்டு செல்லப்பட்டுள்ளதா?

தொழிற்சங்கம் சார்ந்த பிரச்சினைகள் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை பற்றி கேள்விபட்டுள்ளேன். அரசியல் சார்ந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. யாரும் சொன்னால் கேட்டுக்கொள்வேன். சிவில் சமூக அமைப்புகள் பரப்புரைகள் செய்திருக்கின்றன. குறிப்பாக ஜெனிவா தளத்தில் அது அதிக அளவில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் அரசியல் பரிமாணத்துடன் எமது பிரச்சினைகள் சர்வதேசமயப்படுத்தப்ப ட வேண்டிய தேவை இருப்பதை நான் உணர்கின்றேன்.

ஒரு அரசியல்வாதி என்பதற்கு அப்பால் இந்தப்பயணத்தை வேறு வழிகளில் பயன்படுத்திக்கொண்டீர்களா?

ஆம். எனது ஆய்வுத் தேடல் முயற்சிகளும் ஊடகவியல் சார்ந்த ஆர்வமும் சமூகம் சார்ந்த அசைவியக்கமும் பல வழி களை எனக்கு அறிமுகப்படுத்தியது. அதில் முக்கியமானது அமெரிக்காவின் இரண்டு முக்கிய பல்கலைக்கழகங்களில் கலந்துரையாடல்களில் பங்கேற்கவும் கருத்து பகிரவும் வாய்ப்பு கிடைத்தது. நியூயோர்க் நகரில் அமைந்துள்ள கொலம்பிய பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் இடம்பெற்ற டாக்டர் அம்பேத்கர் 125 ஆவது ஜனனதின நிகழ்வில் அவரது உருவச்சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தவும், அவர் நினைவாக இடம்பெற்ற அபிவிருத்தி சார்ந்த செயலமர்வில் உரையாற்றவும் வாய்ப்பு கிடைத்தது. சர்வதேச அம்பேத்கர் நிலையம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. டாக்டர். அம்பேத்கர் இந்த பல்கலைக்கழகத்தில் 100 வருடங்களுக்கு முன்னர் பட்டம் பெற்றுள்ளார். அவர் வடிவமைத்த இந்திய அரசியல் யாப்புதான் இன்றும் நடைமுறையில் உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் கொண்டு வந்த ஒதுக்கீட்டு முறைமை காரணமாகவே இன்று ஓரளவுக்கேனும் ஒடுக்கப்பட்ட மக்கள் அங்கு முன்னேறக்கூடிதாகவுள்ளது. அவர் மீது எனக்கு அதிக மதிப்பு உண்டு. அன்னாருக்கு அவர் கற்ற பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அஞ்சலி செலுத்த கிடைத்தமை பெரும் பேறு. ஒட்டுமொத்த மலையக மக்களும் இந்த நாட்டில் இனத்தின் பெயரில் பல ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ளனர். எனவே அவர் பற்றிய வாசிப்புகள் இந்த மக்களின் விடுதலைக்கான வழியை காட்ட வல்லது. 2030 ஆம் ஆண்டில் யாரும் பின்னடைவானவர்கள் இல்லை எனும் ஐ.நா இலக்கு உண்மையாக அமையுமானால், அபிவிருத்தி நிலையில் நாங்கள் இலங்கையில் தொடர்ந்தும் அவலங்களைச் சந்திக்க மாட்டோம் என்பதை எனதுரையில் இங்கு வலியுறுத்தினேன். இந்த பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நம்மவரான பேராசிரியர். வெலன்டைன் டேனியல் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல ெவாஷிங்டன் நகரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் பேராசிரியர் ஜீவான் மென்டேஸ் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இவர் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. அமைப்பின் சிறப்பு பிரதிநிதியாக செயற்படுகின்றார். அந்த வகையில் இவருடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. மலையக மக்கள் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதன் காரணமாக மாற்றுவழியாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு, உள்நாட்டில் வீட்டுவேலைக்கு அமர்த்தப்படல் போன்ற சந்தர்ப்பங்களில் குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக்கும் சித்திரவதைக்கும் உள்ளாவது பற்றி பிரஸ்தாபித்தேன். இது தனிப்பட்ட சந்திப்பு ஆயினும் ஐ.நா சித்திரவதை தொடர்பான ஆணையகத்துக்கு இந்த தகவலைக் கொண்டு சேர்க்க முடியும் எனவும் பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று அமையுமிடத்து இதுபற்றிய உத்தியோகபூர்வ அறிக்கையை ஐ.நா.வுக்கு சமர்ப்பிக்கவும் தான் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.

ஊடகவியல் சார்ந்து ஐ.நா முன்றலில் பல்வேறு சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்கக் கூடியதாகவிருந்தது. என்.டி.டிவி முதலான பல்வேறு ஊடகங்களிலும் மலையகம் பற்றிய அதன் அபிவிருத்திக்கான தேவைகள் பற்றிய விளக்கங்களை அளித்தேன். அதேநேரம் ஒரு ஊடகவியலாளராக அங்கு சந்தித்த ஆளுமைகளை நேர்காணல். செய்து பதிவுகளைக் கொண்டுவந்துள்ளேன். சில வீடியோ பதிவுகளாகவும் உள்ளன. சிலதை முகநூல் வழியாக வெளியீடும் செய்துள்ளேன். குறிப்பாக இளைஞர்களும் எதிர்கால மலையகமும் அரசியல் பிரவேசம் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் அனுபவங்களைப் பகிர்வது இந்த நேர்காணல்கள் பதிவுகளின் நோக்கமாக அமைந்தது. ஒரு பயணக்கட்டுரையாக இவற்றைப்பதிவு செய்யும் எண்ணம் உள்ளது.

இவை தவிர தனிப்பட்ட இரண்டு நாள் விஜயமாக கனடா நாட்டுக்கு பயணித்து சில சந்திப்புகளைச் செய்திருந்தேன். கனடா வாழ் இந்திய பூர்விக இலங்கை தமிழர்களின் ஒன்றியம் எனக்கு ஒரு வரவேற்பு நிகழ்வினை எற்பாடு செய்து அழைப்பு விடுத்திருந்தார்கள். அதில் பங்கேற்பது எனது பிரதான நோக்கமாகவிருந்தது.புலம்பெயர்ந்து வாழும் மலையக சமூகம் மலையக மக்களின் அபிவிருத்திப் பாதையில் இணைந்து செயற்படுவதற்கு தேவையான பின்புலம் குறித்து இங்கு விளக்கம் அளித்தேன். அமைப்பினர் ஆர்வத்துடன் உள்வாங்கிக்கொண்டதோடு அதை நோக்கி தாம் செய்றபடவும் இணக்கம் தெரிவித்தனர்.

இந்தப்பயணத்தினை அடுத்து மலையக மக்களின் முன்னேற்றத்துக்கு ஏற்றவாறான திட்டங்களை முன்வைக்கும் நோக்கம் இருக்கின்றதா?

ஆம். மலைநாட்டு புதிய கிராம உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் வழிகாட்டலில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பத்தாண்டுத்திட்ட அறிக்கை விரைவில் நிறைவுறும் கட்டத்தில் உள்ளது. அதன் பிரதிகள் அனுமதிபெற்று கிடைக்கப்பெற்றவுடன் மேற்படி சந்திப்புகளில் கலந்துகொண்ட அமைப்புகள் பிரதிநிதிகளுடன் தொடர்பை ஏற்படுத்த எண்ணியுள்ளேன். உத்தியோகபூர்வ அறிக்கையாக அது அமையவுள்ள நிலையில் எமது மக்களுக்கான அபிவிருத்திப்பணிகளை ஒருங்கிணைந்தவிதத்தில் செயற்படுத்த முடியும் என நினைக்கிறேன்.

அண்மைக்கால அபிவிருத்தி குறித்த விடயங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நல்லெண்ண செயற்பாடுகளை நான் சர்வதேச சந்திப்புகளின்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தேன். எமக்கு கிடைக்கப்பெற்ற அமைச்சுப் பொறுப்புகள் குறித்தும் அதற்கு அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புக் குறித்தும் விளக்கினேன். அமைச்சர் திகாம்பரம் தலைமையில் மலையகத்தில் புதிய மாற்றத்துக்காக என்னாலான சகலவிதமான பங்களிப்புகளையும் வழங்கத் தயாராக உள்ளேன். எனக்கு இத்தகைய வாய்ப்புக்கான கதவுகளைத் திறந்து விட்ட நுவரெலியா மாவட்ட மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். மலையக மக்களுக்கான எனது குரல் தேசியம், சர்வதேசம் என்றும் அரசியல், சமூகம், இலக்கியம், பண்பாடு, ஊடகம் என்று எல்லா மட்டத்திலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.


நன்றி  வீரகேசரி..
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates