Headlines News :
முகப்பு » » வருடந்தோறும் தமிழ் சாகித்திய விழா நடைபெறும் என்கிறார் ஊவா தமிழ் கல்வியமைச்சர் வடிவேல் சுரேஷ்

வருடந்தோறும் தமிழ் சாகித்திய விழா நடைபெறும் என்கிறார் ஊவா தமிழ் கல்வியமைச்சர் வடிவேல் சுரேஷ்

ஊவா தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வரலாற்று நிகழ்வே சாகித்திய விழா 

ஊவா மாகாண சபையின் ஆட்சியதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடையும் நிலையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள மாகாணத் தமிழ் கல்வியமைச்சின் பூரண அனுசரணையுடன் 16 வருடங்களின் பின் ஊவா மாகாணத் தமிழ் சாகித்திய விழா நடைபெறவுள்ளமையானது ஊவா வாழ் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள வரலாற்று பதிவாகும் என ஊவா மாகாணத் தமிழ் கல்வியமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3,4,5 ஆம் திகதிகளில் பதுளையில் நடைபெறவுள்ள ஊவா மாகாணத் தமிழ் சாகித்திய விழா தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளுமுகமாக இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் வடிவேல் சுரேஷ் உடன் இடம்பெற்ற நேர்காணலின் விபரங்கள் வருமாறு:

கேள்வி: அமைச்சராக பதவியேற்ற மிக குறுகிய காலத்திற்குள்ளேயே மாகாணத்தில் தமிழ் சாகித்திய விழாவை நடத்த வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

பதில்: ஊவா மாகாணசபைத் தேர்தல் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட நான் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ் சாகித்திய விழாவை நடத்துவேனென குறிப்பிட்டிருந்தேன். பசறை தொகுதி அமைப்பாளராக இருந்த காலத்தில் எனது இயலுமைக்கு ஏற்றவகையில் பொங்கல் விழா, தீபாவளி விழா போன்ற மலையக கலாசார விழாக்களை வெற்றிகரமாக நடத்தியிருந்தேன்.

ஊவாவில் 16 வருடகாலமாக தமிழ் சாகித்திய விழாவொன்று இடம்பெறாமையால் எமது பாரம்பரிய கலை, கலாசார விழுமியங்களும் நாட்டார் கூத்துகளும் அழிவுறும் நிலையை அடைந்திருக்கின்றன. இலக்கிய முயற்சிகளும் தொய்வை கண்டுள்ளன. மாகாண சபை ஆட்சி மாற்றத்தின் போது 20 வருடங்களின் பின்னர் நான் தமிழ் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டேன். பதவியேற்ற நிமிடத்திலேயே தமிழ் சாகித்திய விழாவை நடத்த உறுதி பூண்டேன். அதன் பிரதிபலிப்பே இவ் விழா.

கேள்வி: இத் தமிழ் சாகித்திய விழாவை நடத்துவதற்கு மாகாண அமைச்சர்களிடையே எவ்வாறான ஒத்துழைப்பு கிடைத்துள்ளது?

பதில்: தமிழ்க் கல்வி அமைச்சின் மூலமாக தமிழ் சாகித்திய விழாவை நடத்துவதற்கு அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்த போது முதலமைச்சர் ஹரீன் உட்பட அமைச்சர்களும் சபை உறுப்பினர்களும் இதற்கு பூரண ஆதரவை வழங்கினர். எனது தமிழ்க் கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சின் பணிப்பாளர்களும் அதிகாரிகளும் விழாவின் வெற்றிக்காக விரிவான திட்டமிடல்களுடன் செயற்பட்டு வருகின்றனர் என்பதை குறிப்பிட்டு ஆக வேண்டும்.

கேள்வி: ஊவா மாகாணத் தமிழ் சாகித்திய விழா குறித்த ஆர்வம் மாகாண தமிழ் பேசும் மக்களிடையேயும் பாடசாலை மாணவர்களிடையேயும் எந்தளவிற்கு உள்ளது?

பதில்: உண்மையில் மாகாணத்தில் உறங்கிக் கொண்டிருந்த கலைஞர்களை தட்டியெழுப்பி களமமைத்து கொடுத்த விழாவாக இச் சாகித்திய விழா மாறியுள்ளது. பாடசாலை மட்ட திறந்த போட்டிகள் சாகித்திய விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வேளையில் மாகாணத்திலுள்ள 203 தமிழ் மொழி மூல பாடசாலைகளும் பெருவாரியான திறந்த மட்டப் போட்டியாளர்களும் கடந்த வாரத்தில் 3 நாட்கள் பதுளையில் தமது திறமைகளை வெளிப்படுத்தி மாகாண கலை, இலக்கிய வளர்ச்சி குறித்த புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர்.

கேள்வி: இவ்விழாவின் போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட அம்சங்கள் குறித்து சற்று கூறுங்கள்.

பதில்: ஆம், 16 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள மாகாணத் தமிழ் சாகித்திய விழா என்பதால் சாகித்திய விழா சிறப்பு மலர் வெளியீட்டிற்கு மேலதிகமாக எழுத்தாக்கப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களது ஆக்கங்கள் அடங்கிய தொகுப்பு, ஆய்வரங்கின் போது ஆய்வாளர்கள் சமர்ப்பிக்கப் போகின்ற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு என இரு தொகுப்புகள் வெளிவரவுள்ளன. மேலும் மாகாணத்தின் கலை இலக்கிய நாட்டாரியல் துறைகளில் பங்களிப்பு செய்து சமூக மேம்பாட்டிற்காக பாடுபட்ட, பாடுபடுகின்ற மூத்தவர்களையும் இளைய தலைமுறையினரையும் கௌரவிக்கும் முகமாக மாநில மணி, எழுசுடர், நாட்டார் கலைக் காவலர் போன்ற விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகளுக்காக 40 பேர் வரை தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு மாகாணத் தமிழ் சாகித்திய விழா முன்னோடிக்கான விருது, ஊடகத்துறை சார்ந்தோருக்கான பாராட்டு என பல புதிய அம்சங்கள் நிகழ்வில் உள்ளடக்கப்பட்டுள்ளன. வரலாற்றில் முதன்முறையாக சாகித்திய விழாவிற்கான இணையதளம் உருவாக்கப்பட்டமையையும் குறிப்பிட வேண்டும்.

கேள்வி: ஏப்ரல் 3,4,5 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சாகித்திய விழா ஏற்பாடுகள் குறித்து கூறுங்கள்?

பதில்: இம் மூன்று நாட்களிலும் பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட அரங்கு, ஊவா மாகாண சபை நூலக கேட்போர் கூடம் என்பவற்றில் மு.ப 9.00 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. முதலாவதாக இடம்பெறும் கலாசார ஊர்வலம் தொடங்கி நாட்டார் கலை, கலாசார நிகழ்வுகள், கூத்து வகைகள், கிராமிய நடனங்கள், கவியரங்கு, பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி நூல் வெளியீடு, விருது வழங்கல், பாராட்டு நிகழ்வென எமது கலை பாரம்பரியங்களுக்கு உயிர் கொடுக்கும் பல நிகழ்வுகள் மேடையேற்றப்படுவதற்கான ஏற்பாடுகளை விழா ஏற்பாட்டுக் குழுவினர் செய்து வருகின்றனர்.

கேள்வி: மாகாணத் தமிழ் சாகித்திய விழாவை மையப்படுத்தி பிராந்திய சாகித்திய விழா முன்னோட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுவதன் நோக்கமென்ன?

பதில்: 16 வருடங்களின் பின்னர் ஊவாவில் பிரமாண்டமான தமிழ் சாகித்திய விழா நிகழ்வுகள் தமிழ் கல்வி அமைச்சின் பூரண அனுசரணையுடன் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகளில் பதுளை, மொனராகலை மாவட்ட வாழ் தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்து பங்குபெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பண்டாரவளை நகர வலயத்தினுள் 56 தமிழ் மூல பாடசாலைகளின் பங்களிப்போடும் வர்த்தக சமூகத்தினர், இலக்கிய ஆர்வலர்களின் பங்களிப்போடும் இடம்பெற்ற கலாசார நிகழ்வுகள் வெற்றியைத் தந்துள்ளன. இவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படுவதால் தமிழ் சாகித்தியம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுமென நம்புகின்றோம்.

கேள்வி: இது போன்ற நிகழ்வுகளில் தங்களது தமிழ் கல்வியமைச்சு எவ்வாறான பங்களிப்பை செலுத்துகின்றது?

பதில்: ஆம், கடந்த இரு தசாப்தங்களாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்பட்டு வந்த தமிழ் மொழி மூல பாடசாலைகள் தனியான தமிழ்க் கல்வி அமைச்சு முழு அதிகாரத்துடன் அமைக்கப்பட்டதும் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 203 தமிழ் பாடசாலைகளில் உள்ள (மாகாணத்தில்) அதிபர், ஆசிரியர்களும் இந்நிகழ்விற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

தவிர தமிழ்க் கல்வி அமைச்சு தனியாக உருவாக்கப்பட்டதன் மூலம் மாகாணத்தில் முழு அதிகாரங்களுடன் கூடிய தமிழ் கல்விப் பணிப்பாளராக திருமதி. வை. கலையரசி நியமிக்கப்பட்டுள்ளார். வலய கோட்ட மட்டத்தில் உதவி கல்விப் பணிப்பாளர்களுக்கு (தமிழ் முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ் கல்வித்துறை தொடர்பான சாதனையாகும். இதன் மூலம் எமது கல்வி நிலை துரித வளர்ச்சி காணும். தமிழ் கல்வியமைச்சின் கீழ் சாகித்திய விழா நடைபெறுவதால் கல்வித்துறை சார்ந்தவர்கள் நல்ல ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.

கேள்வி: எதிர்வரும் காலங்களில் இச்சாகித்திய விழா நிகழ்வுகள் வருடா வருடம் நடைபெறுமா?

பதில்: நிச்சயமாக, வருடா வருடம் சாகித்திய விழாவை இதே பிரமாண்டத்துடன் நடத்துவதற்குரிய அமைச்சரவை அனுமதியை அமைச்சரவை பத்திரத்தின் மூலம் பெற்றுள்ளேன். இவ் வமைச்சிற்குரிய நபர் மாறினாலும் ஊவா மாகாணத் தமிழ் சாகித்திய விழா நிகழ்வுகள் வருடா வருடம் நடைபெறும். இதன் மூலம் எமது சமூகத்தின் கலைகளும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் காக்கப்படுவர் என நம்புகின்றேன்.

கேள்வி: மிகக் குறுகிய காலத்திற்குள் இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வை நடத்தக்கூடிய சாத்தியப்பாடு எவ்வாறு நிகழ்ந்தது?

பதில்: உண்மைத்தான், ஊவா வெல்லஸ்ல பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மா. ரூபவதனன், சரஸ்வதி தேசிய பாடசாலையின் அதிபர் கே. திருலோக சங்கர் ஆகியோரை தலைவர் செயலாளராகக் கொண்ட விழா குழுவின் பணிகள் பாராட்டிற்குரியவை. அவர்கள் சாகித்திய விழாவிற்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதன் பிரதிபலிப்பாக இவ்விழாவிற்குரிய ஒவ்வொரு ஏற்பாடுகளும் வெற்றி கண்டு வருகின்றன. இறுதி நாள் நிகழ்வுகள் பிரமாண்டமாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுள்ளது.

கேள்வி: இந்நிகழ்விற்கான அதிதிகள் பற்றி கூறுங்கள்?

பதில்: நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர், நாட்டிலுள்ள அனைத்து தமிழ் பேசும் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள், மாகாண உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினருக்கும் அரசியல் பேதங்களை மறந்து தமிழுணர்வுடன் விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

இவ்விழாவின் மூலம் எனது அரசியல் பயணத்திற்கு முகவரி தந்த பதுளை மாவட்ட தமிழ் மக்களுக்கும் மாகாணத் தமிழர்களுக்கும் வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டிய கலைஞர் பெருமக்களுக்கும் ஊழியம் செய்யக் கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளதை மிகப் பெரிய ஆத்ம திருப்தியாக கருதுகின்றேன். ''ஊழியேழ் எங்கும் ஊவாத் தமிழ் எஃகும்'' என்ற சாகித்திய விழா மகுட வாசகமும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் என்றார்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates