Headlines News :
முகப்பு » » தேயிலைத் தொழிலோடு மலையக வாழ்வியலை இணைத்துப் பதிவு செய்துள்ள ஆய்வுநூல் - மல்லியப்புசந்தி திலகர்

தேயிலைத் தொழிலோடு மலையக வாழ்வியலை இணைத்துப் பதிவு செய்துள்ள ஆய்வுநூல் - மல்லியப்புசந்தி திலகர்

 

ஓய்வுநிலைப் பேராசிரியரான மு.சின்னத்தம்பியின் 'தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்' எனும் ஆய்வு நூல் கடந்த ஞாயிறு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
குமரன் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் நூலின் வெளியீட்டு விழாவை இலங்கை கோப்பியோ ஒழுங்கு செய்தருந்தது. அதன் ஸ்தாகத் தலைவர் பி.பி.தேவராஜின் நெறிப்படுத்தலில் ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை விழாவினை ஏற்பாடு செய்திருந்தார். இலங்கைக் கோப்பியோவின் தலைவர் உதேசி கௌசிக் அங்குரார்ப்பண உரையாற்றினார். இலங்கை கோப்பியா சார்பாக அதன் உறுப்பினர் ஈ.முத்துக்கிருஸ்ணன்  தலைமைதாங்கினார்.

  'பேராசிரியர் இந்த நூலுக்கு இட்டுள்ள தலைப்பு மிகவும் பொருத்தமானது. நாம் மலையகம் பக்கம் சென்றால் எங்கும் பச்சைப்பசேலென கம்பளம் விரித்தாற்போல் தேயிலை மலைகள் அழகாக காட்சித்தரும். எல்லோரும் நின்று ரசிக்கும் அழகு அது. ஆனால் அதே தேயிலைத் தோட்டத்தின் மக்கள் குடியிருப்பு பகுதிக்குப்போனால், ஏழ்மையும் வறுமையும் நிறைந்ததாக அந்தத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை அமைந்திருக்கும்.  அது ரசிக்கும்படியாக இருக்காது. மனதைப்பிழியும் சோகத்தையே தரும். இந்த இரண்டு நிலைமைகளையும் விளக்கும் நூலை எழுதியுள்ள பேராசிரியர் மு.சின்னத்தம்பி அந்த நூலுக்கு 'தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்' என தலைப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமானது என தலைமையுரையில் தெரிவித்தார். இங்கே வருகை தந்திருக்கக்கூடிய அரசியல், தொழிற்சங்கத் தலைவர்கள் அந்த மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாக நூலைப்பற்றி சில வார்த்தைகள் என்ற தலைப்பில் நூலாசிரியர் மு.சின்னத்தம்பி அவரது நூல் பற்றிய அறிமுத்தைத் தந்தார். 'நான் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்டவன். அதுவும் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். எனவே தேயிலைத் தொழில் மற்றும் அங்கு வாழும் மக்கள் பற்றிய போதிய அனுபவமும் பரிச்சயமும் எனக்கு உண்டு. பல்கலைக்கழகத்துக்குள் சென்றதும் நான் தெரிவு செய்துகொண்ட துறை பொருளியல் துறை. அந்தத் துறையில் பல்வேறு ஆய்வக்கட்டுரைகளை எழுதவும், பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கவும் அழைக்கப்படும்போது நான் இந்த தேயிலை மற்றும் அங்கு வாழும் தேயிலைத் தொட்டத் தொழிலாளர்கள் பற்றியே அதிகம் பேசியுள்ளேன். அநத அனுபவங்களின் பதிவே இந்தநூல். இந்த நூலை எழுதி வெளியீடு செய்ய எனக்கு 20 ஆண்டுகாலம் எடுத்தது. ஒரு பொருளியலாளனாக தேயிலைத் தொழிலை பொருளாதாரக் கண்ணோட்டத்துடனும் அதே நேரம் மலையத்தவனாக அந்த மக்கள் மீதான் பற்றோடும், சமூக நோக்குடனும் இந்த கட்டுரைகளை எழுதியுள்ளேன்' என தெரிவித்தார்.

நூல் அறிமுகவுரையை இலங்கைத் திறந்தப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் நிகழ்த்தினார். அறிமுகவுரையாகவும் ஆய்வரையாகவும் அமைந்த அவரது உரை நூல் பற்றிய பூரணமான பார்வையை சபைக்குத் தருவதாக அமைந்தது. 'மாணவனாகவும், விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் தன் வாழ்நாளில் பாதியைக் கழித்த பேராசிரியரின் அனுபவமும் அர்ப்பணிப்பும் ஒரு அற்புதமான நூலை எமக்குத் தந்துள்ளது. அதேபோல பேராசிரியர் சோ.சந்திரசேகரத்தின் முன்னுரை இந்த நூலுக்கு மேலும் அணி சேர்த்துள்ளது. பேராசிரியர் சந்திரசேகரனும் பன்னூலாசரியர். இந்த இரண்டு பேராசிரியர்களும் மலையகத்திற்கு கிடைத்த கொடைகள். பேராசிரியர் மு.சின்னத்தம்பி பல்வேறு ஆய்வு நூல்களை வாசித்த அனுபவமுடையவர். அந்த அனுபவங்களின் ஊடாக மலையக மக்களின் வாழ்வியலை, தேயிலையின் பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு தந்துள்ளார். 

முதலிரண்டு அத்தியாயங்களிளும் பெருந்தோட்ட தொழில் துறை சம்பந்தமான உலகப்புகழ்பெற்ற ஆய்வாளர்களின் நூல்களில் இருந்து பல்வேறு தகவல்களைத் தந்துள்ளார். அதே நேரம் அடுத்தத் அத்தியாங்கள் படிப்படியாக சமூகப்பொருளாதார பார்வையடன் மலையத்தை அவர்களின் வாழ்வியலை நோக்குகின்றன. மயைலகம் பற்றி, பெருந்தோட்டம் பற்றி, மலையக மக்களின் வாழ்வியல் கலாசரம் பற்றி பல நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தாலும் தமிழில் அந்தப்பணியை முழுமையாக நிறைவேற்றியிருக்கும் முதல் நூல் என்ற பெருமையை பேராசிரியர் மு.சின்னத்தம்பியின் இந்த 'தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்' எனும் நூல் பெறுகின்றது என தெரிவித்தார்.

அடுத்ததாக பேராசிரியரின் மாணவர்களான பேராதனைப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவரையாளர்கள் ஆர்.ஷோபனாதேவி மற்றும் எஸ்.விஜயசந்திரன் ஆகியோர் 'குருவந்தனம்' எனும் வாழ்த்துரையை வழங்கினார்கள். பேராசிரியர் மு.சின்னத்தம்பி மலையகத்தின் முதல் பேராசிரியர். மட்டுமல்ல அவருக்குப்பின்னால் பல்கலைக்கழக மலையக சமூகம் ஒன்றை வளர்த்தெடுக்கும் ஒரு பாரிய பணியை நிறைவேற்றி வைத்தவர். இன்று நாங்கள் பல்கலைக்கழத்திலே பேராசிரியர்களாக, விரிவுரையாளர்களாக சேவையாற்றுகிறோம் என்றால் அதற்கு வித்திட்டவர் பேராசிரியர் மு.சின்னதம்பி. எமக்கு கற்பித்து, வழிநாடாத்தி, பரிந்துரைத்து ஒரு கல்விச்சமூகம் மலையக சூழலில் உருவாக வித்திட்டவர். அவரது இந்த நூல் அவரது சேவைக்காலத்தின் அறுவடை மாத்திரமல்ல ஒரு வரலாற்றுப் பதிவாகவும் அமைகிறது' என குருவந்தன உரைகள் அமைந்திருந்தன.

அதற்கடுத்ததாக கேள்வி பதில் அரங்கம் அமைந்தது. இலங்கை கோப்பியோ ஸ்தாபகத் தலைவர் பி.பி.தேவராஜ் இதனை நெறிப்படுத்தியிருந்தார். கொழும்புத் தமிழ்ச்சங்க நூல் வெளியீட்டு விழாவில் வித்தியாசமான ஒரு அமர்வாக இருந்தபோதும் கேள்விகள் சுருக்கமாக அமையாது உரைகளாகவும் விமர்சனங்களாகவும்  அமைந்தமை சபையில் சலசலப்பை உருவாக்கியமையை அவதானிக்க முடிந்தது. இந்த நிகழ்வுக்குப்பிறகு இடம் பெற்ற பேராசிரியருக்கான கௌரவிப்பு, பேராசிரியரின் எற்புரை, நன்றியுரை போன்றவற்றை இந்த சபை சலசலப்புக்கு மத்தியிலேயே செய்து முடிக்க நேர்ந்தது. அதேநேரம் பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த சபையில் நூலினை வெளியீடு செய்யாமையும் அதன் பிரதிகள் சபையினருக்கு கிடைக்கப் பெறாமையும் ஏமாற்றத்தைத் தந்தது.

மிகவும் காத்திரமான நூலாக அமைந்திருக்கக் கூடிய இந்த நூல் மலையகத்தின்பால் அக்கறை கொண்ட அனைவருக்கும் கிடைக்கச்செய்ய வேண்டியது விழா ஏற்பாட்டாளர்களின் கடப்பாடாக அமைகின்றது.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates