Headlines News :
முகப்பு » » அதிகரித்துவரும் இளவயது மரணங்களை தடுக்க நடவடிக்கைகள் தேவை - ஏ.டி.குரு

அதிகரித்துவரும் இளவயது மரணங்களை தடுக்க நடவடிக்கைகள் தேவை - ஏ.டி.குரு


தெற்காசிய நாடுகளிலே வாழ்கின்ற மக்கள் இலகுவில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் தமது உறவுகளுக்கும் உறவுமுறைகளுக்கும் மதிப்பளித்து செயற்பட்டு வருபவர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்நிலைமைக்கு காரணம் அவர்கள் பின்பற்றி வரும் சமயங்களின் போதனைகள், இனங்களிற்குரிய கலாசார பாரம்பரிய பழக்க வழக்கங்களாகும்.

இலங்கையை பொறுத்தளவில் பல்லின கலாசாரங்களை கொண்ட மக்களின் அசைவியக்கத்துடன் செயற்பட்டு வருகின்ற நாடாக இருந்து வருகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கலாசாரத்திலிருந்து வித்தியாசமான கலாசார பாரம்பரியங்களை வெளிப்படுத்துபவர்களாக மலையக மக்கள் உள்ளனர்.

தென்னிந்திய கலாசாரத்துடன் மிகவும் நெருக்கமான உறவுமுறைத் தொடர்புகளை கொண்ட இவர்களது வாழ்க்கை முறையும் வித்தியாசமானதாகவே உள்ளது. உறவு முறைகளுக்கு கூடிய மதிப்பளித்து வாழ்ந்து வருகின்ற மலையக மக்கள், தாம் விடும் தவறுகளுக்காக வருந்துபவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறான உணர்வு பூர்வமான பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்கள் கூட்டத்தின் வாழ்க்கை முறையில் கால ஓட்டத்திற்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப மற்றும் பொழுது போக்கு சாதனங்களின் வருகையுடன் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை ஒத்த உறவு முறைகளுடன் பின்னிப் பிணைந்திருந்த மலையக மக்களின் வாழ்க்கை முறையிலும் உறவுகளுடன் நெருங்கிய முறையாகப் பராமரிப்பதில் கோட்டை விட்டு வருகின்றனர். இவ்வாறான நிலைமை ஏற்படக்காரணம் ஆண் பெண் இருபாலாரும் (கணவன் –மனைவி) தொழிலில் ஈடுபடுவதாகும்.

சிறுபிள்ளைகளையும் வயது வந்த பிள்ளைகளையும் இயந்திர கதியில் தயார்படுத்தி பாடசாலைகளுக்கு அனுப்பிவிட்டு தொழிலுக்குச் செல்லும் பெற்றோர் மீண்டும் மாலை வேளையிலே அவர்களைச் சந்திக்கின்றனர். ஒரு நாளில் குறிப்பிட்ட சில மணித்தியாலங்களை மாத்திரமே தம்பிள்ளைகளுடன் செலவழிக்கின்றனர். ஏனைய சந்தர்ப்பங்களில் பாடசாலைகளிலும் சமவயதை ஒத்த நண்பர்களுடனுமே அதிகளவான பிள்ளைகள் தமது பொழுதைக் கழிக்கின்றனர். நகரை அண்மித்த பகுதிகளில் வாழும் பெற்றோரின் பிள்ளைகள் விதிவிலக்காக தமது ஓய்வு நேரத்தை டியூசன் வகுப்புகளில் கழிக்கின்றனர்.

பெற்றோரின் கண்காணிப்பின்றி பாதுகாவலர்களின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்ற சிறு வயது வந்த பிள்ளைகள், தமக்குள்ளே வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சங்களை பழக்கப்படுத்திக் கொள்கின்றனர். அவற்றுள் பெரும்பாலானவை பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழ்ப்படுத்துவனவாக உள்ளதை கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களை கொண்டு நாம் அறிய முடியும்.

நவீன பொழுதுபோக்கு சாதனங்களின் வருகையும் தகவல் தொழிநுட்ப புரட்சி காரணமாக அறிமுகமாகி வரும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் இளவயதினரின் வாழ்க்கையை தடம்மாற்றிப்போட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி, சமூக வலைத் தளங்களான பேஸ்புக், டுவீட்டர், வட்ஸ்அப், விஜெட் என்பவை அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தியுள்ளன.

பதுளை மாவட்டத்தில் அண்மைக் காலமாக இளவயது சிறுவர்களின் மரணங்கள் அதிகரித்துள்ளன. இம்மரணங்கள் தற்கொலைகளாக உள்ளமை கவலைக்குரிய விடயமாகும். தற்கொலை முயற்சியில் ஈடுபடும் அதிகமானவர்கள் 13 தொடக்கம் 16 வயதிற்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களாக இருப்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்ற சிறார்கள் மிகவும் கொடூரமான தற்கொலை முறைகளான கழுத்தில் சுருக்கிட்டு கொள்ளல், தனக்குத்தானே தீமூட்டிக் கொள்ளல், நஞ்சருந்துதல், மலையுச்சியிலிருந்து கீழே விழுதல் என்பவற்றையே கையாண்டு தமது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

கடந்த இரு மாத காலத்திற்குள் பதுளை நகரை அண்மித்த பகுதியிலுள்ள மாணவியொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தனது உயிரை மாய்த்துக் கொண்டார். தெமோதரை பகுதியில் மாணவனொருவன் மலையுச்சியிலிருந்து கீழே பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இவரது சடலம் சில நாட்கள் கழித்தே மீட்கப்பட்டமை குறிப்பிப்பிடத்தக்கது.

இது தவிர பாடசாலை மாணவர்கள் கழுத்தில் சுருக்கிட்டு கொண்டு தற்கொலை செய்வதும் பதுளை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. அண்மைக்காலமாக பாடசாலை பருவத்திலே காதல் வலையில் சிக்குகின்ற காதல் ஜோடிகள், தமது காதலுக்கு எதிர்ப்பு குடும்பத்தினரிடமிருந்து வலுக்கின்ற சந்தர்ப்பத்தில் பாரிய நீர் நிலைகளில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வது சர்வசாதாரணமான நிகழ்வாக மாறியுள்ளது.

அதிகமான தற்கொலைகள் இடம்பெறுவதற்கு காரணமாக கையடக்கத் தொலைபேசி தொடர்புகளே இருந்துள்ளமையை விசாரணை முடிவுகள் புலப்படுத்துகின்றன. இன்றைய காலகட்டத்தில் இடைநிலை கல்வியைத் தொடரும் அதிகமான பாடசாலை மாணவர்களிடம் கையடக்கத் தொலைபேசி பாவனை சகஜமான ஒன்றாக மாறியுள்ளது.

பெற்றோரின் அனுமதியுடன் கையடக்கத் தொலைபேசிகளை பாவிக்கும் மாணவர்கள், அதன் மூலம் காதல் தொடர்புகளையும் சமூக வலைத்தளங்களினூடான தவறான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதுவே அவர்களின் எதிர்காலத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக மாறிவிடுகின்றது.

இளவயது தற்கொலைகள் அதிகரிப் பதற்கு நெறிபிறழ்வான சமவயது குழுக் களின் நட்பும், பெற்றோரின் பராமரிப்பின்றி தனித்து பாதுகாவலரின் பராமரி ப்பில் வாழ்கின்ற சூழலும் காரணங்களா கின்றன. அதிகமான மலையகத் தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் பிள்ளைகளை தம்பெற்றோரின் அல்லது உறவினர்களின் பராமரிப்பில் விட்டுச் செல்கின்றனர். இவர்களில் அநேகமானோர் பாடசாலை கல்வி செயற்பாட்டிலிருந்து இடைவிலகி சமூகத்திற்கு ஒவ்வாதவர்களாக மாறி குற்றச் செயல்கள் பல புரிந்து அவற்றிலிருந்து தப்பிக்க வழித் தெரியாமல் உயிரை மாய்த்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர்.

பதுளை மாவட்டத்தில் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனைத்து மட்டங்களிலும் தற்கொலைகள் அதிகரித்திருந்தன. அதனை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கமும் சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து மேற்கொண்டு வெற்றியும் கண்டன.

இந்நிலையில், பதுளை மாவட்டத்தோட் டப்பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிகரித்துவரும் இளவயதினரின் தற்கொலை முயற்சிகளை தடுத்து நிறுத்து வதற்கான முயற்சிகளை அடி மட்டத்திலி ருந்து மேற்கொள்வதற்குரிய வேலைத்திட்டங்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஒழுக்க விழுமியங்களோடு தொடர்புபட்ட ஆன்மீக கல்வியை ஞாயிற்றுக்கிழமைகளிலேனும் கட்டாயமாக போதிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஊவா மாகாணத்தமிழ் கல்வி அமைச்சு அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் மேம்பாடு குறித்து அக்கறையுடன் செயற்பட்டுவரும் சிவில் சமூக அமைப்புகள், இளவயதினர் எதிர்நோக்கிவரும் குடும்ப, சமூக பிரச்சினைகள் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சமூக பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்குரிய வேலைத் திட்டங்களை செயற்படுத்த வேண்டும். அப்போதுதான் பிரச்சினைக்குத் தீர்வாக தற்கொலையை நாடும் இளைய தலைமுறையினரின் எதிர் காலமும் அவர்களது இலட்சிய கனவு களும் பாதுகாக்கப்படும். இதற்கு அனை த்து தரப்பினரதும் ஒன்றி ணைந்த செயற் பாடே அவசியம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates