மலையக மக்களுக்கு காணி உரித்துடனான வீட்டு உரிமையை உறுதிப்படுத்தக் கோரி மக்களின் பங்குபற்றலுடன் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களும் பரப்புரைகளும் இடம்பெற்றன. சில மலையக பாராளுமன்ற அரசியல் தலைமைகளும் இதற்கு குரல் கொடுத்தனர். இப்பின்னணியில் மீரியபெத்த அவலம் மலையக மக்களின் ஏற்படுத்திய காணி, தனி வீட்டு உரிமைக்கான எழுச்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்கள் இருவரையுமே மலையக மக்களின் வீட்டுரிமை பற்றி தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பேச வைத்தது. மஹிந்த மலையக மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் எண்ணம் கொண்டவரல்ல. மைத்திரிபால தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் தனி வீடுகள் காணி உறுதியுடன் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் தற்போதைய மைத்திரி- ரணில் அரசாங்கம் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுடன் இணைந்து மலையகத்தில் 7 பேர்ச் காணியில் காணி உறுதியுடன் தனி வீடுகள் அமைத்து வழங்க போவதாக குறிப்பிட்டுள்ளது.
காணி சீர்திருத்தச் சட்டத்தின் பிரிவு 3(3)ஆ பிரகாரம் தோட்ட காணிகளை காணி சீர்த்திருத்த ஆணைக்குழு கையேற்கும் போது லயன் அறைகள் மற்றும் குவார்ட்டஸ்களில் உள்ள ஒவ்வவொரு குடும்பத்திற்கும் 1/8 ஏக்கருக்கு மேற்படாத அதாவது 20 பேர்ச்சுக்கு மேற்படாத காணியை குடியிருப்புக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 1972ஆம் ஆண்டே குறித்த அளவு காணி தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள நிலையில் 20 பேர்ச் காணி வீட்டை கட்டிக் கொள்ள மலையக மக்கள் பெற வேண்டிய சட்டரீதியான உரிமையாகும். அத்தோடு இன்று கிராமங்களில் அரசாங்க நிறுவனங்கள் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் போது 20 பேர்ச் காணியே வழங்கப்படுகிறது. எவ்வாறாயினும் முதற் கட்டமாக பண்டாவளையிலும் தலவாக்கலையிலும் 7 பேர்ச் காணிக்கான 'பசுமை பூமி' காணி உரிமை பத்திரம் (எனினும் சிங்கள மொழியிலே இது உடமை கொள்வதற்கான பத்திரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்ற ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணத்தில் காணி உரித்தை உறுதிப்படுத்துவதற்கான சட்டரீதியான போதாமைகளும் குறைபாடுகள் இருக்கின்றமையை மக்கள் தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் அவர்கள் 'பசுமை பூமி' உரிய அதிகாரிகளினால் ஒப்பமிட்டு அரச அங்கீகாரத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமையை உறுதி செய்கின்ற ஒரு பத்திரம் என்றும் காணிகளை அளந்து அதன் எல்லைகளை மதிப்பிட்டு இரண்டாவது உறுதி பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன என்றும், அதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். வழங்கப்பட்ட உறுதி பத்திரம் இருக்க இரண்டாவது உறுதி பத்திரமும் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டத்தில் இருந்து வழங்கப்பட்ட பத்திரத்தில் சட்ட ரீதியான குறைபாடுகள் இருக்கின்றமையை இலகுவில் ஊகிக்கலாம்.
இராஜாங்க அமைச்சர் வழங்கப்பட்ட காணிகள் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனம் (SLSPC) மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) உள்ளபடியால் அவர்கள் ஒப்பமிட்டு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபன சட்டம் மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை தாபிக்கப்பட்டுள்ள அரச விவசாய கூட்டுறவுகள் சட்டம் ஆகியன வீடமைப்பிற்கு காணி வழங்குவதற்கான எந்த ஏற்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை. எனினும் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி குறித்த நிறுவனங்களின் காணியே சட்ட ரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய வழங்கப்பட்டுள்ளது எனின் காணியை பிரஜைகளுக்கு வழங்க பின்பற்றப்பட்ட நடவடிக்கை முறை என்ன என்பது தொடர்பாக மக்களுக்கு கூற வேண்டிய பொறுப்பை இராஜாங்க அமைச்சர் கொண்டுள்ளார்.
இந்த விடயத்திற்கு மேலாக 'பசுமை பூமி' காணி உரிமை பத்திரம் சட்டரீதியான உரிமை பத்திரமாக இருந்தால் (ஒரு அனுமதிபத்திரமாயினும் சரி) சட்ட ரீதியான உறுதிபத்திரம் தொடர்பில் பின்வரும் குறைபாடுகள் நோக்கப்பட வேண்டியன.
1. அரச காணிகள் பிரஜைகளுக்கு வழங்கும் போது குறித்த காணிகள் எச்சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் எந்த நிறுவனத்திற்கு சொந்தமாயிருந்தன என்பதும் எச்சட்டத்தின் கீழ் எந்த அதிகாரம் பெற்ற நபரினால் அது பிரஜைகளுக்கு வழங்கப்படுகிறது என்பதும் காணி உறுதி பத்திரத்தின் முகப்பில் இடம்பெற வேண்டும் என்ற நிலையில் அவ்வாறு 'பசுமை பூமி உரிமை பத்திரத்தில்' இடம்பெறவில்லை. மாறாக தற்போதைய ஜனாதிபதியின் கொள்கை பிரகடத்தில் தோட்ட மக்களுக்கு காணியுரிமையுடன் கூடிய வீடு வழங்கப்படும் என்ற வாசகத்துடன் ஆரம்பிக்கிறது. இது சட்ட வலிது தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
2. பண்டாரவளையில் வழங்கப்பட்ட காணிகள் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனத்திற்கு சொந்தமானதாகையால் அக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கையொப்பமிட்டிருப்பதால் அது சட்ட ரீதியான உறுதி என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனத்தின் சட்டத்தின் கீழ் கூட்டுத்தாபன தலைவர் காணியை வழங்குவதற்கு அதிகாரம் கொண்டவராயின் அச்சட்டத்தின் எந்த ஏற்பாடுகளுக்கு அமைய அவர் காணி வழங்கும் அதிகாரம் கொண்டுள்ளார் என்பது உரித்தாவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எனினும் ஆவணத்தில் அவ்வாறான எந்த குறிப்பும் இல்லை. அத்துடன் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் சார்பாக வழங்கப்படும் உத்தியோகபூர்வ ஆவணங்களில் இரண்டு பணிப்பாளர்கள் ஒப்பமிடாவிட்டால் அது செல்லுபடியாகாது. இங்கு தலைவர் என்ற ஒரு பணிப்பாளர் மட்டுமே ஒப்பமிட்டுள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
3. பொதுவாக அரச காணிகள் பிரசைகளுக்கு வழங்கப்படும் போது அது தொடர்பாக பின்பற்ற நடவடிக்கை முறைகள் அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டும். எனினும் 'பசுமை பூமி உரிமை பத்திரம்' வழங்கப்பட காணிகள் தொடர்பாக அவ்வாறன எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.
4. உரிமை பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள காணி விபரிப்பு மற்றும் முன் உறுதிகள் என்பவைகள் சட்டரீதியானதாக இருப்பின் அக்காணி பற்றிய விபரங்கள் மாவட்ட காணி பதிவாளர் அலுவகத்தின் காணி பதிவேட்டில் காணப்பட வேண்டும். உரிமை பத்திரத்தை பெற்றவர்கள் அதனை அடிப்படையாக கொண்டு உரித்து பதிவு சட்டத்தின் கீழ் உரித்து ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும். எனினும் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட உரிமை பத்திரத்தை கொண்டு உரித்தை பெறுவதில் பல சட்ட சிக்கல்கள் எதிர்காலத்தில் எழ உள்ளன.
5. உரிமை பத்திரத்தின் இரண்டாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள நிபந்தனைகளில் குறித்த காணித் துண்iடை தோட்டத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு மட்டுமே கைமாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. காணி உரித்தை பெறுபவர் அதனை விற்பதற்கு அதிகாரம் பெறாத வகையில் நிபந்தனைகள் இருப்பது நன்று. எனினும் குறித்த காணியை அதில் கட்டப்படும் வீட்டையும் வங்கியில் ஈடு வைப்பதற்கு உரிமையாளருக்கு அதிகாரம் வழங்குவதே ஏற்றுக் கொள்ளக்கூடியது. எனினும் தோட்டத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு மாத்திரமே கைமாற்றலாம் என்று கூறியிருப்பது மலையக மக்களை மீண்டும் சட்ட ரீதியாக இன்னொரு வடிவில் தோட்டங்களுக்குள் முடக்கிவைப்பதாகவே அமையும்.
மேற்குறித்த பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடத்தில் பரந்த கலந்துரையாடல் இடம்பெற வேண்டும். அதற்கு மக்கள் சார்பு அமைப்புகளும் தனிநபர்களும் முன்வர வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரித்துடன் வீட்டுரிமையை உண்மையில் உறுதிப்படுத்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக தலைமைகள் உண்மையில் முயற்சிப்பார்களாயின் பழைய தலைவர்களைப் போல் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் போது அவற்றை உதாசினம் செய்வார்களாயின் அது மக்களை உதாசினம் செய்வதாகவே அமையும்.
பண்டாரவளையை போலல்லாது தலவாக்கலையில் வழங்கப்பட்ட காணி உரித்து பெருந்தோட்டக் கம்பனிகள் குத்தகைக்கு பெற்றக் காணிகள் என்றவகையில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பொறுப்பில் உள்ளவையாகும். அந்த காணி உரிமை பத்திரத்தில் காணி வழங்கும் அதிகாரத்தை யார் பெற்றிருக்கின்றார் என்ற கேள்வி எழுகிறது. எவ்வாறாயினும் தலவாக்கலை பிரதேசத்தில் வழங்கப்பட்ட காணி உரிமை பத்திரத்தின் உள்ளடக்கம் பண்டாரவளையில் வழங்கப்பட ஆவணத்தில் உள்ள குறைபாடுகளைக் கொண்டே இருக்கும் என்பனை ஊகிக்கலாம்.
பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் இரண்டாவது உறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாதாக கூறுவதில் இருந்து வழங்கப்பட்ட உறுதியின் சட்டரீதியான அங்கீகாரம் பற்றிய பிரச்சினையை அவரே எற்றுக் கொண்டுள்ளனார். மலையக மக்களுக்கு காணி உரித்துடன் வீட்டுரிமையை முறையாக உறுதி செய்ய அரசியல் தலைமைகள் நேர்மையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக தேர்தல்களை மையப்படுத்தி 90களில் லயன் அறைகளை சொந்தமாக்குவதாக கூறி உறுதி வழங்கப்பட்டது போன்று மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அதற்கு மக்கள் தமது எதிர்ப்பை காட்ட வேண்டும்.
மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியை உரித்துடன் வழங்கப்படுவதாக இருந்தாலும் அச்செயற்பாடாது இலங்கையின் காணிச் சட்டங்களை ஆராய்ந்து சட்ட ரீதியாக காணி உரித்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். எம்மை பொறுத்தவரையில் மலையக மக்களுக்கான காணி உரித்து சட்ட ரீதியாக மூன்று அடிப்படைகளிலேயே எவ்வித சட்டரீதியான பிரச்சினையும் இன்றி உதிப்படுத்தலாம்.
1. காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழு காணியை பொறுப்பெற்று ஜனாதிபதியினூடாக காணி உரித்தை வழங்கலாம். பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமானவை. குத்தகை ஒப்பந்தத்தில் மாற்றங்களை செய்து பிரஜைகளுக்கு வழங்கவென காணிகளை காணி சீர்தித்த ஆணைக்குழு பெற்றுக் கொள்ளமுடியும். காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான தோட்டக் காணிகள் ஜனாதிபதியினால் உரித்து மூலம் பிரஜைகளுக்கு வழங்க முடியும். அத்தோடு இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனம் (SLSPC) மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) ஆகியவற்றுக்கு சொந்தமான காணிகளையும் ஜனாதிபதி உரித்து மூலம் வழங்க முடியும். அதற்கான ஏற்பாடுகளை காணி வழங்கள் (விசேட சட்ட ஏற்பாடுகள்) சட்டம் குறிப்பிட்டுள்ளது.
2. காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை பெற்றுக் வழங்கலாம்;. காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் இரு அரச கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான காணிகளின் குறித்த காணிகளை காணி ஆணையாளரூடாக சட்டரீதியாக மாவட்டச் செயலகங்களுக்கு சொந்தமாக்கி அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடாக காணி உரித்தை வழங்க முடியும்.
3. தேசிய வீடமைப்பு அதிகார சபை சட்டத்தின் கீழ் காணியை அச்சபை பெற்று கடன் வழங்கி வீடமைக்கப்பட்ட பின்னர் உரித்தை அச் சபையே வழங்க முடியும்.
இந்த மூன்று நடைமுறைகளில் ஏற்புடைய ஒன்றை பயன்படுத்தி மலையக மக்களுக்கு காணி உரிமையை குறுகிய காலத்தில் உறுதி செய்ய முடியும். அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை குறித்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு பணிப்புரைகளை வழங்குவதன் மூலம் இதனை செய்ய முடியும். அவ்வாறான ஏற்புடைய முறையை பின்பற்றி மலையக மக்களுக்கு காணி உரிமையை உறுதிப்படுத்த அரசாங்கமும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் முன்வர வேண்டும். அத்தோடு காணி உரித்தை பெற்ற மக்கள் தமக்கான காணி உரிமை சட்டரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை மனதிற் கொள்ள வேண்டும். அத்தோடு மலையகத்தின் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் ஏனைய துறைசார் தொழிலாளர்களும் வெகு மக்களும் காணியுரித்துடனான வீட்டு உரிமையை முறையாக உறுதி செய்வதற்கான போராட்டத்தை தொடர்ந்து தளர்வின்றி நடத்த வேண்டும்.
நன்றி - மக்கள் தொழிலாளர் சங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...