தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இன்று பல அரசியல்வாதிகள் தாம் பங்குகொள்ளும் நிகழ்வுகள், சந்தித்த பிரமுகர்கள்,தமக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் போன்றவற்றின் படங்களை முகநூலில் (Face Book) தரவேற்றி முக நூல் அரசியல் செய்து வருகின்றனர். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்களை முகநூல் கணக்கு வைத்திருப்போர் அளித்து வருகின்றனர். இதில் மலையக அரசியல்வாதிகளும் விதிவிலக்கு அல்லர்.
முகநூலை தமக்கான ஊடகமாக இவர்கள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர் ஆனால் எந்த அரசியல்வாதிகளும் தொழிலாளர்களின் பிரச்சினைகளையோ எதிர்கால முன்னெடுப்புகளையோ இங்கு பதிவிட தயங்குகின்றனர். மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலும் இன்று முகநூல் கணக்குகளை வைத்திருக்கும் பலர் இதில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் பல இளைஞர், யுவதிகள் தாம் சார்ந்த அரசியல் கட்சிகளை பிரபல்யப்படுத்தி வருகின்றனரே ஒழிய தமக்கு என்ன தேவை என்பதை அங்கு குறிப்பிடுவதில்லை. அரசியல்கட்சி தலைவர்களை நேரடியாக சந்திக்க முடியாதவர்களுக்கு தமது பிரச்சினைகளை முகநூலில் தமது தலைவர்களுக்கு முன்வைக்க முடியும் ஆனால் பல அரசியல் கட்சித்தலைவர்களின் முகநூலை இயக்குவது ஒன்று அவர்களின் உதவியாளராக இருக்கும் அல்லது அவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். நவீன தொழில்நுட்பமானது மக்களை தம்முடன் நேரடியா சந்திக்கும் வழிவகைகளை ஏற்படுத்தி விட்டதே என்ற எரிச்சல் சில வேளைகளில் இவர்களுக்கு ஏற்பட்டு அதனால் அதில் ஈடுபாடு காட்டாது இருக்கின்றார்களோ தெரியவில்லை. இதுவும் ஒரு வகை அரசியல்தான். ஒரு சில அரசியல் தலைவர்களின் பக்கங்களில் வேறு கட்சிகளை சேர்ந்தவர்களின் அதிரடி வசனங்களும் படங்களும் இடம்பெறாமலில்லை. என்ன இருந்தாலும் நம்ம தலைவர் மாதிரி வருமா?
நீங்க எல்லாம் சும்மா போன்ற வசனங்களும் இடம்பிடிக்கின்றன. அதை விட முகநூலிலேயே தேர்தல் பிரசாரம் செய்த சில அரசியல்வாதிகள் இப்போதெல்லாம் தாம் பங்குபற்றும் பாராட்டு விழா படங்களை தரவேற்றி ஏனையோருக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கும் தயங்காமல் அவர்களது ஆதரவாளர்கள் மக்களுக்கான பணிகளை தொடருங்கள் சும்மா போஸ் கொடுத்து சராசரி அரசியல்வாதியாக காட்டிக்கொள்ள வேண்டாம் என அதிரடி பதிவுகளையும் இடுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற விடயங்களை பகிராமல் இவ்வாறு முகநூல் அரசியல் செய்து வரும் தமிழ் அரசியல்வாதிகளை என்னவென்பது?
அஞ்சனா
07/10/2015 சூரியகாந்தியில்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...