Headlines News :
முகப்பு » » பெருந்தோட்ட மக்களுக்கு பொதுச்சேவை வழங்களில் காணப்படும் பிரச்சினைகள் - 2

பெருந்தோட்ட மக்களுக்கு பொதுச்சேவை வழங்களில் காணப்படும் பிரச்சினைகள் - 2


பொதுச்சேவை வழங்கலில் பெருந்தோட்ட மக்களின் நிலை குறித்து ஆராயும்போது இது மேலும் தெளிவாகிறது. பெருந்தோட்டத்துறையில் பொது நிர்வாக சேவை வழங்கல் தொடர்பாக ஆராயும்போது அதனை பிரஜாவுரிமையுடன் தொடர்புபடுத்தி நோக்குவது பொருத்தமாக அமையும். உலகில் பல நாடுகளுக்கு தொழில் நிமித்தம் புலம்பெயர்ந்து கூலிகளாகவும், தற்காலிக பிரஜைகளாகவும், பின்னர் நிரந்தர பிரஜைகளாகவும் வாழ்ந்து வருகின்ற மக்கள் குழுக்கள் அரச நிர்வாக பொறிமுறையில் ஓரங்கட்டப்படுதல் தொடரும் பிரச்சினையாகவே காணப்படுகின்றது.

மறுபுறமாக, பரம்பரை பரம்பரையாக ஒரு நாட்டில் வாழும் சில சமூக பிரிவினரை சாதி, மொழி, மதம் மற்றும் பிறப்பிடம் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் பொதுச் சேவை வழங்கலில் பாகுபாடுகளுக்கு உள்ளாக்குவதும் இடம்பெற்று வருகின்றன. இத்தகைய பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்கு பிரஜாவுரிமை என்ற எண்ணக்கருவினை சமூகவியல் ஆய்வாளர்கள் அதிகமாக பயன்படுத்தும் போக்கு இன்று உலகில் காணப்படுகின்றது. அந்தவகையில் பெருந்தோட்ட மக்கள் பொது நிர்வாக சேவைகளை பெறுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் பிரஜாவுரிமைக் கண்ணோட்டத்தில் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பிரஜாவுரிமை தொடர்பான சிந்தனையாளர்களில் முன்னணியில் செயற்படும் பிரித்தானிய சமூகவியலாளரான T.H.MARSHALL என்பவர் ''பிரஜாவுரிமை என்பது ஒரு சமூகத்தின் முழு உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகின்ற சமூக அந்தஸ்தாகும்'' என்றார். அது சகல பிரஜைகளுக்கும் உரிமை மற்றும் கடமை என்பவற்றில் சம அந்தஸ்தினை வழங்குகின்றது. நவீன பிரஜாவுரிமையானது ஒரு நாட்டின் சகல பிரஜைகளும் அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளில் பங்கேற்பதனையும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சேவைகளை சமமாகப் பெற்றுக் கொள்வதற்கு உரிமையுண்டு என குறிப்பிடுகின்றது. பொது நிர்வாக முறையும், அரசாங்கத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள அதன் உறுப்பினர்களும் பொது மக்களிடமிருந்து பாரிய தொகைப் பணத்தினை வரியாக சேகரிக்கின்றார்கள். ஆகவே, அவர்கள் பிரஜைகளுக்கு தரமான, சமமான சேவையினை வழங்கும் பொறுப்பினைக் கொண்டுள்ளனர் என குறிப்பிடுகின்றார்.

தொடர்ச்சியான சமூகப் புறக்கணிப்புகளுக்கு கீழ் செயற்படும் பூரணமற்ற ஜனநாயகமானது முழுமையற்ற குடியுரிமையினைக்கொண்ட ஆட்சியினை மீள் உருவாக்கும். T.H.MARSHALL “பிரஜாவுரிமை என்பது ஒரு சமூகத்தின் முழு அங்கத்தினர்கள் என்ற அந்தஸ்தினை ஒருவருக்கு வழங்குகின்றதுஎன குறிப்பிடுகின்றார். இதன் மூலம் வெளிப்படுவது யாதெனில், பிரஜாவுரிமை சமூகத்தில் ஏனையவர்களுக்கு சமமான அந்தஸ்தினை வழங்குவதுடன், ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிப்பதற்கான சட்ட ரீதியான அந்தஸ்தினையும் வழங்குகின்றது என்பதாகும்.

இக்கருத்தினை பெருந்தோட்ட மக்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது பெரிதும் எதிர்மறையானதாகவே காணப்படுகின்றது. இவர்கள் வெறுமனே சட்ட ரீதியான பிரஜாவுரிமையினைக் கொண்டுள்ளனரே தவிர, அதன் உண்மையான பலன்கள் அனுபவிக்க முடியாதுள்ளனர். இதற்கு தொடர்ந்து வந்த அரசியல் மற்றும் நிர்வாக விருப்பமின்மை பெரிதும் செல்வாக்கு செலுத்தியுள்ளது. இதன் ஓர் அம்சமாகவே பொதுச் சேவை வழங்கலில் காட்டப்படும் பாகுபாடு, புறக்கணிப்பு ஆகியவற்றை நோக்க வேண்டும்.
பிரஜாவுரிமையினை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. சிவில் பிரஜாவுரிமை (தனி மனித சுதந்திரம் மற்றும் உரிமைகளை குறிக்கின்றது), 2. அரசியல் பிரஜாவுரிமை (வாக்களித்தல் மற்றும் தேர்தலில் போட்டியிடல், அதிகாரத்தை கையாளுதல்), 3. சமூக பிரஜாவுரிமை (சமூக மரபுரிமைகளை முழுமையாக அனுபவிக்கும் உரிமை, சமூகத்தில் காணப்படுகின்ற தரத்திற்கு ஏற்ற வகையில் வாழ்க்கையினை வாழும் உரிமை, அரச சேவைகளை அனுபவிக்கும் உரிமை) என்பனவாகும். இதில் அரசியல் பிரஜாவுரிமையை மலையக மக்கள் 1977களின் பின்னர் படிப்படியாக அனுபவிக்கக் கூடிய நிலை ஏற்பட்டமை மறுப்பதற்கில்லை. சிவில் உரிமைகள் படிப்படியாகக் கிடைக்கப்பெற்றபோதும் தொடர்ச்சியான இனத்துவ முரண்பாடு, சிங்கள தேசியவாத கருத்தியல் மற்றும் அதிகாரம் குவிக்கப்பட்ட ஆட்சிமுறை ஆகியன இதன் மீது சில கட்டுப்பாடுகளை செலுத்தியுள்ளன. இன்று அந்நிலை மாறியுள்ளமை வரவேற்கதக்க விடயமாகும். எவ்வாறாயினும், கௌரவமான வாழ்க்கையினை அனுபவிப்பதற்கு அவசியமான சமூக பிரஜாவுரிமையானது பெருந்தோட்ட மக்களால் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

இதற்கு அரச நிர்வாக பொறிமுறை, அரச கொள்கை தீர்மானமெடுத்தல் என்பவற்றில் புறக்கணிப்பு, அரச சேவையில் போதிய பிரதிநிதித்துவம் இன்மை, மொழி, பாகுபாடு, வறுமை ஆகிய பல காரணிகள் பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றன. விசேடமாக பூரண பிரஜாவுரிமைக்கு சமூக பிரஜாவுரிமை மிகவும் முக்கியமானது என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அது பின்தங்கிய குழுக்களை, தனிப்பட்டவர்களை வினைத்திறன்மிக்க வகையில் சிவில் அரசியல் உரிமைகளை அனுபவிக்க உதவுகிறது. பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரை சமூக பிரஜாவுரிமை தொடர்ச்சியாக மறுதலிக்கப்பட்டமையே சமூக அபிவிருத்தியில் அவர்கள் பின்னடைந்திருப்பதற்கும், பொதுச்சேவைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாமைக்கும் காரணமாக உள்ளது. பிரஜாவுரிமை என்பது வெறுமனே தேசிய அரசொன்றின்கீழ் சட்டரீதியான உறுப்பினராக இருப்பதனை குறிக்கவில்லை. அது, தான் உறுப்பினராக இருக்கும் சமூகத்தில் பூரண உரிமையுள்ள பிரஜையாக செயற்படுவதற்கான தளத்தை அல்லது அந்தஸ்தினை வழங்குவதுடன், தாம் வாழும் தேசத்தின் மீதான உரித்துடைமையினை குறித்து நிற்கின்றது.

இந்த உரித்துடைமையானது பெருந்தோட்ட மக்களிடம் இன்னும் ஏற்படவில்லை என்றே குறிப்பிடவேண்டும். அதற்கு சுதந்திரத்தின் பின்னர் தொடர்ச்சியாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள் கையாண்ட பாகுபாடான சட்டங்களும் கொள்கைகளும் அத்தகைய உணர்வு ஏற்படுவதனை பெரிதும் தடுத்துவிட்டது.

பொது நிர்வாகிகள், சிங்கள தேசியவாதிகள், பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் இன்னும் இம்மக்களை பூரண இலங்கை பிரஜைகளாக ஏற்றுக்கொள்ள தயாரில்லை. பிரஜாவுரிமை தொடர்பான வகைப்பாட்டில் 1990களில் முன்வைக்கப்பட்ட பிரிதொரு விடயமே கலாசார பிரஜாவுரிமை (CULTURAL CITIZENSHIP) கலாசார பிரஜாவுரிமை என்பது மக்கள் தமது கலாசார விழுமியங்களை, சமய நம்பிக்கைகளை மற்றும் அதன் மீது கொண்டுள்ள உரிமைகளை எத்தகைய வழிகளில் அங்கீகரிக்கின்றார்கள், ஒரு தேசத்தில் பிரஜையாக இருப்பதற்கு அப்பால் எவ்வாறு தமது கலாசார உரித்து, உணர்வுகளை பிரயோகிக்கின்றார்கள், வெளிப்படுத்துகின்றார்கள் என்பதனையே இது குறித்து நிற்கின்றது. கலாசார பிரஜாவுரிமையினை பெருந்தோட்ட மக்கள் ஓரளவு அனுபவித்தாலும் (இந்திய பண்பாடு, பாரம்பரியத்தை பின்பற்றல், திருவிழாக்கள், பண்டிகைகளை இந்திய முறைப்படி கொண்டாடுதல், வாழும் இடங்களில் கோயில்கள் அமைத்தல், இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் காமன் கூத்து, வசந்தன் கூத்து. பொன்னர் சங்கர் கூத்து, திருவெம்பாவை என்பவற்றை கொண்டாடுதல்), அதனுள் பல தடைகளும் காணப்படுகின்றன.

குறிப்பாக முப்பாதாண்டுக்கால சிவில் முரண்பாடு மற்றும் அதனால் ஏற்பட்ட தாக்கங்களின் காரணமாக கலாசார பிரஜாவுரிமையும் மட்டுப்படுத்தப்பட்டதுடன் சமூகப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வாழும் பெருந்தோட்ட மக்களில் கணிசமானோர் தமது அடையாளங்களை இழந்து பெரும்பான்மையினத்தின் அடையாளங்களை ஏற்று வாழ்ந்து வருகின்றார்கள் என்பது வருந்ததக்க விடயமாகும். ஜனநாயகத்தை சக்திபடுத்தல், பூரண குடியுரிமை, உள்வாங்கும் ஜனநாயகம் ஆகியன பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியில் பெரியளவிலான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. பூரண குடியுரிமை மற்றும் யாவரையும் உள்வாங்கும் ஜனநாயகம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதில் அரசாங்க நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பொறுப்புண்டு. இது உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமமாகும். அந்தவகையில் இலங்கையில் அரச நிறுவனங்களைப் பார்க்கும் போது அவை பல்மட்ட நெருக்கடி மற்றும் பிரமாண்டமான சீர்திருத்தங்கள், மீள் உருவாக்கம் என்பவற்றை வேண்டிநிற்கின்றன. இருப்பினும் கீழ்மட்ட அரச நிறுவனங்களே இன்றும் பிரஜைகளுக்கு நெருக்கமான வகையில் கிடைக்ககூடிய அல்லது அணுகக்கூடிய ஜனநாயக மற்றும் ஆட்சி நிறவனங்களாகக் காணப்படுகின்றன.ஆகவே, ஜனநாயகம் என்ற பெரிய சட்டகத்துக்குள் இருந்து கொண்டு பொதுச் சேவை வழங்கலில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய வேண்டும், அதனை மறுசீரமைக்க வேண்டும். அதன் மூலம் ஒதுக்கல்களுக்கும் பாகுபாடுகளுக்கும் உள்ளாகியிருக்கும் பிரிவினரை (மலையக மக்கள்) உள்வாங்கும் வகையில் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும். அதன் மூலமே ஜனநாயகத்தை பாதுகாத்து பலப்படுத்தும் நோக்கத்தினை அடைய முடியும். அரச நிறுவனங்கள்; பெருமளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். மேலும் உள்ளுராட்சி நிறுவனங்கள் பெருந்தோட்ட மக்களை தொடர்ந்தும் புறக்கணிப்பதானது முழுமையான பிரஜாவுரிமைமற்றும் யாவரையும் உள்வாங்கும் ஜனநாயகம்ஆகியவற்றை பெரிதும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

வுழஉஙரநஎடைடந என்பாரின் கருத்தின்படி உள்ளுராட்சி அமைப்புகள் அரசியல் கல்வியை வழங்கும் பாடசாலை எனவும் ஜனநாயகத்தை நாடு முழுதும் பாதுகாக்கும் சட்டகம் எனவும் குறிப்பிடுகின்றார். மேலும் இவர் உள்ளுர் ஜனநாயகத்தினையும் அரசியல் கல்வியையும் வழங்கும் ஓர் பொறிமுறையாகவே உள்ளுராட்சி அரசாங்கத்தைப் பார்க்கின்றார். குறிப்பாக அது உள்ளுர் அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் தேசிய அரசியல் தலைவர்களாக வருவதற்கு முன் அதிகாரத்தை எவ்வாறு ஜனநாயக ரீதியாகப் பயன்படுத்துவது எனக் கற்பிக்கின்றது என்றார். இவரின் கருத்தானது உள்ளுராட்சி முறை முழுமையான இரண்டாம் நிலை அரசாங்கமாக காணப்படுவதனையும் அது முதல்நிலையில் (மத்திய அரசாங்கம்) ஸ்திரமான ஆட்சி உருவாகுவதனை சாத்தியமாக்குகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

உள்ளுர் ஜனநாயகம் சக்தி பெறும் பொழுது தேசிய அரசாங்கத்தின் அடக்கு முறைகள் ஆதிக்க மனப்பாங்கு, என்பவற்றுக்கு எதிராக செயற்படும் ஆற்றலைப் பிரஜைகள் பெறுவர். இதன் மூலம் உள்@ர் பிரஜைகளும் அவர்கள் சார்ந்த சமூகமும் உள்ளுர் ஜனநாயகம் மற்றும் உள்ளுர் ஆட்சிமுறை தொடர்பாக வழிப்புணர்வு கொண்டவர்களாகக் காணப்படுவர். உள்ளுராட்சி அமைப்புகள் நேரடி மக்கள் தொடர்புகளை கொண்டிருப்பதானது குடியுரிமையினை தழைத்தோங்கச் செய்கிறது. உள்ளுராட்சி அமைப்புகள் மத்திய அரசாங்கம் போலன்றி உள்ளுர் மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்க புதிய அணுகுமுறைகளை கையாளவேண்டும். இதன் மூலம் அரசியல் பங்கேற்பு பெரிதும் விஸ்தரிக்கப்படுவதுடன் அதன் மூலம் பெரியளவிலான சமூக உள்வாங்கலுக்கான சூழமைவும் ஏற்படுகின்றது. நிர்வாக அதிகாரத்தை பன்முகப்படுத்தல் மற்றும் உள்ளுர் தேவைகளை நிறைவு செய்வதற்கு ஏற்ற வகையில் அரச நிர்வாக பொறிமுறையினை சீரமைத்தல் ஆகியன பெருந்தோட்ட மக்களும் சகல மட்ட அரச நிறுவனறங்களிலும் சமமான, பாகுபாடற்ற பொதுச் சேவைகளை பெறுவதற்கு வழி செய்யும். இதற்கு பெருந்தோட்ட மக்களின் சமூகப் பிரஜாவுரிமை சமூகப் பிரஜாவுரிமை தொடர்பான கருத்தாடல், பரப்புரைகள், புதிய அரச நிர்வாக நிறுவனங்களை உருவாக்குவதற்கான சிவில் சமூக மற்றும் அரசியல் அழுத்தம், அரசியல் மற்றும் நிர்வாக விருப்பத்தினைக் கட்டியெழுப்புதல் ஆகியன அவசியமாகும்.


நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates