Headlines News :
முகப்பு » » பெருந்தோட்ட பகுதிகளில் அறியப்படாத மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு தினம் - எஸ்.வடிவழகி

பெருந்தோட்ட பகுதிகளில் அறியப்படாத மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு தினம் - எஸ்.வடிவழகி


இலங்கை முழுவதும் மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு தினம் கடந்த 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இது சம்பந்த மான நிகழ்வுகள் ராஜகிரியவில் நடைபெற்றதுடன், இது தொடர்பான பல விழிப்புணர்வு நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களி லுமுள்ள பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் நடத்தப்பட்டன.

இச்செயற்றிட்டத்தின் ஒரு கட்டமாக மின்சார பாதுகாப்பு, மின்சாரத்தை கவனமாக கையாளுதல், வீடுகள், கட்டடங்களில் பாதுகாப்பான மின்னோட்ட சூழல் அமைக்கப்படுதல், மின் விபத்துக்களை தடுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அத்துடன்; பொது இடங்களில் முக்கிய தகவல்கள் அடங்கிய சுவரொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

பொதுவாக கிராம, நகர்ப்புறங்களில் மின்சார பாவனை தொடர்பான அறிவூட்டல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறுவது மட்டுமல்லாது, மின்சாரப் பரிசோதகர்கள் கட்டடங்களுக்கு விஜயம் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் சீராக உள்ளனவா என கண்காணிக்கின்றனர். சட்ட திட்டங்களை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றனர். வழமையாகவே மின்சார பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ள நகர, கிராமிய பிரதேசங்களின் மின்சாரப் பாவனை பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இம்முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும்.

பெருந்தோட்டங்களில் கேள்விக் குறியாகவுள்ன மின்சார பாதுகாப்பு
எனினும், இந்நடவடிக்கைகள் பெருந்தோட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது கேள்விக்குரிய விடயமாகும். மிக அண்மைக் காலப் பகுதியிலேயே பெருந்தோட்டப் பகுதிகளுக்கு மின்சாரம் கிடைத்தது. இதன் விளைவாக பெருந்தோட்டப்பகுதிகளில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது உண்மைதான்.

ஆனாலும் பெருந்தோட்டப் பகுதிக்கு மின்சாரவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட நாட்களிலிருந்தே பாரிய மின்விபத்துக்கள் ஏற்பட்டு பல சேதங்களுக்கு வழிவகுத்துள்ளன. இந்த தீவிபத்துகளால் ஒரு சில உயிர்ச் சேதங்களே ஏற்பட்டாலும் பலகோடிக்கணக்கான சொத்துக்கள் அழிந்துள்ளதுடன் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். வாழ்நாள் முழுவதும் சேகரித்த பெறுமதியான பொருட்கள், ஆபரணங்கள் கருகின. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. ஆவணங்கள் அழிந்தன. குடியிருப்புகளில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமன்றி தோட்ட நிருவாகங்களுக்கு கூட நட்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பாரிய மின் விபத்துகள் பெருந்தோட்டப் பகுதி குடியிருப்புகளில் மட்டுமே நிகழ்கின்றன. இதற்கு காரணம் பெருந்தோட்டப் பகுதிகளில் வீடுகள் தனி வீடுகளாக அன்றி தொடர் வீடுகளான லயன் அறைகளாக அமைந்துள்ளமையாகும்.

பெருந்தோட்ட மக்களின் சமூக பாதுகாப்பு உரிமை மீறப்படுகிறது.
பெருந்தோட்டங்களில் மின் இணைப்புகளை வழங்கும்போது முழுமையான பாதுகாப்புடனும் ஒழுங்கான விதிமுறைகளுடனும் இணைப்புகளை ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதில்லை. தொடர் வீடுகள் காரணமாக மின் இணைப்புகள் ஏற்படுத்தப்படும்போது ஆபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதை தெரிந்து கொண்டும். அதிகாரிகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றனர். நமது அரசியல் தலைவர்களோ இது தொடர்பாக இதுவரை எந்தவித ஆலோசனையையும் முன்வைத்துதும் கிடையாது. நாட்டில் எல்லா பிரஜைகளுக்கும் சம உரிமை உண்டு. சமூக பொது பாதுகாப்பிற்கான உரிமை உண்டு. பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்கும் இந்த உரிமை உண்டு. ஆயினும் இந்த உரிமை மதிக்கப்படாமையினாலேயே தொடர்ச்சியான மின் விபத்துகள் ஏற்படுகின்றன.

ஆயினும் மலையகத்தில் இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியும் மின் விபத்துக்கள் ஏற்பட்டு அனர்த்தங்கள் ஏற்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அது ஒரு உரிமை மீறல் என்ற அடிப்படையில் குரல் எழுப்பியது கிடையாது.

பொறுப்பற்ற மின்பாவனை பல இடங்களில் பிரதான மின்சாரக் கம்பிகளில் கொழுவிகளை மாட்டி சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெறுகிறார்கள். இதே முறையில் தமது காய்கறித் தோட்டங்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்று வேலிகளுக்கு மின்சாரம் பாய்ச்சுகிறார்கள். இவ்வாறு மின்சாரம் பெறும்போது மின்சாரக் கம்பிகளில் பாதுகாப்பற்ற முறையில் இணைப்புகளை ஏற்படுத்தி கம்பிகள் இணைக்கப்படும் இடங்களில் மின் ஒழுக்கு ஏற்படுவதை தவிர்க்க வெறும் பொலித்தீன் பைகளை சுற்றிக் கட்டுகிறார்கள். இவை அனைத்தும் எதிர்பாராத வேளையில் பாரதூரமான ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடிய விடயங்களாகும்.

பெருந்தோட்ட வீடுகளில் இட நெருக்கடி காரணமாக பொருட்களை சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்படும் அட்டாலில் (பரன்) விரைவில் தீப்பற்றக் கூடிய விறகு, பொலித்தீன் போன்ற பொருட்களை அடைசலாக சேமித்து வைக்கிறார்கள். கவனயீனமாக இணைக்கப்படாமல் விடப்படும் மின்சாரகம்பிகளில் இருந்து ஏற்படும் மின் பொறிகள் வெயில் காலங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வழியாக தீ ஏற்படவும் ஒரு வீட்டிலிருந்து மற்ற வீடுகளுக்கு இலகுவாக பரவவும் காரணமாக அமைகின்றன.

பெருந்தோட்டப் பகுதிகளில் மின் கம்பி இணைப்புகளுக்கு கொங்கிறீட் தூண்கள் பயன்படுத்தப்படுவதை அனேகமாக காண முடிவதில்லை. அதற்குப் பதிலாக விரைவில் உக்கிப்போகக் கூடிய, மிகவும் குறைந்த உயரத்தினாலான மரங்களே பயன்படுத்தப்படுகின்றன. பல இடங்களில் காலப் போக் கில் இந்த மரத்தூண்கள் பழுதடைந்து சாய்ந்து கிடப்பதையும், மின்சாரகம்பிகள் தற்காலிகமாக முட்டுக் கொடுக்கப்பட்டுள்ள மரங்களில் தொங்குவதையும், ஒருவர் கைகளை மேல் நோக்கி நீட்டினால் தொட்டுவிடக் கூடிய உயரத்தில் மின்சாரக் கம்பிகள் தொங்குவதையும் காணக் கூடியதாக உள்ளன.

சிறுவர்கள் சிறு தடிகளைக் கொண்டு மின்சாரக் கம்பிகளில் தட்டக் கூடிய நிலையில் மின் கம்பிகள் குறைந்த உயரத்தில் தொங்குவதை பல இடங்களில் காணமுடிகிறது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும், விசேடமாக மழைகாலங்களில் மரங்களும் மின்சார கம்பிகளும் ஊறி மின் ஒழுக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்க பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஆயினும் இது குறித்து எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பெருந்தோட்டப் பகுதிகளில் மனித உயிர்கள் துச்சமாக மதிக்கப்படுவதையும்,உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதையும் நாம் காணகிறோம்.

தோட்டங்களுக்கு தனியான மின்சாரப் பாதுகாப்பு கொள்கை அவசியம்.
இலங்கையில் 200 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்டுள்ள பெருந்தோட்ட மக்களுக்கு முதன்முறையாக காணி உரிமையும், வீட்டுஉரிமையும் கிடைப்பதற் கான நல்ல சமிக்ஞைகள் தோன்றியுள்ளன. ஏதிர்காலத்தில தனிவீடுகள் வரக்கூடும். ஆயினும் பெருந்தோட்டப் பகுதிகளில் தனி வீடு அமைப்பதற்கு இன்னும் பல்லாண்டு காலம் செல்லக் கூடும். இந்தப் பின்னணி யில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மின் இணைப்புகளை பாதுகாப்பானதாக ஆக்குவதற்கும், பெருந்தோட்ட மக்களுக்கு பாது காப்பான மின் பாவனை குறித்த விழிப்புணர்வூட்டல் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுவற்கும் விசேடமான கொள்கைகளும், திட்டங்களும் அவசியமானதாகும். மலையகப் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகப் அரசியல் பிரதிநிதிகள் இது தொடர்பாக கொள்கை வகுப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஆனால், அதுவரை நாம் காத்திருக்க முடியாது. ஒவ்வொரு தோட்டத்திலுமுள்ள அமைப்புக்களும், பொதுநல விரும்பிகளும் மின்சார இணைப்புக்களை பாதுகாப்பான தாக்க தங்களாலான நடவடிக்கை எடுக்கலாம். அந்தளவுக்கு நமக்கு சமூக பொறுப்பு இருக்கிறா என்பதை அனைவரும் சிந்தித் துப்பார்க்க வேணடும்.
நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates