Headlines News :
முகப்பு » » 100 நாள் வேலைத்திட்டத்தால் மலையகத்தின் கல்வித்துறைக்கு நடந்தது என்ன? - மொழிவரதன்

100 நாள் வேலைத்திட்டத்தால் மலையகத்தின் கல்வித்துறைக்கு நடந்தது என்ன? - மொழிவரதன்நாட்கள் முடிவடைந்து விட்ட நிலையில் கல்வித்துறையில் மலையகத்தில் என்ன அபிவிருத்தி நடந்துள்ளதென எவரும் யோசிப்பது நியாயமே! பின்வரும் விடயங்கள் பற்றி குறிப்பாக மலையக கல்வி தொடர்பாகக் கூறப்பட்டது.

*மலையகத்திற்கான விஞ்ஞான கல்வி.
*மலையக பாடசாலைகளை தரம் உயர்த்தல்,
*விஞ்ஞானத்துறைக்கான ஆசிரியர்களை தேடல் அல்லது நியமித்தல்.

மேற்குறிப்பிட்டவைகளுள் சில நடந்தேறி உள்ளன. விஞ்ஞான கூடங்கள் தொழில் நுட்ப கூடங்கள் பல திறக்கப்பட்டன. அவையாவும் முன்னைய அரசின் (மஹிந்தோதயத்திட்டத்தின்) மறுவடிவங்களே எனின் தவறில்லை. புதிதாக புதிய அரசு ஏதாவது ஆரம்பித்ததாக குறிப்பாக மலையகத்தில் எதுவும் தெரியவில்லை. பாடசாலை தரம் உயர்த்தல் பற்றி பேசப்பட்டது. முன்னைய காலங்களிலும் பல பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட்டு பின்னர் ஆசிரியர்கள் இன்மையால் மூடப்பட்டன. எனவே, க.பொ.த. உயர்தரத்திற்கு கணித, விஞ்ஞான ஆசிரியர்கள் ஒரு தடையாக உள்ளனர்.
நூறு நாள் வேலைத்திட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களைத் தேடுவதற்கு வேலைத்திட்டங்கள் எதுவும் இருந்தனவா என்பது தொடர்பாக விளக்கமில்லை. எமது பிரதேசத்தில் ஆசிரியர்கள் இல்லை. வேறு பிரதேசங்களிலிருந்தே வருவிக்க வேண்டி உள்ளது. எனவே தேசிய அரசில் இதற்குப் போதிய அழுத்தம் உள்ளதாகத் தெரியவில்லை.

கல்விச் சேவைகள் அமைச்சின் சில பணிகள் மலையகத்திற்கு விஸ்தரிக்கப்பட வழி உள்ளது. அவ்வகையான துறைகளே புதிய இராஜாங்க அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன.

மூவாயிரம் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க வேண்டுமென்று புதிய கல்வி இராஜாங்க அமைச்சு அழுத்தங்களைக் கொடுத்து வந்தது. ஆனாலும், கடந்த வாரத்தில் சுமார் 1,688 பேருக்கு மட்டும் நியமனங்கள் வழங்கப்பட்டன. எனினும், எஞ்சியுள்ளவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை. எனவே எஞ்சியுள்ளவர்களுக்கு வெகுவிரைவில் நியமனம் வழங்கப்படவேண்டும்.

கண்டி சமூக அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் பி. முத்துலிங்கம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.வாமதேவன் போன்ற பலரினதும் சிவில் அமைப்புக்களினதும் பங்களிப்பில் மீண்டும் தூசித்தட்டி எடுக்கப்பட்டு ஐ.நாசபை பிரிவோடு முன்கொண்டு செல்லப்படும் பத்து ஆண்டுத்திட்டம் கல்விக்கும் இடமளிக்கின்றது. அது ஒரு நம்பிக்கைத் தரும் செயற்பாடாகும். அடுத்த தேர்தலின் பின்னர் மலையகக் கல்வி அபிவிருத்திக்கான ஒரு முழுமையான செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுமா?
ஆளணி வளம், பௌதீக வளம், உபகரணம் போன்ற அனைத்திற்குமான ஒரு செயற்றிட்டத்தினூடாகவே கல்வியை அபிவிருத்தி செய்யலாம். 100 நாள் திட்டம் மலையகக் கல்வித்துறையில் பாரியளவில் எதையும் செய்யவில்லை என்பதே வெகுஜனங்களின் ஆதங்கமாகும். எனினும், இதனை சாத்தியப்படுத்தும் சக்தி புதிய இராஜாங்க மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக இருந்த வி.இராதாகிருஷ்ணன் திறமைமிக்கவரே. காலம் அவருக்கு கை கொடுக்கவேண்டும்.

சீடா செயற்றிட்டம் GTZ ஜேர்மன் தொழில்நுட்ப வேலைத்திட்டம், ஜெய்க்கா எனும் ஜப்பானின் திட்டம் போன்ற பல கல்வி அபிவிருத்தி திட்டங்கள் மலையகத்திற்குள் வராமலிருந்திருந்தால் எமது கல்வி மேலும் மோசமாவதாகவே இருந்திருக்கும். சீடா செயற்றிட்டம் ஊவா மத்தி சப்பிரகமுவ மேல் மாகாணங்களில் சில வேலைகளை செய்துள்ளன எனில் தவறில்லை. விமர்சனங்கள் சில இருந்தாலும் செயற்றிட்ட நோக்கில் தவறேதும் இருக்கவில்லை.

இது போன்ற திட்டங்களின் தேவையினை அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் உணர்ந்திருந்தமையாலேயே ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி போன்ற அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்றுள்ளன. அது மாத்திரமல்லாது, அவர் அன்று அதிகாரத்திலிருந்த ஜே.ஆர்.ஜயவர்தனவிடமிருந்த விசேடமாக மேலதிக நிதியைப் பெற்று மலையக கல்வி அபிவிருத்திக்கு அடித்தளமிட்டார் எனலாம்.

எதிர்காலத்தில் பத்தாண்டுத்திட்டங்கள் பல வேலைகளுக்கு அடிப்படையாகலாம். மலையக கல்வி அபிவிருத்திக்கான விசேட செயற்றிட்டங்களை செய்திட அரசியலாளர்கள் அரசாங்கத்திடம் அழுத்தங்களை எதிர்காலத்தில் கொடுத்தல் வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates