Headlines News :
முகப்பு » , , , » "சுதேசிகளும் வந்தேறிகளும்" (1915 கண்டி கலகம் – 4) - என்.சரவணன்

"சுதேசிகளும் வந்தேறிகளும்" (1915 கண்டி கலகம் – 4) - என்.சரவணன்


பல்வேறு அடையாளங்களுடன் பிளவுபெற்றிருந்த இஸ்லாமியர்கள் முஸ்லிம்கள் என்கிற ஒரு மைய இன அடையாளத்துக்கான அவசியத்தை உணர்ந்தது இந்த கலவரத்தின் பின்னர் தான். இந்த சம்பவம் தான் பல முஸ்லிம் தலைவர்களை ஒன்றிணைத்தது. அது போல பல முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றுபடுத்தியது. ஒரே அடையாளத்தின் கீழ் நிலைகொண்டனர் என்று கூட கூறலாம்.

வேறுபல நாடுகளில் நடைபெற்றதைப் போலவே இலங்கையிலும் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான ஆரம்ப எதிர்ப்பானது மத-பண்பாட்டு மறுமலர்ச்சி என்ற வடிவத்தையே எடுத்தது என்று குமாரி ஜெயவர்த்தனா 19 ஆம் நூற்றாண்டின் தேசியவாத எழுச்சி குறித்து கூறுகிறார்.

ஒரு ஆதிக்கத்திலிருந்து விடுதலை கோரும் ஒரு சமூகம் அதே காலத்தில் ஏனைய சமூகங்களின் விடுதலையை பறிக்கும் எண்ணக்கரு எங்கிருந்து எழுந்தது. தேசியம் பாசிசமாக பரிமாற்றமடைவதற்கான போக்கு உலகெங்கிலும் இப்படித்தான் நிகழ்ந்துள்ளது.

உலகில் பாசிச எழுச்சிகளைக் கவனித்தால் “அந்நியர்”கள் (வந்தேறு குடிகள்) மீதான மண்ணின் மைந்தர்களது (தேச பக்தர்கள்) சகிப்பற்ற வெறுப்புணர்ச்சியின் பண்புகளைக் காணலாம். இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் பாசிச வடிவத்தை எட்டுவதும் இந்த அர்த்தத்திலேயே புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. 1900களின் ஆரம்பத்தில் வெள்ளையர்களுக்கு எதிரான சுலோகமாக “அந்நியர்கள்” என்று பயன்படுத்தப்பட்டபோதும் ஏக காலத்தில் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் சமாந்திரமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவே வளர்த்தெடுக்கவும்பட்டது. ஆக இந்த மூன்று சக்திகளுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்ட இனவாத கருத்தாக்கம் காலப்போக்கில் ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்பு தமிழர்களுக்கும் (அதாவது ஈழத் தமிழர் - இந்திய வம்சாவளி தமிழர்) முஸ்லிம்களுக்கும் எதிராக மையம்கொண்டது.

இலங்கையில் சுதந்திரம் கோரிய மக்களின் கலாச்சார பண்பாட்டு ஆளுமையை நிலைநாட்டுவதற்காக உருவாகிய எதிர்ப்புவிதை தேசியவாதமாகவோ அல்லது முழு அளவிலான விடுதலை இயக்கமாகவோ உருவெடுக்கவில்லை. அது பெரும்பான்மைச் சமூகத்தின் மத - பண்பாட்டு எதிர்ப்பின் எல்லைக்குலேயே நின்றுவிட்டதுடன் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இனவாதமாகவும் சீரழிந்தது. இன்று வரை அதன் நீட்சியை அதே தன்மையுடன் காணலாம்.

இனவெறுப்புணர்ச்சியுடம், மத வெறுப்புணர்ச்சியும் சேர்த்தே முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்பட்டு வந்திருக்கின்றன. மத நம்பிக்கை சார்ந்த ஐதீகங்களை பயன்படுத்திக்கொண்டது சிங்கள பௌத்த பேரினவாதம். அது அன்று மட்டுமல்ல இன்று வரை நீடித்தே வருகிறது. இலங்கையில் நெடுங்காலமாக புலால் உண்பதற்கு எதிரான பௌத்த மத கொள்கையானது ஏனைய மதங்களும் அதனை கடைபிடிக்கும்படி நிர்பந்தித்தது. அதனை அதிகாரபூர்வமாக மேலாதிக்கம் செலுத்துவதற்கு இது “சிங்கள பௌத்தர்களின் நாடு”, “சிங்கள பௌத்தர்கள் மண்ணின் மைந்தர்கள்” ஏனையோர் “வந்தேறிகள்” போன்ற கருத்துக்களை திரும்ப திரும்ப வலியுறுத்துவதன் மூலம் அக்கருத்தை ஆழ நிலைநிறுத்தி வைத்திருக்கின்றனர்.

அவ்வாறு புனையப்பட்ட கருத்துப் பிரசாரங்கள் காலப்போக்கில் ஐதீகங்களாகவே நிலைபெற்றுவிடுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான ஐதீகங்களும்  கூட இந்த வகையைச் சார்ந்தது தான். முஸ்லிம்களுக்கு எதிரான அவ்வாறான பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்ட முக்கிய காலப் பகுதி 1900களின் ஆரம்பப்பகுதிதான். சிங்கள பௌத்த தேசியவாத கருத்தாக்கம் கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தாக்கங்களும் வடிவமைக்கப்பட்டு நிருவனமயப்படுவதும் இந்த காலப்பகுதியில் தான்.

பின் வந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தாக்கங்கள் வரிசையாக புதியன சேர்க்கப்பட்டாலும் கூட 1900ஆரம்ப காலப்பகுதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டவை ஒரு நூற்றாண்டு சென்ற பின்பும் கூட இன்றும் அந்த வரிசையிலிருந்து நீங்கவில்லை.

19ஆம் நூற்ற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலேயே அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. ஆயுதம் தாங்கிய போராட்டங்கள், கிளர்ச்சிகள் போன்ற வடிவத்தைக் கூட அவை எடுத்திருக்கின்றன. அவற்றில் பௌத்த பிக்குகள் தலைமை ஏற்றும், பங்களித்துமிருக்கிறார்கள். பௌத்த மதத்தை தூய்மை படுத்தவும் புத்துயிர் கொடுக்கவும் சிங்கள பௌத்தர்கள் அணிதிரட்டப்பட்டனர். ஆனால் அது ஆரம்பத்தில் அடிநிலை மக்களை இணைத்ததாக இருக்கவில்லை. குறிப்பிட்ட வர்க்கத்தினரையும், பௌத்த பிக்குகளையும் இணைத்ததாகவே இருந்தது. இந்த இரு சக்திகளும் இந்த விடயத்தில்  பரஸ்பரம் தமது நிகழ்ச்சிநிரல்களுக்கு ஆதரவளித்துக்கொண்டார்கள்.

மிஷனரி பாடசாலைகளின் ஆதிக்கம், கிறிஸ்தவ மதத்தின் பரவலாக்கம், மத மாற்றம், மது பழக்கங்கள் என்பன பௌத்தர்களுக்கு பீதியை கிளப்பிக்கொண்டிருந்தது. அதே வேளை பிரித்தானிய ஆட்சியால் நன்மை பெற்று வளர்ந்த உள்ளூர் பூர்ஷ்வா வர்க்கத்துக்கு ஒரு கட்டத்தில் தமக்கு உயர் அரசாங்க சேவையிலும், சட்ட சபையிலும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்கிற மனக்குறை வளர்ந்துகொண்டே சென்றது. அவ்வாறு நலன்களை அனுபவித்த பூர்ஷ்வா வர்க்கத்தில் ஒரு சாரார் தமது வர்க்க இருப்பை உறுதிசெய்து கொள்வதற்காகவும் அந்தஸ்தை உயர்த்துவதற்காகவும் கிறிஸ்தவ மதத்தையும் தழுவியிருந்தனர். 1833 – 1912 காலப்பகுதியில் ஒரே ஒரு குடும்பத்தை சேர்ந்த புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களே கரையோரச் சிங்களவர்களின் பிரதிநிதிகளாக அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர். (இடையில் ஒரேயொரு தடவை மட்டும் இக்குடும்பத்தை சாராத ஒருவர் நியமிக்கப்பட்டார்).

எனவே ஒரு புறம் மதக் கலாசார வேட்கையை உடையவர்களும் மறுபுறம் உயர் பிரதிநிதித்துவ அபிலாசை கொண்டவர்களுமாக கைகோர்த்துக்கொண்டார்கள். வடிகட்டி பார்த்தால் அவர்கள் சிங்கள பௌத்த பூர்ஷ்வாக்களாக இருந்தார்கள். சிங்கள பௌத்த தேசியவாதிகளாக இருந்தார்கள்.

தமது மதத்தை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கான பிரச்சாரங்கள் பௌத்த மறு மலர்ச்சியின் பேரால் கொண்டாடப்பட்டது. 

18 ஆம் நூற்றாண்டி இறுதி தசாப்தங்களிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி, முஸ்லிம் மறுமலர்ச்சி போன்றவை எழுச்சியுற்றதையும், அது கட்டமைக்கப்பட்டு வடிவம் கொண்டதையும் அதன் அரசியல் பின்புலத்தை வைத்தே கணிக்க வேண்டும்.

பௌத்த செல்வந்தர்கள் நன்கொடையாக நிதியையும், நிலங்களையும் பௌத்த விகாரைகளுக்கு வழங்கினார்கள். பௌத்த பிரசாரங்களுக்கு ஆதரவளித்து ஊக்குவித்தார்கள். பௌத்தர்களின் விழிப்புணர்ச்சிக்காக மது ஓழிப்பு இயக்கம் இப்படித்தான் ஆரம்பமானது. பஞ்சசீல கொள்கைக்கு எதிரானது இந்த மதுப்பழக்கம் என்று கூறியதுடன் இது நம் நாட்டவர்களை சீரழிப்பதற்காக ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சதி என்றனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கூட இப்படி தவறணைகளை உருவாக்கி நம்மை சீரழிக்கவில்லை என்றனர்.

அது போல பஞ்ச சீல கொள்கைகளில் ஒன்றான புலால் உண்ணாமை என்கிற சுலோகத்தை கையிலெடுத்து மாடுகளைக் கொல்வதற்கு எதிரான இயக்கத்தையும் ஆரம்பித்தார்கள். இதுவும் காலப்போக்கில் ஆங்கிலேயர்களுக்கு எதிரானதாக மட்டுமன்றி முஸ்லிம்களுக்கு எதிரானதாவும் திருப்பப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிராக அவ்வாறு பல்வேறு பிரச்சாரங்கள் பரப்பப்ட்டன. அவர்கள் பல்கிப் பெருகும் அந்நியர்கள், மாடு அறுப்பவர்கள், வந்தேறு குடிகள், சுதேசிகளின் வணிகத்தை ஆக்கிரமிப்பவர்கள், மத ஆக்கிரமிப்பாளர்கள் என்பது போன்ற போன்றவற்றை அன்றே பிரச்சாரங்களாக முன்னெடுத்தனர். இவ்வாறு நிறுவப்பட்ட கருத்தாக்கங்கள் தான் 1915 கலவரம் மக்கள்மயப்படக் காரணமாகின.

1915 கலவரத்தின் போது புறக்கோட்டையில் (கொழும்பில் ஐரோப்பியர் அல்லாதோரின் வர்த்தகப் பகுதி) முஸ்லிம் கடைகளைத் தாக்குமாறு சனக்கும்பலைத் தூண்டி விட்டார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் என்.எஸ்.பெர்னாண்டோ, பெற்றிஸ் ஆகிய இரு வர்த்தகர்களின் புதல்வர்களுக்கு இராணுவச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்கப்பட்டது. அந்த இரு வர்த்தகர்களும் பௌத்த மத நடவடிக்கைகளுக்கும் பிரசாரங்களுக்கும் பெருமளவு ஆதரவளித்து வந்த பிரபல தனவந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கள பௌத்த எழுச்சியை வலியுறுத்தி தொடங்கப்பட்ட பல பத்திரிகைகள், பிரசுரங்களை ஆரம்பிதற்கும் இத்தகைய தனவந்தர்கள் முன்னின்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பிரசுரங்களுக்கூடாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களையும், சாப்பாட்டுக் கடைகளையும் பகிஸ்கரிக்குமாறும் வலியுறுத்தினர். அதாவது தமது வர்த்தக போட்டியாளர்களை சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பேரால், தமது சொந்த செலவில், சிங்கள பௌத்த சக்திகளைப் பயன்படுத்தி பழிவாங்கினர்.

இத்தகைய பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட அநகாரிக்க தர்மபால போன்றோர் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக மட்டுமன்றி தென்னிந்திய சிறு வியாபாரிகளுக்கு எதிராகவும் காலப்போக்கில் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் துவேஷங்களை கட்டவிழ்த்து விட்டனர்.

(தொடரும்)

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates